"சிவராமலிங்கம் என்றொரு மானுடன்": நிறைவு-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"சிவராமலிங்கம் என்றொரு மானுடன்": நிறைவு-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
மாஸ்டர் வெலவெலத்துப் போனார். என்னுடைய நேர்த்தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது கண்களில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. 'மன்னிச்சிடுறாப்பா, ஆற்றயோ கதையக் கேட்டு, நானும் தெரியாமக் கதைச்சிட்டன்' என்று கையெடுத்துக் கும்பிட்டார். அவர் அப்படி செய்திருக்க வேண்டிய தேவையேயில்லை.
அவருடைய பெருந்தன்மை அப்படிச் செய்ய வைத்தது. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி, துலையல்லார் கண்ணும் கொளல் என்ற, குறளுக்கு இலக்கணமாய் மாஸ்டரைப் பார்த்ததும், என் மனம் நிறைந்து மகிழ்ந்தது.
💠 💠 💠 💠
லகம் போற்றும் கம்பநாடனின் விழாவுக்காக,
திருகோணமலைக்கு நாங்கள் எல்லோரும் பஸ்ஸில் போயிருந்தோம்.
நீண்ட பயணம் அது.
வெந்நீர்க் கிணறு குளிப்பு, கோணேஸ்வரத் தரிசனம் என,
எல்லா இடங்களுக்கும் மாஸ்டரையும் இழுத்துக்கொண்டு திரிந்தோம்.
விழா முடிந்து திரும்பி வருகையில், பஸ்ஸின் முன் 'சீற்றில்' இருந்த மாஸ்டர்,
உடன்வந்தவர்களை ஒவ்வொருவராய் அழைத்து,
'ஜெயராஜ் களைச்சுப் போயிருப்பான்,
அவனுக்குச் சோடாவக் கீடாவ வாங்கிக் குடுங்கோ' என்று,
அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
தன்னுடைய ஊன உடம்பின் துயரம் மறந்து,
எனக்காகக் கவலைப்பட்ட அந்தக் கருணைக் கடலை,
நினைக்கும்போதெல்லாம், என் கண்கள் குளமாகும்.
💠 💠 💠 💠

மாஸ்டரின் மனைவி, ஒரு போக்கானவர்.
கடும் கோபக்காரர்.
மாஸ்டரைச் சிலவேளை படாத பாடு படுத்துவார்.
ஆனால், மாஸ்டரோ, எந்த அதிர்வும் இல்லாமல்,
அவருடைய கோபங்களை உள்வாங்கி நிதானித்து நடப்பார்.
கோபக்காரர் என்ற ஒன்றைத் தவிர,
மாஸ்டரின் மனைவி மிக நல்ல பெண்மணி.
மாஸ்டரைத் திட்டோ திட்டென்று திட்டவும் செய்வார்.
சில நேரத்தில், 'ஜெயராஜ், எனக்கு வாய்ச்ச புருஷன் மாதிரி,
வேற ஆருக்குக் கிடைக்கும்' என்று பெருமையாகவும் பேசுவார்.
அவரையும் நாங்கள் 'ரீச்சர்' என்றுதான் அழைப்போம்.
என்மேல் அவருக்கும் நிறைய அன்பு.
ஒரு நல்லூர் திருவிழாவின்போது,
மதிய நேரம் உச்சி வெய்யிலில் கம்பன் கோட்டக் கதவு தட்டப்பட,
போய்த் திறந்தால், கொதிக்கும் வெய்யிலில்,
ஒரு பை நிறைய தான் சமைத்த உணவுகளை,
தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு 'ரீச்சர்' நின்றார்.
'நல்ல சாப்பாடு சமைச்சனான். 
அதுதான் உனக்கும் கொண்டு வந்தனான்' என்று சொல்லி,
திருநெல்வேலியிலிருந்து நல்லூர் வரை நடந்து வந்த களை தெரியாமல்,
(யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி உண்டு.)
சிரித்த அந்த அன்னையின் கருணை கண்டு சிலிர்த்துப் போனேன்.
அதுதான் ரீச்சர்.
💠 💠 💠 💠
நல்லை ஆதீன முதல் சந்நிதானம் சமாதியடைந்தபோது,
அவரது உடலைச் சமாதி வைப்பது பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது.
அருகில் சிவன் கோயில் இருந்ததால் அந்த இடத்தில்,
சன்னிதானத்தின் உடலைச் சமாதி வைக்கக்கூடாது என,
சிலர் போர்க்கொடி தூக்கினர்.
அத்தகையோரில் மாஸ்டரின் நண்பரான ஒரு கடும் சைவர்,
மாஸ்டரிடம் கோபமாக வந்தார்.
அப்போது நானும் அங்கிருந்தேன்.
வந்தவர், 'செத்தவர்கள் எல்லாம் சமாதியடைந்தவர்களா?' என்று,
கொதிப்புடனே கேள்வி எழுப்பினார்.
மாஸ்டர், எந்தவிதப் பதற்றமும் இல்லாமல்,
வந்தவரை நோக்கி,
'சமாதியடைஞ்சவர்களெல்லாம் சாகாதவர்களா?' என்றாரே பார்க்கலாம்.
வந்தவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
'உங்களப்போன்ற ஆக்களாலதான் சைவம் கெடுகுது' என்று,
மாஸ்டரைத் திட்டிக்கொண்டே போய்விட்டார்.
💠 💠 💠 💠
கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றபின்,
மாஸ்டருக்கு மாணவர்களின் துணை குறைந்து போயிற்று.
அதனால் அவர் தன் விருப்பப்படி இயங்க முடியாது மிகவும் சங்கடப்பட்டார்.
அவரின் சங்கடம் அறிந்து, எங்கள் கம்பன் கழகத் தலைவன் திருநந்தகுமார்,
அப்போது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த,
தனது அத்தான் ஜனநாயகத்திடம் சொல்லித் தொழிற்சாலையின் சார்பில் மாஸ்டருக்கு,
ஒரு மூன்று சக்கர சைக்கிளை அன்பளிப்பாய் வாங்கிக் கொடுத்தான்.
அதற்குப் பிறகு, மாஸ்டரின் இயக்கம் பழையபடி வேகமாயிற்று.
💠 💠 💠 💠
ஒருநாள் நடு உச்சி வெய்யில் நேரம்.
கந்தர்மடத்தடியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன்.
திடீரெனப் பார்த்தால் முன்னுக்கு மாஸ்டர்.
தனது, மூன்று  சக்கரச் சைக்கிளை,
முக்கி முக்கி இயக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
வெய்யிலுக்காகத் தலையில் கட்டிய கைக்குட்டையைத் தாண்டி,
வியர்வை வடிந்து கொண்டிருந்தது.
அருகில்போய்,
'என்ன இந்த வெய்யிலுக்குள்ள எங்க போறீங்கள்?' என்று கோபித்தேன்.
'சரி, சரி, சத்தம் போடாதடாப்பா.
உதிலதான் என்ர மச்சான் ஒருத்தன் இருக்கிறான்.
அவனுக்குத்தான் சாப்பாடு கொண்டுபோறன்' என்றார்.
திட்டிக்கொண்டே அவரோடு நானும் உடன் சென்றேன்.
'கேற்றடியில்' நின்ற அவரது மச்சான்,
நல்ல ஆரோக்கியத்தோடு மாஸ்டரைவிட இளமையாய் இருந்தார்.
அந்தப் பாவி மனிதன் மாஸ்டரைக் கண்டதும்
'என்ன சிவராமலிங்கம் 'லேற்றாகியிட்டுது?'' என்று,
குறை சொல்லியபடியே சாப்பாட்டை வாங்கினார்.
எனக்கோ கடுங்கோபம்.
💠 💠 💠 💠
ஆரோக்கியமாக இருந்த அவர்,
ஊனமுற்ற மாஸ்டரைக்கொண்டு சாப்பாட்டை எடுப்பித்ததுமல்லாமல்,
அவரைக் குறையும் சொல்ல, எனக்கு எரிச்சலாய் வந்தது.
திரும்பி வரும்போது,
'இனிமேல் சாப்பாட்டை அவர வந்து எடுக்கச் சொல்லுங்கோ' என்று,
நான் சத்தம் போட்டேன்.
'சரியடாப்பா, சரியடாப்பா' என்று சிரித்தார்.
அடுத்த நாளும் மாஸ்டர் சாப்பாடு கொண்டு போயிருப்பார் என்பது,
எனக்குத் தெரியும்.
💠 💠 💠 💠
ஒருநாள் என்னைக் காண வந்த ஒருவர்,
இராசவள்ளிக் கிழங்கைக் கொண்டுவந்து தந்தார்.
அதைச் சீனியும் தேங்காய்ப்பாலும் விட்டு,
மிகச்சுவையான உணவாகத் தயாரித்தேன்.
உண்ணப்போகும்போது மாஸ்டரின் நினைவு வந்தது.
ஒரு பாத்திரம் நிறைய அதை எடுத்துக் கொண்டு உடன் மாஸ்டரிடம் போனேன்.
அதைப் பார்த்ததும் அவர் ஆனந்தித்தார்.
சூடாக இருந்ததால் அதை முன்னே இருந்த மேசையில் வைத்துவிட்டு,
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது மாஸ்டரின் உறவுப் பெண்மணி ஒருவர் உள்நுழைந்தார்.
வந்தவரின் கண்ணில் இராசவள்ளிக்கிழங்கு பட்டுவிட்டது.
'என்ன ஜெயராஜ் கொண்டு வந்து இருக்கிறார் போல' என்று சொன்னபடி,
பாத்திரத்தைக் கையில் எடுத்தவர்,
'ஓ இராசவள்ளிக்கிழங்கோ? இதென்டா எனக்குச் சரியான விருப்பம்',
என்று சொன்னபடி கிழங்கைக் கபளீகரம் பண்ணத்தொடங்கினார்.
நான் குறுக்கே பாய்ந்து தடுக்கப் புறப்பட,
மாஸ்டர் தன் கண்ணாலேயே என்னை அடக்கினார்.
அந்த அம்மையார் வெறும் சட்டியை வைத்துவிட்டுப் போனபிறகு,
நான் ஆத்திரம் தாங்காமல் கொதித்தேன்.
மாஸ்டரோ, எந்த அதிர்வும் இல்லாமல்,
'விடுடாப்பா பாவம் அது திண்டிட்டுப் போகட்டும்' என்று,
தனக்கான உணவை மற்றவர் பறித்துக் கொண்ட கோபம் சிறிதுமில்லாமல்,
சந்தோஷமாய் என்னைச் சமாதானம் செய்தார்.
அவரது அன்பு உள்ளத்தை நினைந்து வியந்தேன்.
💠 💠 💠 💠
நான் பேசத் தொடங்கிய ஆரம்பத்தில்,
தனக்கு வரும் பேச்சுக்கான அழைப்புகளுக்கு,
சிலவேளை என்னைப் போகச் சொல்லுவார்.
நான் பேச ஆசைப்பட்டுத் திரிந்த காலமது.
ஒருமுறை, யாழ். வைத்தியசாலைத் தாதிமார் விடுதியில்,
நவராத்திரிக்கு மாஸ்டரைப் பேச அழைத்திருந்தார்கள்.
மாஸ்டர் என்னைக் கூப்பிட்டு,
'நீ ஒருக்காப் போய்ப் பேசிட்டு வாடாப்பா' என்று அனுப்பி வைத்தார்.
மிக ஆர்வமாக நான் போனேன்.
அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்துவிட்டு,
'மாஸ்டர் வரேலையோ?' என்று கேட்டார்கள்.
'இல்லை, மாஸ்டர் என்னைத்தான் போய்ப் பேசச்சொன்னவர்' என்றேன்.
அவர்கள், என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு,
 'மாஸ்டர் வராட்டி பரவாயில்லை.
நாங்கள் சமாளிக்கிறம், நீங்கள் போயிற்று வாங்கோ' என்று,
என்னைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
இது ஆரம்பகாலத்தில் நடந்தது.
💠 💠 💠 💠
பிற்காலத்தில், எனது பேச்சுக்கு மவுசு வந்ததும்,
பட்டிமண்டபம் பேச மாஸ்டரை நான் அழைப்பேன்.
எந்தவித மறுப்பும் இல்லாமல், நான் நடுவராயிருக்க,
எனக்குக் கீழே அணித்தலைமையேற்றுப் பேசுவார்.
கல்வி ஆணவம் துளியளவும் இல்லாத,
அந்த மனிதரின் பெருந்தன்மை கண்டு நான் வியப்பேன்.
💠 💠 💠 💠
இப்படியாய் தனது வாழ்வால் எனக்கு அவர் கற்பித்த பாடங்கள் பலப்பல.
மாஸ்டரைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.
விரிவஞ்சிச் சுருக்க வேண்டி இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, மாஸ்டர் எனக்கு ஒரு 'கோட் பாதர்.'
கடைசிவரை என்னைக் கைபிடித்து வளர்த்தார்.
தனது உடல் ஊனத்தின் விளைவால்,
எப்போதும் மாஸ்டர் மாணவர்களின் கையைப்பிடித்தபடிதான் நடப்பார்.
அவர் கைபிடித்து நடந்த மாணவர்களெல்லாம்,
இன்று எங்கெங்கோ நன்றாய் வாழ்கிறார்கள்.
'அவர் மாணவர்களின் கையைப் பிடித்து நடப்பது,
தான் விழாமல் இருப்பதற்காய் அல்ல,
மாணவர்கள் விழாமல் நிமிர்வதற்காகவே' என்று,
நான் என் நண்பர்களிடம் சொல்வேன்.
அவர் கைபிடித்து நடந்த பாக்கியம் பெற்று,
நிமிர்ந்தவர்களில் நானும் ஒருவன்.
💠 💠 💠 💠
நான் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பிறகு,
ஒருமுறை, 'சீசெல்ஸ்'தீவிலிருந்து என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.
பயணத்திற்கு முதல் நாள் இரவு,
தொலைபேசியில் யாழிலிருந்த மாஸ்டருடன் பேசிவிட்டு,
அடுத்தநாட் காலை புறப்பட்டேன்.
நான் 'சீசெல்ஸ்' சென்று சேர்ந்தபோது,
மாஸ்டரின் மறைவுச் செய்தி அங்கு காத்திருந்தது.
அதிர்ந்து போனேன்.
உயிரற்ற அவரது உடலைப் பார்க்கக்கூட முடியவில்லை.
அதிலும் ஒரு நன்மை இருந்தது.
அதனாற்தானோ என்னவோ?
மாஸ்டர் இன்றும் என் உள்ளத்தில்,
உயிருடனேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
💠 💠 💠 💠
                                                      (சிவராமலிங்கம் மாஸ்டர் நிறைவுறுகிறார்.)
                                                      (அடுத்தவாரம் என் ஆசிரியர் இலக்கண வித்தகர் வருவார்.)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.