ஆளுமை பயிற்சி மையம் விண்ணப்பம்
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தவிருக்கும்
ஆளுமைப் பயிற்சி முகாம்
“உயர்வோம்” எனும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கிளை அமைப்பினூடாக, கிளிநொச்சியில் அமைந்துள்ள “கம்பன் கலைக் கோயில்” எனும் எமது தலைமை நிறுவனத்தில், எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி ஞாயிறு முதல் 13ம் திகதி ஞாயிறு வரையிலான 8 நாட்களும் இவ் ஆளுமைப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
• பல்கலைக்கழக,
• பல்கலைக்கழகப் புகுமுக,
• க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற,
• இலக்கிய, சமூக அமைப்புக்களில் தொண்டு புரிகின்ற
இருபத்தைந்து வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் இப்பயிற்சி முகாமிற் கலந்து கொள்ளமுடியும். இருபாலாரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி முகாமில், நமது நாட்டையும், தமிழ்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்த, சமயம், நீதி, அரசியல், மருத்துவம், சினிமா, முகாமைத்துவம், கணனி, ஊடகம், மொழியியல், கலை ஆகிய துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அவ்வத் துறைகளினூடாக ஆளுமைப் பயிற்சிகளை அளிக்கவுள்ளனர்.
இப்பயிற்சியை எமது கழகமும், தமிழ்நாடு ஓசூரில் அமைந்துள்ள “பெருமாள் மணிமேகலைப் பொறியியற் கல்லூரியும்”, காரைக்குடி “கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் தொழில் நுட்ப, கலை அறிவியல் கல்லூரிகளும் இணைந்து நடாத்தவுள்ளன.
இப்பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு, இம்மூன்று நிறுவனங்களாலும் உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்வோருக்கு இசை, நடனம், நாடகம், யோகாசனம், தேகப்பியாசம், மும்மொழியாற்றல் போன்றவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்குமிடம், சீருடை, உணவு, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும்.
விண்ணப்பிப்போரில், நேர்முகத்தேர்வின் மூலம் 50 மாணவர்கள் மட்டுமே முதலாவது பயிற்சிக்காகத் தேர்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் போது மாணவர்கள், தமது விண்ணப்பத்தில் கூறியுள்ள விடயங்களை உறுதி செய்யும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இப்பயிற்சி நெறி வருடத் தொடக்கத்திலும், நடுப்பகுதியிலும், இறுதியிலுமாக மூன்று முறை நடாத்தப்படும்.
இம்முகாமில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்க சம்மதித்தல் வேண்டும்.
• மேற்படிப் பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டு நடத்தல்.
• பயிற்சி நேரங்களில் நிறுவனத்தால் வழங்கப்படும் சீருடையை மட்டும் அணிதல்.
• பயிற்சி நடைபெறும் 8 நாட்களும் கிளிநொச்சி உயர்வோம் நிறுவனத்தில் பாதுகாவலர்களின் அனுமதியோடு தங்கியிருக்கச் சம்மதித்தல்.
• அனைத்துப் பயிற்சிகளிலும் முழுமையாய்க் கலந்து கொள்ளல்.
• இன, மத, பிராந்திய வேற்றுமைகள் இன்றி நடத்தல்.
மேற்படி நிபந்தனைகள் மீறப்படுமாயின் மாணவர்கள் பயிற்சிமுகாமின் இடைநடுவில் விடுவிக்கப்படுவர்.
இப்பயிற்சி முகாமில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் “உயர்வோம்” அகில இலங்கைக் கம்பன் கழகம், இல: 12, இராமக்கிருஷ்ண தோட்டம், கொழும்பு - 06 எனும் முகவரிக்கு, இத்தோடு இணைக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, இன, மத, பிராந்திய வேறுபாடின்றி தமிழ் பேசும் அனைத்து இளையோரும் விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 0772935509, 0112360525 எனும் இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
-அகில இலங்கைக் கம்பன் கழக நிர்வாகத்தினர்-