எறிகணை 36
கேள்வி :
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், தனிநிலைப்பாடு எடுத்திருக்கும் அண்ணாமலையாரை பாரதீய ஜனதாக்கட்சியினரால் அனுப்பப்பட்ட “மாயமான்” என்று சொல்லியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
அச்செய்தியை நானும் படித்தேன். மகிழ்ந்து போனேன். இராமாயணத்தை எரிக்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கி நிற்பவர்களுக்கும், தங்களது கருத்தினை உரைக்க இராமாயணம்தான் தேவைப்படுகிறது. “நெஞ்சில் உள்ளது வாய் வந்து சேரும்” என்பார்கள். இவர்கள் இராமாயணத்தை வெளியில் எதிர்த்தாலும் இவர்களது நெஞ்சில் எல்லாம் அது ஊறிப்போய்க்கிடக்கும் உண்மை, அவரது செய்தியினூடு வெளியாகியிருக்கிறது. “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று வள்ளலார் பேசுகிறார்.
கேள்வி :
ஊடகவியலாளர் என்றும், ஊடகத்துறை விரிவுரையாளர் என்றும் சொல்லிக்கொள்ளும் “நிக்சன்” என்பவர், உங்களை வன்மத்துடன் அடுத்தடுத்துத் தாக்கி வருவதைப் பார்த்தீர்களா! அப்படி அவருக்கு உங்களோடு என்னதான் பகை?
பதில் :
பார்க்கவில்லை. கேள்விப்பட்டேன். அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. முன்பு யாழ்ப்பாணத்தில் நாங்கள் இருந்தபோது என்மீதும், கழகத்தின்மீதும் பெரிய மதிப்பு வைத்திருந்த, கலை ஈடுபாடுள்ள ஒரு நல்ல மனிதர் அடிக்கடி என்னை வந்து சந்தித்து உரையாடிச் செல்வார்.
அவருக்கு மேற்படி பெயருடைய ஒரு மகன் இருந்தான். அவனுக்கு எங்களது கம்பன் கழகத்தில் எப்படியும் இணைந்துவிடவேண்டும் என்று பெரிய வெறி இருந்தது. அதனால் தந்தையின் தொடர்பை வைத்து, அடிக்கடி என்னை வந்து சந்திப்பான். தனக்குத் தெரியாத விடயங்களையெல்லாம் தெரிந்தவன்போல் பேசுவான். வலியவலிய அடிக்கடி வந்து பயனில்சொல் பாராட்டி எங்கள் நேரத்தை வீணடிப்பான். எந்த ஒன்றிலும் உண்மையாய் இருக்கமாட்டான். எங்களது விழாக்கள் நடைபெறுகிறபொழுது உறுப்பினர்களுக்கு நாம் வழங்கும் “பட்ச்சை” தனக்கும் தரும்படி கெஞ்சுவான். கம்பன் கழகத்தின் புகழைத் தனக்காக்கிக் கொள்வதுதான் அவனது நோக்கமாக இருந்தது.
அதனால் ஆழமும் உண்மையும் இல்லாத அவனை நாங்கள் கழகத்திற்குள் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது நோக்கம் நிறைவேறாது என்று தெரிந்தபிறகு, அவனது வருகை நின்றுவிட்டது.
அவன் இப்போது என்ன செய்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் நிக்சனும் இவனும் ஒருவர்தானா? அறியேன்.
கேள்வி :
முன்பு, நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி அடிக்கடி எழுதுவீர்கள். இப்பொழுதும் அவற்றைப் பார்க்கிறீர்களா? உங்கள் மனதிற்கு மிகவும் பிடித்த நாடகத்தொடர்கள் பற்றிச் சொன்னால் நாங்களும் பார்க்கலாமே?
பதில்:
வாசிப்பு, விழாக்கள், பயணங்கள் என அலைந்து திரிந்து களைக்கிறபொழுது மனதின் சலிப்பை நீக்க நாடகத்தொடர்கள் உதவி செய்கின்றன. சிலர் நாடகம் என்றதுமே தொலைக்காட்சியை “ஆஃப்” பண்ணி விடுகிறார்கள். நாடகங்கள் குடும்பங்களைக் கெடுத்துவிடும் என்பது பலபேரின் அபிப்பிராயமாக இருக்கின்றது.
அந்த அபிப்பிரயாயத்தைப் பிழை என்று முழுமையாய்ச் சொல்லிவிடவும் முடியாதுதான். ஆனால் சில நாடகங்கள் மிகமிக நன்றாக இருப்பது உண்மை. முன்பு ஒருதரம் “எதிர்நீச்சல்” நாடகம் பற்றி நான் புகழ்ந்து எழுதியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இப்போது அந்த நாடகத்தின் இரண்டாம் பகுதி நடந்து கொண்டிருக்கிறது.
முதற்பகுதி எவ்வளவு இரசிக்க வைத்ததோ, இரண்டாம் பகுதி அது போல பத்து மடங்கு வெறுக்க வைக்கிறது. கதை பாதை மாறி எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. பார்க்கச் சகிக்கவில்லை.
முன்பு நான் பாராட்டிய “பாண்டியன் ஸ்ரோர்ஸ்” நாடகத்தின் இரண்டாம் பகுதி வரவர நெஞ்சை அள்ளுகிறது. குடும்பங்களின் பாசம், பிரச்சினைகள், பகை, அப்பகையை அன்பினால் வெல்லும்முறை என, அந்த நாடகம் எக்கச்சக்கமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.
விஜய் டி.வியில் நடந்து கொண்டிருக்கும் நாடகத் தொடர்களில் இரண்டை இடையிடையே ஒன்றிணைத்து சில “எபிசோட்டுகள்” நடத்துகிறார்கள். அப்படி கடந்த சில வாரங்களாய் “பாண்டியன் ஸ்ரோர்ஸ்” நாடகத்தோடு “அழகே அழகு” என்ற நாடகத்தையும் இணைத்து வெளியிட்டார்கள்.
அதைப்பார்க்கப்போய், இப்போது “அழகே அழகும்” என்னை வசப்படுத்திவிட்டது. அந்த நாடகத்தின் இயக்குனர், எந்தப் “பிசிறும்” இல்லாமல் அந் நாடகத்தைக் கொண்டு செல்கிறார். அந்நாடகத்தின் பாத்திரங்கள் எல்லாம் தினுசு தினுசாய் வேற்றுமைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் “ஐஸ்கிறீமாய்” இனிக்கின்றன.
ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு அந் நாடகத்தின் கதை நகர்கிறது. அந்நாடகத்தில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் நம்மை வியக்க வைக்கிறார்கள். நடிப்பவர்கள் பாத்திரத்திற்கும் தமக்கும் இடையில் ஒரு “மில்லிமீற்றர்” இடைவேளிகூட இல்லாது பொருந்தி நிற்கிறார்கள்.
அவர்களது நடிப்பில் இயல்போ இயல்பு! இரண்டு மருமகள்களும் இரண்டு மகள்களுமாக வரும் நடிகைகளை எங்கிருந்துதான் தேடிப்பிடித்தார்களோ தெரியவில்லை. அவர்கள் மட்டுமென்றில்லை மாமன், மாமி, மருமகன், மகன்கள், சம்பந்திகள் என வரும் ஒவ்வொருவரும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்கள். “நெற்பிளிக்ஸ்” இல் முழுநாடகமும் பதியப்பட்டிருக்கிறது. பார்க்காமல் விட்டு விடாதீர்கள்!
கேள்வி :
இலங்கையில் இருந்துகொண்டு இந்திய அரசியல் விடயங்கள் பற்றியெல்லாம் விமர்சித்து வருகிறீர்கள். அந்த உரிமையை உங்களுக்கு யார் தந்தது?
பதில் :
விஞ்ஞான வளர்ச்சியாலும், புதிய ஊடகங்களின் வருகையாலும் உலகம் இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது. அன்றன்று நடக்கும் செய்திகளை உலகத்தின் எந்த மூலையில் இருந்துகொண்டும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
அதுமட்டுமில்லை. இன்று எந்த நாட்டில் ஒரு சம்பவம் நடந்தாலும், அது ஏதோ விதத்தில் மற்றைய நாட்டு மக்களையும் பாதிக்கத்தான் செய்கிறது. அதனால்த்தான் எந்த நாட்டவரும் மற்றைய நாடுகளின் விடயங்கள் பற்றி விமர்சிக்கும் உரிமை பெறுகிறார்கள்.
அதிக தூரம் போவானேன்? எங்கள் நாட்டில் நடந்த போராட்டம் இலங்கையை விட இந்தியாவில்த்தானே அதிகம் விமர்சிக்கப்பட்டது. அதே உரிமை பற்றித்தான் நானும் விமர்சனங்கள் செய்கிறேன்.
அதைவிட மற்றொன்றையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும். என் தாய்நாட்டுக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் நாடு இந்தியாதான். பாரதத்தின்மேல் நான் பெரிய பக்தியே வைத்திருக்கிறேன்.
இனவுரிமை சொல்லி உறவுகொண்டாட, ஈழத்தமிழர்களுக்கு, தமிழ்நாட்டை விட்டால் வேறு கதியில்லை. என் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்குப் பெரிய பங்குண்டு. இக்காரணங்களால்த்தான் நான் தமிழ்நாட்டு விடயங்கள் பற்றி அதிகம் உறவுரிமையோடு விமர்சித்து வருகிறேன்.
கேள்வி :
எல்லாக் கட்சித் தொண்டர்களும், தமது கட்சித் தலைமையை விமர்சிப்பவர்களைப் பகைவர்களாய்க் கருதுகிறார்களே. அது சரியா?
பதில் :
கட்சித் தொண்டர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். விமர்சகர்கள் யாரும் தம் பகையினால் உங்களதுகட்சித் தலைவர்களை விமர்சிப்பதில்லை. பகையினால் விமர்சிப்பார்களேயானால் அவர்கள் விமர்சகர்கள் இல்லை.
தொண்டர்கள், தமது தலைவர்கள் செய்யும் பிழையையும் சரி என்று சொல்ல நினைப்பது, அத் தலைவருக்குக் காட்டும் ஆதரவு ஆகாது. இன்னும் சொல்லப் போனால் அது அவருக்குச் செய்யும் துரோகமேயாம்!
செவிகள் கசக்கும் படியான சொற்களையும் எந்தவொரு தலைவன் பொறுத்துக் கொள்கிறானோ, அவனது வெண்குடையின் கீழ் உலகம் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். “செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் தன் கவிகைக்கீழ் தங்கும் உலகு” என்பது குறள்.
அதனால் உண்மைத் தொண்டர்கள், வெறுமனே தலைவர்களுக்கு, “ஜே“ போடுவதை விட்டு விட்டு, அத் தலைவர்கள் பற்றி வரும் விமர்சனங்களை அவர்களுக்குத் துணிந்து எடுத்துரைக்க முன் வரவேண்டும். அதற்குப் பெயர் தான் உண்மை விஸ்வாசம்.
கேள்வி :
சிலர் “ஐயா ஏன் எல்லாருக்கும் பதில் சொல்கிறார்? அதனால்த்தானே அவரைக் கண்டபடி விமர்சிக்கிறார்கள்.” என்கிறார்கள். அவர்கள் சொல்லுமாப்போல் உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் சொல்லாமல்விட்டால் என்ன?
பதில் :
இதற்கான பதிலை முன்பும் பலதரம் நான் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் கேட்டிருக்கிறபடியால் கடைசியாக மீண்டும் ஒருதரம் சொல்கிறேன்.
எனது ஆதரவாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் சிலர், நான் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக, யார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். எனக்கு அக்கருத்தில் உடன்பாடில்லை. அப்படி ஒரு நல்ல பெயர் எனக்குத் தேவையுமில்லை.
கயவர்கள், பணிந்து போகிறவர்களைக் கண்டால், தாம் வென்றதாக நினைத்து மேலும் மேலும் அவர்களை அடக்க நினைப்பார்கள் என்கிறார் வள்ளுவர். (அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகைப்பட்டு செம்மாக்கும் கீழ்)
ஏதோ ஒரு சினிமாப்படத்தில் “எத்தனை தரம் அடிச்சாலும் தாங்கிறாண்டா இவன் ரொம்ப நல்லவண்டா” என்று வடிவேலு சொன்ன வசனம்தான் எனது ஞாபகத்திற்கு வருகிறது.
சரியான விமர்சனங்களை, எப்போதும் நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னைத் தாழ்த்தவேண்டும் என நினைந்து, “முட்டையில் மயிர்புடுங்க” நினைக்குமாப்போல் குற்றம் காண்கிறவர்களுக்குத்தான் நான் பதில் உரைக்கவேண்டி வருகிறது.
எனது ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, நீங்கள் சொன்னது போல் உரைப்போர், எனக்கெதிராக வேண்டுமென்றே வரும் பிழையான விமர்சனங்களுக்கு தாங்கள் சரியான முறையில் பதில் அளித்தால், மற்றவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்லவேண்டி வரப்போகிறது?
எனக்கு ஏற்படும் பெருமைகளைப் பற்றி மூச்சும்விட விரும்பாதவர்கள், இல்லாத பிழை கண்டுபிடித்து என்மேல் பழி சுமத்துகையில், பதிலுரைக்காமல் என்னால் இருக்கமுடியாது.
அண்மையில் வாழையிலையில் நிற்க வைத்து எனக்குச் செய்த பாதபூசை பற்றி ஏதோ பெரும் பாதகம் நிகழ்ந்துவிட்டாற்போல் சிலர் கூக்குரல் இடுகிறார்கள். என்னில் குற்றம் கண்டு, தம்மைப் பெரிய சமயவாதிகளாய் இனங்காட்ட அவர்கள் முயல்கிறார்கள்.
வாழையிலையில் நிற்க வைத்து, பாதபூசை செய்வதென்பது அவ்வூர் வழக்கம். அதன்படி அவர்கள் செய்தார்கள். அதற்கு இவர்கள் துடிக்கும் துடிப்பைப் பார்க்கச் சிரிப்புத்தான் வருகிறது.
அண்மையில் யாழ் “கௌணாவத்தையில்” நடந்த வேள்வியின் போது, வாளுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் எல்லாம் பூசி, கிடாய் வெட்டும் காட்சியை “யூரியூபில்” பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் வெட்டிய ஆட்டுக்கறியை அவர்கள் சுவாமிக்கு வாழையிலையில்த்தான் படைத்தார்கள். இதுபற்றியெல்லாம் இந்தச் “சைவசிகாமணிகள்” மூச்சும் விடுவதில்லை.
ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். என்னைத் தாழ்த்தி விமர்சிப்பார்கள் என்ற பயத்திற்காக, பிழைகளைச் சகித்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
சோழனையே எதிர்த்து “மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ? உன்னை அறிந்தோ யாம் தமிழை ஓதினோம்” என்றுரைத்த கம்பனும், “யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்” என்ற நாவுக்கரசரும், “பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” என்ற பாரதியும்தான் எனது முன்னோடிகள்.
உயர்ந்தவர்கள் சொன்ன வழியைத்தான் நான் பின்பற்றுகிறேன். அதனால் எனது மதிப்புக் குறையுமென்றால் அதுபற்றி நான் கவலைப்படப் போவதில்லை.
கேள்வி :
அண்ணாமலையார் எடுத்திருக்கும் புதிய “அவதாரம்” பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
நீங்களே “அவதாரம்” என்று சொல்லிவிட்டீர்கள். உலகத்தைக் காக்கவருவதுதானே அவதாரம். இதற்குமேல் நான் என்னத்தைச் சொல்ல?