இன்று கம்பன் விழா கோலாகல ஆரம்பம் !

இன்று கம்பன் விழா கோலாகல ஆரம்பம் !
மலேசிய அமைச்சர் தொடக்கி வைக்கிறார்
 
கில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவின் முதல் நாள்; நிகழ்ச்சிகள் இன்று மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து, கம்பன்பட ஊர்வலத்துடன் ஆரம்பமாகவுள்ளன. மங்கல விளக்கேற்றலை இந்து மாமன்ற அறங்காவலர் சபைத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தம்பதியர் நிகழ்த்தி வைக்க, கடவுள் வாழ்த்தினை திரு. அ.ஆரூரன் இசைக்கவுள்ளார். தொடர்ந்து கொழும்புக் கம்பன் கழகத் தலைவர் திரு.தெ.ஈஸ்வரன் வரவேற்புரையையும், யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் தலைமையுரையையும், மலேசிய இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் தொடக்கவுரையையும், ஆற்றவுள்ளனர். 
 

 

 
கம்பன் விழாவில் இவ்வாண்டு  யாழ். கம்பன் கழக வரலாற்றைச் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பான கம்பவாரிதி எழுதிய “உன்னைச் சரணடைந்தேன்” என்ற நூலும், கம்பராமாயணத்துள் இரணியன் வதைப்படலம் குறித்த தொகுப்பான “காவியத்துள் காவியம்;” என்ற நூலும், கடந்த 2015ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் யாழ். கம்பன் விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும் வெளியிடப்படுகின்றன. இவற்றின் முதற் பிரதிகளை முறையே இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமரும், ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளும், திரு.எஸ்.சுப்பிரமணியம் செட்டியாரும், திரு.பி.சுந்தரலிங்கம் அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். வழமைபோல் இவ்வருடமும் கம்பன் கழகத்தினால் சமுதாயப் பணிக்காக வழங்கப்பெறும் அமரர் ஏ. எல். அலமேலு ஆச்சி நினைவு நிதியுதவியினை  மட்டக்களப்பு யோகர்சுவாமி மகளிர் இல்லத்தினரும், அமரர் சி.கே. இலங்கைராஜா நினைவாக, உதவி தேவைப்படும் குடும்பம் ஒவ்வொன்றிற்கு வருடாந்தம் வழங்குவதற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியுதவியினை முள்ளியவளை திருமதி சாந்தி காந்தன் குடும்பத்தினரும் பெற்றுக்கொள்கின்றனர்.
 
தொடரும் பரிசளிப்பு அரங்கில், அமரர் இ.நமச்சிவாய தேசிகர் நினைவுத் திருக்குறள் மனனப் போட்டி, அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி மற்றும் அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான தங்க வெள்ளி வெண்கலப் பதக்கப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 
 
  பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவிய “ஏற்றமிகு இளைஞர் விருதினை” இம்முறை ‘வசந்தம்’ தொலைக்காட்சி அறிவிப்பாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப்பும், “கவிக்கோ” அப்துல் ரகுமான் நிறுவிய “மகரந்தச் சிறகு” விருதினைக் கவிஞர் மு.சடாச்சரனும், தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருதினை’ நாதஸ்வர வித்துவான் அளவெட்டி எம்.பி.பாலகிருஷ்ணனும், நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணைஆனந்தன் நிறுவியுள்ள ‘நாவலர் விருதினை’ கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு அவர்களும் பெறுகின்றனர். மேலும், அமரர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் நினைவாக அன்னாரது குடும்பத்தினர் நிறுவியுள்ள “நுழைபுலம்” ஆய்வு விருதை, ‘மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்’ எனும் ஆய்வு நூலுக்காக ஆய்வாளர் சைவப்புலவர் கலாநிதி சாமித்தம்பி தில்லைநாதன் அவர்கள் பெறுகிறார். 
 
இன்றைய நிறைவு நிகழ்வாக “நாட்டியார்ப்பணம்” எனும் நடன நிகழ்ச்சி ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்ச்சியினை வழங்குவதற்காக தமிழ் நாட்டிலிருந்து புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி மீனாட்சி ஸ்ரீநிவாசன் அவர்கள் தமது அணிசெய் கலைஞர்களுடன் வருகை தந்துள்ளார்கள்.
 
கம்பன் விழாவினையொட்டி, விழா மண்டபத்தில் பூபாலசிங்கம் புத்தசாலையினரால் புத்தக்கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  இவ்விழாவில் கலந்துகொள்ளவென தமிழகத்திலிருந்து ஐந்து பேச்சாளர்களும், மலேசியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தமிழகத்திலிருந்தும் நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 
 
விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக பட்டிமண்டபம், கவியரங்கம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், சிந்தனை அரங்கம், மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம், நூற்றாண்டு நிறைவரங்கு, தனியுரை மற்றும் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
 
கம்பன் விழாவில் கலந்து ‘தமிழ்ச் சுவை பருக” அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.
 

 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.