இரா – பகல் - கவிஞர் ச.முகுந்தன்

இரா – பகல் -  கவிஞர் ச.முகுந்தன்
 
அன்றாடம் எங்கள்
அலைமடியில் எழும்கதிரோன்
பின்னேரக்கையில் பிடிபடுவான்
பின் நடக்கும்
இரவு விசாரணையின்
இம்சையினைத் தாங்காமல்
நிலவை மலங்கழிப்பான்
இந்நெடி கண்டு
விண் ஈக்கள் பலகூடி
மொய்க்கும்
பயங்கர ராத்திரிகள்
◐◐◐
விளக்குத் தலையோடு
வீதியெங்கும் நட்டுவைத்த
தூக்கு மரங்கள்!! ஆங்கே
தொடுத்த சணற்கயிற்றில்
நாக்குக் கிழிபட்ட
தென்னங் குருத்துகளாய்
காரணம் தெரியாமல்
கழுவேற்றப்பட்டிருக்கும்
தோரணப் பிணங்கள்
◐◐◐
சில்வண்டும் செல்துண்டும்
சீழ்க்கையடித்திருக்க
நள்ளிரவின் துகிலை
நாய் ஊளைகள் உரியும்
அச்சறுக்கையாக அடைபட்ட
கிடுகுவரிச் செத்தைகளின் இடுக்கில்
பச்சோந்திச் செதில்கள்
பாம்புகளின் கோவணங்கள்
◐◐◐
பத்திரிகை முகத்தில்
'பலி' தார் அப்புண்டு
ரத்தவெறி சுவறி
'ரா' முட்டைக்
கோது உடையும்
◐◐◐
பகற்குஞ்சைத் தேடி
ஆவல் விழிக்கரமாய் நீள
அடிவானில்
பகற்குஞ்சைக்
காணோம்
பாவம்
அடைகாத்த பலன்?
◐◐◐◐◐
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.