உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 04 | நான் சந்தித்த முதல் வன்முறை

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 04 | நான் சந்தித்த முதல் வன்முறை
நூல்கள் 02 Jun 2016
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

கழகம் பிறந்த கதை
22.05.1980

ஏ.எல்.’ பரீட்சையில் தோற்றதால்,
பல்கலைக்கழகம் புக முடியாமற்போக,
இலக்கிய ஆர்வத்தால் ஒன்றிணைந்திருந்த நண்பர்கள்,
எமக்கென ஓர் இலக்கிய அமைப்பைத் தொடக்க முடிவு செய்தோம்.
நாங்கள் அனைவரும் விஞ்ஞான மாணவர்கள்.
‘ஏ.எல்.’ பரீட்சையின் மூன்றாவது முயற்சிக்காக,
இரசாயனம் பயிலவென ஒரு தனியார் வகுப்புக்குச் சென்று வந்தோம்.
அவ் வகுப்பை நடத்தியவர் ஓர் ஆசிரியை.
கமலாசினி என்பது அவர் பெயர்.
 

எங்கள்மேல் நிறைந்த அன்பு கொண்டவர்.
ஒருநாள், வகுப்புக்காக அவர் வீட்டில் கூடியிருந்தபோது,
கழகம் அமைக்கும் எங்கள் முயற்சி ஆரம்பமானது.
திகதி 22.05.1980.
இரசாயனப் பாடக் கொப்பியின் பின்பக்கத்தில்,
‘இலங்கைக் கம்பன் கழகம்’ எனப் பெயரிட்டு,
எங்கள் கழகத்தை ஆரம்பித்தோம்.
நான் ஏன் தலைவனாய் இருக்கக்கூடாது?” என்று,
திருநந்தகுமார் கேட்க, அப்பதவி அவனுக்கு வழங்கப்பட்டது.
உயிர் நட்பின் காரணமாக குமாரதாசன் செயலாளர் பதவி ஏற்றான்.
வியாபாரக் குடும்பப் பின்னணியோடு இருந்த,
சுருவில் மாணிக்கவாசகர் பொருளாளரானான்.
நான் அமைப்பாளரானேன்.
தேவதைகள் வாழ்த்திய ஒரு தருணத்தில்,
அன்று இட்ட பிள்ளையார் சுழிதான் இன்றைய கம்பன் கழகம்.
இதுதான் எங்கள் கழகம் பிறந்த கதை.



இலங்கைக் கம்பன் கழகம்,
அகில இலங்கைக் கம்பன் கழகமாயிற்று

கழகம் அமைத்த பிறகுதான்,
இலங்கைக் கம்பன் கழகம் என்ற பெயரில்,
ஏற்கனவே ஒரு கழகம் இருந்த உண்மை தெரியவந்தது.
ஆசிரியர் சொக்கன் அதன் செயலாளராய் இருந்திருந்தார்.
நீதிபதி எச். டபிள்யு. தம்பையா அதற்குப் பெருந்தலைவராய் இருந்தாராம்.
பின்னாளில் கொழும்பு சென்று,
மாணிக்கவாசகரின் தமையன் கந்தசாமியுடன் நானும் குமாரதாசனும்,
அவரை ஒருதரம் சந்தித்திருக்கிறோம்.
அவர்களின் கழகம்,
கம்பன் என்ற பெயரில் ஒரு சஞ்சிகையைக் கூட நடாத்தியிருக்கிறது.
அவர்கள் விழா ஒன்றினையும் எடுத்ததாகக் கேள்வி.
அவ்விழாச் செலவுத் தகராறில்,
அக்கழகச் செயற்பாடுகள் நின்றுபோனதாகப் பின்னர் தெரியவந்தது.
ஏற்கனவே இருந்த பெயரில் கம்பன் கழகம் அமைத்தால்,
குழப்பம் வரும் என்பதால், எங்கள் கழகத்தின் பெயரை,
'அகில இலங்கைக் கம்பன் கழகம்' எனப் பின்னர் மாற்றினோம்.

 

எங்கள் கழக நிர்வாகம்

இவ்விடத்தில் எங்கள் கழகத்தை வளர்த்தெடுத்த,
ஆரம்பகால உறுப்பினர்கள் பற்றி அறிமுகம் செய்ய மனம் விரும்புகிறது.
நாங்கள் ஓர் இலக்கிய அமைப்பின் உறுப்பினர்களாய்,
சம்பிரதாய பூர்வமாக என்றும் செயற்பட்டதில்லை.
ஓர் குடும்பமாகவே செயற்பட்டோம்.
ஒருநாள் கூட கம்பன்கழகத்தின் நிர்வாகக் கூட்டம் என்று
நாம் தனியாக ஒன்றுகூடியதில்லை.
சென்ற கூட்ட அறிக்கை, ஆமோதித்தல், ஆட்சேபித்தல் என்பதெல்லாம்,
எங்கள் அமைப்பில் இருந்ததேயில்லை.
நாம் சந்திக்கும் நாட்கள் எல்லாம் நிர்வாகக் கூட்டம் தான்.
புதிதாக ஒரு முயற்சி செய்வதென்று நான் முடிவுசெய்தால்,
அதுபற்றி மற்றவர்களோடு கலந்து கொள்வேன்.
சூடாக விவாதம் நடக்கும்.
ஆனால் முடிவை நான்தான் எடுப்பேன்.
நான் முடிவெடுத்த பின்பு ஆட்சேபித்தவர்களும்,
அதைத் தங்கள் முடிவாகவே கருதிச் செயற்படுவார்கள்.
ஒருவேளை என் முடிவுகள் தோற்றால்,
நான் முன்னரே சொன்னேன் பார்த்தாயா? என்று,
கைகொட்டிக் கொண்டாடமாட்டார்கள்.
அதைத் தங்கள் தோல்வியாய்க் கருதி,
வெற்றியாக்க என்னைவிட அதிகம் முயல்வார்கள்.
அதுதான் எங்கள் நிர்வாகத்தின் சிறப்பு.
மூன்று தலைமுறையினரோடு இன்றுவரை வாழ்ந்துவிட்டேன்.
அன்று என்ன நிலையோ அதுதான் இன்றும்.
வளர்ந்த ஒன்றைப் பராமரிப்பதைவிட,
புதிதாய் ஒன்றை வளர்ப்பதற்குத் தியாகம் அதிகம் வேண்டுமல்லவா?
அந்தத் தியாகத்தைச் செய்தவர்கள் பற்றிக் கீழே சொல்லுகிறேன்.

குமாரதாசன்
 
யாழ். இந்துக்கல்லூரியில் ‘ஏ.எல்.’ வகுப்பிற் படித்தபோது,
எனக்கு வரமாய்க் கிடைத்த நண்பன் இவன்.
இவனது சொந்த ஊர் நெடுந்தீவு.
தந்தையார் ஒரு பண்டிதர்.
கல்வியங்காட்டில் இவர்களின் குடும்பம் இருந்தது.
முற்பிறவித் தொடர்பால் அமைந்த நட்பு இது.
எனக்காக இவன் செய்த தியாகங்களுக்கு ஓர் அளவில்லை.
கம்பன் கழகம் தொடங்குவதற்கு முன்னரே,
எங்கள் நட்புத் தொடங்கிவிட்டது.
நான் ஆரம்பகாலப் பேச்சாளனாக இருந்த நேரமது.
அப்போதெல்லாம் சைக்கிளில்தான் போய்ப் பேசவேண்டும்.
ஒரு பேச்சுக்கு, பத்து ரூபா சன்மானம் தருவார்கள்.
வெளியூர்ப் பேச்சுகளுக்கெல்லாம் குமாரதாசன் தன் உடல் நோ பாராமல்,
என்னைச் சைக்கிளில் அழைத்துச் செல்வான்.
இவனே, எமது கம்பன் கழகத்தின் முதற் செயலாளன்.
கம்பன் கழகத்திற்காக உடல், பொருள், ஆவி,
அனைத்தையும் அர்ப்பணம் செய்யத் தயாராயிருந்தவன்.
படிக்கக்கூடியவனாய் இருந்தும்,
கம்பன் கழக ஈடுபாட்டால் மேற்படிப்பைத் தொலைத்தவன்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில்,
கம்பனடிப்பொடி பெற்றுத்தந்த பட்டப்படிப்பு ‘அட்மிஷனை’யும்,
எனக்காக விட்டெறிந்து விட்டு, கம்பன் பணியாற்ற வந்தவன்.
தன்மேல் எல்லையில்லா அன்பு கொண்டிருந்த,
பெற்றோரையும் சகோதரர்களையும்,
சிலகாலம் எனக்காகப் பகைத்துப் பிரிந்தவன்.
கம்பன் கழகத்தின் வளர்ச்சிப்படி ஒவ்வொன்றிலும்,
இவனது உண்மை உழைப்பு ஆழப்பதிந்துள்ளது.
வெளிநாட்டுக் கல்வி, வெளிநாட்டுப் பயணம் என்று,
தன்னைத் தேடி வந்த அத்தனை வாய்ப்புகளையும்,
கம்பன் கழகத்திற்காகப் புறந்தள்ளியவன்.
என் குருநாதர் இலங்கை வந்திருந்தபோது,
அவருக்குப் பரிசு கொடுக்க வழியில்லாமல் நான் தவிக்கையில்,
தன் ஒரே சகோதரியின் திருமணத்தில் பரிசாய்க் கிடைத்த மோதிரத்தை,
பதைப்பின்றிக் கழற்றிக் கொடுத்தவன்.
முடிவில் என்மேல் கொண்ட அன்பினால்,
எந்தவிதப் பயனும் பெறாமல்,
என் தங்கையைத் திருமணம் செய்தான்.
இவனது மென்மை இயல்பால் இவனை விரும்பாதார் எவருமிலர்.
யாழ். பல்கலைக்கழக நூலகத்திலும்,
பின்னர் இரசாயனவியல் ஆய்வு கூடத்திலும் பணியாற்றினான்.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்த பின்பு,
இனி, கழகம் பிழைக்குமா? என்ற சூழ்நிலையில்,
மனவருத்தத்தோடு கழகத்தையும் என்னையும் பிரிந்து,
அவுஸ்திரேலிய நாடு சென்றான்.
தேசங்கடந்தாலும் கழகத்திலும் என்னிலும்,
நேசம் கடக்காமல் இன்றும் வாழ்கிறான்.
சுயநலமே அறியாத வினோதப்பிறவி.
அவன் மனைவியும், மகனும்,
கழகத்திற்காய்ப் பாடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்த ஏமாளிஎன,
அவனைத் திட்டிக் கொண்டேயிருந்தார்கள்.
இன்று மனைவியை இழந்து தனித்த பின்பும்,
கம்பன் பணியாற்ற விரும்பி நிற்கிறான்.



திருநந்தகுமார்
 
இவனும் இந்துக்கல்லூரியால் எனக்குச் சொந்தமானவன்.
ஆளுமையும், தலைமைத்துவமும் இயல்பாய் உடையவன்.
ஒரே வயதானாலும் என்னைவிட ஒரு வகுப்பு முன் படித்தவன்.
இலக்கிய ஆர்வம் எங்களை ஒன்றாக்கியது.
குடும்பத்தின் மூத்த ஆண்பிள்ளை.
இணுவில் இவனது சொந்த ஊர்.
பெற்றோர் இவனை டொக்டர், என்ஜினியர் என ஆக்க விரும்பினர்.
இவன் அவர்கள் ஆசையை நிராகரித்து,
என்னோடு கழகம் வளர்த்தான்.
ஆனாலும், அவன் பெற்றோர் என்மேல் அன்பு செய்தனர்.
இவனின் தாய் கழக முயற்சிகளுக்கென நான் கேட்கும் போதெல்லாம்,
முகம் சுழிக்காமல் கடனாகப் பணம் தருவார்.
இவனது  தமக்கையின் கணவரான ஜனநாயகம்,
என்மேலும் கழகத்தின்மேலும் இலக்கியத்தின்மேலும்,
பெருவிருப்புக் கொண்டவர்.
கம்பன் கழகத்தின் முதற் தலைவனான நந்தன்,
ஆளுமையாளன், கவிஞன், பேச்சாளன் என,
இலக்கியவுலகில் பெயர் பெற்றவன்.
இவனும் வெளிநாட்டு வாய்ப்புக்கள் பலவற்றை நிராகரித்து,
கம்பன் பணிக்காகப் போர் மண்ணில் என்னோடு வாழ்ந்தான்.
துணிந்து என் கருத்துக்களை எதிர்ப்பான்.
ஆயிரந்தரம் என்னோடு முரண்பட்டாலும்,
என்மீதான அன்பைக் குறைக்காதவன்.
நான் எடுக்கும் முடிவு எதுவானாலும்,
எனக்குத் தோள் தந்து துணைநின்றவன்.
எங்கள் ஆசிரியர் தேவனது சாயல் இவனில் பதிந்திருக்கும்.
துரைத்தனமாய்த் தமிழ் பேசுவான்.
நீதிமன்ற ஊழியனாயிருந்தவன்.
பின் ஆசிரியனாய் யாழ். இந்துக் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தான்.
யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான சூழ்நிலையில்,
இவனது மூத்த குழந்தை மருத்துவ வசதியின்றி இறந்து போனது.
இவன் வெளிநாடு சென்றிருந்தால் அது பிழைத்திருக்குமோ என்னவோ?
கழகத்திற்காகப் பிள்ளையையும் இழந்தான்.
இன்றும் அக்குற்றவுணர்ச்சி என் அடிமனதில் உண்டு.
இவனும் 1995 இடப்பெயர்வின் பின்,
வேறுவழியின்றி, கழகத்தையும் என்னையும் பிரிந்து நியூசிலாந்து சென்றான்.
இன்று, அவுஸ்திரேலியாவில் கழகத்தை மனதிற் சுமந்தபடி வாழ்கிறான்.
அங்கும் பெருமைப்படும்படியாய், தமிழ்ப்பணியாற்றி வருகிறான்.



மாணிக்கவாசகர்
 
இவனும் இந்துக்கல்லூரியில் உறவானவன்தான்.
கலைப்பிரியன், நாடக நடிகன்.
சுருவில் இவனது சொந்த ஊர்.
கம்பன் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே,
என் சொற்பொழிவுகளில் ஈடுபட்டு,
தன் ஊருக்கு என்னை அழைத்துச் சென்று பேச வைத்தவன்.
இவனது ஊர்க் கோயிலில்தான்
என் பேச்சுச் சன்மானம் ஐம்பதாய் உயர்ந்தது.
நட்பால் தன் குடும்பத்தையும் ஊரையும் எனக்கு உறவாக்கியவன்.
இன்றுவரை இவன் குடும்பத்தொடர்பு தொடர்கிறது.
இவன் தமக்கை ஒரு தெய்வப்பெண்.
மற்றவர்களுக்காகத் தான் நோவதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்பவர்.
இந்தியாவிற்கு நான் படிக்கச் செல்லவென,
தன் காப்புகளைக் கழற்றித் தந்தவர்.
அதேபோல இவனது தமையன் கந்தசாமியும்,
என்மேல் எல்லையற்ற அன்பு கொண்டவர்.
இன்றும் எங்களின் முயற்சிகள் எல்லாவற்றிற்கும்,
தன்னால் முடிந்த அளவு துணை செய்து வருபவர்.
கொழும்பில் நாம் அமைத்துள்ள,
புதிய ஐஸ்வர்யலஷ்மி ஆலயப்பணியில்,
சிலகாலம் இணைந்து பணியாற்றினார்.
அந்தளவுக்கு மாணிக்கவாசகர் குடும்பம் எனக்கு நெருக்கமானது.
இவனே கழகத்தின் முதற் பொருளாளன்.
எங்களோடு ஈடுபட்டுப் பணியாற்றினான்.
ஆரம்பகால இந்தியப் பயணங்களில் என்னோடு சுற்றியவன்.
கழகப் பணிகளால் நாங்கள் உருப்படாமற் போவோமோ என்ற அச்சம்,
எங்கள் எல்லார் குடும்பங்களிலும் இருந்தது.
அதனால்,
படிப்பு முடிந்ததும் அவன் குடும்பம் நெருக்கடி தர,
கழகப் பணிகளைக் கைவிட்டு வியாபாரம் தொடங்கினான்.
அம்முயற்சி வெற்றியளிக்காமல் பெரிய இடர்ப்பட்டான்.
இன்று கொழும்பில் அவனும் அவன் துணைவியும்,
அலங்கார நிலையம் அமைத்து,
பெரும் புகழ் ஈட்டியிருக்கின்றனர்.
இன்றுவரை அவன் உறவும், அன்பும் குறைவின்றித் தொடர்கின்றன.



சிவலோகராஜா
 
இவனும் யாழ். இந்துக்கல்லூரியில்
உயர்தர வகுப்பில் என்னுடன் படித்தவன்.
பேச்சாற்றல் உடையவன்.
என்மேல் எல்லையற்ற அன்பு கொண்டவன்.
என் ஊரான சண்டிலிப்பாய்க்கருகில் உள்ள சங்கானையில் வசித்தவன்.
கம்பன் கழகம் ஆரம்பிக்கும் முன்னரே,
எனது இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன.
சமயச் சொற்பொழிவாளனாக
ஆரம்பகாலத்தில் பல ஆலயங்களில் பேசினேன்.
சமயப் பேச்சாளர்கள் மதிக்கப்படாத காலமது.
நாங்களாகச் சொற்பொழிவுக்குப் போகவேண்டும்.
எதுவிதச் சன்மானமும் தரப்படமாட்டாது.
சன்மானம் தரப்படும் மற்றைய நிகழ்ச்சிகளின் வசதிகளை அனுசரித்தே,
எங்களை மேடையேற்றுவார்கள்.
பேச ஆசைப்பட்ட காலமது.
அதனால் இவ் அவமரியாதைகளைச் சகித்துப் பேசப்போவேன்.
குமாரதாசனைப் போலவே இவனும்,
என்னைத் தனது பழைய சைக்கிளில் வைத்து,
எல்லா இடங்களுக்கும்  கூட்டிப்போவான்.
பத்துப் பதினைந்து கிலோமீற்றர் தூரத்தையும் கடந்து,
சலிப்பின்றி என்னை அழைத்துச் சென்று,
சாமமானாலும் நின்று அழைத்து வருவான்.
கம்பன் கழகம் ஆரம்பித்தபொழுது நிர்வாகத்தில் விரும்பிப் பங்கேற்றான்.
கழக முயற்சிகளில் இவன் பங்களிப்பு மிகக் குறைவானதே.
இன்று ஜேர்மனியில் வசிக்கிறான்.
வரும்போதெல்லாம் வந்து பார்க்கிறான்.



காவல் செய்த ஆசிரியத் தெய்வங்கள்

இவ்விடத்தில் எங்களையும், கழகத்தையும்,
காத்தும் வழிப்படுத்தியும் நின்ற எங்களின் ஆசிரியப் பெருந்தகைகள் பற்றி,
ஒரு சிறிய பதிவினைச் செய்ய விரும்புகிறேன்.
பின்னர் ஆங்காங்கே அவர்களைப் பற்றி,
விரிவாய் எழுதிச் செல்வேன்.
எம்மைக்காத்த ஆசிரியர்கள் நால்வர்.
முதலாமவர் யாழ் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்த,
க. சிவராமலிங்கம் பி.ஏ. அவர்கள்.
கால்கள் ஊனமுற்றவர் அவர்.
அதுபற்றி என்றுமே அவர் கவலைப்பட்டதில்லை.
சமூகம் பற்றியும், மற்றவர்கள் பற்றியும் தான் அதிகம் கவலைப்படுவார்.
(தொடரும் பாகங்களில் இவர் பற்றிய எந்தையடி போற்றி எனும் கட்டுரை வர இருக்கிறது.)

அடுத்தவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பலகாலம் கற்பித்த,
வித்துவான் க.ந.வேலன் அவர்கள்.
எமக்கு அறிவுப்பசியூட்டி நெறி செய்தவர் இவரே.
மூன்றாமவர் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியில் பலகாலம் கற்பித்து,
பின்னர் யாழ் இந்துக்கல்லூரிக்கு வந்த வித்துவான் சி. ஆறுமுகம் அவர்கள்.
அன்பின் வடிவம்.
நான்காமவர் யாழ் இந்துக்கல்லூரியில் கற்பித்து வந்த,
பல்துறை ஆற்றலாளர் யாழ் தேவன் அவர்கள்.
இந்நால்வரும் இல்லாவிட்டால்,
இன்று கழகம் இந்த வளர்ச்சியை எய்தியிருக்க முடியாது.
இவர்கள் எங்களைத் தங்கள் பிள்ளைகள்போல் நேசித்தார்கள்.
எமது வளர்ச்சியிலும் கழகத்தின் வளர்ச்சியிலும்,
எல்லையற்ற அக்கறை கொண்டிருந்தார்கள்.
கழகத்தின் பொறுப்பாளர்களாய் இருந்து,
எங்களைக் காத்து நின்ற தெய்வங்கள் இவர்கள்.
நாங்கள் பிழைகள் செய்தபோதும்,
எங்களது பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் வந்தபோதும்,
எங்களைநோக்கிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும்,
இரும்புச் சுவராக நின்று எங்களை இவர்கள் காவல் செய்தனர்.
எங்களுக்காக மற்றோரிடம் வாதிட்டனர்.
எவரிடமும் எங்களை அவர்கள் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.
தமிழுக்குப் பொருள் அன்பென்று எங்களுக்கு உணர்த்திய மகான்கள்.
உயிர் பிரியும்வரை எங்களை உள்ளத்தில் சுமந்த அன்புச் சுமைதாங்கிகள்.
அவர்கள் இருக்கும் வரை,
கழகப்பணிகள் எனக்குப் பாரமாக இருந்ததேயில்லை.
விரும்பியதைச் செய்துவிட்டு,
அவர்களை நோக்கிக் கைகாட்டித் தப்பித்துக் கொள்வேன்.
இன்று அவர்கள் இல்லை எனும் போதுதான்,
அவர்கள் தாங்கி நின்ற சுமைகளை என் தோள்கள் உணர்கின்றன.



கழகம் நடாத்திய இராமாயண வகுப்பு

கழகம் தொடங்கியதும் எங்கள் முதற்செயற்பாடாய்,
கம்பராமாயண வகுப்பு ஒன்றினை,
விடுமுறை நாட்களில் யாழ். இந்துக்கல்லூரியில் நடாத்தினோம்.
ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவ்வகுப்பில் கலந்துகொண்டனர்.
அந்த வகுப்பிற்குப் பெரிய வரவேற்பு இருந்தது.
இருபாலாரும் அவ்வகுப்பிற் கலந்துகொண்டனர்.
வித்துவான் வேலன் அவ்வகுப்பை நடாத்தினார்.
சிலகாலம் நடந்த அந்த வகுப்பு, பின் நின்றுபோயிற்று.
நாங்கள் நடாத்தத் தொடங்கிய கம்பன் விழாக்கள் ஓரளவு வெற்றிபெற,
அம்முயற்சியிலேயே முழுமையாய் நாம் மூழ்கிப்போனோம்.
வகுப்பு நின்றுபோனமைக்கு அதுவே காரணமாயிற்று.



ஆசிரியர்களுக்குப் பாதபூசை

அந்த வகுப்பைப் பொறுத்தவரை மறக்கமுடியாத நிகழ்ச்சி,
அவ்வாண்டில் யாழ். இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில்,
நாங்கள் செய்த விஜயதசமி விழா நிகழ்ச்சியாகும்.
வகுப்புக்கு வந்த மாணவர்களையெல்லாம் ஒன்றுகூட்டி,
முதன்முறையாக, எங்கள் ஆசிரியர்களான சிவராமலிங்கம்,
வித்துவான் ஆறுமுகம், வித்துவான் வேலன்,
ஆகியோரை உட்காரவைத்து,
அவர்கள் பாதங்களைக் கழுவிப் பூசைசெய்ய முடிவு செய்தோம்.
வித்துவான் ஆறுமுகம்,
தம் கால்களை நாங்கள் கழுவுவதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.
வலியுறுத்தி உட்கார வைக்க,
உங்களுக்காக இனியெண்டாலும் நான்  சுத்தமாக இருக்கிறனடா
என்று அழுதழுது எங்களை ஆசீர்வதித்தார்.
மற்றைய இருவர் கண்களிலும் கூடக் கண்ணீர்.
அன்றைய அவர்களது ஆசீர்வாதம்தான் எங்கள் வளர்ச்சியின் அத்திவாரம்.
அன்று நாங்கள் தொடங்கிய இந்த மரபு,
இன்றுவரை விஜயதசமி நாட்களில் தொடர்கிறது.
அன்றைய நிகழ்ச்சியில் பேசும்போது,
இளமைக்கேயுரிய கற்பனை உணர்ச்சியில்,
வருங்காலத்தில் எண்பத்தொரு அடியில்,
ஓர் அனுமார் சிலை அமைப்பது என அறிவித்தேன்.
இன்றுவரை அது நனவாகவில்லை.
ஆனாலும் கழகத்தின் வெள்ளிவிழாவின் போது,
கொழும்பில் அமைக்கப்பட்ட ஐஸ்வர்யலஷ்மி கோயிலில்,
எங்கள் ஆற்றலுக்கேற்ப அனுமார் வந்து உட்கார்ந்தார்.
இன்றும் 81 அடி அனுமார் ஸ்தாபிதம் எனும் இலட்சியம்,
அப்படியே மனதில் இருக்கிறது.



கழகத்தின் முதல் ‘கலெக்ஷன்’

கழகம் அமைத்து நாங்கள் இயங்கத் தொடங்கிய பின்பும்,
எங்களையோ கழகத்தையோ யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
நாங்கள் கழகம் அமைத்ததை ஊருக்குத் தெரியப்படுத்த நினைத்து,
ஓர் அறிமுக விழாவை நடாத்துவதென முடிவு செய்தோம்.
விழா நடத்தப் பணம் வேண்டுமே!
என்ன செய்வது?
எங்கள் கழகப் பொருளாளராய்ப் பொறுப்பேற்றிருந்த,
மாணிக்கவாசகர் (மாணிக்கம்) சுருவிலைச் சேர்ந்தவன்.
அந்த நாட்களில் சுருவிலை,‘குட்டி அமெரிக்கா’ என்பார்கள்.
அந்த ஊரிலுள்ள அத்தனை ஆண்களும்,
கொழும்பில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
அந்த ஊர் ஐயனார் கோயில்த் தேர்த்திருவிழா அன்று மட்டுந்தான்,
அவ்வூர் ஆண்களை அங்கு காணலாம்.
மாணிக்கத்தின் அத்தானும் ஒரு வர்த்தகர்.
‘நவதானியா ஸ்ரோர்ஸ்’ என்ற பெயரில்,
கொழும்பு களனிப் பகுதியில் அவர் ஒரு கடை வைத்திருந்தார்.
அப்பொழுதே நான் கோயிற் சொற்பொழிவுகளை ஆரம்பித்து விட்டேன்.
மாணிக்கத்தின் வேண்டுதலுக்காக சுருவிலுக்கு
ஒரு திருவிழாவுக்குப் பேசப்போக,
என் பேச்சுக்கு அங்கு பெரும் ‘டிமாண்ட்’ ஏற்பட்டது.
மாணிக்கத்தின் அக்கா, அத்தான், உறவினர் என அத்தனை பேரும்,
என்மேல் அன்பு பாராட்டத்தொடங்கினர்.
அவ்வுறவுத் தொடர்பால், விழாவுக்குக் காசு தேவைப்பட்டதும்,
மாணிக்கத்தின் அத்தானான,
சிவசாமி என்று அழைக்கப்படும், கனகசுந்தரத்திடம் சென்றோம்.



முதல் நிதி தந்த கைராசிக்காரர்

எங்கள் விழாவுக்கான மொத்தச் செலவுக்கணிப்பு,
அப்போது ஐந்நூறு ரூபாய்தான்.
அந்த நாட்களில் ஐந்நூறு ரூபாய் எங்களுக்குப் பெரிய தொகை.
ஒரு சொற்பொழிவுக்கு நான் ஐம்பது ரூபாய் வாங்கிய காலம் அது.
நூறு ரூபாயாவது தருவார் என நினைத்துக் கேட்டபோது,
ஐந்நூறு ரூபாவையும் தந்து அவர் ஆச்சரியப்படுத்தினார்.
புதுப்புது நூறு ரூபாய்த் தாள்கள் ஐந்து.
என் முதற் ‘கலெக்ஷன்’ அதுதான்.
இன்று இலட்சங்களாய்ப் பணம் சேர்க்க முடிகிறது.
ஆனாலும், அந்த ஐந்நூறு ரூபாய் தந்த ஆனந்தத்தை,
எதனாலும் வெல்ல முடியவில்லை.



நான் சந்தித்த முதல் வன்முறை

அப்போது திருநந்தகுமார்,
சொந்தமாய் ஒரு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தான்.
முதல் விழாக் கவியரங்கத்தில் கலந்துகொள்ளவென,
அளவெட்டி சென்று அருட்கவி விநாசித்தம்பியைக் கேட்டுவிட்டு,
நானும், திருநந்தகுமாரும்,
அவனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம்.
மருதனார்மடச் சந்தியைத் தாண்டியபோது பயங்கரமான ஒரு காட்சி.
வீதியில் வந்த ஒருவரைச் சைக்கிளில் வந்த இருவர்,
பெரிய வாளால் எங்கள் கண்முன்னே வெட்டினர்.
பதறிப்போனேன்.
எனது பயம் கண்டு திருநந்தகுமார்,
சற்றுத் தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட,
கொலையாளிகள் இரத்தம் சொட்டும் வாளுடன்,
சைக்கிளில் எங்களைக் கடந்து சென்றனர்.
வெட்டுப்பட்டவர் இரத்தம் தோய்ந்து உதவிக்காய்க் கதற,
பயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் அவரைக் கடந்து சென்று,
அருகிலிருந்த பட்டினசபை அலுவலகத்தில்,
நிகழ்ந்ததைக் கூறி உதவச்செய்தோம்.
எங்கள் முதல் விழாவில் என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் வன்முறை.
அந்தக் காட்சி என் கண்களை விட்டுப்போகப் பல வாரங்கள் ஆயின.
அதன் பின்னர் யாழில் வன்முறை கரையின்றி விரிய,
அதற்குள்ளேயே வாழப்பழகிக்கொண்டேன்.



நல்லை ஆதீனக் குருமுதல்வர்

பணம் கிடைத்துவிட்டது. விழாவை எங்கே நடத்துவது?
கேள்வி பிறக்க, நல்லூர் ஆதீனத்தில் நடத்தலாம் என முடிவு செய்தோம்.
முன்பு ‘மணி ஐயர்’ என்ற பெயரில் பிரசங்கியாய்,
யாழில் பிரசித்தமாயிருந்தவர்,
பின்பு நல்லை ஆதீனத்தை ஸ்தாபித்து முதற் குருமகாசந்நிதானமாய் இருந்தார்.
பெரிய அறிவாளி. இயல், இசை, நாடகம் எனும்
முத்துறைகளும் கைவரப் பெற்றவர்.
கதாப்பிரசங்கத்தில் தனி முத்திரை பதித்திருந்தார்.
தென்னிந்தியாவிலும் அவரது சொற்பொழிவுகளுக்குப்
பெரிய மதிப்பு இருந்தது.
அந்த நாட்களில் நல்லூர்த் திருவிழாக்களில்,
சுவாமி வீதியுலா வந்து உள்ளே போனதும்,
இரவு 9 மணிக்கு, கோயில் வாசலில் இருந்த வேப்ப மரத்தின் கீழ்,
அவரது சொற்பொழிவு நடைபெறும்.
பக்தர்கள் வீடு சென்று சாப்பிட்டபின் வந்து உட்காருவார்கள்.
இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலியவற்றைத் தொடராய்ச் சொல்லுவார்.
நல்லூரில் அவர் இட்டு வைத்திருந்த இலக்கிய அத்திவாரமே,
எங்கள் கழக வளர்ச்சிக்குப் பின்னாளில் உரமாயிற்று.



ஆதீனத்தோடு நிகழ்ந்த முரண்பாடும்
அவர் தந்த ஆதரவும்

நான் அந்தக் குருமகாசந்நிதானத்தோடு,
அக்காலத்தில் சிறிய முரண்பாடு கொண்டிருந்தேன்.
அவர்களது பீடாரோகண விழா ஒன்றின்போது,
எங்களை ஒரு பட்டிமண்டபம் நடாத்தக்கேட்டிருந்தார்.
சம்மதித்திருந்தேன்.
நாங்கள் வளரத் தொடங்கி இருந்த காலமது.
அப்போது ஆசிரியர் குமரனும், நானும்,
இன்னும் சில பேச்சாளர்களும் சேர்ந்து
பட்டிமண்டபங்களை நடாத்தி வந்தோம்.
அழைப்பிதழில் பேச்சாளர்களின் பெயர்களைப் போடாமல்,
ஜெயராஜ் குழுவினரின் பட்டிமண்டபம் எனப் போட்டது,
எனக்குப் பிடிக்கவில்லை.
அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் விட்டேன்.
அப்போதே அந்தப் பிடிவாதக் குணம் என்னிடம் இருந்தது.
குருமகா சந்நிதானம் அச்சம்பவத்தை மனதில் வைத்திருப்பாரோ என,
நினைத்துப் பயந்தபடி,
அவர்கள் ஆதீன மண்டபத்தில்,
எங்கள் விழாவை நடாத்த அனுமதி கேட்டோம்.
எந்தவிதக் கட்டணமுமின்றி,
இனாமாய் மண்டபத்தைத் தந்ததோடு,
ஆசியுரையும் செய்யச் சம்மதித்தார்.
விழாவன்று அவர் கதாப்பிரசங்கத்திற்காய்,
வெளியே செல்லவேண்டியிருந்ததால்,
சபைக்கு ஆட்கள் வராமல் இருந்தபோதும்,
ஐந்து மணிக்கே மேடை ஏறி,
ஆசியுரை செய்துவிட்டுச் சென்றார்.
அவர் தந்த ஆசியும்,
எங்கள் வளர்ச்சியின் காரணங்களில் ஒன்று.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
 
பாகம் 005ல்...
 
· முதலாவது கம்பன் விழா 
· பேசிய பெண் யார்? 
· முதலில் கம்பனைப் படியுங்கோ! 
· கழகத்தின் முதல் அலுவலகம்
· பண்டிதர் கந்தையா குடும்பம்
· திருகோணமலைக் கம்பன் கழகம் 
· இரண்டாவது கம்பன் விழா 
· ஆரம்பகாலத் தொண்டர்கள்
· கிரிதரன்
· ரி.எஸ். சிவகுமாரன்
· வசந்தன் - மகாராஜா - விஷ்ணுதாசன்
· ஸ்கந்தமூர்த்தி
· பிற நண்பர்கள்
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.