உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 18 | மறக்க முடியுமா?

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 18 | மறக்க முடியுமா?
நூல்கள் 04 Jan 2017
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
காரைக்குடிக் கம்பன் விழா இரண்டாவது பயணம்
04.04.1982
காரைக்குடியில் 1982 ஏப்ரல் மாதத்தில்
04 முதல் 07 வரை நடைபெற்ற,
 கம்பன் விழாவிலும்,
நானும் குமாரதாசனும் கலந்துகொண்டோம்.
இவ்விழாவில் கி.வா. ஜெகநாதன் தலைமையில்,
பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
மறக்கமுடியாத விழா இது.
இவ்விழாவில் ‘இலங்கிணியாய்ப்’ பேசினேன்.
இவ்விழாவின்போது கம்பன் அடிப்பொடி சுகயீனமுற்றிருந்தார்.
விழா மேடைக்கருகில் ஒரு கட்டிலைப்போட்டு படுத்திருந்தபடி,
அவர் விழாவை நடத்திய உறுதி கண்டு அனைவரும் கலங்கினர்.
இலங்கிணியாய்ப் பேசி இம்முறையும் பாராட்டுப் பெற்றேன்.
அன்று நான் பேசி முடித்ததும்,
படுக்கையிலிருந்த கம்பன் அடிப்பொடி மகிழ்ந்து,
என்னை அருகில் அழைத்துத் தலை தடவி,
“நீ நல்லா வருவடா” என்று நெகிழ்ச்சியோடு வாழ்த்தினார்.
அத்துடன் கம்பராமாயண நூலொன்றையும் எனக்குப் பரிசளித்தார்.
 

மோதிரக் கையால் குட்டு
இலங்கிணியாய் நான் பேசும்போது,
புதிதாய் ஏதாவது சொல்ல வேண்டும் என்னும் உற்சாகத்தில்,
“இலங்கிணியைச் சந்தித்தபின்தான் அனுமனுக்கு,
அறம் பற்றிய உறுதி வந்தது” என்று கூறி,
அதற்கான காரணத்தையும் நானே கற்பனை பண்ணி உரைத்தேன்.
“நீ யார்?” என இலங்கிணி அனுமனைக் கேட்டபோது,
இராமதூதன் எனத் தன்னை உரைக்காத அனுமன்,
பின் இராவணனின்முன், தன்னை இராமதூதனாய் அறிமுகம் செய்கிறான்.
“அறம் வெல்லும்! பாவம் தோற்கும்!” என,
அனுமனிடம் இலங்கிணி உறுதிபடச் சொன்னபின்பே,
அனுமனுக்குத் தன்னை இராம தூதனாய் உரைக்கும் துணிவு,
வந்தது என்றேன்.
அதைச் சொல்லி சபையில் ஒரு கைதட்டும் வாங்கினேன்.
உற்சாகத்தோடு என் இருக்கைக்கு நான் வந்து அமர்ந்தபின்பு,
என் முதுகில், திடீரென ஏதோ வந்து விழுந்தது.
திரும்பிப் பார்த்தால் ஓர் ஐம்பது சத நாணயம் விழுந்து கிடந்தது.
யார் போட்டார்கள் எனச் சுற்றிப் பார்த்தேன்.
மேடையின் ஓரத்தில்,
எனது குருநாதரும் கோதண்டராமக் கவுண்டரும் அமர்ந்திருந்தனர்.
நான் திரும்பியதும் குருநாதர் என்னைக் கைகாட்டி அழைத்தார்.
பாராட்டப் போகிறார் என நினைந்து எழும்பிப் போனேன்.
என்னை அருகில் அமர வைத்து,
“அப்ப நீ என்ன சொல்ல வர்றே?
இலங்கிணி சொன்னதன்முன்,
அனுமனுக்கு அறநம்பிக்கை இல்லையா?
கெட்டித்தனம் காட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாது.
ஒரு பாத்திரத்தைத் தாழ்த்தி,
இன்னொரு பாத்திரத்தை உயர்த்துவது அழகல்ல” என்று,
இருவருமாய் என்னைக் கண்டித்தனர்.
கம்பன் மேடையில் பேச,
எத்துணை பக்குவம் வேண்டுமென்பதை அன்று உணர்ந்துகொண்டேன்.

கி.ஆ.பெ. விசுவநாதத்தைச் சந்தித்தோம்
என் குருநாதரைக் கம்பன் விழாவின் நாளொன்றில் இடைநேரத்தில்
அழகப்பா பொறியியல் கல்லூரியில் பேச அழைத்திருந்தனர்.
“மதிய உணவின்பின் சென்று, திரும்பி விடுவேன்” என்று கூறி
அவர் புறப்பட,
கெஞ்சி மன்றாடி நாங்களும் அவருடன் இணைந்து கொண்டோம்.
ஒரு பழைய பஸ் வண்டி வந்து எங்களை ஏற்றிச் சென்றது.
அந்த பஸ் வண்டியில் நாங்கள் ஏறியபோது,
உள்ளே பேரறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் உட்கார்ந்திருந்தார்.
நீள அரைக்கைச் சட்டை, பஞ்சகச்சம், சோடாப்புட்டிக் கண்ணாடி என,
அவர் தோற்றமே வித்தியாசமாய் இருந்தது.
எங்கள் குருநாதர்கூட,
அவருடன் மிக மரியாதையாக நடந்துகொண்டார்.
பொறியியல் கல்லூரிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்ததும்,
அங்குள்ளவர்கள்,
எங்களனைவரையும் ஆசிரிய ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இருந்த, இளைஞர்கள் சிலர்,
கி.ஆ.பெ.யிடம் சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
“ஆங்கிலத்தில் எழுத்துக்கள் குறைவு,
தமிழில் அதிகம் இருக்கிறது. அது குறையில்லையா?” என்றார் ஒருவர்.
ஒரு நிமிடம்கூடத் தாமதியாது கி.ஆ.பெ. அவர்கள்,
“தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனி உச்சரிப்பு இருக்கிறது.
ஆங்கிலத்தில் அப்படியல்ல.
அதனாற்தான், தமிழில் எழுத்துக்கள் அதிகமாயின” என்று சொல்லிவிட்டு,
ஒரு பேப்பரை வாங்கி Nagai Maligai என எழுதி,
“இதை வாசி!” என்றார்.
கேள்வி கேட்டவர், தயக்கமின்றி நகை மாளிகை என வாசித்தார்.
உடனே, கி.ஆ.பெ.,
“ஏன் இதனை நாகை மளிகை என்று வாசிக்கக்கூடாதா?” என்றார்.
கேள்வி கேட்டவர் மௌனிக்க,
“இதுதான் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.
“தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைப்பற்றி,
என்ன நினைக்கிறீர்கள்?” என,
மற்றொருவர் கேட்டார்.
“நாற்பத்தெட்டுக் கிலோ அரிசியில் இரண்டு கிலோ கல் சேர்த்தால்,
அது ஐம்பது கிலோ ஆகும்.
ஆனால், அரிசி சுத்தமாய் இருக்குமா?” என்றார் கி.ஆ.பெ.
இப்படியாய்க் கேள்வி பதிலில் நேரம் போக,
நிகழ்ச்சியின் நேரம் கடப்பதை உணர்ந்த கி.ஆ.பெ.,
“என்னப்பா, ஏன் இன்னும் நிகழ்ச்சியை ஆரம்பிக்கவில்லை?” என்றார்.
பேராசிரியர்கள் தலையைச் சொறிந்தபடி,
“ஒலிபெருக்கியில் சின்னக் கோளாறு.
ஒலிபெருக்கியில்லாவிட்டால்,
உங்களுக்குச் சிரமமாய் இருக்கும் என்பதற்காக,
அதனைச் சரி செய்கிறார்கள்” என்று சமாதானம் சொல்லினர்.
நேரக் கட்டுப்பாட்டில் கம்பன் அடிப்பொடியைப் போலவே,
கி.ஆ.பெ. அவர்களும் கடுமையாய் இருப்பார் என்பது,
அனைவருக்கும் தெரியும்.
பேராசிரியர்களின் சமாதானத்தைக் கேட்டதும் கி.ஆ.பெ.,
“அந்தக் காலத்தில், ‘மரீனா’ கடற்கரையில் ஐயாயிரம் பேருக்கு,
ஒலிபெருக்கி இல்லாமல்தான் பேசினோம்.
நாங்கள் சிரமப்படுவோம் என நினைத்து,
நீங்கள் சிரமப்பட்டு, எங்களையும் சிரமப்படுத்தாதீர்கள்” என்றார்.
பேராசிரியர்கள் வாயடைத்துப் போயினர்.
அதன்பின், நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவரைக் கூப்பிட்ட கி.ஆ.பெ.,
“ஒன்று, குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் பழகுங்கள்.
அல்லது, நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தையாவது
குறிக்கப் பழகுங்கள்” என்றார்.
பதறியடித்து, சில நிமிடங்களில் விழாவை ஆரம்பித்தனர்.
அது பொறியியற் கல்லூரி.
குடுமியுடனும், பஞ்சகச்சத்துடனும் வந்த,
எனது குருநாதரினதும், கி.ஆ.பெ.யினதும்
பழைய தோற்றத்தைக் கண்டு,
இவர்கள் “அறுக்கப்” போகிறார்கள் என நினைத்து,
விசிலடித்துக் கோளாறு செய்த மாணவர்கள்,
மேடையில் “முத்தமிழ்” என்ற தலைப்பில் கி.ஆ.பெ. அவர்களும்,
“சிலம்பில் சில காட்சிகள்” எனும் தலைப்பில்,
எனது குருநாதரும் பேசிய பேச்சைக் கேட்டு மயங்கித் திகைத்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்து மேடையால் அவ்விருவரும் இறங்கிவர,
விசிலடித்த அதே மாணவர்கள்,
அவ்விருவரும் மண்டபத்தைவிட்டு வெளியேறும்வரை,
எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தார்கள்.
தமிழின் வலிமையை அன்று உணர்ந்தேன்.

குரு தந்த ஞானம்!
அறிவாணவம் என் குருவிடம் சிறிதும் இருந்ததில்லை.
அழகப்பா பல்கலைக்கழகப் பேச்சு முடிந்ததும்,
கி.ஆ.பெ. அவர்கள் திருச்சி சென்றுவிட,
அப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
குருநாதரையும், எங்களையும் தன் காரில் அழைத்துச் சென்றார்.
குருநாதரின் பேச்சில் அவரும் மயங்கியிருந்தார்.
அந்த ஆனந்தத்தில்,
“சார், இன்னைக்கு உங்க பேச்சாலே,
மாணவர்கள் பலர் திருந்தியிருப்பார்கள்” என்றார்.
சிறிது நேரம் மௌனித்த என் குருநாதர்,
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்!” என்றார்.
துணைவேந்தர் விடுவதாய் இல்லை.
“நீங்க அப்படிச் சொல்லக் கூடாது.
எல்லாரும் திருந்தாவிட்டாலும்,
பத்துப்பேராவது திருந்தியிருப்பாங்கதானே!” என்றார்.
அதற்கும் என் குருநாதர் சிறிது மௌனித்துவிட்டு,
பிறகு, “நீங்க சொல்வது உண்மைதான்.
பத்துப் பேர் திருந்துவாங்க என்பதில் சந்தேகமில்லை.
ஆனா, அந்தப் பத்துப்பேரும்,
நான் பேசியிருக்கா விட்டாக்கூடத் திருந்தியிருப்பாங்க சார்” என்றார்.
அதற்குப் பிறகு துணைவேந்தர் பேசவில்லை.
என் குருநாதரின் ஞானத்தைக் கண்டு நான் திகைத்தேன்.
இப்படி என் குருநாதரிடம் நான் பெற்ற அனுபவங்கள் எத்தனையோ!
விரிவஞ்சி அவற்றை விடுகிறேன்.

மறக்க முடியுமா?
காரைக்குடிக் கம்பன் விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி,
நாட்டரசன் கோட்டையில் நடந்தது.
உடல் நலத்தைக் காரணம்காட்டி,
நாட்டரசன் கோட்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என,
பலபேர் தடுத்தபோதும், அவர்களை நிராகரித்து,
“கம்பன் விழாவில் கலந்துகொள்ளாமல்,
உசிர வைச்சிருந்து என்ன பயன்?” எனக் கேட்டு,
பிடிவாதமாய், சுகவீனமுற்ற உடல்நிலையோடு நாட்டரசன் கோட்டைக்கு,
கம்பன் அடிப்பொடியும் வந்தார்.
அங்கிருந்த ஊருணி நீரை பருகியதால்,
அவரது சுகயீனம் கடுமையாகி மூச்சுத்திணறி அவர் பாடுபட்டார்.
கம்பன் வாழ்க! என்று அவர் கோஷமிட்டுத்தான் வழமையாய் விழா முடியும்.
அன்று கோஷமிடக் கூட முடியாமல் அவர் திணறியது கண்டு,
தமிழறிஞர்கள் கண்ணீர் வடித்தனர்.
இதுதான் நான் அந்த இலட்சிய மனிதரை,
கடைசியாய் நேரிற் கண்ட சந்தர்ப்பம்.

திருகோணமலைக் கம்பன் கழகத்தின் முதல் விழா
(15.05.1982)
திருமலையில் கம்பன் கழகத்தை ஆரம்பித்திருந்த வித்தியாதரன்,
ஆசிரியர் சிவசேகரத்தைக் கொண்டு,
மாணவர்களுக்கான இராமாயண வகுப்புக்களை நடாத்தி வந்தான்.
எமது கம்பன் விழாக்கள் தந்த ஊக்கத்தில்,
வித்தியாதரனுக்கு, திருமலையில்,
ஒரு கம்பன் விழாவை நடாத்த வேண்டும் எனும் எண்ணம் வந்தது.
அவன் விருப்பப்படி,
அங்கு முதல்முறையாக ஒரு கம்பன் விழாவை நடாத்த முடிவு செய்தோம்.
1982 மே 15, 16 ஆம் திகதிகளில் இவ்விழா நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஆசிரியர்களும் கழக இளைஞர்களுமாக,
தனி பஸ்ஸில் திருமலை சென்று சேர்ந்தோம்.
மிகச் சிறப்பாக விழா ஒழுங்குகளை வித்தியாதரன் செய்திருந்தான்.
வித்தியாதரன் குடும்பத்தினர் முழுப்பேரும்,
விழாவுக்கு உறுதுணை செய்தனர்.
தனியே நம் நாட்டு அறிஞர்களுடன் நடத்தப்பட்ட விழா அது.
அவ்விழா மிகப்பெரிய வெற்றி பெற்றது.
திருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபத்தில் அவ்விழா நடந்தது.
வீதிவரை சனக்கூட்டம்.
விழா முடிந்து நாங்கள் பஸ் ஏறியபோது,
ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்ஸைச் சூழ்ந்து நின்று,
தேசத் தலைவர்களுக்கு அளிக்கும் மரியாதைபோல்,
எங்களையெல்லாம் கௌரவித்து வழியனுப்பி வைத்தனர்.
சிவராமலிங்கம் மாஸ்டர், வித்துவான் ஆறுமுகம்,
வித்துவான் வேலன், ஆசிரியர் தேவன் ஆகியோர் எம்மோடு வந்ததும்,
எல்லோரும் ஒன்றாய் இருந்து பேசிச் சிரித்து மகிழ்ந்ததும்,
வெந்நீர்க் கிணற்றில் அவர்களை உட்காரவைத்து நாங்கள் நீராட்டியதும்,
கோணேஸ்வரரைத் தரிசித்ததும்,
திருகோணமலைத் தமிழ்மக்களின் அன்பால்,
தினமும் நான்கு நேர விருந்துபசாரத்திற் திணறியதும்,
ஆயுள் உள்ளவரை மறக்கமுடியாத நிகழ்ச்சிகள்.

கழகத்தின் இரண்டாமாண்டு நிறைவு விருந்து
(22.05.1982)
கழகம் ஆரம்பித்த இரண்டாமாண்டு நிறைவை,
யாழ். இந்துக்கல்லூரியின் ஆசிரியர்கள் அறையில் கொண்டாடினோம்.
சமூக, பல்கலைக்கழக அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்தனைபேருக்கும் இரவு விருந்தளித்தோம்.
நாங்களே சமைத்த சாப்பாடு.
அப்போது இந்துக்கல்லூரியின் அருகிலிருந்த
மாணிக்கத்தின் அக்கா வீட்டில்,
இடியப்பப்புரியாணி செய்தோம்.
நான்தான் ‘மெயின்’ சமையற்காரன்.
மாலையில் சமைத்த உணவு,
இரவு விருந்தில் சற்றுப் பழுதாகி, பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
அன்றைய நிகழ்வுக்கு, குமாரதாசனின் அப்பாவும் வந்திருந்தார்.
அப்போது அவர் எங்கள்மேல் கடுங்கோபமாய் இருந்தார்.
நான் முன்சொன்ன சம்பவங்களை வைத்து,
அக்கோபத்திற்கான காரணத்தை,
நான் சொல்லாமலே நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
அவரை சமாதானம் செய்ய நினைத்து,
அன்றைய நிகழ்வில் நாம் பேசச் சொல்ல,
எங்களுக்கும் எங்கள் ஆசிரியர்களுக்குமாக,
கடுங்கண்டனம் தெரிவித்துக் கோபமாய் அவர் பேசினார்.
பிள்ளைகளின் படிப்பைக் கெடுப்பதாய்க் குற்றஞ்சாட்டினார்.
நாம் வெட்கிப்போனோம்.
அப்போது அவர் பேச்சு, கோபம் தந்தது.
இப்போது நினைத்துப்பார்க்க அவர் பக்க நியாயம் நன்றாய்ப் புரிந்தது.
பின் எங்கள் ஆசிரியர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர்.

கம்பன் அடிப்பொடி மறைவு
(1982 ஜுலை)
1982 ஜுலை மாதம் கம்பன் அடிப்பொடி அவர்கள் மறைந்தார்.
எங்களைப் பிள்ளைகளாய் நேசித்தவர்.
கம்பனுக்காக வாழ்வது எனும் நோக்கத்தை,
எமக்குக் கற்றுத்தந்தவர்.
இன்று தமிழகத்தில் நாங்கள் நிலைகொள்ள வித்திட்ட தெய்வம்.
எந்த அறிமுகமும் இல்லாமல்,
கம்பன்மேல் பற்றுவைத்த ஒரே காரணத்திற்காக,
இளைஞர்களான எங்களை அங்கீகரித்து,
தனது தொடர்புகளையெல்லாம் எங்களுக்கும் ஆக்கி,
அருள்செய்த கருணைக்கடல்.
இலட்சிய வாழ்வைக் கற்றுத்தந்த மாமனிதன்.
கம்பனைக் காத்த எம் காலத்து சடையப்ப வள்ளல்.
கற்றோரிடம் மட்டும் இருந்த கம்பனை,
மற்றோரிடமும் அழைத்து வந்து மகிழ்வித்தவர்.
அவர் மறைவு எம்மைப் பெரிதும் பாதித்தது.
கொழுகொம்பு இழந்த கொடிகளாய் நாம் வாடினோம்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாகம் 019ல்...
· இராமேஸ்வரக் கம்பன் விழா
· கோடூரார் தந்த கௌரவம்!
· கோப்பிக்காக வாங்கிய பேச்சு
· ஆசிரியர் தேவன் மறைவு 
· இரண்டாம் கட்டத் தொண்டர்கள்
· த. உருத்திரகுமார்
· ம.ந. கடம்பேஸ்வரன்
· அருமைநாயகம்
· செல்லத்துரை
· யோகராஜா
· ஜெ.கி. ஜெயசீலன்
· விமலா அக்கா
· ஜீவன், ரவி
· மீண்டும் ஒரு இந்தியப் பயணம்
· மறக்கமுடியாத தாய்மார்கள்
· திரு.திருமதி திருநாவுக்கரசு
· திருமதி கனகசிங்கம்
· குமாரதாசனுக்கு வேலை கிடைத்தது
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.