புத்தாண்டிலே தீர்வு வித்தாகுமா? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

புத்தாண்டிலே தீர்வு வித்தாகுமா? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

ள்ளப் பதைப்போடு ஜனவரி 10 ஆம் திகதிக்காய்க் காத்திருக்கிறார்கள் இலங்கை மக்கள்.
இலங்கை மக்களென, தமிழர். சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.
நல்லாட்சி அரசாங்கம், பாராளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றி,
பல்லாண்டுகால இனப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக,
பிரதமரை உள்ளடக்கிய இருபத்தொரு பேர் கொண்ட வழிகாட்டல் சபையை அமைத்தது.
பன்னிரண்டு தலைப்புக்களில் தீர்வுத் திட்டத்தினை ஆராய்வதாய் முடிவு செய்து,
அதில் ஆறு விடயங்களை ஆராய்வதற்கென,
சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உபகுழுக்கள் ஆறு அமைக்கப்பட்டன.
அவ் உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஒருசிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அந்த ஆறு குழுக்களும் முன்மொழிந்துள்ள விடயங்கள் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதியளவில்,
அரசியலமைப்புச்சபையாக மாறவுள்ள பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் சிலகாலம் கழித்து,
திருத்தப்பட்ட மேற்படி தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அங்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே,
இனப்பிரச்சினைக்கான இத்தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்படும் என்கிறார்கள்.
நீதிமன்றத்தின் பார்வை, சர்வஜனவாக்கெடுப்பு என,
இத்தீர்வுத்திட்டம் மேலும் பல தடைகளைத்தாண்ட வேண்டியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
பாரதி சொன்னாற்போல ஆமை மலையேறிய கதைதான்!
 



இதுதான் இலங்கை மக்களின் உள்ளப்பதைப்புக்குக் காரணமாய் இருக்கின்ற விடயம்.
இந்நாட்டின் இனப்பிரச்சினை, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக,
இலங்கை மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கியது உலகறிந்த விடயம்.
அரசியல்வாதிகளின் தூண்டுதலால் அவ்வப்போது  1958, 1977, 1981, 1983 என,
இனப்பிரச்சினையின் பெயரால் பெரும்பான்மையினர் தமிழ்மக்களுக்குச் செய்த கொடுமைகள் பற்பல,
அப்போதெல்லாம் காரணமின்றி அடிவாங்கி அழிவுகளைச் சந்தித்து,
தெற்கிலிருந்து தம் தாய் மண்ணுக்குத் தப்பியோடுவதும்,
பின்னர் திரும்பி வந்து தம்மை ஸ்தாபித்ததுமாக,
தமிழர்கள் தன்மானமிழந்து தலைகுனிந்து வாழ்ந்தார்கள்.
நடுவீதிகளில் வைத்து நிர்வாணப்படுத்தப்பட்டும்,
உயிரோடு எரிக்கப்பட்டும், சொத்துக்கள் அழிக்கப்பட்டும்,
அக்காலத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகள் எல்லையற்றன.
கேட்பாரின்றி அல்லல்பட்டு அழுது நின்ற தமிழர்கள் பற்றியோ, நீதி பற்றியோ,
பேரினத்தலைவர்கள் எவரும் அப்போது உண்மையாய் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை.
வீதியில் வெளிப்பட நடந்த இக்கொடுமைகளை ஆராயவென,
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடி அமைக்கப்பட்ட பெயரளவிலான விசாரணைக் கமிஷன்கள்,
எந்தவொரு சிங்களவரையும் தண்டிக்காமல் நீதியை நகைப்புக்கிடமாக்கின.



குனியக்குனியக் குட்டினால் பூனையும் புலியாகும் என்பதை அறியாத,
பேரினவாதிகளின் அராஜகச் செயல்களால்,
இவ் அழகிய தீவில் அனைத்து இனமக்களும் ஒற்றுமையாய் வாழலாம் என நினைத்திருந்த தமிழ்மக்கள்,
மெல்ல மெல்ல தம் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர்.
அதன் விளைவாக தனித்தனியாய்ப் பிரிந்திருந்த தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரஸ்கட்சியும்,
தம்முள் ஒன்றிணைந்து, மலையகத் தலைமையையும் தம்மோடு இணைத்துக் கொண்டு,
1976 நடந்த வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித்தமிழீழக் கொள்கையைப் பிரகடனப்படுத்தின.
மேற்படிக் கொள்கையைப் பிரகடனப்படுத்திய போது,
தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம், திருச்செல்வம், தொண்டமான் ஆகியோர்,
சேர்ந்து நின்ற புகைப்படம் கலண்டராய் வெளிவந்து பிரபலமாகியது.



ஒன்றையொன்று கடுமையாய் எதிர்த்துநின்ற தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரஸ்கட்சியும்,
இன எழுச்சியின் தேவை உணர்ந்து பகைமறந்து அன்று தம்முள் ஒன்றாயின.
இன்று இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களை சந்தித்ததன் பின்னான நிலையில்,
விடியலின் வெளிச்சம் தேடி தமிழினம் தவித்து நிற்கும் போது,
ஒன்றான இனத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு தீர்க்கதரிசனமின்றி சிலர் முயன்று நிற்பதும்,
ஒன்றான தலைமைக்குள்ளேயே பதவிப்போட்டிகள் நடப்பதும் விதியின் விளையாட்டேயாம்!



தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்றிணைந்த சௌமியமூர்த்தி தொண்டமான்,
தம் இனத்தின் நிலையுணர்ந்து பின்னர் தனிஈழக் கொள்கையிலிருந்து விலகிக் கொண்டார்.
தனிஈழக்கொள்கைப் பிரகடனத்தால் உணர்ச்சிவயப்பட்ட தமிழர்களின் ஒருமித்த ஆதரவு,
அடுத்து வந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குக் கிடைக்க,
பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சியாகும் பலம் அவர்களுக்குக் கிட்டியது.
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இப்படியாய் அடுத்தடுத்து நிகழ்ந்த நன்னிமித்தங்கள் திடீரென மறையத் தொடங்கின.
பதவிச்சுகம் ஈர்த்ததால், அரசு முன் வைத்த மாவட்ட சபையை ஏற்றுக்கொள்ள,
தமிழர் விடுதலைக் கூட்டணி துணிந்தது.
அந்தஸ்தையும் அரசு உவந்தளித்த வாகனங்களையும் பெற்றுக்கொண்டு,
தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவர்கள்,
தனி ஈழக்கொள்கையின் உறுதிப்பாட்டில் தளர்வுகாட்டத் தொடங்கினர்.



அவர்களால் ஊதிவிடப்பட்ட விடுதலை உணர்வு எனும் அக்கினி,

இளைஞர்களிடம் மூளாத்தீப்போல் உள்ளே கனன்று எரிந்து கொண்டிருந்ததைத் தெரியாது,
அவர்கள் செய்த தவறான அம்முடிவால் பின்னாளில் இலங்கையில் பெரும் சேதம் விளைந்தது.
வல்லரசுப் போட்டி இருந்த அக்காலத்தில் தென்கிழக்காசியாவில் இலங்கை புவியியல் முக்கியத்துவம் பெற,
அம்முக்கியத்துவத்தை வைத்து அமெரிக்க ஆதரவை தன்வயப்படுத்தி,
இந்தியாவைக் கட்டுப்படுத்த முனைந்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
அவர் முயற்சியால் இந்தியா கோபமுற்றது.
ஆளுமைமிக்க அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி,
ஜே.ஆரின் செயலுக்கு ‘செக்’ வைக்கும் முகமாக,
சுதந்திர உணர்ச்சி கொப்பளித்துக் கொண்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர்களை,
இந்தியாவிற்கு வரவழைத்து ஆயுதமும், பயிற்சியும் அளித்து,
அவர்களைக் கொண்டு தனிஈழத்திற்கான ஆயுதப்போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.



இங்ஙனமாய்த் தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப்போர்,
பின்னர் இந்தியாவின் கையையும் தாண்டி எவரெவரையோ உள் நுழைவித்து,
இலங்கையையும், இலங்கையரையும் சின்னாபின்னப்படுத்தியது வரலாறு.
இப்போரில் பாதிக்கப்படாத இலங்கையர் எவரும் இல்லை எனலாம்.
சிங்களவர் அடிக்கத் தமிழர் அழிந்தனர். தமிழர் அடிக்கச் சிங்களவர் அழிந்தனர்.
இவ்விருவர்க்கும் இடையில் அகப்பட்டு முஸ்லிம்களும் அழிந்தனர்.
இங்ஙனமாய் இனப்பகை அப்பாவி மனிதர்களை வீணாக அழித்துப் போட,
கேட்பாரின்றி இலங்கையில் மானுடம் சிதைந்து சீரழிந்தது.
பிற்காலத்தில் உட்பகையால் போராளிக்குழுக்கள் ஒன்றோடொன்று மோதிப் பலமிழந்தன.
இறுதியில்  உலக நாடுகளின் ஆதரவுடன் ஈழவிடுதலைப் போராளிகள் முற்றாய் அழிக்கப்பட,
ஈவிரக்கமற்ற பல்லாயிரமான மானுடச் சிதைவோடு ஈழவிடுதலைப்போர் முடிவுக்கு வந்தது.
இது தமிழர் சார்பாக நிகழ்ந்த போர் இழப்பு.



ஈழ விடுதலைப் போரில் விடுதலைப் போராளிகளால் சிங்களவர்களும் பேரிழப்பைச் சம்பாதித்தனர்.
பெரும்பான்மை பெற்றிருந்தும் சிறுபான்மைத் தமிழர்களை அழிக்க முடியவில்லை எனும்,
கொதிப்பில் இருந்த சிங்களவரை உலகம் தூண்ட,
இனிக்கேட்பாரில்லை எனும் துணிவில்,
இலங்கை அரசு தமிழர்களைக் கொன்று குவித்து இறுதியில் வெற்றியும் ஈட்டியது.
ஆனாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
போரின்போது எந்தெந்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தனவோ அந்த நாடுகளே,
போரின் பின் இலங்கையை, மனித உரிமை மீறல் எனும் வலைக்குள் சிக்க வைத்தன.
திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல் ஆக,
உலக அரங்கில் குற்றவாளியாய் நிற்கவேண்டிய நிலை சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.
இறுதிப்போரில் தமிழர்க்கு நிகழ்ந்த கொடுமைகள் பகிரங்கப்படுத்தப்பட,
உலக அனுதாபம் ஈழத்தமிழர்களின் மீது திரும்பியதால்,
ஈழத்தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்திற்கு,
இலங்கை அரசும் பேரினவாதிகளும் தள்ளப்பட்டனர்.
இனப் பிரச்சினையில் தாம் வென்றுவிட்டதாய் நினைந்த சிங்களவர்கள்,
தாம் அமைத்த பொறியில் தாமே அகப்பட்டதை அறிந்து அந்தரித்தார்கள்.
இது சிங்களவர்கள் சார்பாக நிகழ்ந்த போர் இழப்பு.



இந்நிலையில் இறுதிப்போரை முன்னின்று நிகழ்த்திய மஹிந்த அரசு,
உலக அபிப்பிராயத்தைப் புறந்தள்ளி சீனாவின் உதவி பெற்று தன்னை ஸ்தாபிக்க முயல,
சீனாவின் திட்டத்தை உணர்ந்து கொண்ட அமெரிக்காவும் இந்தியாவும்,
ஏதோவகையில் திட்டமிட்டு மஹிந்த ஆட்சியை வீழச்செய்தன.
தன் தோல்விக்கு இந்நாடுகளே காரணம் என,
அப்போது மஹிந்த பகிரங்கமாகவே பேட்டியளித்தார்.
அதன் பிறகு மீண்டும் இலங்கை அரசியலில் காட்சிகள் மாறத்தொடங்கின.


 
வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் பேரினப்பெருங்கட்சிகள் இரண்டும் ஒன்றாகி,
நல்லாட்சி என்ற பெயரில் தமது புதிய ஆட்சியை அமைத்தன.
அடுத்தடுத்து அவர்கள் வெளிப்படுத்திய நற்சமிக்ஞைகளால்,
பேரழிவுகளிலிருந்து இலங்கை மக்கள் அனுபவம் பெற்றுவிட்டார்கள்.
இனி இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் நம்பத் தொடங்கினர்.
ஆனால் நாளாக நாளாக ‘பழைய குருடி கதவைத்திறவடி’ என்ற கதையே நிகழத் தொடங்கியது.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிய பேரினவாதப் பெருங்கட்சிகளுக்குள்,
உண்மை நட்புப் பதிவாகவில்லை என்பது அவர்களின் செயலாலும், பேச்சாலும் வெளிப்படத் தொடங்கியது.
இடையில் கிடைத்த கால அவகாசத்தில் உலக ஆதரவை ஓரளவு தமதாக்கிக் கொண்ட துணிவில்,
மீண்டும் சில சிங்களத் தலைவர்கள் துவேஷவிஷத்தைக் கக்கத்தொடங்கியுள்ளனர்.



சிங்களவர்கள் ஒருநாளும் தமிழர்களை உரிமையோடு வாழவிடமாட்டார்கள் என நினையும்,
தமிழர்களின் ஒருசாராரின் கருத்தைப் பெரும்பான்மையினர் பலர் இன்று நிஜமாக்க முனைந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பொலிசார் பார்த்திருக்க ஒரு பௌத்ததுறவி அட்டூழியம் பண்ணுகிறார்.
அவரைக் கண்டிக்க வேண்டிய நீதியமைச்சும் அமைச்சரும் சார்புபட்டு நடந்து,
தமிழர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.
இன்றைய அரசுக்குள் இருக்கும் பலபேரும் தமிழரின் நியாயமான சமஷ்டிக் கோரிக்கையைக் கூட,
தேசத்துரோகம் என்றளவில் விமர்சித்து மீண்டும் இனப்பகையைத் தூண்டி வருகின்றனர்.
காலாகாலமாக இத்தேசத்தின் அரசியலை வழி நடத்துகிற இரண்டு பௌத்த பீடாதிபதிகள்,
சமஷ்டிக் கொள்கையை நிராகரிக்கவும் பௌத்த, சிங்கள அதிகாரத்தை உறுதிப்படுத்தவும்,
தீர்வுத்திட்டம் வெளிவரவுள்ள இந்நேரத்தில் அறிக்கை விட்டுள்ளனர்.
மானுட நேசிப்பும் சமத்துவமும் பேசி நின்ற மாக்சீயக் கொள்கையாளர் வாசுதேவநாணயக்கார,
தமிழ்ப்பகுதிகளுக்கு எந்தத் தனிச் சலுகையும் அளிக்கவிடமாட்டோம் என்று,
இந்தவாரத்தில் அறிக்கை விட்டு தன் உண்மைப் புரட்சி ரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்ஙனமாய் வெளிவந்து கொண்டிருக்கும் இடியும், மின்னலுமான துர் அடையாளங்கள்,
மீண்டும் இந்நாட்டில் பகைப்புயல் வீசப்போவதை உறுதிப்படுத்துகின்றன.



போரில் தாம் பெற்ற வெற்றியைக் கொண்டும் தமிழர்கள் சிறுபான்மையினர்தானே என நினைந்தும்,
தமது ஆணவத்தால், அவர்களை அடக்கியாள நினைக்கும் பேரினத்தார் ஒன்றை உணர்தல் வேண்டும்.
போர் தமக்குச் சார்பாய் முடிந்திருப்பதாய் அவர்கள் நினைந்தால்,
அதைவிட முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்கமுடியாது.
போரில் புலிகள் தோல்வியுற்றாலும் அத்தோல்வியிலும் சில வெற்றிகளை,
அவர்கள் நிலைநிறுத்தியே சென்றுள்ளனர்.
உலக வரைபடத்தில் ஓர் புள்ளியளவாய் இருந்த இலங்கையில்,
அதைவிடச் சிறுபுள்ளியாய் இருந்த தமிழர்கள் பற்றி உலகம் நீதி கேட்கத்தொடங்கியிருப்பதே,
முடிந்து போன ஈழப்போரில் தமிழர்கள் பெற்றிருக்கும் வெற்றியாம்.
மூட்டைப்பூச்சிகளை நசிப்பது போல கேட்பாரின்றி தமிழர்களை நசிக்க,
இனி ஒருதரம் பேரினவாதிகளால் இனக்கலவரங்களை இயற்றி,
தமிழர்களைத் துன்புறுத்த முடியாதென்பது திண்ணம்.
தத்தம் தேவைகளுக்காய் இலங்கையைக் கொத்திக் கூறுபோடக்காத்திருக்கும் வல்லரசுகள்,
அங்ஙனம் ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதையே காரணமாக்கி,
இலங்கையில் தம் கால்களை ஆழப்பதிக்க தயாராயிருக்கின்றன.



நல்லாட்சியின் பின்னும் இலங்கையுள் நீளத்தொடங்கியிருக்கும் சீன ‘ட்ரகனின்’ வால்,
அமெரிக்காவையும் இந்தியாவையும் மீண்டும் எரிச்சலடைய வைத்திருக்கின்றது.
பதவியேற்பதற்கு முன்பே சீனாவுடன் பகைபாராட்டியிருக்கும் புதிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
ஆட்சிப்பொறுப்பேற்றதும் தனது சீன எதிர்ப்பை உலகறிய வெளிப்படுத்துவார் என,
அரசியல் அவதானிகள் கருதி நிற்கின்றனர்.
அவர் எதிர்ப்பு இலங்கை நோக்கியும் திரும்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அங்ஙனம் திரும்பும் அமெரிக்காவின் சீன எதிர்ப்பு இலங்கையில் தமிழர் சார்பாக மாறி,
பேரினத்திற்கு இன்னல் செய்ய வாய்ப்புண்டு என்பதை பேரினவாதிகள் மறந்துவிடக்கூடாது.
தமக்கு உரிமையுள்ள நியாயபூர்வமான அதிகாரத்தை வேண்டி நட்புக்கரம் நீட்டி நிற்கும் தமிழர்களை,
தம் அரசியல் ஆதாயத்துக்காய் வீணாய்ப் பகைத்து,
தமது இனத்தின் தலையில் தாமே கொள்ளிவைக்க முனையும் பேரினவாதிகளின் மூடச்செயலில்,
ஆபத்தைக் கடந்து வந்த அனுபவப்பதிவு சிறிதும் இருப்பதாய்த் தெரியவில்லை.
பகைவர் மறைந்த துணிவில் பகை மறைந்ததாய்க் கருதி துள்ளும் சிங்களவர்க்கு ஒரு செய்தி.
காரணம் இருப்பின் என்றோ ஒருநாள் ஏதோ வடிவில் காரியம் விளையும்.
விளைந்ததும், அதனால் இலங்கை சிதைந்ததும் வரலாறு.
இதயத்தை இயக்காமல் புத்தியை இயக்கித் தமக்குத் தாமே அழிவுதேட நினைக்கும் அவர்தம் செயல்,
இலங்கை அன்னைக்கு உயிரோடு கொள்ளி வைக்கும் செயலாம்.



இவர்தம் கூத்து ஒருபுறம் என்றால் நம் தமிழ்த்தலைவர்களின் கூத்து மறுபுறம் நடக்கிறது.
போரில் நடந்து முடிந்த இன அழிவு பற்றிப் பேசிபேசி,
அரசியல் லாபம் தேடுவதே இவர்களின் நோக்கமாய் இருக்கிறது.
போரழிவால் பெற்ற அனுபவத்தை இவர்களிடமும் காணமுடியவில்லை.
‘இதோ தீர்வு!’ என கைகாட்டி ஏகத்தலைமையைப் பெற்றுக்கொண்டு,
அத்தலைமையைத் தம் சுயநலத்திற்காய்ப் பயன்படுத்தும் தமிழ்த்தலைவர்களே பலராயிருக்கின்றனர்.
உலகளாவி தம்கருத்தைக் கொண்டு செல்ல உதவுவார் என நினைந்து,
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வலிந்து கொணர்ந்த முதலமைச்சர்,
இனவளர்ச்சியை இம்மியளவும் நகர்த்தாமல்,
அரசியல்வாதியாய் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.
சரியோ, பிழையோ ஒன்றாய் இருந்த இனத்தலைமையை,
உடைக்கத் தொடங்கியிருப்பதுதான் அவர் செய்த ஒரே காரியம்.



எங்ஙனம் சிங்களத்தலைவர்கள் சிலர் உணர்ச்சிகளைத் தூண்டி,
யதார்த்தம் உணராமல் பேரினத்தார் மத்தியில் பகைவளர்க்க முனைகின்றனரோ,
அங்ஙனமே நம்முதலமைச்சரின் செயற்பாடும் முனைந்து நிற்கிறது.
போரழிவுகளால் துன்புற்று நிற்கும் தமிழர்களுக்கு,
முதலமைச்சரின் உணர்ச்சிக்கூவல்கள் பிடித்துப்போவதால்,
புதிய தலைவராய் அவரை, அவர்கள் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர் மதிப்புப் பெறுவதைக்கண்ட,
தமிழர்விடுதலைக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிலரும் தாமும் அவர்போல ஆகக்கருதி,
‘தேசம் பிரியும்’ என்றும் ‘ஈழம் பிறக்கும்’ என்றும்,
பேரினத்தார்க்கு அதிகாரத் தொனியுடன் அறைகூவல்கள் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இவர்தம் செயல்களும் சிங்களத் தலைவர்களின் செயல்களைப் போலவே,
தம் நிலையுணரா தறிகெட்ட, செயல்களேயாம்.



பெரும்பான்மைப் பலத்தை நம்பி, பேரினத்தார் சிறுபான்மையினருக்குச் சவால் விடுகின்றனர்.
சிறுபான்மையினராகிய நாம் எந்தப்பலத்தை நம்பி பேரினத்தார்க்கு சவால் விடுகிறோம் என்பதை,
இத்தமிழ்த்தலைவர்கள் மக்களுக்கு உரைத்தல் வேண்டும்.
வலிமைமிக்க சுயநலமற்ற உயிரையும் மதிக்காத இளைஞர்களால் நடத்தப்பட்ட போரே,
கேட்பாரற்று அழிக்கப்பட்டு விட்டது.
எந்த வலிமையும் இல்லாத சுயநலம் மிகுந்த,
உயிரையும் உறவையும் உடமைகளையும் மட்டும் மதித்து நிற்கின்ற,
இன்றைய தமிழ்த்தலைவர்களால் எதனைச் சாதிக்க முடியும்?
கேள்வி நம் நெஞ்சைச் சுடுகிறது.



பெரும்பான்மையை சிறுபான்மை வெல்ல வேண்டுமானால்,
சிறுபான்மை, நட்பினால் தன் பலத்தைப் பெரும்பான்மை ஆக்கிக்கொள்ளவேண்டும்.
அங்ஙனம் நமக்குத் துணைசெய்ய நட்பு வரவேண்டுமானால்,
உலகத்திற்கான தேவையை நம்மில் நாம் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.
போர் முடிந்த பின்பு இறந்த இளைஞர்களின் ஆற்றலைச் சொல்லி ஒப்பாரி வைப்பதைத்தவிர,
உலகநாடுகளை ஈர்க்கும் உருப்படியான ஒருவிடயத்தைத்தானும்,
நம் தலைவர்கள் செய்து முடித்திருப்பதாய்த் தெரியவில்லை.
அவர்களுள் ஒருசிலர் உலகநாடுகள் ‘பட்டி’ அடைக்கும் இடங்களுக்குள் விசுவாசமாய் ஒடுங்கி,
‘புழுக்கை’ போடுவதையே வேலையாய்க் கொண்டிருக்கிறார்கள்.
எது நடந்தாலும் முடிவெடுக்காமல் ஞானிபோல் இருக்கும் தலைவர் ஒருபக்கம்.
தலைவர் என்றொருவர் இருப்பதையே நினையாது செயற்படும் உறுப்பினர்கள் மறுபக்கம்.
இடையில், கிடைத்திருக்கும் பதவிகளைக் கொண்டு தம்மை வளர்த்துக்கொள்வார் வேறோருபக்கம்,
தொடரப்போகும் பதவிகளுக்காய்,
இப்போதே இருக்கைகளில் துண்டைப் போட்டு காத்திருப்போர் இன்னொரு பக்கமுமாக,
நம் தமிழ்த்தலைமை சீரழிந்து கொண்டிருக்கிறது.
தமக்குத்தாம் சண்டையிடவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
தீர்க்கதரிசனமாய் சிந்தித்து உலகநாடுகளுடன் பேசி தம் பலத்தை வளர்த்து,
பேரினத்தை சமன் செய்ய வேண்டிய தேவையை இவர்கள் சிறிதும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.
பலம் வளர்க்காமல் பகை வளர்க்கும் இவர்களால்,
இன்னொருதரம் தமிழினம் ஓடஓட அடிவாங்க இடமிருக்கிறது
அடித்தவர்களிடமே நியாயம் கேட்கும் நிலையில்த்தான்,
இன்றும் நாம் இருப்பதை மறந்து இவர்கள் விடும் சவால்கள் நகைப்புக்குரியன.



நல்லாட்சி அரசுக்கோழி இடப்போகும் தீர்வு முட்டை முன்னைய முட்டைகளைப் போல்,
கூழ் முட்டைகளாய் ஆகாமல் சமாதானக் குஞ்சைப் பொரிக்கும் எனக் காத்திருக்கிறார் சம்பந்தனார்.
ஆதரிக்கிறவரையும் வரவேற்று, எதிர்க்கிறவரையும் வரவேற்று முடிவெடுக்கும் ஆற்றலின்றி,
யாருமே மதிக்காத ஓர் அப்பாவித் தலைவராய்க் கண்மூடிக் காத்திருக்கிறார் அவர்.
அனுபவசாலியான அவரது மௌனம் காரணத்தோடு கூடியது என்றே கருதவேண்டியிருக்கிறது.
தீர்வுத்திட்ட முட்டையிலிருந்து சிறிய குஞ்சொன்றையேனும் பொரிப்பித்து விட்டால்,
அதைச்சொல்லிச் சொல்லியே எதிர்ப்போரை வீழ்த்திவிடலாம் என்பது அவர் திட்டம் போல் தெரிகிறது.
அவரை வீழ்த்தவென முதலமைச்சர் தலைமையில் ஓர் கூட்டம் காத்திருக்கிறது.
முட்டையிடப்போகும் பிரதமரையும் முட்டையிட வைக்க நினைக்கும் ஜனாதிபதியையும்,
தாக்கி வீழ்த்தவென பழைய ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இன்னொரு கூட்டம் காத்திருக்கிறது.
இந்தக் கூட்டங்களுக்கிடையில் வெளியே பொதுமுகம் காட்டி,
உள்ளே அமெரிக்கச் சார்புபட்டு நிற்கும் ஐ.நா.சபை,
தீர்வு முட்டையிலிருந்து சமாதானக் குஞ்சைப் பொரிப்பிக்க முனைந்து நிற்கிறது.



இத்தனை கூத்துக்களும் ஒருபுறம் நடக்க,
சம்பந்தனாரைப்போலவே எதிர்ப்பாளர்களின் குரலை கண்டும் காணாமல்,
தீர்வுத்திட்டம் சரிவர அமைந்துவிடும் என்றாற்போல,
உலகநாடுகளுக்கு ஓடியோடித்திரிகிறார் பிரதமர்.
அவர் யாரோடு பேசி எவரைக்கவிழ்க்க நினைத்திருக்கிறார் என்பதை,
ஆண்டவனும் அறிவானோ என்பது ஐயமே!
எது எப்படியோ இனப்புயல்களுக்குள் அகப்பட்டு அணைந்து போகாமல்,
சமாதானதீபம் ஒளிர்ந்து இத்தேசம் தலைநிமிர,
பெரும்பாலும் இது கடைசிச் சந்தர்ப்பமாய் இருக்கும் என்பது மட்டும் நிஜம்.
அந்த யதார்த்தத்தை உணர்ந்து பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவுகளைப் புறந்தள்ளி,
இறந்தகாலத்தை மறந்து எதிர்காலத்தை இலட்சியமாக்கி,
இலங்கையர்கள் ஒன்றுபடத் தயாரானால் மட்டுமே இந்துசமுத்திரத்தின் முத்து என்ற தகுதியை,
இலங்கை தொடர்ந்து தக்கவைக்கமுடியும் என்பது சத்தியம்.
இறைவன் என்ன நினைத்திருக்கிறானோ?

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.