எறிகணை 25
கேள்வி :
நமது இனம் பற்றிய சிந்தனையில் எங்களது தமிழ்த் தலைவர்களது பிரச்சினைக்கு அடுத்தபடியாக உங்களை வருத்தப்படச் செய்யும் பிரச்சினை எதுவென்று சொல்வீர்களா?
பதில் :
நமது இளையோரின் திருமணங்கள் போய்க்கொண்டிருக்கும் விதம்தான் அண்மைக்காலமாக என்னை மிகவும் வருத்துகிறது. திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் தமக்கான சமூக அந்தஸ்த்தை வேண்டி செய்துகொள்ளும் ஒப்பந்தம் ஆகும்.
இவள் எனக்குரியவள், இவன் எனக்குரியவன் என்று உற்றார், உறவினர்க்கும் உலகத்திற்கும் காட்டி அங்கீகாரம் பெறும் நிகழ்வாகவே தமிழர்களின் திருமண நிகழ்வு இருந்தது.
இன்று அந்நிகழ்வில் ஏற்படத் தொடங்கியிருக்கும் அளவுக்கதிகமான ஆடம்பரங்களால் அதன் அடிப்படை நோக்கம் சிதைந்து, திருமண நிகழ்வுகள் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன.
திருமணத்தை அறத்தின் ஓர் கூறாகவே தமிழர்கள் கருதினார்கள். அதனாற்றான் திருமணவாழ்வுக்கு இல்லறவாழ்வு என அவர்கள் பெயரிட்டனர். இன்றைய திருமணங்களில் அறம் பேணும் நோக்கம் எவருக்கும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆடம்பரம் பேணும் நிகழ்வாகவே திருமணம் ஆகிக்கொண்டிருக்கிறது.
புகைப்படங்களிற்குப் பின் வந்த அசைவையும் உள்வாங்கும் “வீடியோ”ப் பதிவு என்பது, திருமண நாளின் நினைவுப்பதிவுகளில் ஒன்றாகவே ஆரம்பத்தில் கருதப்பட்டது. இன்றோ வீடியோ எடுப்பதை ஓர் சினிமா எடுக்கும் நிகழ்ச்சியாகவே நம்மவர்கள் மாற்றத் தொடங்கிவிட்டனர்.
இன்று மணமக்களைக் கதாநாயகன், கதாநாயகியாக வைத்து சினிமா எடுப்பது போலவே, கல்யாணங்களை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். மிகை அலங்காரம், வழக்கத்தில் இல்லாத உடையமைப்பு, ஆளையே தெரியாத அளவிலான “மேக்கப்”, இருவருடனும் உடன்வர தோழன், தோழியர், அவர்களுக்கான அலங்காரம், இயற்கைக் காட்சிகளினிடையே எடுக்கப்படும் “போட்டோசூட்”இ “ட்ரோன்கள்” கொண்டு எடுக்கப்படும் காட்சிகள் இவற்றை அடுக்க பெரும் செலவில் “அல்பம்” என, திருமணத்திற்கான செலவுகள் இன்று இலட்சங்களைக் கடந்து கோடிகளைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
மங்களத்திற்காக வாசிக்கப்பட்ட மங்களஇசைவாத்தியங்கள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து, என்னென்னவோ வாத்தியங்களையெல்லாம் போட்டு, நிகழ்ச்சிக்கு இசையமைக்கவும் தொடங்கிவிட்டார்கள். இப்போது இடையிடையே “டூயட்” பாடல் காட்சிகளும் வரத்தொடங்கிவிட்டன.
பழைய சினிமாக்களில் போடுவது போல விதம் விதமான “செற்றுகள்” வேறு! எக்காலத்திலும் நம்மிடம் இருக்காத புதுப்புதுச் சடங்குகளையெல்லாம் கல்யாணத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய வடநாட்டாரிடம் மட்டும் இருந்த “மெகெந்தி பங்ஷன்” இல்லாத கல்யாணம் இல்லையென்றாகிவிட்டது.
பெண்ணைப் பல்லக்கில் தூக்கி வருவது, மாப்பிள்ளையைக் “ஹெலிகொப்டரில்” அழைத்து வருவது என இவர்கள் செய்யும் “அளப்பறை”யைத் தாங்க முடியவில்லை.
பணத்திமிரில் தம்பதியரின் முதலிரவுக்காக நட்சத்திர “ஹொட்டல்”களையும் “ஹனிமூனுக்காக” வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களையும் நாடி நிற்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் சீதனத்திற்காக “மூக்கால் அழுத” நம்மவர்கள், இப்போது வெளிநாட்டார் அனுப்பும் பணத்தை வைத்து ஆடம்பரத்திற்காகக் கோடிக்கணக்கில் செலவழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
முன்பு கோயில் திருவிழாக்களில் அவரது திருவிழாவை விட எனது திருவிழா சிறக்கவேண்டும் என நினைத்து, உபயகாரர்கள் போட்டிக்குத் திருவிழாக்கள் செய்தது போல, திருமணங்களிலும் பணக்காரர்களைப் பார்த்து ஏழை வீட்டாரும் கடன்பட்டாவது இவற்றையெல்லாம் செய்யவேண்டும் என நினைக்கத் தொடங்கியிருப்பதுதான் பெரிய கொடுமை.
ஒரு பணக்கார வீட்டுக்கல்யாணத்தில் ஆடம்பரத்திற்காகச் செலவழிக்கப்படும் செலவில் 15 ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம். அல்லது 100 ஏழைப்பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கலாம். அல்லது 1000 வறியவர்களுக்கு உணவிடலாம். இவையெல்லாம் தர்மங்கள். இவற்றைச் செய்தால், அந்தத் தம்பதியரின் வாழ்வாவது சிறக்கும். தர்மம் தலைகாக்கும்.
இந்த ஆடம்பரங்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. வசதியற்றவர்களைப் பொறாமை கொள்ளவைத்து அவர்களின் சாபங்களை வாங்குவதுதான் மிச்சம். ஒருநாள் கூத்துக்காக இவர்கள் வைக்கும் மீசைகளினுடைய அளவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.
வறுமைக்காலத்தில் நம்மவர் செய்த ஏழைக் கல்யாணங்களில், தம்பதியரின் வாழ்வு, அவர்களின் ஆயுட்காலம் வரை நீடித்து நிலைத்தது. இன்றைய இந்தப் பணக்காரக் கல்யாணங்களிலோ, தம்பதியரின் வாழ்வு ஒரு வருடத்தைத் தாண்டினாலே அது பெரிய விடயமாக இருக்கிறது. அன்பில்லாத, அறமில்லாத, பக்தியில்லாத, காதல் இல்லாத வெறும் ஆடம்பரம் மட்டுமே உள்ள கல்யாணம் அப்படித்தான் ஆகும்.
இந்தக் கூத்துக்கள்தான் நம் தலைவர்களின் கூத்துகளுக்கு அடுத்தபடியாக எனது மனதை வாட்டி நிற்கின்றன. ஒரு பக்கம் போர் என்றும் போராளிகள் என்றும் வறுமை என்றும் பேசிப் பொய்ச்சோகம் காட்டுகிறவர்கள், மற்றொரு பக்கம் இத்தகைய அநியாய ஆடம்பரங்களுக்கு அள்ளிச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான போராளிக் குடும்பங்கள் இருக்க இடமின்றிப் பரிதவிப்பது பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
இன்றைய இத்தகைய திருமணங்களால் எப்படி வாழ்வு செழிக்கும்?, இனம் செழிக்கும், உறவு செழிக்கும் “கலி” நம் தமிழினத்தைத்தான் கட்டங்கட்டி அடிக் கிறதோ என்று ஐயப்படவேண்டியிருக்கிறது.
கேள்வி :
ஈரான், அமெரிக்க யுத்தத்தின் போக்கு எப்படி இருக்கிறது?
பதில் :
இவ்வளவு வீரியம் பேசிவிட்டு ஒரேநாளில் தம் தலைவரையும் முக்கிய பிரமுகர்களையும் இழந்துவிட்டு நிற்கும் ஈரானின் மேல் எரிச்சல் உண்டாகிறது. அதுபோலவே ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அந்தரித்து நிற்கும் “ட்ரம்பை”ப் பார்க்கவும் நகைப்பாக இருக்கிறது. இந்தப் போருக்குள் கைவைப்பதா? இல்லையா? என்று மற்றைய வல்லரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஏதோ உலகின் பேரழிவிற்கு அத்திவாரம் இடுகிறார்கள் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.
கேள்வி :
விஜய், சங்கீதா பிரச்சினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
நடிகர் விஜய் இந்தப் பிரச்சினைக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. தலைவர் விஜய் இந்தப் பிரச்சினைக்குப் பதில் சொல்லவேண்டித்தான் வரும்.
கேள்வி :
இந்து ஆலயங்கள் பலவற்றில் பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. அப்பிரச்சினைகளில் முக்கியமானதாக “இது ஆகமமுறைக்குப் பிழையானது” என்ற கருத்தே முன் வைக்கப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் :
உலகை உய்வித்து நிற்பது நம் சைவசமயம். அது சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு முறைகளால், இறைவனை வழிபடலாம் என்கிறது. மேற்சொன்ன இந்நான்கையும் சிவாகமங்கள் விளக்கம் செய்கின்றன.
நமது ஆலயக்கிரியைகள் அனைத்தையும், எங்ஙனம் செய்யவேண்டும் எனும் விபரங்கள், நம் ஆகம நூட்களுட்தான் அடங்கியுள்ளன. ஆலயம் அமைப்பு, சிற்ப நிர்ணயம், பூசை, உற்சவ முறைகள், பிரதிட்டை முதலியனவும் அபரக்கிரியைகளும் நமது ஆகமங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.
மூல ஆகமங்கள் இருபத்தெட்டு. உப ஆகமங்கள் இருநூற்றியேழு. ஆகவே ஆகமங்களின் மொத்தத்தொகை இருநூற்றி முப்பத்தைந்தாம்.
நம் கிரியை முறைகளுக்கு மட்டுமன்றி, நம் தத்துவசாஸ்திரத்திற்கும் இவ் ஆகம நூல்களே பிரமாண நூல்களாகும். வேதமும், ஆகமமும் சிவபெருமானால் அருளிச்செய்யப்பட்டவை என்றும் இவையே சைவசமயத்தின் பிரமாணநூல்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
ஆனால் கலியின் கொடுமையால் இன்று மூல ஆகமங்களில் ஒருசிலவும் உப ஆகமங்களில் ஒருசிலவுமே நமது கைக்குக் கிட்டுகின்றன.
“ஆகமங்களுட் பல, சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் இருந்தனவாயினும் இப்போது அவை மறைந்துவிட்டன. சில ஆகமங்கள் மாத்திரமே இப்போது தமிழ்நாட்டில் உள்ளன. சிவாகமப்பிரதிகள் எப்போதாயினும் கிடைக்காமற் போனாலும், காலத்திற்குக் காலம் தோன்றும் சிவஞானிகளால் அவை புதுப்பிக்கப்பட்டு இவ்வுலகத்திலே என்றும் நிலவும். அவற்றின் ஏனைய பகுதிகளுட் பெரும்பாலானவை பத்ததிகளில் உள்ளவை”
என்று யாழ்ப்பாணத்து சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் அவர்கள், தனது “திருவருட்பயன்” விளக்கநூலில் எழுதியுள்ளார்.
இன்று பிரமாணநூல்களை நாம் இழந்து போனதால், அவரவர் தத்தம்பாட்டில் தாம் விரும்பியபடி, இவையிவையே ஆகமப்பிரமாணம் என்று உரைத்து வருகின்றனர்.
முழுமையாய் ஆகமப்புலமை பெற்ற அந்தணர்களதும், அறிஞர்களதும் எண்ணிக்கை, இல்லையெனும்படியாக இன்று குறைந்து போய்விட்டபடியால் ஆண்டவனால் சொல்லப்பட்ட ஆகமப்பிரமாணங்கள் அவரவர் விருப்பத்திற்கு வளைக்கப்பட்டுக் கிடக்கின்றன.
எதற்கெடுத்தாலும் “இது ஆகமத்திற்குப் பிழை!” என்று சொல்வோர் தொகை, இன்று அதிகரித்துவிட்டது. ஆகம நூல்களைக் கண்ணாலும் காணாதவர்களின் கூற்றே இன்றைய ஆகமப்பிரமாணங்களாம். அதனால் சைவத்திற்கு இன்று விளையும் கேடோ எல்லையற்றது.
இன்று பெரும்பாலும் ஆலயத்தை வழிநடத்துகிற அறங்காவலர்களில் பலருக்குச் சமய விடயங்களில் புலமையில்லை. அத்தகையோர், அந்தணர்கள், தம் வசதிக்கேற்ப உரைப்பவற்றையே, ஆகமப்பிரமாணங்கள் எனக் கருதி ஏமாறுகின்றனர். சமயச் சொற்பொழிவாளர்களாகவும் அறிஞர்களாகவும் தம்மை இனங்காட்டிக் கொள்வோரும் சைவசமயத்தின் ஆழக்கருத்துக்களை அதிகம் அறிய முயல்வதில்லை.
ஆனாலும் அவ் ஆழ விடயங்கள் தமக்குத் தெரியாது என்று சொல்லவும் விரும்பாமல் செவிவழிச் செய்திகளையே அவர்களும் ஆகம முடிவுகளாய் அறிவித்து வருகின்றனர். அந்தணர்களதும், சமய அறிஞர்களாய்த் தம்மைச் சொல்லிக்கொள்வோரதும் நிச்சயிக்கப்படாத முடிவுகளையே பொதுமக்கள் ஆகமப்பிரமாணம் எனக்கருதி ஏமாறும் நிலை இன்று தோன்றியுள்ளது.
பக்திநிலைக்குரிய கிரியைகளையும், அறிவு நிலைக்குரிய தத்துவத்தையும், வரையறைசெய்து தருகின்ற பிரமாணநூல்களை இழந்துவிட்டு அதுபற்றிய கவலை ஏதுமின்றி பொறுப்பின்றி வாழும் எம் நிலை நகைப்புக்குரியதாம்.
இந்நிலை ஒருநாட்டில் நீதிநூல்கள் இல்லாது நீதி மன்றங்கள் இயங்குவதற்கு ஒப்பானது.
இருக்கும் ஆகமங்கள் முற்றாக மறையும் முன்னரும் புதிய ஆகமங்களைக் கல்லார் தம் விருப்பத்திற்கு உருவாக்கும் முன்னரும் கிடைக்கும் ஆகம விடயங்களையேனும் நம்மவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
மற்றொன்றையும் இங்கு நான் குறிப்பிடவேண்டும். மேற்சொன்ன எல்லா ஆகமங்களும் வேறு வேறுவிதமான ஆலய அமைப்புக்களையும் பூசை முறைகளையும் எடுத்துச் சொல்வதாக, “சிவஞானமாமுனிவர்” என்கின்ற பேராசான் தனது “சிவஞானமாபாடிய” உரையில் சொல்லியிருக்கிறார்.
எனவே நமது இந்து ஆலய அமைப்பு ஒரே முறையில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ஒவ்வொரு ஆகமமும் ஒவ்வொரு விதமாகச் சொல்வதால், ஆலய அமைப்பு பல்வேறுவிதமாக இருத்தல் கூடும். அது தெரியாமல் ஆகம அமைப்பு என்பது ஒரேமாதிரியாகத்தான் இருக்கவேண்டும் என சிலர் சொல்வது நகைப்புக்குரிய ஒன்றாம்.
கேள்வி :
இலங்கைக்குப் பக்கமாகவும் அமெரிக்க ஈரான் போர் வந்து விட்டதே பார்த்தீர்களா?
பதில் :
போர் ராசி இலங்கை மாதாவைவிட்டு இன்னும் போகவில்லை போலும்.
கேள்வி :
தமிழ்நாட்டுத் தேர்தலில் இம்முறை தங்களைக் கவலைப்படவைக்கும் விடயம் எது?
பதில் :
விடயங்கள் என்று நீங்கள் கேட்டிருந்தால் பலவற்றைச் சொல்லியிருப்பேன். விடயம் என்று ஒருமையில் நீங்கள் கேட்டபடியால் அவற்றுள் முக்கியமான ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
பெரும்பான்மையான ஊடகக்காரர்கள் நடுவுநிலைமை மறந்து கட்சி சார்பானவர்களாக இயங்கத் தொடங்கியிருப்பதுதான் பெரிய கவலைதரும் விடயமாக இருக்கிறது.