எறிகணை 29

எறிகணை 29
04 Apr 2026

கேள்வி :

யாழ்ப்பாணத்தில் நடந்த விரிவுரையாளரின் கொலைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

அதை ஏன் கேட்கிறீர்கள்? யாழ்ப்பாணத்தின் ஒழுக்க நிலை அபாயக் கட்டத்தைத்  தாண்டத் தொடங்கிவிட்டது என்பதைத்தான் அந்நிகழ்வு காட்டுகிறது. கொலை நடந்ததுந்தான் எல்லோரும் அதுபற்றித் துடித்துக் காட்டுகிறார்கள். வருமுன் காப்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை.

பிள்ளைகளின் ஒழுக்கநிலை பற்றி, சிந்திக்கவேண்டிய பொறுப்பு தலைவர்கள், கல்வியாளர்கள், சமயவாதிகள், பெற்றோர்கள் எனப் பலருக்கும் இருக்கிறது.

அப்படிச் சிந்திக்க வேண்டிய முதற்கடமை நமது தமிழ்த் தலைவர்களுக்குத்தான் உரியது என்று நினைக்கிறேன். எல்லாக் கட்சித்தலைவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

நமது தலைவர்கள், கட்சிக்குக்கட்சி சண்டை, ஒரே கட்சிக்குள் ஆளுக்காள் சண்டை என பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள். நமது மக்களுக்கும் இவர்களின் சண்டைகள் பற்றிப் பேசவும் கேட்கவும் விருப்பமாய்த்தான் இருக்கிறது. யாரை என்று குற்றம் சொல்ல?

ஈழப்போர் நடந்து முடிந்த பின்னர், நம் தலைவர்கள் கட்சிகளையும் பதவிகளையும் கைப்பற்றி, தாங்கள் வாழ நினைத்தார்களே தவிர, சமுதாயத்தைப் பொறுப்பேற்க நினைக்கவில்லை.

‘தேசியத் தலைவர்’, ‘போராட்டம்’, ‘போராளிகள்’, ‘தமிழினப்பிரச்சினை’ போன்ற சொற்பமான வார்த்தைகளை அள்ளி எறிந்து, தமது குறைகளை மக்கள் மத்தியில் மறைத்து விடலாம் எனத் தெரிந்து கொண்டு, இன்றுவரை நம் தலைவர்கள் ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எமது மண்ணில், ஒழுக்கம், பண்பாடு, பொருளாதாரம், கல்வி எனப் பல விடயங்களும், முன்பிருந்ததை விட இன்று மிகமிகத் தாழ்ந்து விட்டது வெளிப்படை.

நம் தலைவர்களென்று சொல்லிக் கொள்வோர் இன்றுவரை மேற்சொன்ன விடயங்களின் வீழ்ச்சி பற்றி, ஆராய்ந்து அவற்றின் வீழ்ச்சியைத் தடுப்பது பற்றி ஆராயவென, துறைசார்ந்தவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தைத்தானும் நடத்தவில்லை. “நடத்தாமல் இருக்கிறீர்களே” என்று மக்களும் கேட்கவில்லை.

எல்லோருக்கும் நடக்கும் துன்பியல் சம்பவங்கள் பற்றி, “கொசிப்” அடிக்கத்தான்  விருப்பமாக இருக்கிறது. இன்றைய நமது சமுதாயத்தின் ஒழுக்கவீழ்ச்சி பற்றி, நடந்த சம்பவம்  நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. இது வெறும் மின்னல் தான். இதைத் தொடர்ந்து இடி, மழை, புயல் என்பவையெல்லாம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யாழ்ப்பாணத்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் என்ற ஓர் அபிப்பிராயம் முன்பிருந்தது. “எப்படியிருந்த சமுதாயம் இன்று இப்படி ஆகிவிட்டது”. முதலில் மக்கள் விழிப்படைவோம். பின்பு தலைவர்களை விழிப்படையச் செய்வோம். இல்லாவிட்டால், தந்தைசெல்வா சொன்ன, கடவுளாலும் நமது இனத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

கேள்வி :

நீங்கள் இவ்வளவு சொன்ன பிறகும், அருண் என்பவர் திரும்பத் திரும்ப உங்களை, “மேடைப் பேச்சுத் தொழிலாளி” என்று சொல்லி இழிவு படுத்தப் பார்க்கிறாரே?

பதில் :

அவர் அப்படி திரும்பத் திரும்பச் சொல்லி என்னை பெருமைப்படுத்துவதற்காக அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை, மேடைப் பேச்சுத் தொழிலாளி எனச் சொல்வதால் எனக்கு இழிவுண்டாகுமென, அருண் நினைக்கிறார். நமது பாரதியார் கூட ‘கவிதை நமக்குத் தொழில்’ என்று சொன்னதை இவர் அறியார் போலும்.

இவருக்கு, மற்றவர்களை இழிவு செய்வதை விட வேறெதுவும் தெரியாதென்பது இந்த உலகத்திற்கே தெரியும். பாவம், இவரது இந்த இழிவுத் தொழிலைவிடவா, எனது மேடைப் பேச்சுத் தொழில் குறைந்துவிடப்போகிறது.

மற்றவர்களின் குறைகளை விற்றுப் பிழைக்கும் இவர், திருந்த வேண்டுமென நாம் அனைவரும் பிரார்த்திப்போம். ஆனால் ஒன்று,  வெகுநாளைக்கு இவரது இந்த இழிவுத் தொழில் நீடிக்காது என்பது மட்டும் நிச்சயம்.  

 

கேள்வி :

மருமகனோடு மகளும் சேர்ந்து, விரிவுரையாளரான தாயைக்கொன்று, அவரது சடலத்தைப் பற்றைக்குள் எறிந்து விட்டுச் சென்றார்கள் என்ற செய்தியை, உங்களால் நம்ப முடிகிறதா?

பதில் :

கஷ்டமாகத்தான் இருக்கிறது. அந்த மருமகனையும் மகளையும் பார்த்தால் மென்மையானவர்கள் போலத்தான் தோன்றுகிறார்கள். இவர்களா இத்தகைய கொடூர காரியங்களைச் செய்தார்கள்? என்று ஆச்சரியப் படவேண்டியிருக்கிறது. “தேவர் அனையர் கயவர்”என்று திருவள்ளுவர் சொன்னதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

மருமகனையேனும் விட்டுத்தள்ளுங்கள். ஒரு மகள், தனது தாய்க்கு இப்படிச் செய்திருப்பாளா? என்பதை என்னால் இந்த நிமிடம் வரை நம்பமுடியவில்லை. மகள் காலைப்பிடிக்க மருமகன் கழுத்தை நெரித்துக் கொன்றான் என்கிறார்கள். சொல்லவே நெஞ்சு பதறுகிறது.  பின்னர் சடலத்தை எறிந்துவிட்டு, அவ்விருவரும்  திருகோணமலையில் புதுவீடு எடுத்து குடும்பம் நடத்தத் தொடங்கினார்களாம். நமது மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி வருகிறார்களோ? என அச்சப்பட வேண்டியிருக்கிறது.

அந்த மகள் அப்படிச் செய்யவில்லை என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா? என இந்த நிமிடம் வரை என் மனம் ஏங்கித் தவிக்கிறது. கொலைச் சம்பவம் பற்றிய விரிவான செய்திகள் வெளிவராமல் இருப்பது வேறு மண்டையைக் குடைந்தபடி இருக்கிறது. 

 

கேள்வி :

நான் ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்திருப்பதும், கம்பவாரதி கொழும்பிற்கு இடம்பெயர்ந்திருப்பதும் ஒன்று தானே என்று அருண் சொல்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

இடம் பெயர்ந்திருக்கிறோம் என்ற அளவில், அருண் சொல்லுமாற் போல நாம் இருவரும் சமமானவர்கள் தான். ஆனால் செயற்பாட்டில் சிறிய வித்தியாசம் இருக்கிறது.

இடம் பெயர்ந்து கொழும்பிற்கு வந்த பிறகும் நான் கம்பன் கழகத்தினுடாக செய்திருக்கும் வேலைகளைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.

•             வடக்கில் நமது கோவில்களெல்லாம் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது கொழும்பில் துணிந்து ஒரு கோவிலை நாம் கட்டி நல்லபடி இயக்கி வருகிறோம்.

இன்று அக்கோவில் கொழும்புத்தமிழர்களின் முக்கிய வழிபாட்டிடமாக மாறியிருக்கிறது.

•             மாதந்தோறும் அக்கோவிலில், எம்மால் அன்னதானமும் மருத்துவ முகாமும் நடாத்தப்படுகின்றன.

•             கொழும்புக்கு வந்த பிறகு, அங்கும் கம்பன் கழகத்தை ஆரம்பித்து, இயல், இசை, நாடக விழாக்களை நடாத்தி, இங்கும் நம் கலை இலக்கியப் பண்பாட்டுத்துறைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

•             இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எமது கம்பன் விழாக்களின் போது சமூகத்திற்காகப் பாடுபடும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம்.

•             அது போலவே இளையோரின் ஆற்றலை வளர்த்தெடுப்பதற்காக, எழுத்து, பேச்சு, கவிதை, திருக்குறள் போட்டிகளை நடாத்தி பரிசளித்து வருகிறோம்.

•             நம் சமூகத்திற்காக பாடுபட்ட பெரியோர் அறுவரை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கௌரவிக்கிறோம்.

•             வருடந்தோறும் ஒரு நூலை வெளியிட்டு வருகிறோம்.

•             ஒவ்வொரு விழாவிலும் “நாவலர் விருது”, “விபுலானந்தர் விருது”, “ஏற்றமிகு இளைஞர் விருது”, “மகரந்தச்சிறகு விருது” ஆகிய விருதுகளைத் தக்கவர்களுக்கு பொற்கிழியோடு வழங்கி வருகிறோம்.

•             இது தவிர வறுமைப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கான மருத்துவ உதவியும் எம்மால் செய்யப்படுகிறது.

•             அண்மையில் எம் நாடு புயலால் பாதிக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபா பணத்தைச் சேகரித்து வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளோம்.

•             யாழ்ப்பாணத்திலும் நாம் செய்து வந்த பணிகள் எதனையும் நிறுத்தவில்லை. வழமை போலவே அங்கும் ஆண்டுதோறும் கம்பன் விழாக்களையும் இசை விழாக்களையும் சிறப்பாக நடாத்தி வருகிறோம்.

•             இவை மட்டுமல்லாமல் கிளிநொச்சியில் நமது இளையவர்களுக்கு, ஆளுமைப் பயிற்சி அளிக்கவென ஓர் ஏக்கர் நிலத்தில், “கம்பன்அறிவாலயம்” எனும் நிலையத்தை அமைத்துள்ளோம்.

•             அதே இடத்தில், நலிவுற்ற நமது பிள்ளைகளின் ஒழுக்க வளர்ச்சி நோக்கி, மூன்று வகுப்பறைகளைக் கட்டி, மூன்று ஆசிரியர்களை நியமித்து சன்மானம் வழங்கி ஞாயிறு தோறும் ஓர் அறநெறிப் பாடசாலையை நடாத்தி வருகிறோம்.

•             அங்கு  கற்க வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சீருடை, கற்கை உபகரணங்கள், சிற்றுண்டி, மதியஉணவு முதலியவற்றை வழங்கி வருவதோடு ஆண்டுதோறும் அம்மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கல்விச்  சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறோம்.

 

இடம்பெயர்ந்து கொழும்பு வந்தபின்னர் நம் இனத்திற்காக நாம் செய்து வரும் தொண்டுகள் இவை. இத்தனைக்கும் அடிப்படையாக இருப்பது என்னுடைய மேடைப் பேச்சுத் தொழில் தான்.

இனி, அருண்  இடம்பெயர்ந்து நம்மினத்திற்காகச் செய்து வரும் தொண்டுகளை (வாய்ப்பறை அடிப்பதைத் தவிர). வரிசைப்படுத்தட்டும். இந்தவிடயத்திலும் அவர் எம்மோடு சமப்படுவாரானால் அவருக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்தத் தயங்கமாட்டேன்.

நெளிந்து செல்வதால், நாகபாம்பும் நாக்கிலிப்பூச்சியும் ஒன்றுதான் என்பது போலத்தான், இடப்பெயர்வுபற்றி அருண் சொல்லும் ஒப்பீடு இருக்கிறது.

 

கேள்வி :

அமெரிக்கா, ஈரான் சண்டை எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

பதில் :

இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? உலக ஊடகங்கள் அத்தனையிலும் இது பற்றிய செய்திகள் தானே முதன்மை பெற்று நிற்கின்றன. அமெரிக்கா, எலிவால் என்று நினைத்து புலிவாலைத் தெரியாமற் பிடித்துவிட்டு இப்போது அதை எப்படி விடுவது என்று தெரியாமல் அந்தரித்து நிற்பதைக் கண்டு உலகம் சிரிக்கிறது. “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்று சும்மாவா சொன்னார்கள்?

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.