எறிகணை 37

எறிகணை 37
எறிகணை 19 Jun 2026

கேள்வி :

நம் தலைவர்களும், மக்களும் போராட்டம் பற்றியும், மறைந்த போராளிகள் பற்றியும்  எப்போதும் பேசி வருகிறார்கள். உண்மையில் இவர்களுக்குப் போராட்டத்தின் மீதும், போராளிகள் மீதும் அக்கறை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில் :

உங்களுக்கு வந்த அதே சந்தேகம் என் மனதினுள்ளும் இருக்கிறது. அண்மையில் நடந்த ஒரு சம்பவமே அச்சந்தேகத்தைக் கிளப்பியது.

போரினால் ஊனமுற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளியான எனது நண்பர் ஒருவரைச் சென்றவாரம் சந்தித்தேன். போராட்ட காலத்தில் இயக்கத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவராய் இருந்தவர் அவர்.

2009 இல் போர் முடிவுக்கு வந்தபோது, இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட இவர், பின்னர் மறுவாழ்வு முகாமில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். தற்போதைய வறுமை நிலையிலும், முன்பு போடப்பட்ட வழக்குகள் சிலவற்றைச் சிரமப்பட்டு இன்னும் அவர் சந்தித்து வருகிறார்.

அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. தன்னுடைய வழக்குகளுக்காக ஒவ்வொரு தவணையின் போதும் வக்கீல்களுக்கு இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம் என்று “பீஸ்” கொடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.

“போராளிகளாகிய உங்களது வழக்குகளுக்குமா இவ்வளவு “பீஸ்” வாங்குகிறார்கள்?” என்று கேட்டேன். பதில் சொல்லாமல் விரக்தியாய்ச் சிரித்தார்.

 நம் உரிமைக்காகப் போராடியவர்களின் வழக்குகளை நடத்தவேனும் நம் சட்டத்தரணிகள் பணம் வாங்காமல் இருக்கக்கூடாதா? என்று எண்ணத் தோன்றியது.

போராட்டம் பற்றியும், போராளிகள் பற்றியும் வாய் கிழியப்பேசிவரும் நமது தலைவர்கள், தத்தமது கட்சிகளின் சார்பாக ஒரு சட்டத்தரணிகளின் குழுவை நியமித்து, பழைய போராளிகளின் வழக்குகளை நடத்தித்தர முன்வரலாமே.

போராட்டத்தையும் போராளிகளையும் சொல்லி, பலர் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று, வீடும், காரும் ‘ஏ.சியும்’ வாங்கி வசதியாக வாழ்கிறார்கள். இத்தகைய பொய்யர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நம் புலம்பெயர் தமிழர்களாவது தமது செலவில் சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து, நலிவுற்ற இத்தகைய முன்னாள் போராளிகளுக்குத் துணைபுரிய முன்வந்தால் பலரும் போற்றுவார்கள்.

நம்மவர்களுக்குப் போராட்டத்தின் மீதும், போராளிகள் மீதும் உண்மையில் அக்கறை இருந்திருந்தால், இந்த விடயம் ஏற்கனவே நடந்திருக்கவேண்டும். ஆனால் நடந்ததாய்த் தெரியவில்லை. அதனாற்றான் உங்களின் சந்தேகம் எனக்கும் வருகிறது. 

கேள்வி :

தமிழ்நாட்டில் அண்ணாமலையார் புதிய கட்சி தொடங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

பதில் :

இன்றைய நிலையில் ஆளுமையும், தெளிவும், தீர்க்கதரிசனமும், துணிவும், தேசப்பற்றும், இனப்பற்றும், நிர்வாகத் திறனும், நேர்மையும் கொண்ட ஒருவர் தமிழக அரசியலுக்குக் கட்டாயத் தேவையாய் இருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட தகுதிகளோடு வலம் வரும் அண்ணாமலை அவர்கள், புதிய கட்சியோடு அரசியலுக்குள் வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு  நல்லதென்றே தோன்றுகிறது.

தன்னை வளர்த்த பாரதிய ஜனதாக் கட்சியைவிட்டு, அவர் வெளியே வந்ததை, தவறென்று சிலர் விமர்சித்திருப்பதைப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை இப் பிரிவு பா.ஜ.க.விற்கும், திரு.அண்ணாமலை அவர்களுக்கும் நல்ல பயனை விளைவிக்கும் என்றே தோன்றுகிறது.

பாரதிய ஜனதாக்கட்சியை, தமிழகத்தினதும், தமிழ் மக்களினதும்  எதிரியாகச் சொல்லிச்சொல்லி, பலரதும் மனதில் அக் கருத்தை முன்னைய ஆட்சியாளர்கள் ஆழமாகப் பதிவு செய்து விட்டார்கள்.

இந் நிலையில் அண்ணாமலை அவர்கள், அக்கட்சிக்குள் இருந்து கொண்டு, தமிழக அளவில் தனது கைகளை முழுமையாய் விரிப்பது கடினமான செயலாகத்தான் இருக்கும்.

அவர் அக் கட்சியை விட்டு வெளியே வந்து விட்டால், இந்தத் தடை தானாக விலகிவிடும். அது தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்க நினைக்கும் அண்ணாமலையாரின் நோக்கத்தைச் சுலபமாக்கித் தரும்.

திராவிடக் கழகங்களிலிருந்து ஆட்சிக் கட்டிலை விஜய் மிகச் சுலபமாகக் கைப்பற்றிப் புரட்சி செய்திருக்கிறார். நீண்ட நாட்களின்பின் திராவிடக் கழகங்களிடமிருந்து  தமிழக ஆட்சி, கைமாறியிருக்கிறது.

அடுத்தடுத்து வரும் செய்திகளைப் பார்த்தால், மாற்றத்தை உருவாக்கிய த.வெ.க. கட்சியால், சுலபமாகத் தாம் பெற்றுக் கொண்ட ஆட்சியை வெற்றிகரமாய் நடத்த முடியுமா? எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து வருகிறது.  

இந் நிலையில் தகுதியுள்ள இன்னொருவர், தமிழக அரசியல் களத்தில் குதிப்பதென்பது பயனுள்ளதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாமல் மேற்படி பிரிவு, பா.ஜ.க. கட்சிக்கும் பயன் செய்யும் என்றே  எண்ணத் தோன்றுகிறது.  ஒருவேளை தமது விசுவாசியான அண்ணாமலையார், தமிழக ஆட்சியைக் கைப்பற்றினால், அதன் மூலம் தமிழ்நாட்டின் அரசைத் தமக்கு நட்பாக்கி, பா.ஜ.க.வும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.

அண்ணாமலையாரின் தற்போதய முடிவு, மேற்படி நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான பா.ஜ.க.வின் ஒரு நாடகம்தான் என்றும் சிலபேர் பேசிக் கொள்கிறார்கள். காலம் தான் உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்புகிறேன்.

கேள்வி :

அண்மையில் உங்களை மகிழ்வித்த ஒரு விடயம் பற்றிக் கூறுங்கள்.

பதில் :

கடந்த வாரம் ‘அகில இலங்கை இளங்கோ மன்றத்தினால்’ வடமராட்சியில் நடத்தப்பட்ட சிலப்பதிகார விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த அமைப்பின் நிர்வாகிகள் விழாவினை நடத்திய விதம் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ் ஆசிரியரான ‘ரதீஸ்’ என்பவரின் நெறிப்படுத்தலில்த்தான் அவ்விழா நடைபெற்றது. அந்த நண்பர் தலைமைக்குரிய பல பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.

தான் எடுத்த விழாவின் மூலம், தன்னை வெளிப்படுத்த நினையாமல் அவர் செயற்பட்ட விதம் கண்டு வியந்தேன். சிறந்த பேச்சாளரான அவர் அவ் விழா நிகழ்ச்சிகள் எவற்றிலும் பங்கேற்கவில்லை. மற்றவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நின்று, விழாவினை  நெறிசெய்வதில் முழுக்கவனம் செலுத்தினார். அச் செயலில் அவரது நிர்வாகத்திறன் வெளிப்பட்டது. 

அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் ஒரு ரசிகனாய் சபையின் முன் வரிசையில் வந்து அமர்ந்திருந்து, அனைவரது பேச்சையும் முழுமையாய் ரசித்துக் கேட்டார். அதில் அவரது தமிழார்வம் வெளிப்பட்டது. 

அங்குள்ள இளைஞர்கள் அத்தனை பேரும் அவருக்குக் கட்டுப்படுவதைக் காணமுடிந்தது. அவர்மீது வைத்திருந்த மதிப்பினால் மட்டுமே அவ் இளைஞர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அதில் அவரது ஒழுக்கமும், ஆளுமையும் வெளிப்பட்டது.

இளைஞர்கள் மட்டும் என்றில்லாமல்.  அவ் ஊர்மக்கள் அனைவருமேகூட அவர்மீது மரியாதை கொண்டிருப்பதை, மேடையில் அவரது பெயர் சொல்லப்பட்ட போதெல்லாம் எழுந்த கைதட்டல்களிலிருந்து உணர முடிந்தது. அதில் அவரது சமூகத் தொண்டின் ஆற்றல் வெளிப்பட்டது.

அக் கழகத்து இளைஞர்களிடம் மிகப்பண்பட்ட நடவடிக்கைகளைக் காணமுடிந்தது. வருகிறவர்களை இன்முகத்தோடு வணங்கி வரவேற்று, அவர்கள் உபசரித்த விதத்தில் உயர்ந்த நாகரிகம் வெளிப்பட்டது. அதுமட்டுமன்றி அவர்கள் அறிவாழம் மிக்க பேச்சாளர்களாகவும் தயாரிக்கப்பட்டிருந்தார்கள்.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்களது அ.இ.கம்பன் கழகத்திற்குச் சரியான ஒரு போட்டி அமைப்பு உருவாகியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.  

 

கேள்வி :

ஈரான், அமெரிக்கப் போருக்கு முடிவு வந்துவிட்டதே பார்த்தீர்களா? 

பதில் :

போர்நிறுத்த ஓப்பந்தம் கட்டாயத்தின் பேரில்த்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. “ட்ரம்ப்” சுலபமாக ஈரானை விழுத்திவிடலாம் என நினைத்தார். அவரது அந்த நினைப்பு கனவாகிப் போய்விட்டது. மற்றைய வல்லரசுகள் மறைமுகமாய் ஈரானைப் பலப்படுத்த, அமெரிக்கா இப் போரினால் திக்குமுக்காடிப்போனது உண்மை.

எடுத்துக் கொண்ட வேலையைச் செய்வதற்குத் தேவையான வலிமையை முதலில் கணிப்பிடவேண்டும் என்றும், பின்னர் அதனோடு ஒப்பிட்டுத் தன் வலிமையின் அளவையும், எதிரியின் வலிமையின் அளவையும் சரியாகக் கணிக்கவேண்டும் என்றும், நிறைவாகத் தம் இருவருக்கும் துணையாக வரக்கூடியவர்களின் வலிமையின் அளவைக் கணிக்கவேண்டும் என்றும், இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் தனது வலிமை அதிகரித்திருந்தால் மட்டுமே ஓர் அரசன் போரினைத் தொடங்கவேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். (“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”)

அமெரிக்க அதிபர் “ட்ரம்ப்” அவர்கள் ‘துணைவலி’ பற்றிச் சிந்திக்காமல் விட்டதால் வந்த விளைவு இது.

ஏற்கனவே தன் நட்புக்குரிய “நேட்டோ” நாடுகளை, தனது அலட்சியத்தால் பகைக்க வைத்திருந்த “ட்ரம்ப்”, ஈரானின் ‘அடி’வலுக்கத் தொடங்க  திக்குமுக்காடிப் போய், தனக்குத் துணையாக வருமாறு அபயக்குரல் எழுப்பினார்.  “நேட்டோ” த் தலைவர்கள்  அவரது குரலுக்குச் செவி கொடுக்காமல் முகம் திருப்பிக் கொண்டனர். அது “ட்ரம்ப்” க்கு விழுந்த முதலடி.  

அமெரிக்கா, ஈரானையும் விழுங்கி விட்டால், பலத்தில் அதன் கை ஓங்கி, அதனால் தாம் பாதிப்புற நேரலாமென அஞ்சிய மற்றைய வல்லரசுகள், வெளித் தெரியாமல் ஈரானிற்கு மேசையின் கீழாகக் கைகொடுத்தது, “ட்ரம்ப்” ற்கு விழுந்த இரண்டாவது அடி.

ஆறு நாட்களில்  முடிந்துவிடும் என நினைத்த போர், நூறு நாட்களாய்த் தொடர, அதற்கான செலவு இமயம் தொட்டது. அது  அமெரிக்காவுக்குக் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த, அதனால் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட கோபமும,; வெறுப்பும்  “ட்ரம்ப்” ற்கு விழுந்த மூன்றாவது அடியாயிற்று.

போரினால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், உலக நாடுகளையும் பாதிக்க, அதனால் அவை அமெரிக்கா மேல் சீற்றம் கொண்டன. அதனால் உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பு குன்றியது. அதனால் “ட்ரம்ப்”  இகழப்பட்டார்.  இது “ட்ரம்பிற்கு”  விழுந்த நான்காவது அடி.  

இந்த அடிகளையெல்லாம் “ட்ரம்ப்” எதிர்பார்த்திருக்கவில்லை. காலம், இடம், வலி என்பவற்றை அறியாது போர் தொடங்கிய அவர் “ஆப்பிழுத்த குரங்காய்” அவதிப்பட்டுப் போனார்.

அந்த அவதிதான் மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையாயிற்று. வியட்நாம் போருக்குப் பின் அமெரிக்காவின் மூக்கில் விழுந்த அடுத்த குத்து இது.

 

கேள்வி :

மஹிந்த மீண்டும் களத்தில் குதிக்க வந்திருப்பது பற்றி.

பதில் :

ஆசை யாரை விட்டது? மக்களால் துரத்தப்பட்டுத் தப்பி ஓடியவர்கள், உலகளாவி ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தமக்கு சாதகமாய்ப் பயன்படுத்த நினைத்து, மகிந்த குழுவினர் மீண்டும் அரசியல் அரங்கினுள்   நுழைய முயல்கிறார்கள்.

எப்படியும் மகனை அரசுக்கட்டிலில் ஏற்றிவிட வேண்டுமென அவர் ஆசைப்படுவது வெளிப்படையாய்த் தெரிகிறது. மறைமுகமாய்ச் செய்த குற்றங்களுக்காக நீதி விசாரணைக்கு உட்படவேண்டிய சூழ்நிலையில் உள்ள பலர் அவரோடு அணிசேர முயல்கிறார்கள்.

சூழ்நிலை யாரைப் பலப்படுத்தும் என்று சொல்லத் தெரியவில்லை. இத்தகையவர்கள் பலம்பெறுவதற்கு முன்பாக, முகதாட்சண்யம் பார்க்காமல் நீதியை நிலைநிறுத்துவதில் அநுர அரசு தனது “ஆமைக்கதியை” விட்டு, “முயல்க்கதிக்கு” உடன் மாற வேண்டும். மாறத் தவறினால், அவர்கள் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டி வந்தாலும் வரலாம்.

கேள்வி :

மஹிந்த கூட்டத்தில் அர்ச்சுனா?

பதில் :

“அரசியல் விபச்சாரம்.”

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.