கந்தன்கவி அமுதம் 13
கவிதை முற்றம் 07 Sep 2026
மாம்பழத்துப் போட்டிக்காய் முருகன் தானும்
மயிலமர்ந்து உலகுதனை வலமாய்ச் சுற்ற
தேம்பி மனம் சோராது திகழும் பெற்றோர்
திருவுருவை வலம் வந்து கனியைப் பெற்று
ஓம் பொருளாம் கணபதியும் உவந்து நிற்க
உளம்வாடிக் கந்தனவன் ஆண்டிக் கோலம்
தாம் அடைந்து நிற்கின்ற காட்சி காண
தரணியெலாம் நல்லூரில் திரண்டு நிற்கும்
மங்களமாய் வெளிவந்த முருகன் தானும்
மனம் நொந்து ஆண்டியென நிற்கக் கண்டு
அங்கிருக்கும் மக்களெலாம் அதிர்ந்து நிற்பர்
ஆண்டியென நின்றாலும் அழகன் கந்தன்
எங்களுடை இறை என்றே சொல்லிச் சொல்லி
ஏற்றமுற அவன்தன்னை வலமாய் வந்து
பொங்குகிற அன்போடு வணங்கும் அன்பர்
பொலிவுறவே வரங்கள் பல வழங்கி நிற்பான்.