கந்தன் கவியமுதம் 2
கவிதை முற்றம் 27 Aug 2026
உலகமெலாம் மகிழ்ந்துருக நல்லூர்க்கந்தன்
உவப்போடு மயில் ஏறி உலவ வந்தான்.
நலம் திகழும் அவன் அழகைக்காணவென்று
நாடெல்லாம் இருந்து பல மக்கள் வந்தார்.
உளம் உருக்கும் அவன் பொலிவைக் கண்டு நைந்து
ஓங்காரப் பொருளுணர்ந்து அவர்கள் நிற்க,
வலம் வந்து பக்தர்களை ஈர்த்துக் கொண்டான்.
வள்ளி தெய்வானை உடன் வந்த வேலன்.
ஓங்குகிற வேலழகா? உவந்து ஏறும்
ஒப்பற்ற மயிலழகா? உயர்ந்து நிற்கும்
தாங்குகிற கொடியழகா? தனித்துத் தோன்றும்
தன்னிகரில் அணியழகா? தரணி கேட்கும்
பாங்கு நிறை மணியழகா? பாய்ந்து நிற்கும்
பரியதனின் வடிவழகா? பலரை ஈர்க்கும்
வீங்குகிற தோளழகா? விளங்கி நிற்கும்
வெற்றிநிறை மார்பழகா? விளம்பப்போமோ?