கந்தன்கவியமுதம் 3

கந்தன்கவியமுதம் 3

அகத்தியர்க்குத் தமிழ் தன்னை அருளிச் செய்த

ஐயன் முருகேசனவன் அன்பால் போற்றும்

தகவுடைய ஈழத்துத் தமிழர் தன்னைத்

தான் காக்க நல்லூரில் தனித்து நின்றான்.

சகமதனைத் தன் வேலால் காக்க என்று

தனி அசுரன் சூரனையே வதைத்த ஐயன்

நிகரதிலாத் தெய்வமதாய் நெஞ்சில் நின்று

நேசர்களைத் தன் வேலால் காக்க வந்தான்.

 

வெள்ளி மயில் தனிலேறி வேலன் வந்தால்

விண்ணவரும் மண் சேர விரும்பி நிற்பர்

பள்ளியறைப் பூசைதனைக் காணவென்று

பக்தரெலாம்  பரிதியெழும் முன்னே  வந்து

அள்ளி அவன் அருள் பருகக் காத்து நிற்பார்

அந்தணரும் அருமறைகள் ஓதி நிற்பார்

 வள்ளியுடன் தெய்வானை சேர்ந்து நின்று

வரம் ஈயும் காட்சிதனை என்னவென்பேன்

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.