கம்பஅறம் 6
உலகின் நிலைத்தலுக்குக் காரணமானது அறம்.
அவ் அறத்தினை முதல் அறம், சார்பறம் என இரு கூறாய்ப் பிரிப்பர்.
முதல் அறம் தனிமனித வாழ்வுக்கான அறம்.
சார்பறம் சமூக வாழ்வுக்கான அறம்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
தனது அறத்துப்பாலில் முதல் அறத்தையும்,
பொருட்பாலில் சார்பறத்தையும் விளக்கம் செய்கிறார்.
இச் சார்பறமே அரசியல் அறமாகிறது.
இச் சார்பறமான அரச அறம் மூன்று கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.
நிர்வாகத் தலைமையேற்று நடத்தும் தலைவன்,
அவனால் நடத்தப்படும் நிர்வாகத்திற்குத் துணை செய்து நிற்கும் பகுதிகள்,
இவை தவிர்ந்த நிர்வாகம் சார்ந்த வேறு விடயங்கள் என,
இம் முக் கூறுகளும் வகைப்படுத்தப்படுகின்றன.
இம் முக்கூறுகளையும் வள்ளுவர் தன் நூலில்,
அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூன்று இயல்களாக்கிக் கூறுகிறார்.
வள்ளுவரால் உரைக்கப்பட்ட,
இந்த மூன்று கூறுகளுக்குமான அற இலக்கணங்களை,
நம் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் தன் காவியத்துள்,
கதைப்பதிவுகளினூடக இலக்கியமாக்கிக் காட்டுகிறார்.
அங்ஙனம் அவர் செய்யும் அரசியல் அறப்பகுதி,
அயோத்தி, கிஷ்கிந்தை, இலங்கை என மூன்று இடங்களில் பதிவாகின்றன.
அவற்றுள் அரசர்க்குரிய அறங்களை நேர்முகமாகக் கம்பர் பதிவு செய்யும்,
தன்மையை இனி நாம் காண்போம்.
உயர் அரச அறத்தைப் பல பாத்திரங்களின் மூலமாகவும்,
ஆங்காங்கு தன் காவியத்துள் பதித்திருக்கும் கம்பநாட்டாழ்வார்,
அயோத்தியில் அறம் தவறாத ஓர் அரசனைப் படைத்துக்காட்டி,
அவன் மூலம் அரசர்க்குரிய உயர் அறத்திற்கான வரைவிலக்கணங்களை,
தெளிவுறப் பதிவு செய்கிறார்.- அப்பாத்திரமே தசரதனாம்.
தசரதன்.
இவன் காவியநாயகனான இராமனைப் பெற்றெடுத்தவன்.
சூரிய வம்சத்தைச் சேர்ந்தவன்.
அறநெறியைத் தன் உயிர் நெறியாய்க் கொண்டவன்.
காத்தல் தெய்வமாகிய திருமாலே இவன் புதல்வனாய் வந்துதித்தான் எனின்,
இவனது உயர் அறநிலை சொல்லாமலே பெறப்படும்.
இத் தசரதன் தனக்குப் புதல்வர்கள் இல்லாத குறையை,
குலகுருவான வசிட்டரிடம் கூற,
அவர் இவனுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகுமா? என,
தன் ஞானதிருஷ்டியினால் நோக்குகிறார்.
அப்போது அவர் மனக்கண்ணில் வைகுண்டம் தோன்றுகிறது.
அங்கு பாற்கடலிலிருந்த திருமாலிடம் இராவணனால் துயருற்ற தேவர்கள்,
அரக்கர்களால் தாம் படும் இன்னல்களை எடுத்துரைக்கின்றனர்.
தேவர்தம் துயர் கேட்ட திருமால் மனமிரங்கி,
“அரக்கர்களை அழிக்க தசரதன் புதல்வனாய் அவதரிப்பேன்” என்று,
தேவர்க்கு வரமளிக்கிறார்.
“கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதுந் தாரணி”
அவதாரம் செய்ய நினைத்த திருமால்,
தரசதனது புதல்வனாய் வந்துதிக்க விரும்பும் அளவுக்கு,
இத் தசரதன் அறவழி நின்ற உயர் அரசனாய்த் திகழ்ந்தான் என்பதை,
கம்பநாட்டாழ்வார் நமக்குக் குறிப்பால் உணர்த்துகிறார்.
இனி அத் தசரதப் பாத்திரத்தைத் தனது பாலகாண்டம் அரசியற்படலத்தில்,
அறிமுகம் செய்யத் தொடங்குகிறார் கம்பநாட்டாழ்வார்.
இத் தசரதன் யார்? எனும் கேள்விக்குப் பதிலுரைக்கும் கம்பர்,
அவன் அரசர்க்கு அரசனான ஒரு பேரரசன் என்றும்,
மாட்சிமை உள்ள, ஒப்பில்லாத, நீதி தவறாத அரசன் என்றும்,
இந்த இராமகாதைக்குத் தலைவனான ஒப்பற்ற ஸ்ரீ இராமனைப் பெற்ற,
நல்ல தர்மத்தின் வடிவத்தை ஒத்தவன் என்றும்,
உரைத்து தசரதனைச் சிறப்பிக்கிறார்.
“அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்
செம்மாண் தனிக்கோல் உலகேழினும் செல்ல நின்றான்
இம்மாண் கதைக்கோர் இறையாய இராமன் என்னும்
மொய்ம்மாண் கழலோன் தரு நல் அறமூர்த்தி அன்னான்.”
இப் பாடலில் தசரதனை தர்மத்தின் வடிவானவன் என்று,
கம்பநாட்டாழ்வார் உரைத்ததைக் கவனித்தல் அவசியம்.
உண்மை அறிவும், இரக்கமும், தர்மமும், சாந்தகுணமும்,
குற்றமற்ற வலிமையுடைய பராக்கிரமமும்,
தானமும், நீதி வழியில் சலியாமல் நிற்றலும் ஆகிய,
அரசர்களுக்கு வேண்டிய உயர் குணங்களை எல்லாம்,
ஒருங்கே கொண்டவனாக இத் தசரதச் சக்கரவர்த்தி இருந்தான் என்று,
தசரதனது உயர்வையும், ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய பண்பையும்,
ஒருங்கே பதிவாக்குகிறார் கம்பர்.
ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும்
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும்
நீதிந் நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற
பாதி முழுதும் இவர்க்கே பணி கேட்ப மன்னோ
கம்பர் இப் பாடலில், மேற்குறிப்பட்ட தகுதிகளெல்லாம்,
மற்றைய அரசர்களுக்குப் பாதி அளவே இருக்க,
அவை யாவையும் தசரதனிடமே முழுமை பெற்றிருந்தன என்கிறார்.
அத்தகைய தசரதனால் கடைப்பிடிக்கப்பட்ட அரச அறம் பற்றி,
தொடர்ந்து கூறத் தொடங்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
இந்தத் தசரதன் தாரைவார்த்துக் கொடுத்ததான ஜலத்தினால் நனையாத,
அந்தணர்களது கரங்கள் ஏதும் இல்லை என்றும்,
வேதம் கூறும் உயர் அரச அறத்தின் வழி நடக்கின்ற,
மற்றைய அரசர்களால் செய்ய முடியாத,
அரசர்களுக்கு உரியனவான யாகங்கள் அனைத்தையும்,
இவன் செய்து முடித்தான் என்றும் உரைக்கிறார்.
மொய்யார் கலிசூழ் முது பாரின் முகந்து தானக்
கைய்யார் புனலால் நனையாதன கையுமில்லை
மெய்யாய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த யாரும்
செய்யாத யாகம் இவன் செய்து முடித்த மாதோ.
அடுத்து, இந்தத் தசரதன் தன் நாட்டை ஆள்கின்ற பொழுது,
பலதரப்பட்ட நாட்டு மக்களில்,
எவரெவர்க்கு எவ்வெவ் விதமாக நின்று துணைபுரிந்தான் என்பதை,
விரிவாக எடுத்துச் சொல்கிறார் கம்பர்.
அத் தசரதன்,
அன்பு செய்வதில் “தாயினைப்” போன்றவன் என்றும்,
நலங்களைத் தருவதில் “தவத்தினை” ஒத்தவன் என்றும்,
நற்கதியைத் தருவதில் “புதல்வரை” ஒத்தவன் என்றும்,
தீமைகளை அழிப்பதில் நோய் நீக்கும் “மருந்தினை” ஒத்தவன் என்றும்,
நுண்பொருள்களை ஆராயும் போது, “அறிவினை” ஒத்தவன் என்றும்,
புகழ்ந்துரைக்கிறார்.
தாய் ஒக்கும் அன்பில் தவம் ஒக்கும் நலம் பயப்பில்
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான்.
மேலும் இத் தசரதன் அறம், அறிவு, வீரம், போகம் போன்றவற்றை,
ஆட்சி செய்த சிறப்பினை அடுத்துக் கூறத் தொடங்குகிறார் கம்பர்.
இரப்போர் கடலை அவன் ஈந்து கடந்தான் என்றும்,
அறிவுக்கடலை நூல்களை ஆய்ந்து கடந்தான் என்றும்,
பகைவர்க்கடலை வாளால் காய்ந்து கடந்தான் என்றும்,
அளவில்லாத இவ்வுலக போகத்தைத் தோய்ந்து கடந்தான் என்றும் உரைத்து,
தசரதனின் நிறைவு கம்பரால் பதிவு செய்யப்படுகிறது.
ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்ணில் நுண்நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவெனும் அளக்கர் வாளால்
காய்ந்தே கடந்தான் பகைவேலை கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம்
(அளக்கர், வேலை, பௌவம் ஆகியவை கடலுக்கான வேறு பெயர்கள்)
அந்தத் தசரதனின் ஆட்சிச் சிறப்பால் அயோத்தி நகரத்தில்,
ஆற்று வெள்ளமும், பறவைகளும், விலங்குகளும்,
விலைமாதருடைய மனமும் ஒருவழியாக ஓடிற்றாம் என்கிறார் கம்பர்.
“வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன்”
பல இடங்களில் பரவிப் பெய்யும் மழைநீர் முழுவதும்,
தன் நகரத்துள் வரும்படி நீர்நிலைகளை அவன் அமைத்ததால்,
அயோத்தியில் வெள்ளம் ஒருவழி ஓடிற்றாம்.
தமக்கான உணவு, நீர், உறையுள் என்பவை முழுமையாய்க் கிடைத்ததால்,
விலங்குகளும் பறவைகளும் வேற்று இடங்களிலிருந்து வருதலன்றி,
செல்தல் இல்லாமையால் அவையும் அங்கு ஒரு வழி ஓடினவாம்.
தசரதன் பேணிய அறத்தன்மையால் ஏலவே அங்கிருந்த வேசையர்கள் உள்ளமும்
ஒழுக்கவயப்பட்டு ஒருவனையே நாடி ஒரு வழிப்பட்டனவாம்.
அதனாற்றான் அயோத்தியில் இவையெல்லாம் ஒரு வழி ஓடிற்றாம்.
(தொடரும்)