கம்ப அறம் 5
உலகில் வெற்றியை விரும்பாதார் இலர்.
வெற்றிநோக்கியே அனைவர்தம் இயக்கமும் அமையுமாம்.
அவ்வெற்றியை அடைதல் எங்ஙனம்?
அதற்காம் பதிலைப் பலரும் பலவாய் உரைப்பர்.
வெற்றி அடைதற்காம் நிச்சய வழியொன்றை,
நம் தமிழ்ச் சான்றோர் இனங்காட்டினர்.
அறவழி நடத்தலே வெற்றிக்காம் நிச்சய வழியென்பதே,
அவர்தம் முடிந்த முடிபு.
அறம் வழுவிய எந்த முயற்சியும்,
வெற்றியை நல்குவதுபோல் தோற்றி,
முடிவில் தோல்வியினையே நல்குமாம்.
எத்துணை ஆற்றல் கொண்டிருப்பினும்,
அறவழி நில்லார், தோல்வியையே அடைவார்.
தமிழ்ப் புலவோர் அனைவராலும் ஏற்கப்பட்ட இக் கருத்தினை,
நம் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் தன் காவியத்தில் வழிமொழிகிறார்.
சுந்தரகாண்டத்தில் அறிமுகமாகும் இலங்கையின் காவற் தெய்வமான,
இலங்கினியை “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” எனப் பேச வைத்து
அறம் வழுவியும் வெற்றி எய்தலாம் என நினைக்கும் மானுடர்க்கு,
அறத்தின் வலிமையை உரைத்து ஆட்கொள்ள நினைத்த கம்பர்.
யுத்தகாண்டத்தில் மீளவும் அக்கருத்தினை
இராமனின் வாயிலாக வலியுறுத்துகிறார்.
இராம - இராவண யுத்தம்.
முதல் நாள் போரில் தன் வலியெலாம் இழந்து,
தலைகவிழ்ந்து வெறுங்கையனாய் நிற்கிறான் இராவணன்.
வாரணம் பொருத மார்பு, வரையினை எடுத்த தோள்,
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா,
தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள்,
முக்கோடி வாழ்நாள், முயன்றுடைய பெருந்தவம்,
முதல்வன், எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரம்,
ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலி என்பவற்றோடு,
இந்திரர்க்கு இந்திரனாகவும், எழுதவொணாச் சுந்தரனாகவும்,
பெருமையுற வாழ்ந்த இராவணன், தன் சிறப்பெல்லாம் இழந்து,
இராமன் முன் நாணி விரலால் நிலம் கீறி நிற்கின்றான்.
இராவணனின் இவ் இழிநிலையைக் குறிக்கும் பாடலில்,
அவன் தோல்விக்காம் காரணம் உரைக்கும் கம்பர்,
அறம் கடந்ததால் வந்த அவலம் இஃது என்று,
உறுதி பட வலியுறுத்துகிறார்.
“அறம் கடந்தவர் செயல் இது என்று, உலகெலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன்,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன்”
தொடரும் இராம இராவண உரையாடலிலும்,
கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது.
இராவணனை வென்று நிற்கும் இராமன்.
அவ் வெற்றிக்கு, தன் வலிமையே காரணம் என்று கூறாது,
அறம் கடந்த இராவணனின் செயலே, அதற்காம் காரணம் என்கின்றான்.
“தேவர்களேயானாலும் அறமின்றி வெற்றி பெறுதல் முடியாது” என,
இராமனை உரைக்க வைத்து, மேற் கருத்தை உறுதிப்படுத்துகிறார் கம்பர்.
“அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிதென்பது மனத்திடை வலித்தி
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும் பாவி!
இறத்தி யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி,”
அறமே வெற்றியின் அடிப்படை எனின்,
அறம் எனப்படுவது யாது?- கேள்வி பிறக்கிறது.
அக் கேள்விக்குப் பலரும் பலவாய் விளக்கம் அளிப்பர்.
நுனித்து நோக்கின், அறம் எனப்படுவது இயற்கை ஒழுங்கேயாம்.
இதுவே மேற் கேள்விக்காம் உண்மைப் பதிலாம்.
இவ்வுலகிலுள்ள ஒவ்வோர் பொருளுக்கும் ஓர் இயற்கை ஒழுக்குண்டு.
அவ்வொழுக்கோடு பொருந்தும்படி ஒழுகின், அப்பொருள் வாழும்!
அவ்வொழுக்கினின்றும் மாறுபட ஒழுகின், அப்பொருள் வீழும்!
இயற்கையை இறையின் அங்கமாய் ஆன்றோர் உரைப்பர்.
அது கொண்டு நோக்க, இயற்கையும் இறைக்கூறே என நாம் அறிதல் கூடும்.
இயற்கை இறைக்கூறெனின், அறமும் இறைக்கூறேயாம்.
அஃது உணர அறத்திற்கும் இறைச்சக்தி உண்டென்பது புலனாகும்.
அறமும் இறைவனைப் போலவே முதலும் முடிவும் அற்றதாம்.
ஆண்டவனை மட்டுமன்றி அறத்தினையும் முற்ற உணர்தல் அருமையே.
ஒன்றினரால் மட்டும் உணரப்படும் தன்மை,
ஆண்டவர்க்கும் உளது, அறத்துக்கும் உளது.
நாம் கற்றறியும் இறை வேறு, உற்றுணரும் இறை வேறு.
அதுபோலவே கற்றறியும் அறம் வேறு, உற்றுணரும் அறம் வேறாம்.
இஃது ஆண்டவர்க்கும் அறத்துக்குமான பொது இயல்பென்பர்.
வாலறிவனை நூலறிவால் உணர்தல் ஆகாது,
எனினும், வார்த்தையும் மனமுங் கடந்த அவ் இறையை,
அவற்றுக்குள் உட்படுத்தி உரைத்தல் ஆன்றோர் மரபு.
உணராப் பொருளை உரைத்தல் எங்ஙனம்?
கேள்வி பிறக்கும்.
உரை கடந்த பொருளே இறை என்று உணரினும்,
பக்குவம் இல்லாதாரும் பற்றுதற் பொருட்டு,
எல்லையற்ற இறையினை எல்லைப்படுத்தி,
நூல்களால் உரைத்தனர் எம் ஞானியர்.
அவர்கள் வகுத்த உரைகள்
இறைவனை எல்லைப்படுத்துவதாய் எண்ணி, மயங்குவோர் பலர்.
அந் நூல்கள் தரும் செய்திகள் இறையினை எல்லைப்படுத்தா.
இறைவனால் உரைக்கப்பட்ட வேதங்களே,
அவ் இறைவனின் பரிமாணம் காண முடியாது,
ஓலமிட்டு அரற்றுவதாய் மணிவாசகர் உரைப்பர்.
“வேதங்கள் ஐயா! என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே”,
நூல்களுள் எல்லைப்படாத அவ் இறையின் இயல்பை,
“நூல் அறிவு உணரா நுண்ணியோன் காண்க” என,
அதே வாசகத்தில் மீளவும் வலியுறுத்துகிறார் வாசகனார்.
அதுவே உண்மையாயின் நம் ஆன்றோர்கள்,
எல்லையற்ற அவ் இறையை எல்லைப்படுத்தி உரைத்தது எதனால்?
அங்ஙனம் உரைத்தல் பொய்மையன்றோ?
மெய்யுணர்ந்தோர் பொய்யுரைப்பாரா?- கேள்விகள் பிறக்கும்.
“இல்லை!” என்பதே பதிலாகிறது.
ஆராய, அவர்தம் செயலுக்காம் காரணம் தெரிய வருகிறது.
இறையோ எல்லையற்ற பொருள், நம் அறிவோ எல்லைக்குட்பட்டது.
எல்லைக்குட்பட்ட நம் அறிவால்,
எல்லைக்குட்படாத இறைவனை அறிதல் இயலாதாம்.
நூல் உரைக்கும் இறைநிலை, இறையின் உண்மைநிலை அன்று.
அஃது இறையை உணர்தற்காம் உபாய நிலையே.
அவ் உபாய நிலையை உண்மை நிலையாய் நம்பி ஒருமுகப்பட்டால்,
இறையின் உண்மைநிலை தானே உணரப்படுமாம்.
அங்ஙனமாயின் நூல்களால் நம் ஆன்றோர் உரைத்த,
இறையின் அவ் உபாயநிலை பொய்யோ எனின் பொய்யன்றாம்.
அஃது இறையின் உண்மை நிலையின் குறுகிய விளக்கமே.
உபாயநிலையில் நாம் பெற்ற இறைவிளக்கம், விரிவுற்று விரிவுற்று,
இறையின் உண்மை நிலையை நமக்குத் தரிசனப்படுத்துமாம்.
விரிந்த இறையை உணர விழைவார்க்கு,
அதனது உபாயநிலையை விளக்க ஒரு குருவும்,
உண்மை நிலையை விளக்க மற்றொரு குருவும் தேவையாம்.
இவ்விரு நெறிகளையும்,
ஒரே குருவானவர் உணர்த்துதல் ஆகாதோ? எனில், ஆகாதாம்!
உபாயத்தை உண்மை என உரைத்து விட்டு,
பின்னர் உண்மை வேறு, உபாயம் வேறு என ஒரே குரு உரைப்பின்,
முன்பின் முரணான அக் கூற்றுகளால், கேட்போர் தடுமாற்றம் அடைவர்.
ஆசிரியர் மாணவரால் ஐயுறப்படுவர்.
அதனாற்றான்,
இறையின் உபாய நெறியை ஒரு குரு உரைக்க,
உண்மை நெறியை மற்றொரு குரு விளக்கம் செய்வது,
சமய மரபாயிற்று.- தீட்சை நிலை பலவாயிற்று.
உபாய நிலைக்காம் குரு உரைத்த விளக்கத்தினை,
உண்மை நிலைக்காம் குரு விரிவு செய்வார்.
இறை உணரும் நெறியில் பேணப்படும் இம் மரபே.
அறம் உணரும் நெறியிலும் பேணப்படுகிறது.
நூல்களால் உரைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட்ட அறத்தினை,
மாணவர்க்கு ஒரு குரு விளக்கம் செய்ய, மற்றொரு குரு,
அவ்வறத்தின் எல்லையற்ற விரிவினை அவர்க்கு உணர்த்துவார்.
எல்லைப்பட்ட அறம், நீதியென்று உரைக்கப்படும்.
எல்லையற்ற அறம், தர்மம் என்று உரைக்கப்படுமாம்.
சில வேளைகளில் அந்தத் தர்மத்தினை,
அறம் என்ற சொல்லாலும் நூல்கள் குறிக்கும்.
அஃது உபசார வழக்காம்.
அரசாள்வார் முதலில் அறம் உணர்ந்து ஆட்சி புரிதல் வேண்டும்.
பின்னர் அவ் அறத்தின் எல்லையைக் கடந்து,
அறத்தின் விரிவான தர்மத்தினை உணர்தல் வேண்டும்.
அங்ஙனம் தர்மத்தினை உணர்ந்த அரசியலாளர்களே,
வரலாற்றுப் புகழ்கொண்ட அரசர்களாய்த் திகழ்ந்தனராம்.
மனுநீதிகண்ட சோழன், தர்மத்தை உணர்ந்து புகழ்கொண்ட,
அரசர்க்காம் உதாரணன்.
அறத்திற்கும் தர்மத்திற்குமான இவ் வேறுபாட்டையும்,
இவ்விரண்டினையும் ஒருவருக்கு உணர்த்த,
இரண்டு குருமார்கள் தேவையென்பதனையும்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் நமக்குக் குறிப்பால் உணர்த்துகிறார்.
அது காண்பாம்.
இராமகாதையில்,
பாலராமனுக்கு உபாய நிலை அறத்தினை வசிட்டர் உரைக்க,
பின்னர் இளைஞனான இராமனுக்கு உண்மை நிலை அறத்தை
விசுவாமித்திரர் உணர்த்துவதாகக் கம்பர் உரைப்பது,
ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாம்.
முன்னர், அறத்தின் உபாய நெறியைக் கற்றார்க்கு,
அறத்தின் உண்மைநெறி, பொய்மையாய்த் தோன்றும்.
அஃதன்றி, அவ் உண்மைஅறம் உரைத்தாரையும்,
அவர்கள் ஐயுறத் தலைப்படுவர்.
இக் குழப்ப நிலையை இராமனும் எய்துகிறான்.
வசிட்டர் உரைத்த அறத்திற்கும்,
விசுவாமித்திரர் உரைத்த அறத்திற்கும் இடையில்,
முரண்பாடு இருப்பதாய்க் கருதி முதலில் தடுமாறும் இராமன்,
பின்னர் அறத்தின் விரிவான தர்மத்தினை விசுவாமித்திரர் உணர்த்த,
அந்தத் தர்மத்தினுள் வசிட்டர் உரைத்த அறம் உட்பட்டிருப்பதை உணர்ந்து,
வியப்பெய்துகிறான்.
அந்த வியப்பினால்,
அறத்தின் விரிவுணர்த்திய விசுவாமித்திரரைப் போற்றி,
“இனி, தாங்கள் சொல்பவை யாவற்றையும் அறமெனவே கொள்வேன்” என,
அவரிடம் சரணாகதி அடைகிறான்.
வசிட்டர், விசுவாமித்திரர் என்கிற இரண்டு ஆசிரியர்கள் மூலம்,
இராமனுக்கு அறத்தை உரைக்கச் செய்தும், உணரச் செய்தும்,
அறத்தின் உபாய நிலை, உண்மை நிலை என்கின்ற,
இரண்டு நெறிகளையும் கம்பர் காட்டும் திறன் இரசிக்கத் தக்கது.
அது காண்பாம்.
(மிகுதி அடுத்தவாரம் தொடரும்)