எறிகணை 35

எறிகணை 35
எறிகணை 05 Jun 2026

கேள்வி :

மீண்டும் அர்ச்சுனா உங்களைத் திட்டித் தீர்த்திருக்கிறார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

அணையப்போகிற விளக்கு அசைந்து ஆடி அதிகம் எரியுமாம். அர்ச்சுனாவும் அளவுக்கதிகமாய் ஆடத் தொடங்கியிருக்கிறார். என்னாகப் போகிறதோ?

என்னை அவர் திட்டியிருப்பது பற்றியா கேட்டீர்கள்? “பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பண்ணப்பெறுபவோ?” என்ற கம்பனின் வரிகள்தான் உங்கள் கேள்விக்கான எனது பதில்.

 

கேள்வி :

தமிழகத்தில் உங்களது அன்பர்களால் நடத்தப்பட்ட பாதபூஜை சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது. வாழையிலையில் ஏறி நிற்கக்கூடாதென்றும், பாதத்தில் விபூதி பூசக்கூடாதென்றும் சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

பதில் :

சிலருக்கு வாழையிலைமீதும் விபூதிமீதும் திடீரென ஏற்பட்டிருக்கும் அக்கறையைக் காண “சிரிப்புத்தான் வருகுதையா!” என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. விட்டுத்தள்ளுங்கள்.

 

கேள்வி :

பந்திகளில் சாப்பிடும்போது எச்சில் கைகளால் வாழையிலையை நக்கி, நக்கி உண்கிறார்கள். அதன்பின் அந்த இலையைக் குப்பைத்தொட்டிகளில் எறிகிறார்கள். அல்லது நாய்களுக்குப் போடுகிறார்கள். வாழையிலையின் புனிதம் கருதி அந்த எச்சில் இலையை இவர்கள் யாரும் பத்திரமாய்ப் பேணுவதில்லை. அங்ஙனம் செய்கையில் வாழையிலையின் தூய்மை பற்றிக் கவலைப்படாதவர்கள் இப்போது உங்களது பாதபூசையால் மட்டும் வாழையிலைக்கு மாசு ஏற்பட்டுவிட்டதாய்க் கூறுவது எப்படி நியாயமாகும்? இதையாரும் கேட்கமாட்டார்களா?

பதில் :

முதலில் உங்களுக்கு என் நன்றிகள். வேறுயாரும் ஏன் கேட்கவேண்டும்? நீங்கள்தான் தெளிவாகக் கேட்டுவிட்டீர்களே. முடிந்தால் இந்த வாழையிலைக் கட்சிக்காரர்கள் உங்களது கேள்விகளுக்குப் பதில் உரைக்கட்டும்.

 

கேள்வி :

சிலர் பாதங்களில் விபூதி பூசுவது குற்றம் என்கிறார்களே. உண்மையா?

பதில் :

சைவ ஆகமங்கள் விபூதி தரித்தல் பற்றி விவரிக்கின்றன. குறிப்பாக, “சுப்ரபேத ஆகமம்” விபூதியை 32 இடங்களில் தரிக்கும் முறையையும் அதனுடன் தொடர்புடைய மந்திரங்களையும் விரிவாக விளக்குகிறது. இதனை “பஸ்மதாரணம்” என்று அழைக்கின்றனர்.

தலை, நெற்றி, இரண்டுகாதுகள், இரண்டுகண்கள், மூக்கு, வாய், கழுத்து, இரண்டுதோள்கள், இரண்டுமுழங்கைகள், இரண்டுமணிக்கட்டுகள், மார்பு, இரண்டுவிலாப்புறங்கள், தொப்புள், இரண்டுஇடுப்புப்பக்கங்கள், பிட்டம், இரண்டுதொடைகள், இரண்டுமுழங்கால்கள், இரண்டுகணுக்கால்கள், இரண்டுபாதங்கள் என்பவையே ஆகமம் கூறும் விபூதி தரிக்கக்கூடிய 32 இடங்களாம்.

இனி இவர்கள் ஆகமவிதியையும் பிழை என்பார்களோ என்னவோ?

 

கேள்வி :

அதென்ன நீங்கள் எதைச் செய்தாலும் குற்றம் சொல்வதற்கென்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது. அது உங்களுக்கு வருத்தமாக இல்லையா?

பதில் :

வருத்தமா? சந்தோஷம்தான்! ஆயிரம் பேர் என்னை ஆதரிக்கிறார்கள்!, மதிக்கிறார்கள்!, போற்றுகிறார்கள்! ஐந்தாறு பேர் மட்டும்தான் என்னைக் குற்றம் சொல்கிறார்கள்.

என்னைப் போற்றுகிறவர்கள் மனதளவில் அப் போற்றுதல்களைச் செய்வார்கள். அவர்களுக்கு அதனை உலகிற்குக் காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனக்கேற்படும் பெருமையைக் குறைக்க நினைத்து, என்னைத் தூற்றுகிறவர்களுக்குத்தான் அப்படி ஒரு தேவை இருக்கிறது. அதனால் அவர்களின் குரல்தான் உலகறிய வெளிப்படுத்தப்படுகிறது.

நல்லவர்கள் பேசுவதில்லை. தீயவர்கள் பேசுகிறார்கள். அதனால் சிறுபான்மையினரான அத்தீயவர்களின் கருத்தே சமூகத்தின் கருத்துப்போல் தோன்றுகிறது.

இந்த உண்மை எனக்குத் தெரிந்தபடியால் இவர்களின் தூற்றுதல் பற்றி நான் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. இத்தகையவர்கள் எதிர்க்க எதிர்க்க நான் வளர்ச்சி அடைகிறேன் என்பதை உணர்ந்து மகிழ்ச்சிதான் உண்டாகிறது.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என்று வள்ளுவர் எப்போதோ சொல்லிவிட்டார். ஒருவரை மற்றவர்களால் உயர்த்தவும் முடியாது, தாழ்த்தவும் முடியாது. அவரவர் உயர்வும், தாழ்வும் அவரவர் செயல்களிலேயே தங்கியிருக்கிறது. மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொறாமையால் துடிக்கும் சிலருக்கு ஏனோ இவ் உண்மை தெரிவதில்;லை.

ஒருவர் உடுப்பதைக் கண்டும் உண்பதைக் கண்டும் கூட கீழ்மக்கள்,  மற்றவர்கள்மேல் பகைகொள்வார்கள் என்கிறார் வள்ளுவர். (“உடுப்பதும் உண்பதும் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ்”) அதைப் படித்திருப்பதால் எனக்கு இத்தகையவர்களின் தூற்றுதல்கள் வருத்தம் தருவதில்லை.

 

கேள்வி :

தமிழ் நாட்டில் உங்களுக்கு நடந்த பாதபூசையைக் கண்டு, பாதபூசை செய்வதென்பது பெரும்குற்றம் என்றும், அடிமைத்தனம் என்றும், பிழையான பழக்கம் என்றும் பண்பாட்டுக் குறைவென்றும் சிலர் கூக்குரல் இடத் தொடங்கியிருக்கிறார்களே?

பதில் :

அதற்குக் காரணம், தங்களுக்கு யாரும் அப்படி செய்ய முன்வருவதில்லை என்ற கவலையாகவும் இருக்கலாம்.

உண்மையில் இக்கேள்விக்குப் பதில்சொல்லி, இவ் அறிவீனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நான் விரும்பவில்லை. ஆனாலும் இத்தகையவர்களின் பிழையான கருத்துக்கள் நம் இளையோரைக் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக இதுபற்றிக் கொஞ்சம் சொல்ல முனைகிறேன்.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கிறார் திருவள்ளுவர். பணிவதைப் பண்பாட்டுக்குறைவு என்கிறார்கள் இவர்கள். இங்ஙனம் உரைக்கும் இவ்வறிவீனர்களை நான் என்ன செய்யட்டும்?

இளையான்குடிமாற நாயனார், அடியார்களை இல்லத்திற்கு அழைத்து வந்து, அவர்களுடைய பாதங்களைக் கழுவி, தக்க ஆசனத்தில் அமர்த்திப் பாதபூசை செய்ததாய், பெரியபுராணம் கூறுகிறது.

“கொண்டு வந்து மனைபுகுந்து குலாவு பாதம் துலக்கியே

மண்டுகாதலின் ஆதனத்திடை வைத்த அர்ச்சனை செய்தபின்

உண்டிநான்கு வகையில் ஆறு சுவைதிறத்தில் ஒப்பிலா

அண்டர்நாயகர் தொண்டராம். என அமுது செய்து அருளினார்”

 

இச் செய்தியை அறிந்தால் இச் சிறுமதியாளர்கள், சேக்கிழாருக்கும் பண்பாடு தெரியவில்லை. அவரும் அடிமைத்தனத்தை வளர்க்கிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். இங்ஙனம் உரைக்கும் இவ்வறிவீனர்களை நான் என்ன செய்யட்டும்?

மேற்படி கூக்குரல்கள் இடுவோர் நம் மண்ணில்த்தான் வாழ்கிறார்களா? என்று ஐயம் ஏற்படுகிறது. ஆலயங்களில் உற்சவகாலத்தில் அந்தணர்களுக்கு நாம் பாதபூசை செய்வதும், நமது இல்லத் திருமணங்களில் மணமக்கள் தமது பெற்றோர்க்குப் பாதபூசை செய்வதும், வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்குக் கால் கழுவி மாப்பிளைத்தோழன் மோதிரம் வாங்குவதும், யாழ்ப்பாணம் முழுவதிலும் இன்றும் நடந்து வருகிறது. இவையெல்லாம் அடிமைத்தனமும பண்பாட்டுக் குறைவும் ஆகுமா? இங்ஙனம் உரைக்கும் இவ்வறிவீனர்களை நான் என்ன செய்யட்டும்?

நமது சமயத்தில்  என்றுமட்டுமில்லை. கிறிஸ்தவ மதத்தில் கூட இவ்வழக்கம் இன்றும் இருக்கிறது. இயேசுநாதர் தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி பணிவின் மாண்பை உலகிற்கு உணர்த்தியதாக “பைபிள்” கூறுகிறது.

இந்நிகழ்வை நினைவு கூறுமுகமாக, ஆண்டுதோறும் பெரிய வியாழனன்று  ‘வத்திக்கானில்’  போப்பாண்டவர் 12 நபர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதனையும் இவர்கள் அடிமைத்தனம் என்று சொன்னாலும் சொல்வார்கள். இங்ஙனம் உரைக்கும் இவ்வறிவீனர்களை நான் என்ன செய்யட்டும்?

சிங்களமக்கள் தமது பெற்றோர், மூத்தோர், ஆசிரியர்கள், சமயப்பெரியார்கள் போன்றவர்களை எங்கு கண்டாலும், பணிந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் இதை அடிமைத்தனமாகக் கொள்வதில்லை. அதனால்த்தான் அந்த இனம் வாழ்கிறது. அவர்களின் அந்தப் பண்பினையும் இவர்கள் அடிமைத்தனத்தின் அம்சமாய்ச் சொன்னாலும் சொல்வார்கள். இங்ஙனம் உரைக்கும் இவ்வறிவீனர்களை நான் என்ன செய்யட்டும்?

பாரம்பரியமிக்க நமது தமிழினத்திற்கு என்ன கஷ்டகாலம் வந்ததோ தெரியவில்லை? வரவர இங்கு முட்டாள்கள்தான் உபதேசிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் கெட்டது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கெடுக்க முனைகிறார்கள்.

இவர்களுக்கு நல்லவையெல்லாம் தீயவையாகவும், தீயவை எல்லாம் நல்லவையாகவும், ஒழுக்கமெல்லாம் ஒழுக்கயீனமாகவும், ஒழுக்கயீனமெல்லாம் ஒழுக்கமாகவும் தெரியத் தொடங்கியிருக்கிறது.

தம்முடைய பலயீனங்களுக்கு இந்தத் தீய உபதேசங்கள் உதவும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல. வேறென்னத்தைச் சொல்ல? இங்ஙனம் உரைக்கும் இவ்வறிவீனர்களை நான் என்ன செய்யட்டும்?

எங்களது கம்பன்கழகம் தொடங்கிய காலம் தொட்டு ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையன்று யாராவது ஒரு பெரியவருக்குப் பாதபூஜை செய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் கம்பன்விழாவின்போது நாம் நடத்தும் ஊர்வலத்தின் முடிவில், கலந்து கொண்ட பெரியவர்களின் பாதங்களைக் கழுவி மரியாதை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

இந்நிகழ்வின் பதிவுகள் பலதரம் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. அப்போதெல்லாம் எதுவும் பேசாத இவர்கள், இப்போது எனக்கு நடந்த பாதபூஜையைக் கண்டு ஏனோ கடுமையாய்க் கொதிக்கிறார்கள்.

இவர்களுக்குப் பாதபூஜையல்ல பிரச்சினை. தங்களது பலயீனங்களுக்குப் ‘பந்தி’ வைக்க மறுக்கும் நான்தான் பிரச்சினை. அதனாற்றான் இத்தனை கூக்குரல்களும். விடுங்கள்! இப்படிக் கூக்குரலிட்டாவது அவர்கள் தங்கள் வயிற்றெரிச்சலைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளட்டும்.

 

கேள்வி :

விஜய் பற்றிய கேள்விக்கான உங்கள் பதிலை “துக்ளக்” பத்திரிகை மறுபிரசுரம் செய்திருப்பது பற்றி அறிந்தீர்களா?

பதில் :

அப்படியா?

 

கேள்வி :

தங்களுக்கு நடந்த பாத பூஜைப்படத்தை AI மூலம் அசிங்கப்படுத்திக் கொச்சையாய் விமர்சித்திருப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

கருவில் பிழை என்பதைவிட வேறு என்ன நினைக்கலாம்?

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.