கம்ப அறம் 5
உயர்ந்த மாமுனிவரான வசிட்டரிடத்தில்,
இராமனும், தம்பியரும் நூற்கல்வியைப் பயில்கின்றனர்.
நூல்களால் ஓதப்படும் எல்லைப்பட்ட நீதியாகிய,
உபாய அறங்கள் முழுவதினையும் கற்றுத் தேர்கிறான் இராமன்.
நீதி, கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்ப மாறுபடும்.
அறமோ எனில், அஃது எங்கும், என்றும் எவர்க்கும் பொதுவாம்.
அறம் உணர்ந்தவரால்த்தான் நீதியை நேர்ப்பட நிலைநிறுத்தல் கூடும்.
அறத்தின் பெருமையை உணர்ந்தாலன்றி நீதியை நிலைநிறுத்தல் அரிதாம்.
அறத்தின் நாயகனாய், தான் அமைத்த இராமன்,
நீதியை முற்றக் கற்றதோடு நில்லாமல்,
அறத்தையும் உணர்தல் அவசியம் எனக் கருதுகிறார் கம்பர்.
நீதியுரைத்த வசிட்டரே அறத்தை உணர்த்துதல் ஆகாதென்று,
மரபில் ஊறிய அவரது அறிவு சொல்கிறது.
அதனால், புதியதொரு குருவைக் கொண்டு,
இராமனுக்கு அறத்தின் விரிவுணர்த்தக் கருதி,
விசுவாமித்திரரைக் கதைக்குள் நுழைக்கின்றார் அவர்.
தசரதனின் அவை.
மந்திரி பிரதானிகளுடன் மன்னன் மகிழ்ச்சியுடன் இருக்க,
திடீரென விசுவாமித்திரர் தோன்றுகிறார்.
சத்திரியராய்த் தோன்றி அந்தணராய் உயர்ந்த அருந்தவத்தோர் அவர்.
திரிசங்கு மன்னனுக்காகப் புது உலகை அமைத்துப் புரட்சி செய்தவர்.
அவரது ஆற்றல் அறிந்து அடிபணிகிறான் தசரதன்.
முனிவரை வலம் செய்து வணங்கி,
‘உங்கள் வருகை எங்கள் குலம் செய்த தவம்’ எனக் கூறி,
அவரை மகிழ்விக்கின்றான் தசரதன்.
பின்னர் மீண்டும் விசுவாமித்திரரைப் பணிந்து,
‘நான் செய்யக்கடவது யாது?’ எனத் தசரதன் கேட்க,
‘என் யாகம் காக்க இராமனைத் தா!’ என்றுரைக்கிறார் முனிவர்.
“தரு வனத்துள் யான் இயற்றும்
தகைவேள்விக்கு இடையூறாய்த் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளியென
நிருதர் இடை விலக்கா வண்ணஞ்
செரு முகத்துக் காத்தி என
நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்தீதி என உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.”
விசுவாமித்திரருடைய வேண்டுதல் தசரதனை அதிரச் செய்கிறது.
தான் உயிரினும் மேலாய் நேசிக்கும் இராமனை,
முனிவரின் வேள்வி காக்க அனுப்ப அஞ்சுகிறது அவன் மனம்.
ஏதும் செய்ய முடியாமல் தவிக்கிறான் தசரதன்.
“எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல்
மருமத்துள் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில் அனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும்
உண்ணிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசலாட
கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்
கடுந்துயரம் கால வேலான்”
மைந்தனுக்குப் பதிலாய் தான் உடன் வருவதாய் அவன் கெஞ்ச,
அவன் உரைத்த மாற்றத்தினை ஏற்க மறுத்து,
கோபங்கொள்கிறார் கோமுனி.
அக்கோபத்தால் விரைந்து அவர் வெளியேறத் தலைப்பட,
அனைவரும் அதிர்கின்றனர்.
தனது ஒரு வார்த்தையால் அரக்கர்களை அழிக்கவல்ல விசுவாமித்திரர்,
எளியராய் வந்து இரந்து நிற்பதன் காரணம் அறிந்து எழுந்த வசிட்டர்,
இராமனை விசுவாமித்திரரிடம் ஒப்படைக்கும்படி தசரதனுக்கு உரைக்கின்றார்.
மாரியால் உருவாகும் சிறு ஆறு,
கடலிற் கலந்து பெருமை கொள்வதைப் போல,
விசுவாமித்திரரின் சேர்க்கையால் இராமனின் பெருமை,
மேலும் உயரப்போவதைத் தசரதனுக்கு எடுத்துரைத்து,
முனிவருடன் இராம இலக்குவரை அனுப்பி வைக்குமாறு,
வசிட்டர் உரைக்கிறார்.
“பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்
ஐய! நின்மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது ஆம் என்றான்.”
ஆறு எல்லைக்குட்பட்டது. கடலோ எல்லை கடந்தது.
இரண்டும் நீரே எனினும்,
எல்லை கடந்த பெருமை கடலின் தனித்துவமாம்.
கடலுள் ஆறு அடங்கும். ஆற்றுள் கடல் அடங்காது.
இவ் உவமையின் விரிவுகளைச் சிந்திக்க,
நீதிக்கும், அறத்திற்குமான தொடர்பு,
நமக்குத் தெற்றென விளக்கமுறுகிறது.
தன்னிடம் இராமன் கற்ற நீதியை, எல்லைக்குட்பட்ட நதியாகவும்,
விசுவாமித்திரரிடம் இராமன் பெறப்போகும் அற அறிவை,
விரிந்த கடலாகவும் உவமித்து,
தன்னிடம் உபாய நெறியைக் கற்ற இராமனுக்கு,
உண்மை நெறியை உணர்த்தவே விசுவாமித்திரர் வந்திருக்கிறார் என்பதை,
இவ் உவமைமூலம் தசரதனுக்கு மறைமுகமாய் உணர்த்துகிறார் வசிட்டர்.
எல்லையற்றதான அறத்தின் உண்மை நிலையை,
இராமன் பெறப்போகிறான் என்பதை, வசிட்டர் கூறும்,
“ஐய நின் மகற்கு அளவில் விஞ்சைவந்து
எய்து காலம் இன்று” என்ற வார்த்தைகளால்,
நாம் உணர்ந்து கொள்கிறோம்.
(விஞ்சை – வித்தை)
வசிட்டரின் வார்த்தைகளால் உறுதி பெற்ற தசரதன்.
இராம இலக்குவரை விசுவாமித்திரரோடு அனுப்புகிறான்.
முனிவருடன் சென்ற இராமன்,
நீதிக்கும், அறத்திற்குமான வேறுபாட்டை அறியும் காட்சியை,
தொடர்ந்து அற்புதமாய் அமைத்துக் காட்டுகிறார் கம்பர்.
அக் காட்சி காண்பாம்.
விசுவாமித்திரருடன் காடேகும் இராம இலக்குவர்கள்,
சரயு நதியைக் கண்டும், காமன் ஆச்சிரமத்தின் சிறப்பினைக் கேட்டும்,
செல்லும் வழியில், பாலை நிலமொன்றைக் காண்கின்றனர்.
“இப் பாலை தோன்றக் காரணம் யாது?” என வினவிய இராமனுக்கு,
தாடகையின் கொடுமையினையும், வரலாற்றினையும்,
எடுத்துரைக்கின்றார் விசுவாமித்திரர்.
அதுகேட்டு, ‘எங்குளாள் தாடகை?’ என
இராமன் வினவும் போதே, நிலம் அதிர்கிறது.
கொதித்துக் கோபத்தோடு வருகிறாள் அக் கொடிய தாடகை.
“கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகத்திடை அடைந்த முனி, ஐய!
இவ்வரை இருப்பது அவள்’ என்பதினின் முன்பு? ஓர்
மைவரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள்”
தம்மைக் கொல்லும் நோக்குடன் வரும் அவளை,
‘கொல்!’ என முனிவர் உரைக்க,
இராமன் மனதில் போராட்டம் தொடங்குகிறது.
மாதரையும், தூதரையும் கொல்லுதல் மாண்பன்று என,
நீதிநூல் உரைத்த வசிட்டரின் வார்த்தைகள்,
இராமனின் மனதில் ஒலிக்கின்றன.
‘பெண்ணைக் கொல்லாதே!’ என்றார் வசிட்டர்.
பெண்ணான தாடகையைக் ‘கொல்!’ என்கிறார் விசுவாமித்திரர்.
கற்றதும், உற்றதும் மாறுபடக் கலங்குகிறான் இராமன்.
நிண மலையாய் ஓடிவரும் தாடகையை நிமிர்ந்து பார்க்கிறான் அவன்.
பேய்போல வரும் அவளும் பெண் அன்றோ என,
இராமனின் மனம் நினைக்கிறது.
‘கொல்!’ என முனிவர் உரைக்கவும்,
வில்லைத் தொடாது வெறுமனே நிற்கிறான் இராமன்.
“அண்ணல் முனிவர்க்கு அது கருத்து எனினும், ஆவி
உண்! என, வடிக்கணை தொடுக்கிலன் உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கி யுளளேனும்
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்”.
தனது கட்டளையை ஏற்காது நின்ற இராமனை நோக்கி,
‘நான் சொன்னதைச் செய்யாது நிற்கும் நினது செயல் அறனன்று’
என வருந்தி உரைக்கிறார் விசுவாமித்திரர்.
“ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை
கோறி என்றெதிர் அந்தணன் கூறினான்.”
தான் கற்ற நூற்கல்வியை,
வழுவாது பற்றி நின்ற இராமனை நோக்கி,
‘நின் செயல் அறன் அன்று’ என,
விசுவாமித்திரர் விளம்பலாமா?
கற்றலின்படி நிற்றல் தவறன்றே!
அங்ஙனம் இருக்க, இராமன் செயலை அறனன்று என,
விசுவாமித்திரர் உரைத்தது எங்ஙனம் சரியாகும்?
கேள்வி எழும்.
அஃதுணர்ந்த கம்பர்,
இச் செய்தியைச் சொல்லும் கவிதையில்,
ஓர் அற்புதமான நுட்பத்தை அமைக்கின்றார்.
உண்மை அறமான தர்மத்தை நோக்க,
தாடகை மேல் அம்புபோடாத இராமனின் செயல் தவறாகின்றது.
உபாய அறமான நீதியை நோக்க அச்செயலே சரியாகின்றது.
கற்றதன்படி நின்ற இராமனைப் பாராட்டவும் வேண்டும்.
தன் உரை கேளாத இராமனைக் கண்டிக்கவும் வேண்டும்.
விசுவாமித்திரர் உரைக்கும் வார்த்தைகளில்,
இவ்விரு கருத்தும் வெளிப்படுமாறு கவிதையாக்கி,
வித்தகம் செய்கிறார் நம் கம்பநாடர்.
விசுவாமித்திரர் சொன்னதான,
‘ஆறிநின்றது அறனன்று’ எனும் தொடரை
ஆறி நின்றது அறன் அன்று எனவும்,
ஆறி நின்றது அறன் நன்று எனவும்,
இருவகையாய்ப் பிரித்துப் பொருள் கொள்ளல் கூடும்.
அங்ஙனமாய் வெவ்வேறாய்ப் பிரித்துப் பொருள் கொள்ள,
இராமன் மீதான விசுவாமித்திரனின் கண்டிப்பும், பாராட்டும்,
அவ் ஒரே வரியில் ஒருமித்து வெளிப்படும் உண்மை கண்டு,
வியந்து நிற்கிறோம் நாம்.
விசுவாமித்திரருக்கு இராமனின் மனநிலை புரிகிறது.
பெண்ணைக் கொல்லுதல் குற்றமெனக் கற்றிருந்த அவன் அறிவு,
பெண்வடிவில் நிற்கும் தாடகையைக் கொல்ல மறுத்து நிற்பதை,
உய்த்துணர்ந்து கொள்ளும் அவர்.
தாடகை பெண் அல்லள் என்பதற்காம் காரணங்களை,
வரிசைப்படுத்தி இராமனுக்கு உரைக்கத் தொடங்குகிறார்.
“மன்னும் பல்லுயிர் வாரித்தன் வாய்ப்பெய்து
தின்னும் புன்மையில் தீமையெதோ ஐய!
பின்னுந் தாழ் குழல் பேதைமைப் பெண்ணிவள்
என்னுந் தன்மை எளிமையின் பாலதே
அப்போதும், இராமன் மனம் தெளிவடையவில்லை.
அம்பெடுக்காது அப்படியே அவன் நிற்கிறான்.
நீதிநெறி நிற்க விரும்பும் இராமன்,
அறமுணராது தடுமாறுவதை உணர்கிறார் விசுவாமித்திரர்.
நூலுரைத்த நீதியை விரித்து,
அதனை உண்மை அறத்துடன் ஒன்றாக்கி,
இராமனின் அற அறிவை விரிவிக்கத் தொடங்குகிறார் அவர்.
‘இராமா! பெண்ணைக் கொல்லாதே! என வசிட்டர் உரைத்ததால்,
பெண்வடிவினளான தாடகையைக் கொல்ல முடியாது நீ தடுமாறுகிறாய்.
பெண்ணைக் கொல்லாதே என்று வசிட்டர் சொன்னது சரிதான்.
பெண்மை எனும் பண்புடையாளே பெண்ணாவாள்.
பெண்மை என்பது குணம்.- பெண் வடிவென்பது குணி.
குணமின்றேல் குணி அப்பெயர் கொள்ளாது.
இவள் வடிவால் பெண் எனினும்,
குணத்தால் ஆண் தன்மை கொண்டு நிற்கிறாள்.
அத்தகைய வன்மை பெற்ற இவள்,
பெண்வடிவிலிருப்பினும் ஆணே’ என்கிறார் அவர்.
“நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை
ஆண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமால்,
ஆண்மை என்னும் அது ஆர் வசத் தாகுமே?”
‘இராமா! இவ்வுண்மையை நீ உணரின்,
எனது கட்டளை வசிட்டரின் வார்த்தைக்கு மாறில்லை எனும்
தன்மை உணர்வாய்’ என்றுரைத்த விசுவாமித்திரர்,
‘இனியும் இவளை நீ பெண்ணென நினைத்தால்,
அஃது பேதமையாகும்’ என்கிறார்.
இப்போதும் இராமன் தெளிவு பெற்றான் அல்லன்.
நட்பு, பகை என்பவற்றின் சார்பால் விருப்பு, வெறுப்புக் கொள்ளும்,
உலகியல்பைக் கண்டிருந்த இராமனுக்கு,
தாடகையைக் கொல்லச் சொல்லும் முனிவர் செயலும்,
பகையின் செயலாய்ப் படுகிறது.
அஃதுணர்ந்த முனிவர் இராமனை நோக்கி,
‘அவளை நான் கொல்லச் சொல்வது பகையால் அன்று’ என,
தெளிவுபட உரைக்கின்றார்.
கருணையோடு இராமனை நோக்கிய முனிவர்,
‘இராமா! நீ உபாய அறமாகிய நீதியையே வசிட்டரிடம் கற்றாய்.
நான் சொல்வது உண்மை அறமாகிய தர்மத்தையாகும்.
எல்லைபடுத்தப்பட்டது உபாய அறம்.
எல்லையற்று விரிந்ததே உண்மை அறம்.
பின்பற்றுவார் தம் அறிவின் விரிவிற்கேற்ப அறமும் விரியுமாம்.
முடிவில்லாத அறத்தின் விரிவை நீ உணர்வாயாக!’ என்று,
உண்மை அறத்தை எடுத்து முனிவர் ஓத,
இராமன் உண்மை அறம் பற்றிய தெளிவினை அறிகிறான்.
ஆறு கடலோடு கலந்து தானும் கடலாகிறது.
“ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியைக்
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான்”.
உண்மை அறத்தின் முழுமை உணர்ந்து திகைக்கின்றான் இராமன்.
தன் அறிவை விரியச் செய்த விசுவாமித்திரனை,
அறத்தின் வடிவமாகவே காண்கிறான்.
‘அறமல்லனவும் நீ சொன்னால் இனி அறமன்றோ’ எனக் கூறி,
அம் முனிவரின் பாதங்களைப் பணிகிறான்.
“ஐயன் அங்கு அது கேட்டு, அறன் அல்லவும்
எய்தினால், அது செய்க! என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு என்றான்.”
மேற்சொன்ன பாடலில்,
‘ஈறில் நல்லறம்’ எனக் கம்பனிடும் தொடர்
அறத்தினது எல்லையற்ற தன்மையினையும்,
அறத்தினது இறை கூறையும் முழுமையாய் வெளிப்படுத்தி,
அறத்திற்காம் அற்புத விளக்கமாய் அமைந்து,
நம்மை வியக்க வைக்கின்றது.