கல்லாய் மனிதராய்! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
அருட்கலசம் 01 Sep 2019
உலக உயிர்களை உய்விக்கப் பிறந்தவர் நம் மணிவாசகர்,
வான் கலந்த வாசகர் தம் பாடல்கள்.
தேன் கலந்த சுவை கொண்டவை.
ஊன் கலந்து உயிர் கலந்து பாடுவார்க்கு,
நான் கலந்த மலம் அறுப்பவை.
ஊழிக்காலத்துத் தனிமை தீர்க்க,
அவ் ஒப்பற்ற இறைவனே
வாசகர் தம் வாசகத்தை வைத்திருப்பானாம்.
திருவாசகப் பெருமையைத் தெளிந்து நாம் அறிவதற்காய்,
உருவான கதை இது.
❖ ❖ ❖
ஆன்ம முதிர்ச்சியால்,
ஆண்டவனே தேடிவந்து அருள் செய்யும் வரம் பெற்ற,
அற்புதர் நம் மணிவாசகர்.
வாசகர்க்கு வரமருளவென,
குருந்தின் கீழ் விருந்தாய் வந்தமர்ந்து,
அவர் தம் தொல்லை இரும் பிறவிச் சூழும் தலை நீக்கி,
அல்லல் அறுத்து ஆனந்தமாக்க,
வேகம் கெடுத்தாண்டு,
முந்தை வினை முழுதும் ஒய,
ஆக்கம் அளவிறிதி இல்லாத,
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடர்,
தாயிற் சிறந்த தயாவான தத்துவன்,
புறம் புறந்திரிந்து நேச அருள் புரிந்து,
ஒளி செய் மானுடன் ஆக நோக்கி,
வாசகர்க்கு வலை விரித்துப் பற்றினான் அப்பற்றிலாப் பரமன்.
உலகுய்ய வாசகரைத் தேடி அருள் செய்து,
உயிர் உருகி அவர் நாடி நிற்கையில்,
ஓடி ஒழிந்தான் அவ் உயர் சிவன்.
வாடி உலகெலாம் தேடி,
விட்டுடுதி கண்டாய் என விம்மி அழுத,
வாசகரின் கழிவிரக்க கதறலே வாசகமாம்.
❖ ❖ ❖
எட்டாந் திருமுறையில் இனிதமர்த்தி,
திருவாசகத்தின் ஞான நிலையை திடம்பெற உரைத்தனர் மேலோர்.
தத்துவம் கடந்த வித்துவம் வாசகத்தின் தனித்துவம்,
அன்பாம் பக்தியில் அறிவு புறம்போம்.
அறிவாம் தத்துவத்தில் அன்பு புறம்போம்.
இது பெரும்பான்மை பற்றிய பொது இயல்பு.
அன்பையும், அறிவையும் கலந்து அதிசயம் செய்தவர் வாசகர்.
பக்தியையும், தத்துவத்தையும் கலந்து பரவசம் தந்தவர் வாசகர்.
அதனால் தான், அறிவுநூல், ஓதும் நூலாயிற்று.
ஒப்பற்ற அவ் உயர் நூலில் வரும்,
ஓரடியில் அறிஞர் சிலர்க்கு ஓர் ஐயம்.
அதனை தெளிவதே இக் கட்டுரையின் நோக்கமாம்!
❖ ❖ ❖
திருவாசக நூலில் முதன்மை உறுவது சிவபுராணம்.
தூல பஞ்சாக்கிரத்தில் தொடங்கித் தன்னை,
ஆளும் ஐயன் தன் அடிபணியத் தொடங்குகிறார் வாசகர்.
நமச்சிவாய வாழ்க எனத் தொடங்கும் அந் நற்பதிகம்.
உருகாதார் நெஞ்சையும் உருக வைப்பது.
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்குவது.
அற்புதமான அமுத தாரைகளை,
எற்புத்துழை துறும் ஏற்றி இனிமை செய்வது,
அவ் அரிய பதிகத்தில்,
பிறவித் துன்பத்தை விரவி உரைக்கின்றார் நம் வாசகனார்.
அவ் அடிகள் பின்வருமாறு:
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருவமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!
பிறவித் துன்பத்தை பெரிதாய் உரைக்கின்ற,
இவ் அடிகளில் ஒன்றிலேயே அறிஞர் சிலர் ஐயுற்றனர்.
அவர் தம் அவ் ஐயத்தினை முதலில் அறிவாம்!
❖ ❖ ❖
சடம், சித்து என உலகம் இரு நிலைப்பட்டது.
உடம்பொடு உயிர் கூடின் அது சித்தாம்.
உயிரற்றவை சடமாம்.
உயிர்ப்பொருள்களிலும் இரு வகை உள.
அசையும் உயிர்ப்பொருள்கள் சங்கமம் என்றும்,
அசையா உயிர்ப்பொருள்கள் தாவரம் என்றும் உரைக்கப்படும்.
உடம்பொடு உயிர் கூடி உறும் அல்லல்களை,
உரைக்கத் தலைப்பட்ட வாசகனார்,
உயிர்கள் உறும் தாவர சங்கமப் பிறவிகளை வரிசைப்படுத்தி,
அப் பிறவிகளில் பிறந்து நான் இளைத்தேன் என,
எம்பெருமான் முன் தன் ஏழ்மை உரைக்கின்றார்.
இப் பாடல் அடிகளில் வரும்,
புல், பூடு, மரம் என்பன தாவரப் பிறவிகளாம்.
புழு, மிருகம், பறவை, பாம்பு, மனிதர், பேய்,
கணங்கள், அசுரர், முனிவர்,தேவர் என்பன சங்கமப் பிறவிகளாம்.
இத் தாவர சங்கமப் பிறவிகளுள் பிறந்து இளைத்தேன் என,
பதறிப் பரிதவித்துப் பாடுகிறார் வாசகர்.
❖ ❖ ❖
மேற் சொன்ன பாடல் அடிகளில்.
தாவர, சங்கமப் பிரிவுகளுள் அடங்காத,
கல் எனும் சொல்லும் பதிவாகிறது.
கல்லாய், மனிதராய்,
இத்தொடரிற்கு கல்லாகவும், மனிதராகவும் என்பது பொருளாம்.
பிறவிகளை வரிசை செய்யும் வாசகர்,
இத் தொடரின் மூலம்,
கல்லினையும் ஒரு பிறவியாக்கி உரைக்கின்றார்.
இக் கருத்தே,
அறிஞர் சிலர்தம் ஐயத்தின் ஆதாரமாம்.
அது பற்றி மேலும் அறிவாம்.
❖ ❖ ❖
உலகப் பொருள்களில் கல்லினை,
உயர்ந்தோர் சித்தாய் அன்றி சடமாகவே உரைத்தனர்.
அறிஞர் பார்வையில் அஃது உயிரில் பொருளேயாம்.
அங்ஙனமிருக்க உயிர்ப்பிறவிகளை வரிசை செய்த வாசகனார்.
கல்லினையும் உயிர்ப் பிறவியாய் உரைத்தது எங்ஙனம்?
ஐயமுற்ற அறிஞர் தம் கேள்வி இது.
❖ ❖ ❖
ஐயத்தை வினாவாக்கி நிறுத்தாத அவ் அறிஞர்கள்.
அவ் ஐயத்தை அடிப்படையாக்கி,
ஒப்பற்ற வாசகத்திற்கு புதிதாய் உரை செய்ய முயல்கின்றார்.
வழிவழி வந்த வாசகப் பொருளை,
தனி வழி நின்று தம் மனக் கருத்தால்,
அவர்கள் பொருத்தம் இன்றி திருத்தம் செய்தனர்.
பக்தியிலும், அறிவிலும் ஊறித்திளைத்த,
தம்மிற் சிறந்த முன்னைப் பேரறிஞர்கள்,
இவ் விடயத்தில் ஐயம் கிளப்பாதது பற்றியும்,
இவர்கள் சிந்தித்தார்கள் அல்லர்.
அங்ஙனம் அவர்கள் தாம் கொண்ட ஐயத்தை அடிப்படையாய்க் கொண்டு,
சிவபுராணத்தில் செய்ய நினையும் திருத்தம் இதுவேயாம்.
❖ ❖ ❖
கல் உயிர்ப்பிறவி அன்றாகலின்,
வாசகனார் கல்லைப் பிறவியாய் உரைத்திருத்தல் ஆகாது என்றும்,
உண்மையில் கல்லாய், மனிதராய் எனும் தொடர்,
கல்லா மனிதராய் எனவே அமைந்திருத்தல் வேண்டும் என்றும்,
அவ் அறிஞர் வாதிட்டு,
திருவாசகத்தில் திருத்தம் செய்ய முனைகின்றார்.
கல்லாய், மனிதராய் என அத் தொடரைக் கொண்டு,
கல், மனிதர் என இரு பிறவிகளைக் குறிக்காது,
கல்லா மனிதராய் என அத்தொடரைக் கொண்டு,
கற்றறிவில்லாத மனிதராய் எனப் பொருள் கொள்ளலே பொருத்தம் என்பது
அவர்தம் வாதமாம்.
அவர்தம் திருத்தப்பாட்டின் பொருத்தப்பாட்டை அறிவாம்!
❖ ❖ ❖
உயிர்களை அறிவு நிலைப்படுத்தி,
ஓரறிவு முதல், ஆறறிவு ஈறாக,
நம் ஆன்றோர் வகை செய்தனர்.
பெற்ற பொறிகளின் எண்ணிக்கையை வைத்தே,
உயிர்களின் அறிவுநிலை அவர்களால் அளவிடப்பட்டது.
மெய், வாய், கண், மூக்கு, செவி என,
காணும் பொறிகள் ஐந்தேயாம்.
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் என்பனவாய்,
ஒரு பொறிக்கு ஒரு அறிவென அறிவு ஐந்தாயிற்று.
ஆறறிவாளர் என உரைக்கப்படும் மானிடர்க்கும் புறப்பொறிகள் ஐந்தேயாம்.
எனினும், உறுப்பின்றிச் செயப்படும் மனம் எனும் பொறியின் இயக்கத்தால்,
சிந்திக்கும் திறன் வாய்த்த மானுடரை,
ஆறறிவு பெற்றவராய் நம் ஆன்றோர் உரைத்தனர்.
❖ ❖ ❖
இங்கு தான் நுண்மை நோக்கி,
ஆழ்ந்த ஓர் விடயத்தை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஓர் அறிவு, ஈர் அறிவு எனும் வகைப்படுத்தல்களுக்கிடையிலும்,
வேறுபட்ட அறிவு நிலைகள் உண்டாம்.
விரிவஞ்சி அந்நிலைகளை நம் ஆன்றோர் வகுத்தார் அலர்.
எனினும், அவ் இடை அறிவு நிலைகளும் உண்டேயாம்.
விலங்குகளுள் சில எல்லைப்படுத்தப்பட்ட மன அறிவைப்பெற்று,
இயங்குதல் கண்கூடு.
இத்தகைய விலங்குகளையே வீட்டு விலங்குகளாய் ஏற்று வளர்க்கும் வழக்கு,
நம் மூதாதையரால் ஏற்கப்பட்டது.
இது போலவே ஒவ்வோர் அறிவுக்கும்,
அதன் முதல் நிலைக்கும் இடைப்பட்ட சில உயிர்ப்பிறவிகள் உண்டாம்.
இஃது வெள்ளிடைமலை.
❖ ❖ ❖
இவ் அடிப்படை கொண்டு நோக்க,
ஓரறிவு கொண்ட தாவரத்திற்குக் கீழும்,
வகுத்துரைக்கப்படாத உயிர்ப்பிறவிகள் இருத்தல் கூடும் என,
உணர முடிகிறது.
அதில் ஒன்றாயே, ஓரறிவுக்கும் கீழ்பட்டு இருப்பதாய உயிர்ப்பிறவியாய்,
கல்லின் சில வகைகள் விளங்கின போலும்.
❖ ❖ ❖
இக் கூற்றுக்காம் சான்றுகள் உண்டா?
ஆராய்தல் அவசியமாம்!
❖ ❖ ❖
சிற்ப சாஸ்திர நூல்கள்,
கல்லினை ஆண், பெண், அலி என மூன்றாய் வகுக்கின்றன.
குறித்த சிலாரூபம்,
குறித்த வகைக் கல்லிலேயே அமையவேண்டுமென்பது,
அந்நூலோர் விதித்த வரையறை.
இவ் அடிப்படை கொண்டு நோக்க,
கல்லினை உயிர்ப்பிறவிகளில் ஒன்றாயும் கொள்ளுதல் கூடுமாம்.
இஃது மேற் கூற்றுக்காம் முதற் சான்று.
❖ ❖ ❖
இராம காதையில் வரும் அகலிகை வரலாற்றில்,
வஞ்சக இந்திரனிடம் தன் கற்பைப் பறிகொடுத்த அகலிகையை,
கல்லாகும்படி கௌதம முனிவர் சபித்ததாய் செய்தி உண்டு.
கல்லான அகலிகை இராமனின் பாததூளி பட்டு,
மீண்டும் பெண்ணானதாய் கவிச்சக்கரவர்த்தி கம்பன் உரைப்பான்.
இதிகாசம் கூறும் இக் காதையிலிருந்து,
அகலிகையின் உயிர் கல்லெனும் உடலுல் பொருந்தியிருந்ததை,
தெற்றெனத் தெரிந்து கொள்கிறோம்.
கல்லும் உயிராகலாம் எனும் கூற்றுக்காம் இரண்டாம் சான்று இது.
❖ ❖ ❖
பொறிகளற்ற சடமாகிய கல்லுக்குள்,
உயிர்கள் பொருந்தியிருத்தல் கூடுமா?
வாயில்கள் அற்ற அச்சடத்துக்குள் உயிர் பொருந்தியிருப்பின்,
சென்று மீளும் பிரானோபாயம் அதற்கு அமைதல் எங்ஙனம்?
அது மட்டுமன்றி, வாயில்கள் அற்ற கல்லில் உயிர் பொருந்தின்,
அதன் இயக்க சக்திக்காம் உணவு வகை உட்புகுதல் எங்ஙனம்?
இவை அடுத்தடுத்து எழும் கேள்விகள்.
உலகியலில் கல்லுக்குள் தேரை உயிர் வாழ்தல் கண்கூடு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்களுக்குள்ளும்,
சிறு தேரை வாழ்ந்து வருகிறது.
அச் சிறு தேரைகளுக்கு உயிர்ப்பும், உணவும் ஏதோ வகையில் கிட்டவே செய்கின்றன.
ஆதலால் கல்லுக்குள் உயிர்வாழ்தல் சாத்தியம் எனும் உண்மையை,
நாம் கருத்தில் கொள்ள வேண்டியே இருக்கிறது.
இஃது கல்லும் உயிராகலாம் எனும் கூற்றுக்காம் மூன்றாம் சான்று இது.
❖ ❖ ❖
அடுத்து,
மேல் வினாவுக்கு தத்துவவியலாளர்கள் கூறும்.
விடை ஒன்றினை அறிந்து ஆராய்வாம்!
கேவல நிலை, சகல நிலை, சுத்த நிலை எனத் தத்துவவியளாலர்கள்
ஆன்ம நிலைகளின் அடிப்படைகளை மூன்றாய் வகுப்பர்.
அனாதியே ஆணவ வயப்பட்ட ஆன்மா,
முற்று முழுதாய் ஆணவத்துள் அகப்பட்டு,
தன் அறிவு இச்சை செயல்களை இழந்து கிடக்கும் நிலை,
ஆன்மாவின் கேவல நிலையாம்.
மாயையிலிருந்து தனு, கரண, புவன, போகங்களைப் பெற்று,
அறிவு இச்சை செயல்கள் சிறிதே தூண்டப்பட்ட நிலையில்,
இயங்கும் ஆன்ம நிலை அதன் சகலநிலையாம்.
பிறவி அனுபவங்களால்,
இருவினை ஒப்பு நிலையெய்தி,
மலபரிபாகம் நிகழ்ந்து சக்திநிபாதம் கூட,
இறையோடு உயிர் இரண்டறக் கலக்கும் நிலை அதன் சுத்தநிலையாம்.
❖ ❖ ❖
ஆன்மா தனது இச்சா, கிரியா, ஞானா சக்திகளை இழந்து நிற்கும்,
கேவல நிலையில் அதன் இருப்பை,
பாடான நிலை என்கின்றனர் தத்துவவியலாளர்கள்.
பாடானம் என்ற சொல்லுக்கு கல் என்பது பொருள்.
எனவே கேவல நிலையில் ஆன்மா கல்லாய்க் கிடப்பதாய்,
தத்துவவியலாளர்கள் கூறுவதைக் கொண்டும்,
கல்லில் உயிர்த்தன்மை பொருந்தியிருப்பதனை,
நாம் அறிந்து அதிசயிக்கலாம்.
இஃது கல்லும் உயிராகலாம் எனும் கூற்றுக்காம் நான்காம் சான்று.
❖ ❖ ❖
அதுமட்டுமன்றி,
நமது சமய முறையில் அபரக்கிரியைகளின் போது,
இறந்த உயிரினை கல்லில் ஏற்றி,
ஒரு திங்கள் பூஜித்து பின்னர் அக்கல்லைக் கடலில் இடும் மரபுண்டு.
இவ் ஐதீக வழக்கைக் கொண்டும்,
கல்லில் உயிர் வாழும் கருத்தினை ஏற்க வேண்டியுள்ளது.
இஃது கல்லும் உயிராகலாம் எனும் கூற்றுக்காம் ஐந்தாம் சான்று.
❖ ❖ ❖
நமது சமய உண்மைகளைக் கூறும் புராணங்களும்,
மலைகளுக்கு உயிர் இருந்ததாய்ப்பேசுகின்றன.
வழி மறித்து விந்திய மலையை,
வென்று அகத்தியர் சென்ற வரலாறும்,
மலைகள் வளர்வதில் போட்டியிட்ட வரலாறும்,
நம் புராணங்களில் பொதிந்திருக்கும் செய்திகளாம்.
கற்களுக்கு வளர்தலும், தேய்தலும் உண்டு.
அது கொண்டும் அதன் உயிர்த்தன்மையை உறுதி செய்தல் கூடும்.
இஃது கல்லும் உயிராகலாம் எனும் கூற்றுக்காம் ஆறாம் சான்று.
❖ ❖ ❖
கல் உயிராதற்காம் காரணங்கள் பலவற்றை மேலே கண்டோம்.
எனவே கல்லாய் மனிதராய் என வாசகர் பாடியதில்,
கருத்துண்டு என அறிதல் வேண்டும்.
அதுவன்றி, மேல் ஐயுறு அறிஞர் தம் விளக்கத்திலும்,
பெரியதோர் பிழையுண்டாம்.
அதனையும் அறிவோம்.
❖ ❖ ❖
மேல் சிவபுராண அடிகளினூடு வாசகப்பெருமான் உரைக்கத் தலைப்பட்டது.
பெருந்துயர் தரும் பிறவித் துன்பத்தினையே,
பிறவிகளால் தாம் பட்ட துன்பத்தை நமக்கு உணர்த்துவதற்காகவே,
பிறந்திழைத்தேன் என்று அலறுகிறார் வாசகனார்.
அஃது உண்மையாயின் மேல் ஐயுறுவார் தம் புதுப் பொருளில்,
புண்மை மிகு பொய்யொன்று வெளிப்படுகிறது.
அப் பொய்மை தான் யாது?
பாடல் அடியை கல்லாய், மனிதராய் எனக் கொல்லாது,
கல்லா மனிதராய் எனத் திருத்தம் செய்யின்,
பிறந்திழைத்தல் கற்ற மனிதர்க்கு இல்லை என்றும்,
கல்லா மனிதர்க்கே உரியதாம் என்றும் பொருள் வருகிறது.
அப்பொருள் யதார்த்த முரணாம்.
கல்லாதாரை விட கற்றாரே ஆணவ மிகுதியினால்,
பிறவிப் பெரும் பிணியில் பெரிதும் உழல்கின்றனர்.
அதனால் தான் மணிவாசகப் பெருமான்.
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் என்றும்,
வைத்தநிதி, பெண்டிர், மக்கள், குலம். கல்வி எனும் பித்த உலகு என்றும்,
கற்றாரை நான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் என்றும்,
பல இடங்களிலும் கல்வியை ஆன்ம பிணிகளில் ஒன்றாய் அறிவித்துரைக்கின்றார்.
இதே கருத்தினை,
அறிவற்று அறியாமையும் அற்றதுவே என்றும்,
கரவாகிய கல்வியுளார் கடை சென்று,
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ என்றும்,
படிப்பற்று, கேள்வியற்று, பற்றற்று சிந்தை,
துடிப்பற்றிருப்போர்க்கே சுகம் காண் பராபரமே என்றும்,
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் என்றும்,
கற்ற கயவரோடு என்ன கூட்டினீயே என்றும்,
பிற அருளாளர்களும் வழி மொழிந்தனர்.
அங்ஙனமிருக்க அவர் கருத்துக்கு முரணாய்,
கல்லா மனிதப்பிறவி மட்டுமே உயிரை இழைக்கச்செய்யும் என்றுரைப்பின்,
கற்ற மனிதப்பிறவியில் உயிரிழைப்பு இல்லை என்றாகி,
யதார்த்த முரணாய் பெரும் பிழை நேரும்.
❖ ❖ ❖
கல்லில் உயிர் வாழ்ந்தற்காம் சான்றுகள் கண்டோம்.
கற்ற மனிதப்பிறவியும், உயிர்க்கு இழைப்புத்தரும் ஒன்றே என உணர்ந்தோம்.
இவ் இரு அடிப்படைகளும் கொண்டு கருத்தூன்றி நோக்க,
சிவபுராணத்தில் இதுவரை இருந்து வரும்,
கல்லாய் மனிதராய் எனும் தொடரே,
அறிவு, அனுபவங்களுக்கு உட்பட்டது எனும் உண்மை புலனாகும்.
வழிவழி வந்த அத்தொடரினை,
கல்லா மனிதராய் என மாற்றி அமைத்து,
வாசகருக்கும் வாசகத்திற்கும் முரணாய்,
நம் சமய அடிப்படைகள் உணராது,
புதியது கண்டு பொருள் கூற முனைதல்.
அறிவின் பாற்பட்டதன்று என அறிவோமாக!