திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 1: "ஆதியும் அந்தமும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 1: "ஆதியும் அந்தமும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
லகெலாம் தெய்வீகம் ஓங்கி உயர்ந்ததனால் 
நிலமெலாம் இறையருள் நிறைந்தேதான் நிற்கின்ற 
மாண்புள்ள மார்கழியின் மகத்தான ஓர் காலை
ஆணவமாய் விரிந்திருந்த இருள் அகல அப்பொழுதில் 
உதயம் நிகழ்ந்ததனை உலகுக்கு உணர்த்துகிற
குயிலின் கூவல் அது குளிரோடு கலந்தினிமை
எங்கும் பரப்பி எழுந்தின்பம் தருகிறது. 
கூ என்னும் கூவலிலே குறுகிக் கிடக்கின்ற 
உகரந்தனை உணர ஓங்காரம் ஒலிப்பதுவாய்
செவிகள் சிலிர்த்திடவே சேர்ந்தின்பம் விளைகிறது. 
 
✠ ✠ 
 

 

 
ஆல மரத்தின் அகன்ற கிளைகளிலே 
கூட்டினிலே குஞ்சுகளைக் கொஞ்சித்தான் காக்கைகளும்
'கா கா' என்றுரக்கக் கத்திப் பறந்தனவாம்.
காத்திடுவாய்! காத்திடுவாய்! என்றந்தக் கடவுளிடம்
கூட்டில் கிடக்கின்ற குஞ்சுகளை ஒப்படைத்து
காக்கைகளும் பறப்பதுவாய் காட்சியதும் மனதில் வர
மீண்டும் மனத்துள்ளே மீளாத பெருஞ் சிலிர்ப்பு.
 
✠ ✠ 
 
அகத்தினிலே ஒளி பெற்ற அடியார்கள் இறையென்னும் 
தலைவன் தனை நினைந்து தாம் உருகிக் கூவுதல் போல்,
புறத்தில் ஒளி கண்டு புள்ளினமாம் சேவல்களும்
'கொக்கரக்கோ' என்றேதான் கூவிச் சிறகடிக்கும்.
கூவுகிற கூவலிலே 'கோ' என்ற ஓசை வர
தலைவன் எனும் பொருளைத் தருகின்ற அச்சொல்லால்
சேவல் அனைத்தும் சிவனாம் நமை ஈர்க்கும்
தலைவன் தனை நினைந்து தாம் உருகிக் கூவுவதாய்,
எண்ணம் உதிக்க ஏங்கித்தான் மனமுருகி 
மேலும் கசிந்தேதான் மேனி சிலுசிலுக்கும்.
 
✠ ✠ 
 
'ஓம் ஓம் ஓம்' என்றே ஓங்கித்தான் ஒலிக்கின்ற
ஓங்காரம் கலந்திட்ட ஒப்பற்ற கோயில் மணி
ஓசையதால் உளமுருக உவப்படையும் செவிகளுமே.
 
✠ ✠ 
 
காலைப் பொழுதின் கனிந்த நல் உதயத்தால்,
மொட்டவிழ்ந்து முகை விரிய மூண்டெழுந்த வாசனையால்
நாசி வரும் நல்லுணர்வு நம்மைக் கிறங்கடிக்கும்.
 
✠ ✠ 
 
மார்கழியாம் மாதத்து மாறா இயற்கையதால்
நற்காலைப் பனிப்பொழிவின் நடுங்குகிற குளிர் கூடி
சீதளத்தால் உலகெங்கும் சீரான கதகதப்பு,
மேனி நிறைத்து மேலும் சிறப்பூட்டும்.
 
✠ ✠ 
 
இங்ஙனமாய் மாண்புற்ற ஏற்றமிகு மார்கழியின்
காலைப் பொழுதியற்கை கடவுளையே நினைவூட்ட
செவி, நாசி, மெய்யெல்லாம் சேர்ந்தின்பம் துய்த்திடவே
விழியும், நாவதுவும் வீறான மார்கழியில்
எங்கட்கும் இவ்வின்பம் வேண்டாவோ? என நினைந்து
அந்தப் புலனின்பம் ஆர அடைதற்காய் 
தாமும் முனைந்து தரணியிலே போராடும்.
 
✠ ✠ 
 
கண்கள் சிவனவனைக் கண்டு களித்திடவும்
நாக்கள் அவன் புகழை நல்லபடி பாடிடவும்
ஏங்கித்தம் இயல்பதனை ஏந்திழையார்க் கேற்றி விட
உள்ளத்தொளி விளங்கும் ஒப்பற்ற பெண்கள் சிலர்
விடிகாலைப் பொழுதெழுந்து விளைகின்ற அன்பதனால்
ஒன்றாகிச் சிவன் புகழை ஓங்கி ஒலித்தபடி
சங்கமமாய்ச் சேர்ந்தே தம் தோழியரைத் துயிலெழுப்ப
பங்கமிலா மனத்தோடு பாரதனில் வருகின்றார்.
 
✠ ✠ 
 
முச்சந்தி தனில் நின்ற முதல் வீட்டு வாசலிலே 
பாடி வரும் பாவையர்கள் பற்றோடு தம் மனத்தில்
கூடி உறவோடு கொண்டாடும் பெண்ணொருத்தி
தன்னை எழுப்புதற்காய் தயவோடு அவள் இல்லத்
திண்ணை வெளிநின்று தேற அழைக்கின்றார்.
 
✠ ✠ 
 
உள்ளிருந்த பெண்ணோ ஓங்குகிற மார்கழியின்
காலைப்பொழுதின்பம் காண விரும்பாமல்
ஒப்பற்ற இன்பம் உறக்கந்தான் என நினைந்து
இருளதனில்த்தான் மயங்கி எல்லாம் மறந்தவளாய் 
ஒன்றையுமே உணராமல் உறங்கிக் கிடக்கின்றாள் 
பஞ்சணையின் இன்பத்தால் பாவி அவள் தன்மனமும்
இருளை இனிமையென எண்ணி மகிழ்கிறது.
வீட்டுக்கதவின் வெளியூடே சிறிதாக
உதயத்தால் ஒளிவந்த உண்மையதை உணராமல்
இருளே இனிமையென ஏந்திழையாள் துயில்கின்றாள்.
துயிலெழுப்பும் தோழியரின் தூமொழிகள் அதுகேட்டும்
ஓடிவரா அவள் தன்னின் உறக்கத்தின் நிலைகண்டு
வெளிநின்ற ஒருத்திக்கு விளைகிறது பெருங்கோபம்.
 
✠ ✠ 
 
தொடக்கமும் முடிவுமிலாத் தூயவனைத் துலங்குகிற
அரியதுவும் பெரியதுவும் ஆன அருள் ஒளியை
நாம் போற்றிப்பாடுகிற நல்லோசை செவியுற்றும்
ஓடித்தான் வாராத ஒளிவீசும் கண்ணுடையாய்
பாய்ந்தோடி வந்து நம் பக்கமதைச் சாராமல்
உறங்குகிற பேதாய்! உன் செவிதான் வன் செவியோ?
என்று வசைமொழிந்து ஏசி அழைக்கின்றாள்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
 
✠ ✠ 
 
அன்பே வடிவான அடியார்தம் வார்த்தைகளில்
வன்பாம் வசை வருமா வாசகனார் நினைக்கின்றார்.
நினைந்த மணிவாசகனார், நெஞ்சத்தின் அன்பேதான்
நேரிழையார் கோபத்தின் நெறியென்று காட்டுதற்காய்
உறங்குகிற பெண்ணவளை ஓங்கி எழுப்புகிற
மங்கையவள் வசைமொழிக்குள் மனத்தன்பைக் கலக்கின்றார்.
 
✠ ✠ 
 
ஒளியோடு நீண்டிருக்கும் ஒப்பற்ற கண்ணுடையாய்!
என்றந்தப் பெண் அழைப்பின் இனிதான வர்ணனையில்
வசைக்குள் கலந்திருக்கும் வாஞ்சை தெரிகிறது.
தூற்றுகிற மொழிக்குள்ளும் தூய்தான அன்பதனை
ஏற்றி உரைக்கின்ற எங்கள் மணி வாசகனார் 
நெஞ்சம் தெரிய நெகிழ்கின்றோம் நாமெல்லாம்.
 
✠ ✠ 
 
கண்டித்தும் துயிலெழும்பாக் காரிகைக்கு வழியில் தாம்
கண்டதொரு காட்சியினைக் கன்னியர்கள் உரைக்கின்றார்.
தோழி! நாம் வரும் வழியில் தூயபெரும் கடவுளது
ஆழி நிகர் சிலம்படியை அன்புருகிப் பாடினம் காண்.
(மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி)
 
✠ ✠ 
 
எங்களது பாட்டோசை ஏற்றமுடன் எழுந்தே போய்
நீட்டிக் கிடந்த அந் நெடுவீதி வாயிலிலே
கேட்டதுமே பெண்ணொருத்தி கிளர்ந்து தனை மறந்தாள்.
மாதேவன் பெரும்புகழில் மயங்கித் தனை இழந்தாள்.
விம்மி விம்மி மெய்மறந்து விழிநீர் சொரிந்தழுதாள்.
மொட்டலர்ந்து போதாகி முகம் மலர்ந்த பூக்கள்பல, 
கட்டிலிலே தான் கிடந்தும், கண்துயில முடியாமல்,
நின்றும் புரண்டும், நிம்மதியைத் தான் தொலைத்து,
ஏதேனும் ஆகாமல் ஏங்கித் தளர்ந்தனளாம். 
(போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்
 
✠ ✠ 
 
ஆரென்று தெரியாத அவளே உருகுகிறாள்.
நீ எங்கள் கண்பாவாய்! நித்திரையைத் தொலையாயோ?
மயக்குகிற துயில் கலைத்து மாதேவன் புகழ்பாட,
ஓடித்தான் வாராமல் உறங்குவதும் சரியாமோ?
ஈதோ எம்தோழி உன் இயல்பென்னே! என்னேயோ?
வாடி அப்பெண்களெலாம் வருந்தி அழைக்கின்றார்.
(என்னே என்னே ஈதே எம்தோழி
 
✠ ✠ 
 
ஆருயிர்த்தோழீ எம் அன்பான வேண்டுதலை, 
ஏற்பாய், ஓர்ந்திடுவாய் எம்பாவாய் என்றுரைத்து,
நெஞ்சங்கரைந்தோட நேரிழையார் அழைத்தனராம்.
 
✠ ✠ 
 
அன்போடு தனையழைத்து அயலான பெண்பெருமை,
ஒப்பிட்டுச்சொல்லி உண்மை உரைத்திடவே,
மாயை இருளதனில் மயங்கிக் கிடந்தவளும், 
பஞ்சணை என்கின்ற பாசத் தொடர்பறுத்து, 
நெஞ்சம் முழுதும் அந்நெடியோன்தன் நினைவாக்கி,
உதறிப் பிறவியெனும் ஓயாத துயில்களைந்து,
ஒருநொடியில்  உள்ளத்தின் உள்நின்ற இருள் அகல,
தேடித்தன் தோழியரின் தெவிட்டாத சார்படைந்தாள். 
 
✠ ✠ 
 
ஆணவமாம் இருள் நீங்கி ஐயன்தன் அடிசார்ந்த,
சீவன் முக்தரெலாம் சிவனடியைச் சாருதற்கு, 
தமையாரும் தூண்டாமல் தாமே அகம் விழிப்பார்.
அங்ஙனமாய் உள்ளொளியால் ஆண்டவனைச் சார்ந்தவர்கள்
மற்றவர்கள் எழுப்பாமல் மயக்கமது தெளிந்தே பின்
மாயை இருளதனில் மயங்கிக் கிடக்கின்ற,
மற்றை அடியவரின் மயக்கமதைத் தெளிவிக்க, 
தேடி அடைந்தே தினமும் முயன்றிடுவார்.
 
✠ ✠ 
 
மாயை எனும் இன்பத்தை மறக்க முடியாமல், 
உறக்கத்தைத் துறக்காது உள்மயங்கும் அவர் தமக்கு, 
ஐயன்தன் அடிசார்ந்த அடியார்கள் அனுபவத்தை, 
சொல்லிச் சொல்லி நிதம் சுகம் உணர்த்த முயன்றிடுவார். 
 
✠ ✠ 
 
நல்லார் அனுபவத்தை நாளுந்தான் கேட்டதனால், 
உள்ளே இருளகன்று ஓங்குகிற ஒளி துலங்க, 
உண்மை யுணர்ந்தவர்கள் ஒரு நொடிக்குள் தாம் தெளிந்து,
மாயை எனும் உறக்கமதாம் மயக்கத்தை உதறிவிட்டு,
பழ அடியார் தங்களது பண்பான சங்கமத்தை, 
புத்தடியார் பொன்னெனவே போற்றிப் புகுந்திடுவார். 
 
✠ ✠ 
 
உத்தமராம் அவர் நிலையை உட்புதைத்துக் கதையாக்கி
தத்துவத்தைச் சொன்ன பெரும் தரமான பாடலிது.
தயை அதனால்  வாசகனார் தரணியெலாம் உய்தற்கு
முத்தெனவே சொன்ன முதல் பாடல் பெருமையிது. 
காதார அப்பாடல் கனிவுடனே கேட்டின்பம் 
மீதூர மகிழ்ந்திடுவோம் மெய்மறந்து சிவனவனாம்
ஐயன்தன் வினையகற்றும் அற்புதமாம் ஒளி பொங்கும் 
பாதாரவிந்தங்கள் பாடிப் பணிந்திடுவோம்.
 
✠ ✠ 
 
முத்தான இந்த முதற்பாடல் தன்னுள்ளே,
வித்தாகி நின்ற விளங்கும் நற்காட்சிதனை,
மேலே படித்தோம் மெய் சிலிர்த்தோம் மேன்மையுற,
போற்றும் நயங்கள்பல பொதித்தேதான் வாசகனார்,
ஏற்றியுரைத்திட்ட இப்பாடல் நுண்கருத்தை,
தேடியறிந்து தெளிதல் நம் கடமையன்றோ!
ஆதலினால் நுண்பொருளை ஆய்ந்தே நாம் அறிதற்கு,
மீண்டும் கவிதையினை மீட்ட நுழைந்திடுவோம்.
 
✠ ✠ 
 
ஆதியும் அந்தமும் இல்லா எனும் கூற்றால்,
தொடக்கம் முடிவற்ற தூயசிவன் தன்னுடைய,
அநாதியாய் நிற்கும் அளவில்லாப் பெருமைமிகும்,
சொல்லில் அடங்காத சொரூப நிலை தன்னை,
உணர்த்த முனைகின்றார் ஓங்கு புகழ் வாசகனார்.
 
✠ ✠ 
 
சோதியெனும் ஒளிமிகுந்த சுட்டுதலால் இறையவனும்,
ஆன்மாக்கள் தனைச்சூழ்ந்து அகப்படுத்திக் கிடக்கின்ற,
ஆணவமாம் இருள் நீக்கும் அருமையையும், ஓயாத
அரிய செயலதற்கு ஆண்டவனார் தன் நிலையில்
இறங்கித்தான் சக்தியவள் ஏற்றமிகு கலப்பதனால்
அருவம், அருவுருவம், உருவம் என வெவ்வேறு 
சக்தி வடிவங்கள் தனைச்சார்ந்த தடத்தநிலை,
கொள்ளும் அழகதையும் குறிப்பதனால் தெளிவாக்கி
அத்தனையும் ஒருமித்து அழகாக உரைக்கின்றார். 
 
✠ ✠ 
 
வாள்தடங்கண் மாதே! என்றுரைக்கும் வளம்மிகுந்த, 
விளிப்பதனால் ஒளி கொண்ட விரிந்தபெருங் கண்ணிருந்தும்,
மாயையதால் மறைப்புண்டு மண்ணதனில் மாசிவனை,
கருவி பல கிடைத்திருந்தும் காணும் திறமிழந்து,
வீணாகப் பொழுதகற்றும் வீழ் ஆன்ம நிலையினையும்
தேனாய் எடுத்தியம்பி தெளிவிப்பார் வாசகனார்.
 
✠ ✠ 
 
வளருதியோ! என்கின்ற வார்த்தையினால் ஆணவத்தில்,
மூழ்கி  அறிவழிந்து முழுச்சடமாம் பாடான,
நிலையுற்றுத்தான் மயங்கி நெடுங்காலம் கிடந்துழன்ற,
ஆன்மாவின் கேவலமாம் அசைவற்ற நிலையினையே
அறிவுக்குணர்த்தி எமக்கானந்தம் தருகின்றார். 
 
✠ ✠ 
 
மாதேவன் என்கின்ற மகத்தான சுட்டுதலால்,
தேவர் பலர் என்ற தெளிவினையும் அவருள்ளே 
யாவர்க்கும் மேலாய் அனைவரையும் ஆட்கொள்ளும்
தேவர்க்கும் தேவன் அச்சிவன் என்ற உண்மையையும்
வாகாய் நமக்குரைத்து வற்றாத உண்மையினை 
பாகாக நம் நெஞ்சில் பாய்ச்சுகிறார் வாசகனார். 
 
✠ ✠ 
 
ஒலி எழுப்பும் வீரமதாம் ஓங்கும் கழல் அணிந்த,
இறையவனின் திருவடியை எண்ணி உரைத்திட்ட,
வார்கழல்கள் என்கின்ற வார்த்தைகளால் ஒலிவடிவில்,
ஈர்க்கின்ற மந்திரமாய் இறையடிகள் இருப்பதையும்,
உள்ளத்துணர்த்துகிறார் ஒப்பற்ற வாசனார்.
 
✠ ✠ 
 
ஏதேனும் ஆகாள் என்றே உரைத்ததனால்,
ஈசன் திருவடியை எண்ணி மனம் நெகிழ்ந்து, 
தன்னை மறந்திட்ட தனி உயிரின் செயலற்ற,
சும்மா இருக்கின்ற சுகமதையும் அனுபூதி
உற்றார் அடைகின்ற ஒப்பற்ற நிலையினையும்
கற்றார் மனம் மகிழ காட்டுகிறார் வாசகனார்.
 
✠ ✠ 
 
மாணிக்கவாசகனார் மந்திரமாய் உரைத்திட்ட
முத்திக்கு வழிகாட்டும் முதற்பாடல் தனில் நல்ல 
சத்தான கருத்துக்கள் சார்ந்தேதான் இருக்கின்ற,
உண்மை உணர்ந்தோம் உள்ளம் கரைந்திட்டோம்.
ஒர்ந்து உணர்ந்தே  இவ்வுயர் பாடல் தனை யோதி,
தீதகல சிவனார்தம்  திருவடிகள்  சிந்திப்போம்.
 
✠ ✠ 
 
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
 
வாள்-ஒளி, தடங்கண்-அகன்றகண், வளருதல்-உறங்குதல், வன்செவி-வலிய காதுகள், வார்-நீண்ட, கழல்-ஆண்கள் அணியும் வீரத்தைக் குறிக்கும் அணி, போதார்- போது -மொட்டவிழ்ந்த மலர்கள், ஆர்- நிறைந்த, அமளி-படுக்கை.
 
✠ ✠ 
 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.