காலம் மாற்றிய கணக்குகள் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
கவிதை முற்றம் 18 May 2019
கற்பு
பதின்மூன்றில் விரிந்த அப்பருவமலர்.
திகட்டத்திகட்ட,
தினம் தினமும் தேன் துளிர்த்து,
மகரந்தச்சேர்க்கைக்காய் மயங்கிற்று.
தேன் குடிக்க வண்டழைக்க,
அப்பருவமலருக்குப் பல தடைகள்.
பதினெட்டைத் தாண்டு என அரசதடை,
இருபத்திநான்கு என
கல்வியதன் கடையடைப்பு,
சாதி, சமயம், சாதகம், சீர்வரிசை
என்பதுவாய் இன்னும்,
நான்கு மதில்களும் நாற்பதைத் தொடுவிக்க,
தேன் வற்றிச் சுருண்டது அச்சிறுமலர்.
சோர்ந்து சரிந்து சொரசொரத்த இதழ் கண்டு,
இன்னும் அது மலர்வதுவாய் எண்ணி,
வாராத வண்டை வரவேற்க வாஞ்ஞையுடன்,
ஓலை விடுத்து உரிமையுடன் காத்திருக்கும்
உறவுகள்
தேன் குடிக்கும் விருப்பற்று,
திரிந்த வண்டொன்றைத் தேடிப்பிடித்து,
தேர்ந்து அழைத்துவர
மதுவிருப்பற்று மற்றவர்க்காய் வந்திட்ட,
முற்றிய வண்டு முறைத்து அந்த மலர் மொய்க்கும்.
காலத்தில் வாராத கருவண்டில் வெறுப்;புற்று,
தேன் அற்றுப்போனதால் சிதைந்த அச்சிறு மலரும்,
மூடமுடியாது மொய்க்க இடங்கொடுத்து,
வாடிச்சரியும்!
வற்றல் மரம் தளைத்திடுமா?
இந்த யதார்த்தத்தில்
இளங்கோ புலவர் அவர்,
ஈரெட்டாண்டு அகவையில்
இனிய திருமணமாம்.
துறவிக்குத் தெரியுமா நம்துன்பம்.
►◄
ஒழுக்கம்
அப்பா வெளிநாட்டில்.
அடுத்த வீட்டு 'அங்கிள்'
அடிக்கடி 'விசிட்' செய்ய,
அந்தரிக்கும் அம்மா!
பள்ளியிலே நட்பின் பருவச் சீண்டல்கள்,
தொடை குலுக்கித் திரைப்படத்தில்
தூண்டுகிற புதுநடிகை.
உப்பு விளம்பரத்திற்கும்,
தப்பாய் முலை நிமிர்த்தும்
வப்புப்பெண் வீட்டின் வரவேற்பு ரி.வியில்
'கிரிக்கெட்' அரங்கிலும் கீழ்மைக் குலுக்கல்கள்.
கல்வியின் பெயரால் கணினியின் உள்ளே,
கட்டவிழ்க்கப்பட்ட,
ஆபாசக் குப்பைகளின் அதிகரிப்பு.
இவற்றிடையே வள்ளுவனின் குறள் வதைப்பு!
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுமாம் !
►◄
கல்வி
பாடம் படிக்க,
பள்ளியிலே இடம் பிடிக்க,
'அட்மிஷன்' படையெடுப்பு.
மனனப் பரீட்சையின் மதிப்பு.
பணத்திற்கான பாடத்தேர்வு.
பாடம் ஒன்றுக்குப் பல இடத்தில் 'ரியூஷன்கள்'.
சித்திபெற்றும் 'பல்கலை' சேர முடியாத,
அரசின் அநியாயக் கதவடைப்பு.
'ராகிங்' கொடுமை தாண்டிய மேற்படிப்பு.
விரிவுரையாளரின் விருப்பில் தங்கிய,
விஷேட சித்திகள்.
பதவி கொண்டே அறிவை மதிக்கும் சமுதாயம்.
ஆத்திரம் தரும் ஒளவையின் 'அட்வைஸ்'!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுமாம்!
►◄
குறிக்கோள்
தந்தையின் கஷ்டம்.
தங்கையின் கல்யாணம்.
வெளிநாட்டுப்பணம் கேட்கும் காதலி.
நயம் மட்டும் பார்க்கும் நட்பு.
பொருளுக்கே புகழ் தரும் உறவு.
கொள்கைக்கு மதிப்பளியாச் சமுதாயம்.
வீழ்ந்தவன் செய்யும் சரியும் பிழை.
வென்றவனின் பிழையும் சரி.
தோல்வியே துறவறத்தின் அடையாளம்.
வெற்றியே சத்தியத்தின் இருப்பு.
தவறான சமுதாயத்தராசு.
இவற்றிடையே,
குறிக்கோள் இலாதோர் கெடுவராம்!
கூறும் அப்பர் மேல்
சீறும் மனது.
►◄ ►◄ ►◄