திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 7: "என்னே துயிலின் பரிசு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 7: "என்னே துயிலின் பரிசு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-


ங்கும் குரலெடுத்து உளம் ஒன்றிச் சிவனாரின்,
வீங்கு புகழ்பாடி வெள்ளை மனத்தோடு,
மங்கையர்கள் எல்லாம் மார்கழிநீர் ஆடிடவே,
நங்கையரைத் துயிலெழுப்பும் நன்நெறியில் இப்போது,
ஏழாம் வீட்டவளின் இல் முன்னே நிற்கின்றார்.

⭅⭆⭅⭆⭅⭆

 இந்நங்கை இவர்களிலே இளையளாம் அதனாலே,
அன்னாளை நங்கையர்கள் அன்னே! என்றழைக்கின்றார்.
குழந்தைகளைத் தாய்மார்கள் கொஞ்சுகிற முறைநோக்கி,
தாயே என்றழைத்தார்கள். தம் பாசம் பொழிந்தார்கள்.

⭅⭆⭅⭆⭅⭆

தோழியரின் உரையாடல் தொடர்கிறது; கேளீர் நீர்;
தேவர்கள் எவராலும் தெளிந்தே உணர்தற்கு,
ஏலாத எங்கள் இறையவனார் ஒப்பற்ற,
பெரிய சிறப்புடைய பெம்மான், அவன் தன்னின்,
எண்ணம் உணர்த்துகிற இயல்புடைய பலவான,
சின்னங்கள் கேட்ப சிவ சிவ என்றெந்நாளும்,
வாய்திறந்து துயில் நீக்கும் வனிதையளே! எவரேனும்,
தென்னன் என்றெங்கள் சிவனாரை உரைத்திடுமுன்,
தீ சேர்ந்த மெழுகாக திகழ்கின்ற உளமுருகி,
கண்ணீர் வழிந்தோட கனிகின்ற மனத்தாளே!

⭅⭆⭅⭆⭅⭆

இன்றிங்கு நாமெல்லாம் எங்கள் இறையவரை,
எம் தலைவன்; எம்வேந்தன்; இன்னமுதானவன் என்று,
தனித்தனியே உரைத்தழைத்தும் தாள் நீக்காதுள்ளே நீ,
இன்னும் துயிலுதியோ? ஈதென்ன புதுமையடி!
சின்னங்கள் கேட்டிடவே சிவன் என்று வாய்திறக்கும்,
மென்னெஞ்சப் பெண்ணவளே! மேதினியில் நாம் அழைத்தும்,
வன்நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடக்கின்றாய்.
என்னே துயிலின் பரிசு? என்றே அவர் உரைத்தார்.

⭅⭆⭅⭆⭅⭆

ஓங்குகிற பெருங்குணங்கள் உடையவளே உன்னியல்பில்,
இவையும் சிலவோ? என்றேங்குகிற மனத்தோடு,
மங்கையர்கள் எல்லாரும் வருந்தி அழைத்தார்கள்.

⭅⭆⭅⭆⭅⭆

தன்னை மறந்து துயில் தருகின்ற சுகத்தாலே,
கண்ணயர்ந்த பெண்ணவளும் கடுகித் துயிலெழுந்தாள்.
நங்கையர்கள் மனமுருகி நம்சிவனார் புகழ்பாட,
அங்கம் துலக்கி அவர்தம்மின் வருகைக்காய்,
காத்திருக்க மறந்திட்ட கலக்கம் மனம் தாக்க,
மெய்நடுங்கி மங்கையவள் மேனி தளர்ந்தனளாம்.
கண்ணுருக, நெஞ்சுருக கனிந்தேதான் வாயதனில்,
சிவனென்ற தேனூறும் திகட்டாத வார்த்தை தனை,
வாயூறச் சொல்லி வளம்பொங்கும் மனத்தோடு,
மெய்துலக்கி நிமிடத்தில் மேன்மையுற நங்கையர்கள்,
சங்கமத்தில் அங்கமென சடுதியிலே கலந்தாளாம்.
இளையாளைக் கண்டுள்ளம் இனிமையுற பெண்களெலாம்
மீண்டும் சிவன்நாமம் மேன்மையுற ஒலித்தேதான்,
நீராடும் பயணத்தை நிமிர்ந்தே தொடர்கின்றார்.

அன்னே இவையு(ம்) சிலவோ? பல அமரர்
உன்னற் கரியான், ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்,
தென்னா! என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்(று) எல்லோமுஞ்
சொன்னோம் கேள்! வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ?
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரி(சு)? ஏலோர் எம்பாவாய்.


⭅⭆⭅⭆⭅⭆

எம்மானை எம் சிவனை எல்லோரும் அடைதற்காய்,
மன்னர் மணிவாசகனார் மாண்போடு உரைத்திட்ட,
எங்கள் உளமுருக்கும் ஏழாம் திருப்பாடல்,
உள்ளே நுழைந்து நாம் உயர்பொருள்கள் தேடிடலாம்,

⭅⭆⭅⭆⭅⭆

உறங்கிக் கிடக்கின்ற உள்ளிருக்கும் பெண்ணாளை,
அன்னே! என்று அந்த அரிவையர்கள் அழைக்கின்றார்.
அன்புநிறை உள்ளத்தால், அவள் தன்னைத் தாயென்று,
சொன்னார்கள் இவர் என்று சொல்லப் பொருள்சிறக்கும்.
அன்புநிறை உள்ளத்தாள் அவள் தன்னை, தாயென்று,
சொன்னார்கள் இவர் என்று சொன்னாலும் பொருள்சிறக்கும்.

⭅⭆⭅⭆⭅⭆

பாடல்தனில் வாசகனார் பல அமரர் தம்மினிற்கும்
உன்னற்கரியான் என்றுரைக்கின்ற தொடரதனால்,
வானவர்கள் கூடத் தம் மனத்தாலே சிவனாரை,
உணர்ந்திடுதல் முடியாத, உண்மை தெரிகிறது.
உன்னற்கரியான் என்றுரைத்ததனால் அவ்விறைவன்,
ஓதற்கும் உடலாலே சார்தற்கும் அரியன் எனும்,
பெரும்பொருள்தான் வெளிப்பட நாம் பிரமித்து நிற்கின்றோம்.
ஓதற்கும், உணர்தற்கும், உடலாலே சார்தற்கும்,
தேவர்க்கும் அரியான் அச்சிவன் என்னும் வார்த்தைகளால்,
மனதாலும் மொழியாலும் மாண்புடைய மெய்யாலும்
வணங்குகிற வேலையதன் வன்மை தெரிகிறது.
உம்பர் பலருக்கும் உணர்தற்கு அரியனென,
வாசகனார் தருகின்ற வார்த்தைகளால் சில தேவர்,
உன்னி அடைதற்கு உரியர் எனும் பொருளினையும்,
எண்ணி மனங்கொள்ளல் ஏற்றமெனக் கொண்டிடுவீர்.

⭅⭆⭅⭆⭅⭆

சுட்டமுடியாத சொற்கடந்த இறையவனை,
வாசகனார் தனை மறந்து வார்த்தைகளுக்குள்ளாக்கி,
ஒருவன் என உரைக்கின்ற உண்மையதன் விளக்கத்தை,
தெரிந்திடுதல் வேண்டும் நாம். தென்னன் பெருந்துறையான்,
ஒப்புரைக்க முடியாத ஒரு தலைவன் எனும் பொருளே,
ஒருவன் எனும் வார்த்தையினுள் உள்ளடங்கி நிற்கிறது.
ஒருவன் எனும் சொல்லிற்கு ஒப்பில்லான் என்பதுவே,
பொருளாகும். ஒப்பற்ற பரம்பொருளுக்கன்றி இதை,
வேறெவர்க்கும் நிஜமாக விளம்பிடவும் முடிந்திடுமோ?
ஒப்பில்லாப்பொருள் என்று உரைப்பதனால் அவ்விறைவன்,
எப்போதும் மனங்கடந்தான் என்பதையும் தெரிகின்றோம்.

⭅⭆⭅⭆⭅⭆

இருஞ்சீரான் என்கின்ற வார்த்தைக்கு எல்லையிலா,
பெருமை உடையன் எனும் பெரும்பொருளைச் சொல்வார்கள்.
ஒப்பில்லான் என்றே முன்னுரைத்ததனால் தொடராக,
எல்லையிலாப் பெருமையுடை இறைவன் எனும் வார்த்தைதனை,
எண்ணி மணிவாசகனார் இயம்புகிறார் இனிதாக.
எல்லையிலா பெருமைதனை ஏற்றதனால் சிவனானாரும்,
ஒப்பில்லான் எவருக்கும் என உணர்ந்து கொள்கின்றோம்.

⭅⭆⭅⭆⭅⭆

சின்னப் பெண்ணிவளும் சிவனாரின் ஆலயத்தை,
எந்நாளும் எப்போதும் ஏங்கி வலம்வந்து,
வழிபாடு இயற்றும் வழமையினள். அதனாலே,
ஆலயத்தில் ஒலிக்கின்ற ஆண்டவனை நினைவூட்டும்,
சின்னங்கள் தனின் ஓசை சிந்தைதனில் பதித்தவளாம்.
சிவனை நினைவூட்டும் சின்னங்கள் கேட்டதுமே,
அவன் நாமந்தன்னினையே அன்போடு உரைப்பவளாம்.
உள்பதிந்த ஓசைகளும் உயிர் பதிந்து விட்டதனால்,
துயின்று கிடக்கையிலும் தூய சிவன் ஆலயத்தின்,
சின்னங்கள் கேட்டால் சிவ சிவ என்றுரைத்தபடி,
கண் விழிக்கும் இயல்புடைய கன்னியிவள்  என்பதனை,
நம் தமக்கு உணர்த்தற்காய் நாதர் மணிவாசகனார்.
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்,
என்னும் அடிதன்னை ஏற்றமுற இடுகின்றார்.

⭅⭆⭅⭆⭅⭆

இளையள் இவள் என்பதனால் ஈசன்தன் திருநாமம்,
பல இருந்தும் தென்னனெனும் பெயரதனில் பற்றுடையாள்.
தென்னன் எனும் சொல்லதற்கு திகழ் பாண்டியன் என்றே,
சொன்ன பொருளதனை அறிவீர் நீர். சோதிமிகு
நம் இறைவன் விருப்போடு நலமிகுந்த உமையாளாம்,
அன்னையளைக் கைப்பிடிக்க அன்போடு பாண்டியனின்,
மருமகனாய் வந்த கதை மண் முழுதும் தானறியும்.
தென்னகத்தைச் சேர்ந்த இச் செவ்விதழாள் இளமைதரும்
மண்பற்றால் தென்னனென மனமுருகுவாள் என்னும்,
உண்மை உரைக்கின்றார் உயர் புலவர் வாசகனார்,
எங்கும் எந்நாளும் இருப்பவன் தான் என்றாலும்,
தன்னுடைய மண்மேலே தனியரசு செய்ததனால்,
சிவனாரைத் தென்னனென செப்பி மகிழ்கின்ற
மங்கை அவளுடைய மண்பற்றும் தென்னகத்தில்,
வாசகனார் தாம்கொண்ட வாஞ்சையதும் புரிகிறது.

⭅⭆⭅⭆⭅⭆

ஆணவத் திண்மையிலே அகப்பட்ட ஆன்மாக்கள்,
கன்மம் விளைந்து அதன் கடிதான பயன் தீர,
மாயையிலே மூழ்கி இம்மண்மேலே வந்தின்ப,
துன்ப அலைகள் தொடர்ந்தடிக்க பக்குவத்தை,
மெல்ல அடைந்தேதான் மேன்மையுறும். அப்போது,
இறைநாமம் என்னும் எழுச்சிமிகு சோதியினை,
வாக்காலுரைத்து மனதாலே தினம் நினைக்க,
மாயை அகலும். பின் மாசான ஆணவமும்,
மெல்ல வலியிழந்து மெலிந்தே கரைந்திடுமாம்.
உயிரதுதான் சோதியினுள் உட்கலந்து ஒளிர்விடுமாம்.
இந்நிலையை அடைந்தவள் இப்பெண்ணாள் என்றே உணர்த்த,
தீசேர் மெழுகென்னும் தெளிந்த உவமையினை,
வாசகனார் தேர்ந்தெடுத்து வலிமையுற உரைக்கின்றார்.

⭅⭆⭅⭆⭅⭆

தென்னா என்றிட்டாள் தீசேர் மெழுகொப்பாள்,
என்றே உரைக்காமல் இப்பெண்ணாள் எப்போதும்,
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாள்.
என்று உரைத்ததனை எம்மனதில் கொளல் வேண்டும்.
நாமம் அதனைத்தான் நாள்தோறும் உரைத்தின்ப,
ஆனந்தக்கடலதனுள் அமிழ்ந்தே பழகியதால்,
எண்ணத்துள் எவரேனும் இறைநாமம் நினைந்ததனை,
சொல்லி முடித்திடுமுன் சுகம்பெற்று விடும் இந்த,
நங்கை இயல்பதனை நமக்கே உரைப்பதற்காய்,
அங்ஙனமாய் வாசகனார் அமைத்தார் என்றகமகிழ்க.

⭅⭆⭅⭆⭅⭆

என்னானை என்னரையன் இன்னமுது என்றேதான்
பொன்னான வார்த்தைகளால் போற்றிச் சிவனாரை
மங்கையர்கள் சொன்னதிலே மறைபொருளும் இருக்கிறது.
தலைவனென உரைத்ததனால் சகம்முழுதும் படைத்தலையும்,
அரசனென உரைத்ததனால் அவனிதனைக் காத்தலையும்,
அமிழ்தமென உரைத்ததனால் ஆருயிரைப் போற்றலையும்,
சொல்ல நினைத்தேதான் சோதிமிகு மங்கையர்கள்,
முன்னை அடிதன்னை முன் நிறுத்தினார் போலும்

⭅⭆⭅⭆⭅⭆

சொன்னோம் கேள்! ஒன்றாக என்றவர்கள் சொல்லாமல்,
வெவ்வேறாய் சொன்னம் என விளம்பியது எதற்காக?
ஒன்றாய் அழைத்தும் அவள் உறக்கம் கலையாமல்,
நின்றதனால் தோழியரும் நெஞ்சுருகத் தனித்தனியாய்,
நிமலன்தன் பெயருரைத்தால் நீக்காளோ துயிலையென,
எண்ணி இங்ஙனமாய் இயம்பினரென்றுரைத்திடலாம்.

⭅⭆⭅⭆⭅⭆


ஆன்மநிலைபற்றி அடியவர்கள் இறையவனை,
வெவ்வேறாய்க் காணும் விதம் உரைக்க நினைந்தேதான்,
வாசகனார் இங்ஙனமாய் மனம் நினைந்து உரைக்கின்றார்.
சொல்லுக்குள் அடங்காத சோதியனாம் இறையவனை,
சொல்லப்புகுங்காலே சொற்பொருள்தான் ஒன்றாது,
பல்கிப் பெருகும். பக்குவத்தை உரைத்தற்கும்,
இங்ஙனமாய் சொன்னார் என்றியம்பிடினும் பொருந்துவதாம்.

⭅⭆⭅⭆⭅⭆

வாளாகிடத்தி என வனிதையர்கள் சொல்வதனால்,
பேசாது மட்டுமே பேதையவள் கிடக்கின்றாள்.
நினையாது அல்ல என நினைவூட்டும் வாசகனார்,
உள்ளம் உருகுகிற உயர் பேதை அவள்தனக்கு
நேச நெஞ்செல்லாம் நிர்மலனின் நினைவேதான்.
உறக்கத்தில் கூட அவள் உள்ளம் இறைநாமக்
கிறக்கத்துள் தான் கிடக்கும். கிஞ்சித்தும் அவன் நாமம்,
மறக்காதாள் இவளென்னும் மாண்பை உரைத்தற்கு,
பேசாது மட்டுமே பேதையவள் கிடப்பதுவாய்,
நங்கையர்கள் வாக்கதனால் நமக்கே உரைக்கின்றார்.

⭅⭆⭅⭆⭅⭆

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறத்தல்,
தென்னா என்னாமுன்னம் தீர்சேர் மெழுகொத்தல்,
என்றிவளின் மென்நெஞ்ச இயல்பதனை உரைத்தவர்கள்,
வன் நெஞ்சப் பேதையென வாய்திறந்து உரைத்திடுதல்,
என்ன பொருத்தம்? என எவருக்கும் கேள்வி வரும்.
வாசகரா தவறிழைப்பார். வன்நெஞ்சப்பேதை என,
நங்கை அவள் தன்னை நலிந்தே உரைக்காமல்,
போல் என்னும் ஒரு சொல்லைப் போட்டு அவள் தானும்,
வன் நெஞ்சப்பேதை எனும் வார்த்தைக்குள் சிக்காத,
நன்நெஞ்சள் என்பதனை நயமாய் உரைக்கின்றார்.
கூப்பிட்டும் விழிக்காத கொள்கைதனை மறந்தவளை,
தூற்றாது தோழியர்தம் தூயமனத்தாலே,
போற்றிப் புகழ்ந்துரைத்து புன்மை தவிர்த்தவளை,
ஆட்கொள்ள எண்ணும் அதிசயத்தை என்சொல்வாம்?

⭅⭆⭅⭆⭅⭆

அன்னே இவையு(ம்) சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்,
தென்னவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்(று) எல்லோமுஞ்
சொன்னோம் கேள் வௌ;வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.