நல்லவரைக் காப்பதற்கே அவனும் வந்தான் !

நல்லவரைக் காப்பதற்கே அவனும் வந்தான் !
 
லகமெலாம் உவப்பெய்த உயர்ந்து வேலோன்
       ஓங்கு புகழ் நல்லூரில் உலவ வந்தால்
திலகமென ஆலயமும் திகழ்ந்து நிற்கும்
       தேரோடும் வீதியெலாம் பக்தர் கூட்டம்
நிலம் மறைய நின்று அவனின் நேசத்தாலே
       நெஞ்சுருகி ‘முருக’ என ஓலமிட்டு
வலம் வந்து வணங்குகிற காட்சிதன்னால்
       வானகமாய் மண்ணகமும் மாறிப்போகும்.

 

கோபுரத்து ஒளி என்னே! கூடி நின்று
       கும்பிடுவோர் ஒளி என்னே! கூடும் மாதர்
நூபுரத்து ஒளி என்னே! நோற்று நிற்கும்
       நோன்புகளின் ஒளி என்னே! முருகன் சூடும்
ஆபரணத் தொளி என்னே! அதிசயிக்கும்
       ஐயன் தாள் ஒளி என்னே! அருகமர்ந்த
மாபெரிய தேவியரின் கண்கள் பொங்கும்
       மாறாத கருணை ஒளிப் பெருமை என்னே!

நாற்றிசையும் முருகன் பேர் சொல்லிச் சொல்லி
       நல்லவர்கள் வலம் வருவார் நயந்து கூடி
போற்றிசைத்து முருகன் பாமாலை சொல்லி
       புகழ்ந்தேதான் வீதிவலம் வருவார், மாதர்
சேற்றிடையே மலர்கின்ற கமலம் தன்னை
       சேர்த்து மலர் மாலை எனச் சூடக் கொண்டு
ஆற்றி மனம் குளிர்ந்திடவே அணிகள் சேர்த்;து
       அசைந்தாடி வருவார் அவ் அழகு என்னே!

மஞ்சத்தில் வலம் வருவான் மனதை அள்ளி
       மற்றொரு நாள் இராவணனின் மமதை கொன்று
தஞ்சத்தை அருளியவன் கைலை மீது
       தான் நின்று அருளிடுவான் பலரும் சொக்க
பஞ்சத்தால் வாடியவர்க்கருளே செய்து
       பளபளக்கும் தங்கரதம் தன்னில் ஏறி
துஞ்சத்தான் முடியாமல் செய்யும் கந்தன்
       சுடரழகை என்னென்பேன்? தொலையும் நெஞ்சு.

வீதியெலாம் நல்லூருக்கிட்டதென்று
       வியந்திடவே மக்களெலாம் நெருங்கித் தள்ளி
பாதியிலே முருகன் வரப் பக்தி பொங்கி
       பரவசத்தால் ‘முருக!’ எனப் பதறி நிற்பர்
ஆதியிலே அன்னை அவள் வேலை வாங்கி
       அதிசயங்கள் பலபலவாய்ச் செய்து அன்பர்
மேதினியில் துயர் தீர்த்து வாழச் செய்தோன்
       மென்மேலும் நலம் தருவான் ஐயம் என்னே?

பக்தியினால் அடியவர்கள் கூடி நிற்க
       பார் மீது ரதம் ஏறி முருகன் வந்தால்
ஒத்திருக்கும் தலைகள் மேல் அவனின் தேரும்
       ஓடி வருமாப்போல காட்சி தோன்றும்
சத்துருக்கள் செத்தொழிந்தார் என்று தேவர்
       சயம் பாடி வான் நின்று பூக்கள் பெய்வார்
முத்தி தரும் முருகன் பேர் சொல்லிச்சொல்லி
       முனிவர்களும் வணங்கிடுவார் வானில் நின்று.

பாதகரின் செயலதனால் பதைத்து நின்ற
       பண்பான அடியவரில் பரிவு வைத்து
மோதலினைத் தீர்த்தவனும் முருகன் அன்றோ ?
       முறைதவறிப் போர் செய்த அனைவர் தம்மை
வேதனையில் வீழ்த்திடுவான் வெற்றிதன்னை
       வியந்திடவே தமிழர்க்கு விரைவில் தந்து
நாதனவன் காத்திடுவான் நம்பி நிற்பீர்
       நல்லவரைக் காப்பதற்கே அவனும் வந்தான்.
                            ***
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.