நாளை (15.03.2019) ஆரம்பிக்கிறது யாழ். கம்பன் விழா !
செய்திப்பெட்டகம் 14 Mar 2019
உயர் கம்பனின் புகழ்பாடி நமது தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் அகில இலங்கைக் கம்பன் கழகம் கடந்த 39 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஆண்டு தோறும் கம்பனின் பெயரால் இயல், இசை, நாட்டிய விழாக்களை கம்பன்கழகம் நடாத்தி வருவதை அனைவரும் அறிவர். தற்போது கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் முயற்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. கம்பன் கழகத்தின் கம்பன் விழாக்களின் வரிசையில் 2019 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணக் கம்பன்விழா எதிர்வரும் மார்ச் 15,16 17 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் காலை நிகழ்ச்சிகள் நல்லூர் கம்பன்கோட்ட மண்டபத்திலும் மாலை நிகழ்ச்சிகள் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்திலும் நடைபெறவுள்ளன.
இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதலாம் நாள் நிகழ்ச்சிகள் மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் திரு. தெட்சணாமூர்த்தி உதயசங்கர் குழுவினரின் மங்கல இசையுடன் இனிதே ஆரம்பிக்கவுள்ளன. நல்லை ஆதீனத்தின் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமி, பாதுகாவலன் இதழ் ஆசிரியர் அருட்திரு எயின்சிலி றொசான், முஸிதின் ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி எம். றழீம் ஆகிய சமயத் தலைவர்கள் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பிக்கவுள்ளனர். யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ. விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் விழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம் அவர்கள் தொடக்கவுரையினை ஆற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து பேராசிரியரும் இலக்கியச் சொற்பொழிவாளருமான திருமதி. இராம. சௌந்தரவள்ளி அவர்களின் சிறப்புரை “கம்பன் கவியமுது” எனும் தலைப்பில் இடம்பெறவுள்ளது.
விழாவில் கலந்துகொள்ளும் பிறநாட்டு அறிஞர்கள்
புகழ்பெற்ற பேச்சாளர்களான புலவர் இரெ. சண்முகவடிவேல், பேராசிரியர் இராம. சௌந்தரவள்ளி, கலாநிதி இரா. மாது ஆகிய அறிஞர்கள் இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காய்த்; தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவுள்ளனர்.
விழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு பிரமுகர்கள்
தேசிய ஒருமைப்பாட்டு, அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன், வடமாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் சபாநாயகர் கௌரவ சீ.வி.கே சிவஞானம், யாழ்.மாநகர மேயர் கௌரவ இமானுவேல் ஆனலட், இந்தியத் துணைத்தூதுவர் கௌரவ எஸ். பாலச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த. சித்தார்த்தன், வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஏ. வரதராஜப்பெருமாள், வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ப. சத்தியலிங்கம், திரு. சுந்தரம் டிவகலாலா ஆகிய நம்நாட்டுப் பிரமுகர்களும் இவ்வாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கம்பன் விழா நிகழ்ச்சிகள்:
இவ்வாண்டுக் கம்பன்விழாவில்; எழிலுரை, நாட்டியவேள்வி, இலக்கியப் பேருரை, உரையரங்கம், பட்டிமண்டபம், கவியரங்கம், கருத்தரங்கம், விவாதஅரங்கு, வழக்காடு மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு அறிஞர்கள்:
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ், கம்பவாரிதி இ. ஜெயராஜ், திரு த.திருநந்தகுமார், கலாநிதி ஆறு திருமுருகன், கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் தி. வேல்நம்பி, செஞ்சொற் செல்வர் இரா செல்வவடிவேல், வலம்புரி ந. விஜயசுந்தரம், த. சிவசங்கர், கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், அ. வாசுதேவா, செ. சொபீசன், லோ. துஷிகரன், ச. லலீசன், சி. சிவகுமார், ச.முகுந்தன், நாக. சிவசிதம்பரம், கிண்ணியா அமீர் அலி, அலி அக்பர், த.கருணாகரன், ந. ஐங்கரன், இ.சர்வேஸ்வரா, சி.கஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மங்கல இசை
விழாவின் மாலை நிகழ்ச்சிகளில் தினமும் மாலை 4.30 மணி முதல் நம் நாட்டின் பிரபல மங்கல இசைக்கலைஞர்களின் நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறவுள்ளன. முதலாம் நாளில் த. உதயசங்கர் குழுவினரதும், இரண்டாம் நாளில் வி. கே. பஞ்சமூர்த்தி குழுவினரதும், மூன்றாம் நாளில் பி. ரஜீபன் குழுவினரதும் மங்கல இசைக் கச்சேரிகள் நடைபெறவுள்ளன.
புத்தக, சி.டி விற்பனை
விழா நாட்களில் மண்டப வாயிலில் கம்பன் கழகத்தால் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களும் இறுவட்டுக்களும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகளின் இறுவட்டுக்களும் இதுவரை நடைபெற்ற கம்பன் விழாக்களின் இறுவட்டுக்களும் விற்பனைக்காக வைக்கப்படும்.
இரசிகர்களுக்கு வேண்டுகோள்
கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச்சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காலை நிகழ்ச்சிகள் நல்லூர் கம்பன் கோட்ட மேல் மண்டபத்தில் சரியாக 9.30 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.00 மணிவரை நடைபெறும். மாலை நிகழ்ச்சிகள் ஸ்ரீ துர்க்கா மணி மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெறவுள்ளன. கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்றைய தமிழ் இரசிகர்களுக்காக அழைப்பிதழை இங்கே பகிர்கிறோம்.