மாண்போடு புத்தாண்டில் பெருமை கொள்வோம்! -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

மாண்போடு புத்தாண்டில்  பெருமை கொள்வோம்! -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்
 
லகமெலாம் உவப்போடு  உயர்ந்தே ஓங்க
உளங்களிலே அன்பூற்று ஊறித் தேங்க
நலங்களெலாம் ஒருமித்து நன்மை வீங்க
நானிலத்தோர் மனங்களெலாம் அறத்துக் கேங்க
இலங்களெலாம் சிரிப்பினொலி என்றும் தாங்க
இனிமையதன் முழுமையினைச் சகமே வாங்க
நிலங்களெலாம் ஒளிவிளங்க இருளே நீங்க
நித்தியமாய்ப் புத்தாண்டின் பெருமை ஓங்க!

இயற்கையதன் கொடையாக அமைந்த எங்கள்
ஈழமதின் பெருமையெலாம் சிதைந்து தேய
மயக்கமுற அரசியலார் மதியே கெட்டு
மண்ணாக்கிப் பகை வளர்த்து தேயம் மாய்த்தார்
தயக்கமதை விட்டிந்த மண்ணின் மைந்தர்
தாமெல்லாம் ஒன்றிணைந்து உலகமெல்லாம்
வியக்க இன வேற்றுமையை ஒழித்தே மண்ணில்
வீறோடு புகழ் கொள்வோம் விகாரி ஆண்டில்!

மாவோடு சீனிவிலை ஏறியேறி
மலையெனவே உயர்ந்த நிலை மடிவதாக!
நாவோடு பொய்தானும் ஊறியூறி
நலம் சிதைத்த அரசியலும் ஒழிவதாக!
சேயோடு தாயவளும் மாறிமாறிச்
செத்து விழும் நாசமதும் சிதைவதாக!           
ஊரோடு போய் நாமும் ஆறியாறி
உவப்படையப் புத்தாண்டு வருவதாக!

சிங்களவர் தமிழர் இவர் என்று பேசி
சிதைத்தோம் நாம் ஒற்றுமையை, சேர்ந்தே வாழப்
பங்கமிலாக் காரணங்கள் பலவாய் உண்டு
பார்ப்பதனைத் தவிர்த்தோம் நாம், பகையைத் தேடி
மங்குகிற போரதனால் மகிமை தேய்த்தோம்
மண்ணாகி ஈரினமும் மடிந்து போனோம்
பொங்குகிற புத்தாண்டிலேனும் எங்கள்
பொய்மையது தொலைந்து இன்பம் பொங்கிடாதோ?

ஐ.நா.வின் கரங்கள் எமை ஆற்றும் என்றும்
அடுத்தவர்கள் வருகையினால் உயர்வோம் என்றும்
பொய்யான கனவுகளை விட்டே நாங்கள்
புறப்படுவோம் புயவலிமை தன்னால் வாழ
மெய்யான தலைவர்களை மட்டும் ஆக்கி
மேதினியில் எம் இனத்தை உயரச் செய்வோம்
எய்யாத அம்பெனவே சோர்ந்திராமல்
இப்போதே கூர்ங்கணையாய் இலக்கைச் சார்வோம்.

இனப்பகைகள் தனை ஒழிப்போம் ஏற்றம் செய்யும்
இடரதிலாச் சமயநெறி கண்டு வாழ்வோம்
தனமதனை நாம் உழைத்துத் தரணிக்கீவோம்
தன்மானத் தமிழரென நிமிர்ந்து நிற்போம்
குணநிறைவால் உயர் குலத்தோர் என்று சொல்வோம்
குன்றாத பண்புகளைக் குவியச் செய்வோம்
மனம் அனைத்தும் அன்பதனை நிறைத்து நின்று
மாண்போடு புத்தாண்டில் பெருமை கொள்வோம்.
                   ***
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.