நீதித்தராசில் கூட்டமைப்பு: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அரசியல்களம் 04 Oct 2019
(சென்றவாரம்)
மறுபக்கப்பார்வையும் உண்டு. சம்பந்தனைப் பொறுத்தவரை, அவரின் அரசியல் அனுபவம் பாராளுமன்றில் அவரது ஆளுமைமிக்க உரைகள், பேரினத்தாராலும் மதிக்கப்படும் தன்மை, வெளிநாட்டுத் தலைவர்களின் மரியாதையைப் பெறும் தகுதி, அவருக்கு ஒப்பான ஒரு தலைவர் கட்சிக்குள் இல்லாமை என்பவை பற்றியும் சுமந்திரனைப் பொறுத்தவரை, கட்சியில் அவருக்கு நிகரான தகுதிகொண்டோர்தம் இருப்பின்மை. இனப்பிரச்சினையை நிதானமாய் எதிர்கொள்ளும் அவரது ஆற்றல். உலகத்தலைவர்களின் அவருக்கான அங்கீகாரம். இலங்கை மத்தியஅரசின் செயற்பாடுகளில் அவர் காட்டும் ஆளுமை. இலங்கை அரசியல் சார்பானதும் தமிழ்மக்கள் சார்பானதுமான சட்டநடவடிக்கைகளில் அவரது திறமை. என்பவை பற்றியும் ஆராய்தல் அவசியமாகிறது. அவற்றை அடுத்தவாரம் ஆராய்வோம்.
✠✠✠✠✠✠
உதயமான தமிழ்மக்கள் பேரவையின் வளர்ச்சியில்,
தமிழர் கூட்டமைப்பு சற்றுத் தளர்ந்தது உண்மையேயாம்.
இதுநாள் வரை கூட்டமைப்பில் ஆட்சி செய்த,
தமிழரசுக்கட்சியினருக்கு சவால்விட முடியாது தளர்ந்து நின்ற,
மாற்றணியினர், பேரவையின் உதயத்;தோடு,
சற்றுத் தலை நிமிர்ந்தது பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்.
✠✠✠✠✠✠
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வெளியேற்றம்,
தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அருந்தவபாலன் அவர்களின் வெளியேற்றம்,
பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் தடுமாற்றம் என,
பின்னாளில் கூட்டமைப்பில் ஏற்பட்ட விரிசல்கள் பலப்பல.
மாணவர் பலத்தோடு நின்ற கஜேந்திரகுமாரும்,
சில பத்திரிகையாளர்களும் ஒரு சில சமூகப் பிரமுகர்களும்,
முதலமைச்சரோடு தமிழ்மக்கள் பேரவையில் கைகோர்க்க,
இன்று அவர்தம் பலம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும்,
முன்பிருந்ததைவிட தலைதூக்கியிருப்பது உண்மையேயாம்.
✠✠✠✠✠✠
இவை கட்சிகளின் பலம் பற்றிய செய்திகள்.
அதுபற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
ஆனால் அக்கட்சிகளுக்கிடையேயான பலப்பரீட்சையில்,
நம் தமிழினம்; பிளவுபடத்தொடங்கியிருப்பதே கவலை தரும் விடயமாகிறது.
✠✠✠✠✠✠
தமிழினத்தின் ஏகத்தலைமை என கோஷமிட்டு,
அக்கொள்கையைச் சாத்தியப்படுத்தி வெற்றி கண்ட சம்பந்தன் அவர்களே,
இவ் இனப்பிளவுக்கான மொத்தப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இனப்பற்றைக் கடந்த கட்சிப்பற்று,
ஆளுமையற்ற தலைமைச் செயற்பாடு,
ஜனநாயகமற்ற கட்சி வழிநடத்தல்,
பிரச்சினைகளை நேர்மையாய் எதிர்கொள்ளும் வலிமையின்மை,
முடிவுகளை எடுப்பதில் தீர்க்கதரிசனமின்மை,
பொய்மைகளால் மக்களை ஏமாற்றும் இயல்பு என,
சம்பந்தர்மீதான குறைபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இனத் தலைவராய் மட்டுமன்றி,
எதிர்க்கட்சித் தலைவராயும் அவர் சரிவரச் செயற்படவில்லை என்பதற்கு,
பாராளுமன்றத்திற்கு வந்த வங்கி ஊழல் பற்றி,
அவர் கடைசிவரை வாய் திறவாமல் இருந்ததுவே சாட்சியாம்.
✠✠✠✠✠✠
இங்ஙனமாய் அவரது இறுக்கமில்லாத தலைமைத்துவமே,
மேற்சொன்ன இனப்பிளவுக்கு வித்திட்டிருக்கிறது என்பது உண்மை.
பெயரளவுக்குத் தான் தலைவராய் இருந்துகொண்டு,
தலைமைக் கடமைகளையெல்லாம்,
வேறொருவரிடம் விட்டுவிட்டு இருப்பதும்,
கட்சிக்குள் குழப்பங்கள் நிகழ்கிறபொழுது,
பிழை செய்தவர்களைத் தட்டிக்கேட்டுத் தண்டிக்கத் தெரியாதிருப்பதுவும்,
இன வளர்ச்சியைவிட கட்சி வளர்ச்சிக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதுவுமே,
அவரது கட்சியினதும் இனத்தினதும் இன்றைய தளர்வுகளுக்கு,
அடிப்படைக் காரணம் என்பதில் ஐயமில்லை.
✠✠✠✠✠✠
வெளிப்பட உண்மையைச் சொல்லவேண்டுமானால்,
இன்றைய நிலையில்,
கூட்டமைப்பின் எழுதப்படாத தலைவராய் சுமந்திரனே இயங்கி வருகிறார் என்பது வெளிப்படை.
அதன் பொருத்தப்பாடு வேறுவிடயம்.
ஆனால், பல நேரங்களில் சுமந்திரனை முழு அதிகாரத்தோடு இயங்கவிட்டுவிட்டு,
இக்கட்டுகள் வரும்போது கைவிரித்து நிற்கும் சம்பந்தனாரின் நிலை ரசிக்கத்தக்க ஒன்றல்லவாம்.
கூட்டமைப்புக்குள்ளும் சரி தமிழரசுக்கட்சிக்குள்ளும் சரி,
சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் பலரால் ரசிக்கப்படவில்லை என்பது சர்வநிச்சயம்.
சிறிதுகூட ஜனநாயகத் தன்மையின்றி,
தனியொருவராய் இயங்க நினைக்கும் சுமந்திரனின் போக்கு,
நிச்சயம் தமிழினத்திற்கு நன்மை செய்யப்போவதில்லை.
பதவியூடு அவருக்கான அதிகாரத்தை வழங்கவும் விரும்பாமல்,
அதே நேரத்தில் அவரைக் கட்டுப்படுத்தவும் தெரியாமல்,
ஜனநாயகத் தன்மையின்றி இஷ்டப்படி சுமந்திரனை இயங்கவிடும் சம்பந்தனாரின் போக்கும்,
வரவேற்கத்தக்க ஒன்றல்லவாம்.
✠✠✠✠✠✠
முதுமையின் இயலாமைதான் சம்பந்தரின் இப்போக்குக்குக் காரணம் என்றால்,
அவ் உண்மையை மக்கள் மன்றில் வெளிப்பட உரைத்து,
தலைமையிலிருந்து தான் விலகி,
சுமந்திரனைத் தனது பதவியில் உலகறிய அவர் உட்கார வைக்கலாம்.
கூட்டமைப்பில், பெயருக்குச் சம்பந்தன் தலைமை தாங்க,
முழுக்கமுழுக்க முடிவுகள் எடுக்கும் வேலையையும்,
அதை நடைமுறைப்படுத்தும் வேலையையும் சுமந்திரனே செய்வது,
தேவையற்ற சர்ச்சைகள் உருவாகக் காரணமாய் இருக்கிறது.
இதைவிட தன்னை கட்சியில் ஓர் ஆலோசக நிலையில் ஆக்கிக் கொண்டு,
வெளிப்பட்ட தலைவராக சுமந்திரனை ஆக்குவது,
பல சர்ச்சைகளைத் தவிர்க்கும் என்பது நிச்சயம்.
அங்ஙனம் செய்தால் கூட்டமைப்புக்குள் ஜனநாயகத் தன்மையாவது மிச்சப்படும்.
✠✠✠✠✠✠
கூட்டமைப்பு என்பதைவிட்டு தமிழரசுக்கட்சி என்று பார்த்தாலும்கூட,
சுமந்திரனுக்கு இம் முதலிடம் வருவதுக்காம் காரணம் என்ன? என்றும்,
அத்தகுதி அவருக்கு வழங்கப்படுவதன் நியாயம் என்ன? என்றும்,
கட்சிக்குள்ளேயே பலரது மனதில் கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.
வெளியில் கேட்டால் எங்கே தாமும் ஒதுக்கப்படலாம் எனும் அச்சத்தில்,
பலரும் மனம் குமைந்தபடி மௌனித்து இருப்பது வெளிப்படை.
என்ன அடிப்படையில் சம்பந்தனார் பதவிப் பரிசுகளையும்,
அதிகார விநியோகத்தையும் செய்கிறார் என்று எவருக்கும் புரியவில்லை.
✠✠✠✠✠✠
தமிழர் விடுதலைக் கூட்டணியில்,
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர் முன்னணியில் இருந்த காலத்தில்,
நான்காம், ஐந்தாம் இடத் தலைவராக பலருக்குப் பின்னால் இருந்த சம்பந்தர்,
காலத்தின் கோலத்தால் திடீரெனத் தமிழினத்தின் தலைவரானார்.
தொடர்ந்த அவரது அதிர்ஷ்டத்தால் சிலகாலங்களிலேயே,
இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அவரைத் தேடி வந்தது.
ஆனால் அந்தத் தலைமைக் கடமைகளை,
அவர் செம்மையுற நிறைவேற்றினாரா? எனும் கேள்விக்கு,
'ஆம்' எனும் பதிலை எவராலும் மகிழ்வோடு சொல்ல முடியாது.
✠✠✠✠✠✠
இதுபோலத்தான் சுமந்திரனிலும் எதிரிகளால் மட்டுமன்றி,
நடுநிலையாளர்களாலும் கூட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
**மற்றவர்களை மதிக்கத் தெரியாத தன்மை.
**மக்கள் மனமறிந்து பேசத் தெரியாத தன்மை.
**தான் எட்ட நினைக்கும் முடிவுகளையும் அதற்காகத் தான் திட்டமிட்டிருக்கும் பாதையையும்
**மக்கள் மன்றில் சரிவர எடுத்தியம்பி அவர்தம் ஆதரவைப் பெறாமல் இயங்கும் தன்மை.
**தகுதி உள்ளவர்களைக் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளாத குறைபாடு.
**தனது தனிப்பட்ட ஆதரவாளர்களைக் கட்சி வரலாற்றை மறந்து முதன்மைப்படுத்தும் தவறு.
**தன்னுடைய 'சீனியர்களின்' அபிப்பிராயம் பெறாமல் நடக்கும் போக்கு.
**ஊடகங்களின் ஆதரவுகளை இழந்து நிற்கும் நிலை.
**அவர்மேல் சுமத்தப்படும் சமயச் சார்பின் நிழல்.
**மக்கள் தலைவனாய் அன்றி சட்டத்தரணியாய் மட்டும் தன் சாதனைகளை நிலைநிறுத்தி கட்சியை வளர்க்க நினைக்கும இயல்பு.
**ஆற்றலில்லாதவர்களால் கட்சியை நிரப்பி தனி ஒருவராய்த் தன் ஆற்றல் காட்டி தனது
முக்கியத்துவத்தை உணர்த்த நினைக்கும் செயற்பாடு.
என இக்குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீள்கிறது.
இன்றைய நிலையில்,
கட்சிக்குள் சுமந்திரனின் அவசியத்தை அனைவரும் உணர்ந்தாலும்,
மேற் சொன்னதான விடயங்களால்,
அவர் பலரதும் எதிர்ப்பையும் சம்பாதித்து நிற்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மையாம்.
✠✠✠✠✠✠
நாட்டின் அண்மைக்கால செயற்பாடுகளில்,
சுமந்திரனின் அறிவு சார்ந்த நகர்வுகள் பலராலும் கவனிக்கப்பட்டன.
ஜனாதிபதியின் பாரளுமன்றக் கலைப்புக்கு எதிராய் அவர் நீதிமன்றத்தில் காட்டிய ஆற்றல்,
கிண்ணியா போன்ற இடங்களில் தொல்பொருளாளர்களால் தமிழர்களின் உரிமைமீது தொடுக்கப்பட்ட,
மறைமுகப் போருக்கு எதிரான அவரின் நீதி சார்ந்த செயற்பாடு,
சுயாட்சி உரிமை பற்றிய நீதிமன்றத் தீர்ப்பில் அவர்காட்டிய ஆளுமை என,
பல விடயங்களில் அவர் செய்த சாதனைகளை யாரும் மறுக்கமுடியாது என்பது உண்மையே.
✠✠✠✠✠✠
இங்ஙனமாய் அவர் பெற்ற வெற்றிகள்,
அவரின் சட்ட அறிவுக்காம் சான்றுகளாய்த் திகழ்கின்றன. அதில் சந்தேகமில்லை.
ஆனால் இச் சாதனைகள் அவரை ஓர் சட்டவல்லுனராய் நிரூபித்திருக்கின்றனவேயன்றி,
அவரை ஒரு மக்கள் தலைவனாய் நிரூபித்ததாய்ச் சொல்லமுடியாது.
தன் அறிவுச் சக்தியை வைத்தே மேற்சொன்ன விடயங்களை அவர் சாதித்திருக்கிறார்.
மக்கள் சக்தியை வைத்து அவர் சாதித்த விடயங்கள் மிகமிகக் குறைவுதான்.
மேல் விடயங்களால் ஓர் வக்கீலாய் வெற்றி பெற்றிருக்கும் சுமந்திரன்,
அவற்றைக் கடந்து ஒரு மக்கள் தலைவனாய்ச் சாதிக்கவேண்டிய விடயங்கள்,
வரிசையில் காத்திருக்கின்றன.
✠✠✠✠✠✠
(நீதித்தராசு நிறுப்பது அடுத்த வாரம் நிறைவுறும்)