நீதித்தராசில் தமிழ்மக்கள் கூட்டணி: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

நீதித்தராசில் தமிழ்மக்கள் கூட்டணி: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

லகம் மகிழ,
தமிழ்த்தலைமைகளின் இடையே ஜனாதிபதித் தேர்தல்பற்றி,
சென்றவாரம் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாடு மகிழ்ச்சி தருகிறது.
இவ் இணைப்பைப் பொறுப்புணர்ச்சியோடு உருவாக்கிய,
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
எனது சென்ற வாரக் கட்டுரையிலும்,
அதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
யார் குத்தினால் என்ன? நெல் அரிசியானால் சரிதான்.

 


நடந்து முடிந்திருக்கும் இணைப்பில்,
சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் அணியும்,
மு.முதலமைச்சரின் தமிழ் மக்கள் கூட்டணியும்,
இணைந்திருப்பது அல்லது இணைக்கப்பட்டிருப்பது,
நிச்சயம் மகிழ்ச்சி தரும் விடயமேயாம்.
வேற்றுமைகள் இல்லாத உலகம் இல்லை.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் விவேகம்.
இம்முயற்சி வருங்காலங்களிலும் தொடர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.



இனி தமிழ் மக்கள் கூட்டணி பற்றிய ஆய்வினுள் நுழைவோம்.
சுருங்கச் சொல்லவேண்டுமானால்,
த.ம.கூட்டணியை ஓர் அகதிமுகாம் என்றே அறிவிக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து,
கடைசி நாள்வரை தனது பதவிச் சுகத்தை அனுபவித்துவிட்டு,
வெளியேற்றப்படவேண்டிய நிலையில் வெளியேறிய,
முன்னால் நீதியரசர் விக்னேஸ்வரனால் உருவாக்கப்பட்டிருக்கும் கட்சி இது.



பதவி கிடைக்காத வருத்தத்தில் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய அருந்தவபாலன்,
கூட்டமைப்பால் அலட்சியப்படுத்தப்பட்டு வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
அதுபோலவே கூட்டமைப்பிலிருந்து வெளிவந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய,
கதியிலிகளின் கூட்டாக அமைந்ததால்த்தான்,
இ;க்கட்சியை ஓர் அகதிமுகாம் என்றேன்.



தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக ஏற்பட்டிருக்கும்,
இன்னொரு கூட்டுத்தலைமை இது.
தமிழ் மக்கள் உள்ளத்தை ஈர்க்கும் வகையில்,
தனித்த ஒரு கட்சியோ, தலைமையோ,
இன்னும் உருவாகவில்லை எனும் உண்மையை,
இக்கூட்டுத்தலைமைகள் நிரூபணம் செய்கின்றன.



கூட்டமைப்புக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் இடையில் வெடித்த பகை,
ஒருசிலரால் தூண்டப்பட்டு,
மாற்று மக்கள் தலைமை என்ற பெயரில்,
தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பாய் உருவாகிற்று.
செயற்பலம் வேண்டி நின்ற முதலமைச்சரும்,
தலைமைப்பலம் வேண்டி நின்ற மற்றை அணிகளும்,
இப்பேரவையினூடு இணைக்கப்பட்டன.
முதலில் இது கட்சிகளையும் அரசியலையும் கடந்த,
மக்கள் நெறிசெய் அமைப்பேயென,
பொய்மை முகமூடியிட்டு தொடங்கப்பட்ட இப்பேரவையின் முகமூடி,
தனது 'தமிழ்மக்கள் கூட்டணி' எனும் கட்சியை,
இப்பேரவையின் பொதுக்கூட்டத்திலேயே
முன்னாள் முதலமைச்சர் ஆரம்பித்தபோது முழுதாய்க் கழன்று போயிற்று.



இக்கட்சியின் முழுமைப்பலம்,
முன்னாள் முதலமைச்சர் மீதான மக்கள் ஆதரவே என்பது வெளிப்படை.
ஒரு கட்சியை முழுதாய் இயக்குகிற பலம்,
முன்னாள் முதலமைச்சரிடம் இருக்கவில்லை.
இக்கட்சியோடு இணைந்து செயல்பட முனைந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடமோ,
சுரேஷ் பிரேமச்சந்திரனிடமோ மக்களால்  ஏற்கப்படும் தலைமைத் தன்மை காணப்படவில்லை.
எனவே ஒருவர் குறையை ஒருவர் நீக்கும் வண்ணம்,
இவர்தம் இணைப்பு நிகழ்ந்ததாலேயே மேற்கட்சி உருவாகிற்று.



முதலமைச்சரைப் பொறுத்தவரை மாகாணசபையால் வெளிப்பட்ட,

💢நிர்வாகத்திறன் இன்மை.
💢நன்றி அறிதல் இன்மை.
💢நடுவுநிலைமை இன்மை.
💢முன்னுக்குப்பின் முரணான செயற்பாடுகள்.
💢இனப்பற்றின்மை.
💢முதுமையால் விளைந்த செயற்பாட்டு ஊக்கமின்மை.
💢தேவைக்கு அதிகமான தன் முனைப்பு.

 
போன்ற அவரது குறைபாடுகள்,
இனத்தின் தலைமைக்குப் பொருத்தமற்றவர் என,
அவரைத் தெட்டத்தெளிவாக விளக்கம் செய்து நிற்கின்றன.
மேற் சொன்ன விடயங்கள்பற்றிய எனது விமர்சனங்களை,
ஏலவே எனது முன்னைய கட்டுரைகளில் விரிவாக விளக்கம் செய்துள்ளேன்.
அவற்றின் சுருக்கம் கீழே.




💥ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் உருப்படியாய் ஒன்றும் செய்யாத அவரது ஆட்சியே, இவரது நிர்வாகத்திறமின்மைக்காம் சான்று.
💥தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தோரை, சரியான காரணம் சொல்லாமல் பகைத்தமையே, இவரது நன்றியறிதல் இன்மைக்காம் சான்று.
💥தனக்கு வால் பிடித்த, குற்றம் நிரூபிக்கப்பட்ட  ஒரு அமைச்சருக்காக, மற்றைய அமைச்சர்களின் மேல் வீண்பழி சுமத்தியமை இவரது நடுவுநிலைமை இன்மைக்காம் சான்று.
💥முன்னாள் ஜனாதிபதியின் முன்பாக, சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என உரைத்துப் பின் அதைச் செய்தமையும், சுரேஷின் தம்பிக்கு ஆரம்பத்தில் பதவி கொடுக்க மறுத்து, கூட்டமைப்பின் பகை வந்தபின் பிடிவாதமாய் அவருக்குப் பதவி கொடுத்த தன்மையும், அவரது முன்பின் முரண்பாட்டுச் செயல்களுக்காம் உதாரணங்கள்.
💥மக்கள் நலம் பற்றிய அக்கறை இல்லாமல், சுன்னாகக் குடிநீர் விடயத்தில் இவர் நடந்து கொண்ட விதம், இனப்பற்றின்மைக்காம் எடுத்துக்காட்டு.
💥நிர்வாக விடயத்தில் உலகறிந்த அவரது சோம்பல் தன்மை. அவரது முதுமையால் விளைந்த செயற்பாட்டின்மைக்கான சாட்சி.
💥பிழை என்று தெரிந்த பின்பும் தன் ஆதரவாளர்களைக் காக்கவென, பிழைக்கு மேல் பிழை வளர்த்த தன்மை அவரது தன்முனைப்புக்காம் வெளிப்பாடு.

இங்ஙனமாய் இக்கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சரின்,
இறந்தகாலச் செயற்பாடுகள்,
ஓர் இனத்தலைமைக்கான ஏற்றம் அவரிடம் இல்லை என்பதை நிரூபித்து நிற்கின்றன.
மு.முதலமைச்சரைப் பொறுத்தவரையும்,
தலைமை விருப்பு என்பதுவே,
இவரின் தனித்த நோக்கமாய் இருப்பது வெளிப்படை.
முதலமைச்சராய் இவரின் செயற்பாடுகள்,
இவர் சார்ந்த நீதித்துறையாலேயே கண்டிக்கப்பட்டிருப்பது,
இவர்தம் தெளிவின்மைக்காம் அடையாளம்.



ஆனாலும் அவரது ஆன்மீகத் தோற்றத்தாலும்,
முன்னாள் பதவிப் பவிசாலும்,
தீர்க்கதரிசனமின்றி உணர்ச்சிகளைக் கிளறும் வகையில் அவர் விடும் அறிக்கைகளாலும்,
கூட்டமைப்பின் மேல் மக்கள் கொண்ட கோபத்தின் எதிர்வினையாலும்,
ஏற்பட்டிருக்கும் ஒருவகை மக்கள் ஈர்ப்பு,
அவரோடு இணைந்த மற்றை இருவர்க்கும் இல்லாதது.



கூட்டமைப்பினரால் முதலமைச்சர்மேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது,
அரசியலை விட்டே ஓட நினைந்த முன்னாள் முதலமைச்சருக்கு ஆதரவு செய்து,
அப்பிரச்சினையைப் பெரிதாக்கி மக்கள் மன்றில்,
மு.முதலமைச்சரை ஒரு 'ஹீரோ' ஆக்கிய பெருமை,
கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் அணியினர்க்கே உரியதாம்.



தலைமைமீதான உண்மை விஸ்வாசம் இன்மையே,
இக்கட்சி இணைப்பில் ஏற்பட்ட  பெரிய பலயீனமாம்.
ஒருமித்த இலட்சியம் இன்மையையும் இவர்தம் இரண்டாம் நிலை பலயீனமாக உரைக்கலாம்.
உண்மை நட்பும், ஒருமித்த இலட்சியமும் இல்லாது,
இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாடு,
வெறும் புத்திக்கணக்கால் ஏற்பட்ட இணைப்பேயாம்.



                                                  (அடுத்தவாரமும் நீதித்தராசின் நிறுவையில் தமிழ்மக்கள் கூட்டணி)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.