நேர்காணல் 10

நேர்காணல் 10
மற்றவை 28 Aug 2026

#சென்றவாரத் தொடர்ச்சி :

உங்களின் பதிலால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நேர்காணல் எவ்வளவு நீண்டாலும் அதுபற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் எண்ணங்களை விரிவாகப் பதிவு செய்யுங்கள். சரி, இனி இந்திய இராணுவம் யாழில் உள் புகுந்த இடத்திலிருந்து உங்கள் எண்ணங்களை மீண்டும் நீங்கள் சொல்லத் தொடங்குங்களேன்.

#பதில் :

இந்திய இராணுவத்தினரால் நல்லூர் வீதிக்குள் அனுப்பப்பட்டு நாம் நின்றிருந்த பொழுது, ஒரு தாய்க்கு ஏற்பட்ட அந்தத் துயர சம்பவம் எங்கள் மனதைப் பெரிதும் பாதித்தது. நமக்கெல்லாம் இன்னும் என்னென்ன துன்பம் நேரப் போகிறதோ என்ற அச்சமும் எங்களை ஆட்கொண்டது.

நாங்கள் கோயில் வீதிக்குள் நுழைகிறபொழுது, காலை நான்கு மணியளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் நடந்து நாங்கள் எம்மை சுதாகரித்துக் கொண்டபொழுது காலை  எட்டு, எட்டரை மணி போல ஆகிவிட்டது. சூரியன் உதித்து நல்ல வெளிச்சமும் வந்துவிட்டது.

அப்போதுதான் எங்களது கம்பன் கோட்டத்திற்கு முன் ஒழுங்கையில் இருந்த, எனது அம்மா, அப்பா, தங்கை, கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை குடும்பத்தார் ஆகியோர், கோயிலுக்குள் வராததை நாம் கண்டு கொண்டோம். எனக்கு நெஞ்சு பதறத் தொடங்கிவிட்டது.

ஊர்மக்கள் எல்லாம் கோயிலுக்குள் வந்த பிறகு, இவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் நான் குழம்பிப் போனேன். குமர்ப் பிள்ளையான என் தங்கையும் அங்கே இருந்தது எனது பயத்தை மேலும் அதிகரித்தது.

இந்திய இராணுவத்தினர் நல்லூர் வீதிகளெங்கும் “சென்றிகள்” அமைத்துவிட்டபடியால், உடன் எங்கள் வீட்டுப்பக்கம் போய்ப் பார்க்கவும் முடியவில்லை. எனது நிலையைக் கண்டு பேராசிரியர் சண்முகதாஸ் “நீர் கவலைப்படவேண்டாம். வாரும், நானும் நீருமாகப் போய் இராணுவத்திடம் அனுமதிகேட்டு, உள்ளே சென்று பார்க்கலாம்.” என்று சொல்லி என்னையும் அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். ஒரு தந்தைபோல் அன்று அவர் காட்டிய கருணையை என்வாழ்நாள் முழுதும் நான் மறக்கமாட்டேன்.

நானும் பேராசிரியரும் தலைக்குமேல் கையைத் தூக்கிக் கொண்டு, அந்த இராணுவ “சென்றி”யை நோக்கி நடக்கத் தொடங்கினோம். எங்களைக் கண்டதும் அங்கு நின்ற இராணுவ வீரர்கள் ஹிந்தியில் ஏதோ சத்தம் போட்டு கத்தத் தொடங்கினார்கள்.

எனது பெற்றோர் இருந்த அந்த ஒழுங்கையின் வாசலில், “கொங்கிறீட்டால்” மேற்தளம் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கடை இருந்தது. அந்தக் கடையின் மேற்தளத்தில் “ஷெல்” அடிக்கும் ஒரு “மெஷினை”ப் பூட்டி வைத்து சில இராணுவத்தினர் அதைச்சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.  அதன் கீழே மண்மூடைகளால் ஒரு “சென்றி” அமைக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் கையைத் தூக்கியபடியே ஆங்கிலத்தில் அவர்களோடு பேச முயன்றார். நாங்கள் பேசியது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் பேசியது எங்களுக்குப் புரியவில்லை. ஆனாலும் அங்கு நின்றுகொண்டிருந்த, கொஞ்சம் உயர் அதிகாரி போல்த்தோன்றிய ஒருவனுக்கு அருகில் சென்று, “அவ ஹவுஸ்”, “அவ பேரன்ஸ்” என ஒவ்வொரு வார்த்தைகளாய்ச் சொல்லி, விரல்களால் அந்த ஒழுங்கையைச் சுட்டிக்காட்டி நாம் “ஊமைப்பாஷை” பேச, அந்த அதிகாரி கொஞ்சம் புரிந்து கொண்டான்.

“உடன்போய்க் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என அவன் ஹிந்தியில் தந்த உத்தரவை, நாமும் புரிந்து கொண்டோம். அந்த அதிகாரி கைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டே எம்மை நடக்கச் சொன்னான். கைகளைத் தலைக்கு மேலே தூக்கி அதிகநேரம் வைத்திருப்பது, எவ்வளவு சிரமமான காரியம் என்று, அன்று தான் நான் புரிந்து கொண்டேன். பாவம் பேராசிரியரும் எனக்காகச் “சிலுவை சுமந்தார்”.

நாங்கள் அந்த ஒழுங்கைக்குள் ஒரு ஐம்பது அடிகூட நடந்திருக்கமாட்டோம். திடீரென மிகப்பெரிய ஒரு வெடிச்சத்தம் காதைப் பிளந்தது. ஒரு நிமிடம் என்ன செய்வதென்று எங்கள் இருவருக்கும் புரியவில்லை. எங்களை உள்ளே போகவிட்டு பின்னாலிருந்து “ஷெல்லால்” அடித்துவிட்டார்களோ? என நினைந்து மனம் நடுங்கிப் போய்விட்டது.

சில வினாடிகளுக்குள், நாம் இன்னும் சாகவில்லை என உறுதி செய்துகொண்டு, முன்னைவிட வேகமாக நடந்து என் பெற்றோர் இருந்த வீடு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். வீட்டை நெருங்க நெருங்க நெஞ்சு படபடத்தது. கற்பனைமிகுந்த என்னுடைய மனம் என் பெற்றோர்களும், சகோதரியும், மற்றவர்களும் என்ன கோலத்தில் கிடக்கப்போகிறார்களோ? எனப் பற்பலவிதமாய்க் கற்பனை செய்து என்னை மேலும் மிரட்டியது.

நல்லவேளை நான் பயந்தமாதிரி ஒன்றும் நடக்கவில்லை. எனது குடும்பத்தாரும், கவிஞர் குடும்பத்தாரும் கொஞ்சம் பயந்தபடி உள்ளிருந்தார்கள். அவர்களைக் கண்டபிறகு தான் எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது. உடனடியாக அவர்களைப் “புறப்படுங்கள், புறப்படுங்கள்” என விரட்டி, கையில் கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு கதவுகளைக்கூட பூட்ட நேரமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்.

எனது தந்தையார் வயது மூப்புக்காரணமாகத் தளர்ந்திருந்தார். தடியூன்றித்தான் அப்பொழுது அவர் நடப்பார். பயத்தின் காரணமாக அவரையும் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஒருவிதமாய்க் கோயிலுக்குள் வந்து சேர்ந்தோம்.

மழைவேறு தூறத்தொடங்கிவிட்டது. உள்ளே போக நினைந்து கோயிலுக்குள் கால் வைத்தால், அங்கு முழு இடத்தையும் முன்னே போன மக்கள் தமக்காக்கி வைத்திருந்தார்கள். முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருடைய கழிவுகளால் கோயில் ஆஸ்பத்திரி மலசலகூடம் போல காட்சியளித்தது. அவ்வளவு நாற்றம். கூரை போடப்பட்டிருந்த கோயில் உள்வீதிக்குள் துளியளவுகூட இடமிருக்கவில்லை.

மழையால் பலருக்கும் வயிற்றோட்டமும் காய்ச்சலும் தொற்ற, மக்கள் மேலும் சிரமப்பட்டார்கள். மலம்கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்ய வெளியில் செல்ல முடியாத நிலையில், சில தாய்மார்கள் கோயில் தீர்த்தக்கேணிக்குள்ளேயே இறங்கி அவர்களைக் கழுவிச் சுத்தம் செய்ததை நான் எனது கண்ணாலேயே கண்டேன்.

ஒருமாதிரியாக தீர்த்தக்கேணியைச் சுற்றியிருந்த அந்த கூரைப்பகுதிக்குள், பழனியாண்டவருக்கு முன்பாக, ஓரிடத்தைக் கைப்பற்றி ஒருமாதிரியாக அவ்விடத்தில் அமர்ந்து கொண்டோம். நான், இரத்தினகுமார், குமாரதாசன், ஈசு, எங்கள் அம்மா, அப்பா, தங்கை, பேராசிரியர் சண்முகதாஸ் என எட்டுப்பேர் அந்தச் சிறிய இடத்தில் அமர்ந்து கொண்டோம். கவிஞர் குடும்பத்தினர் வேறொரு இடத்தில் இடம்பிடித்ததாய் ஞாபகம்.

கேணிப்படி ஓரமாகத்தான் எங்களுக்கு இடம் கிடைத்தது. மேலே போடப்பட்டிருந்து கூரையின் எல்லைப்பகுதி அது. மழை பெய்தபோது, தூவானம் எங்கள்மேல் வீழ்ந்தது. வேறு வழியில்லாமல் கையில் கொண்டு வந்திருந்த “பெட்சீற்றால்” உடம்பை மூடிக்கொண்டு நனைந்தபடி அந்த மழையைச் சமாளித்தோம்.

எனது தந்தையார் “டயபற்றிக்” நோயாளி. அவர் வசதியாக வாழ்ந்தவர். இந்தச் சூழலில் அவர்தான் மிகவும் சிரமப்பட்டார். ஒரு பத்தடிக்கு ஆறடி இட எல்லைக்குள் நாம் அனைவரும் உட்கார்ந்திருந்தோம். இடவசதியீனம் ஒருபக்கமும் மழைக்குளிர் இன்னொரு பக்கமுமாக எம்மை வாட்டியது.

“டயபற்றிக்” காரணமாகவும், மழைக்குளிர் காரணமாகவும் என் தந்தைக்கு அடிக்கடி “யூறினுக்குப்” போகவேண்டியிருந்தது. வீதி முழுவதும் மக்கள், உட்கார்ந்தும் படுத்தும் இருந்தார்கள். கோயிலில் மின்சாரம் வேறு இல்லை என்று ஞாபகம்.

அதற்குள் தடி ஊன்றியபடி வெளிவீதிக்குச் சென்று மழையில் நனைந்து கொண்டு அவர் தன்னுடைய சிரமத்தை நீக்க, பட்டபாட்டை இப்போது நினைத்தாலும் என் கண்கள் கசிகின்றன. இன்று விட்டு விடுவார்கள், நாளை விட்டுவிடுவார்கள் என்று நினைத்த எங்கள் நினைப்புகள் பொய்யாகின.

கிட்டத்தட்ட ஒருவாரமளவில்  நாங்கள் அங்கேயே தங்கவேண்டியிருந்தது. அப்போது இரத்தினகுமாருடைய பெற்றோரின் வீடு கோயிலுக்கு அருகில்த்தான் இருந்தது. அவர்கள் ஏதோ விதத்தில் கோயிலுக்குள் வராமல் அங்கேயே தங்கி இருந்து கொண்டார்கள். கோயில் வெளிவீதிக்கருகில் இருந்த முள்ளுக்கம்பி வேலிக்கூடாக உள்ளே புகுந்து, அவர்களது வீட்டுக்குப் போய்வரக் கூடியதாக இருந்தது. அதனால் காலைக்கடன் முதலியவற்றை ஒருவாறு எம்மால் முடிக்க முடிந்தது.

அவர்கள் வீட்டிலிருந்து வந்ததோ! அல்லது யாராவது கொண்டு வந்து தந்தார்களோ! சரியாக ஞாபகத்தில் இல்லை. அவ்வப்போது எங்கள் கைகளுக்கு இரண்டு, மூன்று சோற்றுப் பார்சல்கள் வந்து சேர்ந்தன. தனியே பீற்றூட் கறியும் சோறும் மட்டும்தான்.

முன்பு, யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்குப் போகையில், அங்குள்ள “டாய்லட்டைக்” கடக்கும் போது, வயிற்றைக் குமட்டிக் கொண்டுவரும். இடநெருக்கடி காரணமாக அந்த “டாய்லட்டுகளுக்கு” வெளியே கூட, நோயாளிகள் சிலர் தங்கியிருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த நாற்றத்திற்குள் இருந்து கொண்டு எப்படித்தான் இவர்கள் சாப்பிடுகிறார்களோ என நினைந்து அருவருப்படைவேன்.

அப்போது, நல்லூர்க் கோயிலுக்குள்ளும் அதைவிட மோசமான நாற்றம் இருந்தது. ஒருசில நாட்களுக்குள்ளேயே அந்த நாற்றம் எங்களுக்கும் பழகிப்போய்விட்டது. அந்த நாற்றத்திற்குள் இருந்துகொண்டே அந்தச் சோற்றுப்பார்சலைப் பகிர்ந்து ஆனந்தமாய் உண்டோம்.

நான் வாய் ருசி பிடித்தவன். பத்துக்கறிகளோடு உணவிருந்தாலும் ஏதாவது குறைநிறை சொல்லித்தான் சாப்பிடுவேன். சாப்பாட்டில் என்னைத் திருப்திப்படுத்துவது கடினமான காரியம் என்று, என்னைச் சார்ந்தவர்கள் எப்போதும் சொல்வார்கள்.

அப்படிப்பட்ட  எனக்கு, “அருமையாய்க்” கிடைத்த அந்தச் சோறும், பீற்றூட் கறியும் அமிர்தம் போல் சுவைத்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். “கேட்டிலும் உண்டு ஓர் உறுதி” என வள்ளுவர் சொன்ன வார்த்தைகள் அப்போதெல்லாம் என் நினைவுக்கு வரும்.

அந்த நாற்றத்திற்குள்ளும் எப்படி இருந்து சாப்பிட்டோம் என்று நினைக்க இப்போது வியப்பாய் இருக்கிறது. இறைவன் விதம்விதமான அனுபவங்களையெல்லாம் தந்து எப்படியெல்லாம் நம்மைப் பக்குவப்படுத்துகிறான் என்று நினைக்கத் தோன்றுகிறது. சாப்பாட்டின் ருசி பசியில்த்தான் தங்கியிருக்கிறது என்ற உண்மை அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

அந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் சந்தோசமாக இருந்ததுதான் எனக்குப் பெரிய ஆச்சரியம். ஒரு சிறிய இடத்திற்குள் அத்தனை பேரும் நெருங்கியிருந்தோம். “றேடியோ”, “ரி.வி”, “பேப்பர்”, “ரெலிபோன்”, புத்தகம் என எந்தப் பொழுதுபோக்குக் கருவியும் எம் கையில் இருக்கவில்லை. அதனால் ஆளுக்காள் நெருங்கிப் பழக முடிந்தது.

அந்தச் சூழ்நிலையிலும் ஆளையாள் கிண்டலடித்தும், நகைச்சுவை சொல்லியும், சூழ்நிலைச் சம்பவங்களை ரசித்தும் மகிழ்ந்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்தோம். எனக்குத் தெரிந்த இலக்கிய விடயங்களை நான் எடுத்துச் சொல்வேன். மற்றவர்கள் கேட்டு மகிழ்வார்கள். பேராசிரியர் சண்முகதாஸ்கூட தன் தரம் மறந்து நான் சொல்லும் விடயங்களை ஆர்வமாகக் கேட்பார்.

இரத்தினகுமார், குமாரதாசன், ஈசு எல்லோரும் இளைஞர்களாக இருந்தார்கள். அவர்கள் மத்தியில் இங்கு நான் சொல்ல முடியாத சில “கிசுகிசு”க்களும் பரிமாறப்பட்டன. பேராசிரியரும் அவற்றைக் கேட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.

நான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் பலவற்றில், துன்பமே இன்பமாக மாறிய பல தருணங்கள் இருந்தன. அவற்றுள் நல்லூருக்குள் நாம் இருந்த தருணத்தையும் ஒன்றாய்ச் சொல்லலாம். இன்பத்துள் துன்பத்தினையும், துன்பத்துள் இன்பத்தினையும் பொதித்து வைத்த ஆண்டவனுடைய கருணையை நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

அப்போது வசதியீனத்தால் எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கத்தை இப்போது நினைத்துப் பார்க்க ஓர் உண்மை புலனாகிறது. பெரியவீடு, தனித்தனி அறைகள், ஆளுக்கொரு கட்டில், தொலைபேசி, ரி.வி, றேடியோ, பேப்பர் என வசதிகள் கூடக்கூட அதனால் மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கம் இழந்து தனித்தீவுகளாய் ஆகிவிடுகின்றனர்.

வசதிக்குறைவுதான் மனித உறவை வளர்க்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒளவை “இடம்பட வீடெடேல்” என்று சொன்னதும் “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்று நமது பெரியவர்கள் சொன்னதும் அதனால்த்தானோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

இப்படியாகக் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்த நிலையில், ஒருமாதிரியாக வீடு செல்ல இந்திய இராணுவம் எங்களை அனுமதித்தது. இரத்தினகுமாரை, அவரது வீட்டார் தங்களோடு வந்து தங்கும்படி அழைத்தார்கள். 

ஈசுவும், நானும், இரத்தினகுமாரும், குமாரதாசும் அதுவரை ஒன்றாகவே இருந்து வந்ததால், இரத்தினகுமாரை வீட்டார் அழைக்க நாங்கள் சங்கடப்பட்டோம். குறிப்பாக நான் மிகவும் சங்கடப்பட்டேன். எனது மனநிலையை உணர்ந்த இரத்தினகுமார் வீட்டில் தாயிடம் அனுமதிபெற்று, பிறகும் எங்களுடனேயே வந்து தங்கிக் கொண்டார்.

அதன்பிறகும் துன்பங்கள் எங்களை விட்டபாடில்லை. அவைபற்றி …..

(தொடரும்)

 

 

 

 

 

 

               

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.