புதியன புகுதல்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

புதியன புகுதல்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 
🔺ஆணாதிக்கம்🔺
குத்தும் மீசையால் குமுறும் உதடுகள்.
பற்றும்வலிய கரத்தில் பதைபதைக்கும் மென்முலைகள்.
ஆண்பாரம் தாங்கிய அடிவயிறு.
 

 

 
 
🔺விபச்சாரி🔺
கடப்பாறையால் பிளவுண்டு   
கணப்பொழுதில் கதியிழந்த,
சிலையாக விரும்பி 
சிற்றுளி தேடிய கருங்கல்.
 
🔺நாத்திகன்🔺 
கண்மூடி ஒளி மறுக்கும்
கைக்குழந்தை. 
 
🔺தியானம்🔺
வாசலில் செருப்பு
வாட்டும் நோய்
பெண்ணின் திருமணம்
பெடியனின் படிப்பு
நாளைய குலுக்கல்ச் சீட்டு
கண்மூடி கோயிலில் பக்தன்.
 
🔺ஜனநாயகம்🔺
நூறுவீத வாக்கு
அறுபதுவீத வாக்களிப்பு
நாப்பதுவீத ஓட்டு
பெரும்பான்மை வெற்றி.
 
🔺தத்துவவாதி🔺
தத்துவம் உரைத்த பின்
குரு சொன்னார்.
ஆணவம் நீக்கும் வழியை
என்னைப்போல் யார் சொல்வார்?
 
🔺பெண்ணடிமை🔺
விழிகள் தாமரை
கன்னங்கள் ஆப்பிள்
உதடுகள் கொவ்வை
பற்கள் மாதுளை
தோள்கள் மூங்கில்
முலைகள் இளநீர்
விரல்கள் வெண்டி
உயிர் உவமை தவிர்த்து
புகழ்ந்தான் காதலன்.
 
🔺பெண்ணியம்🔺
அடிமைப்படுத்துகிறாய்
ஆவேசித்தாள் மனைவி
புறப்பட்ட கணவனிடம்
நேரத்திற்கு வந்து விடு!
நிபந்தனை விதித்தாள்.
 
🔺அறிவு🔺
பசு பால் தந்தது
மரம் கனி தந்தது
பறவை முட்டை தந்தது
வாங்கிய மனிதன்
பெயர் தந்தான்
'அறிவில்லா ஜீவன்கள்'.
 
🔺மறுபக்கம்🔺
முள்ளில் ரோஜா
சேற்றில் தாமரை
சிப்பியில் முத்து
நல்லவை பிறக்க
அல்லவை தேவையோ?
 
🔺குழந்தை🔺
கடவுள் செய்யும் காவியத்தின்
கையடக்கப்பதிப்பு.
 
🔺🔺🔺🔺🔺🔺🔺

 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.