வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 2 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 2 |  கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 27 Jan 2017
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்கள் கோபம் இந்த ஒருவார இடைவெளியில் சற்றுக் குறைந்திருக்கும்.
போன அத்தியாயத்தில் புரட்சியாளர்களாகிய உங்களை,
கோபப்படுத்தியதற்காக என்னை மன்னியுங்கள்.
நமது அறிவு மேதாவிகளால் பொய்ப்பதனிடப்பட்ட உங்களுக்கு,
உண்மை சற்று உவர்ப்பாய்த்தான் இருக்கும்.
உயர்ந்தவையெல்லாம் தாழ்ந்தவையாகவும்,
தாழ்ந்தவையெல்லாம் உயர்ந்தவையாகவும்,
உங்கள் செவிகளில் அன்றாடம் ஓதப்பட்டதால்,
இழிவோசையே இசையாய் உங்கள் அகத்தில் பதிந்துவிட்டது.
கடைச்சோறு தின்றவனுக்கு அன்னையின் கைச்சோறு கசப்பதுபோல,
உண்மையிசை உங்களுக்கு அபசுரமாய்த்தான் படும்.
இருளில் எத்தனை நாள்தான் மூழ்கிக்கிடப்பது.
ஒளியை இருள் என்றும், இருளை ஒளி என்றும்,
எத்தனைநாள்தான் மயங்கிக் கிடப்பது.
நீண்டநாட்கள் இருளில் கிடந்த கண்களுக்கு,
ஒளி சற்று வேதனையைத் தரத்தான் செய்யும்.
 

♦  ♦

அதற்காக ஒளியைத் தரிசிக்காமல் இருக்கமுடியுமா?
இருளேதான் தரிசனம் என்றால் கண்கள் எதற்கு?
கண்பெற்ற நாம் ஒளிபெற்றே ஆகத்தான் வேண்டும்.
காலை எழத்தயங்கி ஒளிமறுத்து,
போர்வையால் தலைமூடும் குழந்தைகள் போல்,
எழும்ப மறுத்து குப்புறக்கிடந்து குமுறுகிறீர்கள்.
இருள் உங்கள் இயலாமையைக் காவல்செய்யும் என்பதால்,
இருள் விரும்பும் உங்கள் ஏக்கம் புரிகிறது.
தாய்மையுணர்வோடு தட்டியெழுப்ப முனைகிறேன், அவ்வளவே!

♦  ♦

தட்டி எழுப்புகையில் கோபம் வரத்தான் செய்யும்.
ஆனால் ஒளிகண்டபின் உவப்பும் அதனால் விருப்பும் தானே உண்டாகும்.
அவ்வுவப்பும் விருப்பும் உறக்கம் விழிப்பித்த தாய்மையைப் போற்றும்.
பிள்ளை போற்றுவான் என்பதற்காக தாய் துயில் எழுப்புவதில்லை.
ஒளிநோக்கிக் குழந்தைகளை உயர்த்துவது தாயின் கடமையாம்.
அக்கடமையாய் எண்ணியே, இக்கட்டுரையைத் தொடர்கிறேன்.

♦  ♦

இவ்வாரமும் முன்னுரை சற்று நீண்டு விட்டது.
பொறுத்தருளுங்கள்.
சென்றவாரம் கட்டுரையை எங்கே விட்டேன்?
ம்…..ம்….ம்……
சரி சரி நினைவில் வந்துவிட்டது.
இயற்கையேயான தத்துவம்தான் வர்ணாச்சிரம தர்மம் என்றும்,
அதனைப் பின்பற்றியவர்களின் பொய்மையால்,
அத்தத்துவத்தில் அழுக்குச் சேர்ந்ததென்றும்,
மாக்ஸ், பெரியார், அம்பேத்கார் போன்றோரின்,
புரட்சியாலும், போராட்டத்தாலும்,
அத்தத்துவத்தைப் பற்றி இருந்த அழுக்குகள் தளர்ச்சியுற்றன என்றும்,
அழுக்கேயான பொய்மையாளர் கருத்துக்களை இருபுறமும் நீக்க,
எஞ்சுவதே உண்மை வர்ணாச்சிரம தர்மம் என்றும்,
உரைத்து முடித்தது உங்களுக்கும் ஞாபகத்திலிருக்கும்.

♦  ♦

வர்ணாச்சிரம தர்மத்தை பின்பற்றியவர்களும் தவறு செய்தார்கள்.
எதிர்த்தவர்களும் தவறு செய்தார்கள் என்று நான் சொன்னதும்,
உங்களில் சிலருக்கு மீண்டும் மூக்கின்மேல் கோபம் வரும்.
கருணைகூர்ந்து உங்கள் கோபத்தைச் சற்றுக் குறையுங்கள்.
வர்ணாச்சிரம தர்மத்தை வலியுறுத்திய அந்தணர்களும்,
வர்ணாச்சிரம தர்மத்தை எதிர்த்த புரட்சியாளர்களும்,
தவறு செய்தார்கள் என்றால், அவ்விருவரும் சமம்தானே?
பின் ஏன் ஒருவரை உயர்த்தி ஒருவரைத் தாழ்த்த நினைக்கிறாய்?
இதுதானே உங்கள் கோபத்தின் அடிப்படை.
சற்றுப் பொறுங்கள்! பதில் சொல்கிறேன்.

♦  ♦

நீங்கள் மேலும் கோபப்படவில்லை என்றால்,
மற்றொன்றையும் இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.
தவறு செய்வது எவர்க்கும் சகஜம் தான்.
பிழையில்லாத சரியென்ற ஒன்று எங்கும் இல்லை.
ஆனால் ஒருக்காலும் பிழையே சரியாகாது!
‘குழப்புகிறான்.’-மீண்டும் உங்கள் கோபம் ஏறுகிறது.
இப்படியே கோபித்துக் கொண்டிருந்தால்,
எப்படி நான் சொல்லவந்ததைச் சொல்வதாம்?
மேற் சொன்ன இருவரும் பிழைசெய்தார்கள் என்பது உண்மையே.
அதற்காக இருவரும் சமமாகிவிட முடியுமா?
‘சமன்தானே’ என்கிறீர்களா? அதுதான் இல்லை.
அவர்களுள்ளும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
பிழையே செய்தாலும் செய்த பிழையை பிழையென்று உணர்கிறவன் உயர்ந்தவன்.
செய்தது பிழையென்று தெரிந்த பிறகும் அப்பொய்மையைப் பற்றிநிற்பவன் தாழ்ந்தவன்.
இதுதான் அந்த வித்தியாசம்.

♦  ♦

‘பிராமணர் என்றும் புரட்சியாளர் என்றும் நீ யாரைச் சொல்ல வருகிறாய்?’
மீண்டும் நீங்கள் சீறத் தொடங்குகிறீர்கள்.
வர்ணாச்சிரம தர்மத்தைக் கடைப்பிடித்தோர்,
வர்ணாச்சிரம தர்மத்தை எதிர்த்தோர் என்று வகைப்படுத்தி,
சங்க மரபின்படி பெயர் சுட்டாமல் பொதுப்படவே நான் பேசுகிறேன்.
அவ்விருவருள் முன்னையவர்கள் தாம் தவறிழைத்ததைப் பகிரங்கமாய் ஒத்துக்கொண்டார்கள்.
பின்னையவர்கள் தம் கொள்கை பிழையென்று தெரிந்தபின்பும்,
இன்று வரை அப்பொய்மையைப் பேணி வளர்க்க முயல்கின்றார்கள்.
இதுதான் அவ்விருவருக்குமான வித்தியாசம்.

♦  ♦

‘ஆஹா! வாரும் பிள்ளாய்!
அநியாயம் வளர்க்க இன்னுமொரு பிராமணன் வந்துவிட்டான்’ என்று,
நீங்கள் கூவிக்கொந்தளிப்பது என் காதுக்குக் கேட்கிறது.
சற்றே பொறுங்கள்!
என் குடுமியைப் பார்த்து என்னையும் அந்தணர் வரிசையில் சேர்த்துவிட்டீர்கள் போல,
குடுமிக்கு இப்படியும் ஒரு பயன் இருக்கிறதா? சந்தோஷம்!
குடுமிதான் பிராமணத்தகுதி என்னும் அளவி;ற்கு காலம் மாறிவிட்டது,
கலியின் கொடுமை.
சத்தியமாய்ச் சொல்கிறேன் நான் பிறப்பால் அந்தணன் அல்லன்.
‘குசும்புப் பதில் இது!’ நீங்கள் மீண்டும் கொதிப்பது புரிகிறது.
பிறப்பால் அந்தணன் இல்லை என்று சொன்னதால்,
வேறேதோ விதத்தில் நானும் அந்தணன்தான் என,
அர்த்தாபத்தி நியாயத்தால் நான் மறைமுகமாய் உரைப்பதாய்,
நீ;ங்கள் நினைக்கிறீர்கள்.
அதென்ன அர்த்தாபத்தி என்கிறீர்களா?
அதையெல்லாம் இங்கு உரைக்கத் தலைப்பட்டால் கட்டுரை முடிந்தமாதிரித்தான்.
‘பின் ஏன் அதை இங்கே போட்டாய்’ என்கிறீர்களா?
எனக்கு அது தெரியும் என்று வேறு எப்படித்தான் காட்டுவதாம்?
விருப்பமானால் நீங்கள் தேடிப் படியுங்கள்.
என்ன கையை முறுக்குகிறீர்கள்?
மீண்டும் கோபம் வந்துவிட்டதோ?
சரி சரி உங்களை நோயாளியாக்கும் பாவம் எனக்கு வேண்டாம்.
விடயத்திற்கு வருகிறேன்.
நானும் ஒருவகையில் பிராமணன்தான் எனச் சொல்லவருவதாய்,
நீங்கள் நினைப்பது சரிதான்!
ஆனால் அதுபற்றி இந்த இடத்தில் விரித்துரைக்க முடியாது.
இக்கட்டுரை முடியுமுன் உங்களின் இவ் ஐயத்தையும் முடிப்பேன்.
நாங்கள் விடயத்தைத் தொடர்வோம்.

♦  ♦

வர்ணாச்சிரம தர்மத்தைக் கடைப்பிடித்த அந்தணர்களாலும்,
வர்ணாச்சிரம தர்மம் சிதைக்கப்பட்டது என்று சொன்னேனல்லவா?
அதுபற்றிக் கொஞ்சம் விரிவாய்ச் சொல்லப்போகிறேன்.
ஆத்திரத்தோடு இருக்கிற புரட்சியாளர் சார்பான உங்களுக்கு,
அந்தணர்களைக் குறை சொன்னால் சற்று ஆறுதலாய் இருக்கும் தானே.
ஆகவே கோபம் தணித்து இனிவரும் பகுதியை உற்சாகமாய்ப் படியுங்கள்.

♦  ♦

சாதி என்றாலே மகா அநியாயமான ஏற்பாடு என்று,
இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் என,
எல்லோரும் கரித்துக் கொட்டுவதற்கு யார் காரணம்?
ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விடுவதற்கு யார் பொறுப்பாளி?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன்.
வர்ணாச்சிரம தர்மத்தைப் பற்றி,
தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்கு பிராமணன்தான் காரணம்.
காலாகாலமாக உயிர் வளர்ச்சியும் தேச, உலக நலன்களும் காத்;து வந்த தர்மம்,
குலைந்து போனதற்கு பிராமணன்தான் பொறுப்பாளி.

♦  ♦

ஆதிகாலத்திலிருந்து வர்ணாச்சிரம தர்மத்தைச் சரியாகக் கடைப்பிடித்துவந்த பிராமணன்,
பிற்காலத்தில் தன் கடமையாகிய வேதம் ஓதுதலையும் வேத கர்மங்களை அனுஷ்டிப்பதையும் விட்டுவிட்டு,
தாம் கூடி வாழ்ந்த ஊர்களை விட்டுப் பட்டணத்திற்கு வந்தான்.
வந்ததுமே தனக்குரிய ஆசாரங்களையும் அடையாளங்களையும் விட்டுவிட்டான்.
குடுமியை அறுத்து ‘கிராப்’ வைத்துக்கொண்டான்.
வேட்டியை விட்டு ‘புல் சூற்’ போட்டுக்கொண்டான்.
தனக்கு விதிக்கப்பட்ட ஆன்மீக வேதப்படிப்பை விட்டுவிட்டு,
வெள்ளைக்காரனின் லௌகீகப்படிப்பில் விழுந்தான்.
வெள்ளைக்காரனது நடையுடை பாவனை எல்லாவற்றையும் ‘காப்பி’ அடித்தான்.
தம் மூதாதையர்களாகிய வேதரிஷிகளிலிருந்து பாட்டன் அப்பன் வரை காத்துவந்த,
மகோன்னதமான தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டான்.
வெறும் பணத்தாசைக்காவும் உடல்சுகத்துக்காகவும்,
மேல் நாட்டுப் படிப்பு, உத்தியோகம், வாழ்க்கைமுறை என்பவற்றில்,
விரும்பிப் போய் விழுந்துவிட்டான்.

♦  ♦

இவனுக்கு பணத்தாசையே கூடாதென்றும்,
இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்றும் சாத்திரங்கள் சொல்கின்றன.
அதன்படி அந்தணன் வாழ்க்கை நடத்தி வேத சத்தங்களாலும் வேள்விகளாலும்,
உலக நலத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவரையில்,
மற்ற எல்லாச் சாதிக்காரரும் அவனிடம் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர்.
இவனையே முன்மாதிரியாக வைத்துக் கொண்டனர்.
அந்தணன் வெள்ளைக்காரர்களைப் பார்த்து தன்னை மாற்றிக்கொள்ள,
இதுவரை நல்லதற்கெல்லாம் அவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்தவர்கள்,
ஒழுங்கு தப்பி வாழ்வதிலும் அவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

♦  ♦

பல்லாயிரம் ஆண்டுகளாய் புத்திக்குரிய விஷயங்களைச் செய்துவந்த அந்தணன்,
தன்னலனுக்குப் பயன்படுத்தாமல் சமூகநலனுக்காகவே அப்புத்தியை அர்ப்பணித்து வந்தான்.
இந்த தியாகச்சிறப்பாலே அவனது புத்தி தீட்டிய கத்திபோல கூர்மையாக இருந்தது.
இப்போது அவனுக்கு உலக நலன் எனும் நோக்கம் போய் தன்னலமான உலகியல் ஆசைகள் வந்தபின்,
அந்த புத்திப்பிரகாசம் மழுங்கிப் போயிற்று.
ஆனாலும் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தவன் ‘பெடல்’ பண்ணுவதை நிறுத்திய பிற்பாடும் கூட,
ஏற்கனவே உந்திய வேகத்தால் அந்த சைக்கிள் கொஞ்சத்தூரம் ஓடுவதுபோல,
பிராமணன் ஆன்மீக வித்தையைவிட்டு லௌகிகவித்தையில் போய் விழுந்த பிறகும்,
ஏற்கனவே தலைமுறை தலைமுறைகளாக அவனுடைய மூதாதையர்கள் பண்ணியிருந்த தவப்பலனால்;,
அவர்கள் சேமித்து வைத்திருந்த அறிவாற்றல் இன்னமும் அவனுக்குக் கொஞ்சம் மிஞ்சியிருந்தது.
அதனால் வெள்ளைக்காரனின் படிப்பு முறையிலும் அவன் ஆச்சரியமாகத் தேர்ச்சி பெற்றான்.
அவர்கள் துறையில் அவர்களுக்கே தெரியாத நுட்பங்களை,
அவர்களுக்குக் கற்றுக் கொடுக்குமளவிற்குக் கெட்டிக்காரனானான்.

♦  ♦

வெள்ளைக்காரன் கொண்டு வந்த விஞ்ஞானக் கருவிகளும்,
அதனால் எளிமையாய்ச் செய்யப்படும் காரியங்களும் உடற் சுகத்தை அதிகரித்துத்தந்தன.
இந்திரியங்களுக்குச் சுகத்தைக் காட்டிவிட்டாற்போதும்,
அது  மேலே மேலே கொழுந்துவிட்டு எரிந்து,
ஆசைகளை அதிகரித்துக்கொண்டேபோகும்.
இப்படியாக ஆன்மாவைக் கெடுத்து உடற்சுகம் தருகின்ற சாதனங்கள்,
வெள்ளைக்காரர்களால் கொண்டு வரப்பட,
முன்பின் கண்டிராத இந்த சுகங்களில் பிராமணனுக்கு ஆசை உண்டாகியது.
அவன் தன் உயரம் விட்டு மற்றவர்களின் நிலைக்கு இறங்கினான்.

♦  ♦

வெள்ளைக்காரர்களோடு இங்கு மற்றொரு தவறும் வந்து சேர்ந்தது.
பகுத்தறிவு பகுத்தறிவு என்று ஓர் விடயத்தைக் கிளப்பிய அவன்.
அனுபவத்தினால் வந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததான,
சமய விஷயங்களை, பகுத்தறிவினால் ஆராய்வதாய்ச் சொல்லி,
அவற்றைப் பொய், புரளி என நினைக்க வைத்தான்.
அதுவரை தன் சுயதர்மத்தை விடாத பிராமணன்,
வெள்ளைக்காரனின் புரட்டை நம்பி அதனைக் கைவிட்டான்.
வெள்ளைக்காரனைப் போலவே ‘டிப்டொப்பாக டிறஸ்’செய்துகொண்டு,
சிகரட் குடிக்கவும் ‘டான்ஸ்’ ஆடவும் பழகிக்கொண்டான்.
தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட,
இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,
வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள்.

♦  ♦

இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று.
அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து,
வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும்,
பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு,
வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர்.
இதனால் தத்தமக்கு என்றிருந்த தொழில்முறைகள் போய்,
எல்லோரும் ஒரே வகையான தொழிலுக்காய்p போட்டி போடத் தொடங்கினர்.
அதனால், “தொழிலுக்கான போட்டி” என்ற விபரீதம் தொடங்கிற்று.
போட்டி என்று வந்ததும் பொறாமை, பகை என்பவை அதைத் தொடர்ந்தன.
ஒற்றுமையாய் இருந்த சமூக அமைப்பு சீர்குலைந்தது.

♦  ♦

தம் மூதாதையர்களின் தவபலத்தால் புத்திக் கூர்மை பெற்றிருந்த பிராமணன்,
அதனால் வந்த படிப்பு, உத்தியோகம் இவற்றிலே மற்றவர்களை விட முன்னின்றான்.
அதனால் மற்றவர்களுக்கு பிராமணன்மேல் பகை அதிகரித்தது.
இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவை இனங்கண்டு கொண்ட வெள்ளைக்காரன்,
ஆரியன், திராவிடன் என்ற கதைகளையும் கட்டி,
ஒரு தாய் வயிற்றுக்குழந்தைகளாக இருந்தவர்களிடத்தில்,
பிரிவின் விதைகளை நன்றாகப் போட்டுவிட்டான்.

♦  ♦

இந்தப்பகை இரட்டிப்பாகிற வகையில் பிராமணன் இன்னொன்றையும் செய்தான்.
ஒருபுறத்தில் ஜாதி தர்மங்களை விட்டுவிட்டு தான் வெள்ளைக்காரனுடன் சேர்ந்து,
அவனைத் திருப்திப்படுத்துவதற்காய்,
நம் மூதாதையரின் பழைய சமூக ஏற்பாடுகள் காட்டு மிராண்டித்தனமானவை என்றும்,
ஒருத்தரை ஒருத்தர் சுரண்டுவது எப்படி சமதர்மம் ஆகுமென்றும் பேசிக்கொண்டு,
மறுபுறம் மற்றவர்களோடு ஒட்டிப் போகாமல்,
தான் ஏதோ உயர்ந்தவன் என்று பெருமை கொண்டாடிக் கொண்டான்.

♦  ♦

முன்பும் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்பழகவில்லைதான்.
ஆனால் அப்போது அதற்கான நியாயம் இருந்தது.
அவனது வாழ்க்கை முறையை முன்னிட்டு,
ஆகாரம் முதலிய சில விஷயங்களில் வித்தியாசமாக அவன் இருக்கவேண்டியிருந்தது.
அந்த வித்தியாசம் வாழ்க்கை முறையால் வந்தது.
சினிமா ‘சூட்டிங்’ செய்கிற இடத்தில் நிறைய வெளிச்சம் வேண்டும்.
‘பிலிம்மை’ கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும்.
ஒரு சாப்பாட்டுக்கடையில் உணவு சமைப்பவன் சுத்தமாக இருக்கவேண்டும்.
பாத்திரம் கழுவுகிறவன் அழுக்காய்த்தான் இருப்பான்.
இதே போலத்தான் அற ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் அந்தணன்,
சாத்வீக உணவைத்தான் உண்ணவேண்டும்.
படையில் இருக்கிறவன் மாமிசங்களையும் உண்ணத்தான் செய்வான்.
அறம் வளர்ப்பவனும் பிறதொழில்கள் செய்பவர்களும் ஒன்றாக முடியாது.
தன் ஆசாரத்திற்காக சிலவிஷயங்களில் அந்தணன் தனித்தே நிற்கவேண்டியிருந்தது.
எல்லோருடனும் சேர்ந்து உண்டால்.
மற்றவர்களின் உணவில் சபலம் உண்டாகிவிடும் என்பதற்காக,
உணவைத் தனியே இருந்து அவன் உண்டான்.
செய்யும் தொழில்களுக்கேற்ப சில விடயங்களில் சமூகப்பிரிவினர் தனித்தனியாய் நின்றனர்.
ஆனாலும் அவர்களுக்குள் உள்;ர ஒரு ஒற்றுமை இருக்கவே செய்தது.

♦  ♦

ஒருவர் வாழ்க்கையை ஒருவர் குழப்பக்கூடாது என்பதற்காக,
தனித்தனியாய் வேறு வேறு இடங்களில் அவர்கள் குழுக்களாய் வாழ்ந்தும் வந்தனர்.
அக்கிரகாரம், சேரி என்பவை இப்படித்தான் அமைந்தன.
புதிதாக உண்டான பட்டண வாழ்க்கையில்,
இவ்வாழ்க்கை முறையைச் சரியாய்க் கடைப்பிடிக்க முடியவில்லை.
வெள்ளைக்காரனைத் திருப்திப்படுத்துவதற்காக,
உள்ளே வேற்றுமை வைத்துக்கொண்டு வெளியே அனைவரும் கலக்க ஆரம்பித்தனர்.
பிராமணனும் மற்றவர்கள் போல வாழ ஆரம்பித்தான்.

♦  ♦

உலக நன்மைக்காக தர்மத்தைக் காத்து அதன் பயனை எல்லோர்க்கும் தந்த பிராமணனை,
ஒருகாலத்தில் எல்லோரும் மதித்துப் போற்றினார்கள்.
இப்போது அவர்களோடு தாமும் சமமென்று வாழத்தொடங்கிவிட்டதால்,
அவனது மதிப்புக் குறைந்து போனது.
மற்றவர்களைவிட மோசமாக கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்து கொண்டு,
மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என உள்;ர நினைத்துக் கொண்டிருந்ததால்,
அவன் மேல் மற்றவர்களுக்குப் பகை அதிகரித்தது.
பிராமணன், தானும் தன் தர்மத்தைக் கைவிட்டு,
மற்றவர்களும் அவரவர் தர்மத்தைக் கைவிடுமாறு செய்துவிட்டான்.
இவனுக்கு உயர்வு என்று எதுவுமே இல்லாமல் போயிற்று.

♦  ♦

அக்காலத்தில் பிராமணன் கடும் விரத நியதிகளோடு,
தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்கள்,
தாமாக இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்தார்கள்.
இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து,
தன்னை மற்றவர்கள் தூற்றும்படி இவனே ஆக்கிக் கொண்டுவிட்டான்.
இந்துசமூகம் பாழாய்ப்போனதற்கு பிராமணன்தான் காரணம் என்பது,
எனது முடிவான அபிப்பிராயம்!

♦  ♦

தர்மத்தைக் காக்க வாழ்ந்த காலத்தில்,
வேதம் ஓதுவது, வேள்வி செய்வது என,
தன் நேரம் முழுவதையும் அதற்கே பிராமணன் செலவழிக்கவேண்டியிருந்தது.
அங்ஙனமாய் தன் முழுநேரத்தையும் அவன் செலவழித்தால்,
தன் வாழ்க்கைத் தேவைக்கு அவன் என்ன செய்வது?
அவன் பொருள் தேடப் புறப்பட்டாலோ,
அவனது ஆசார அனுஷ்டானங்கள் கெடும் அறம் சிதையும்.
அதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் நஷ்டப்படும்.
அதனால்த்தான் அவனுக்காகச் சமூகம் தானங்களைச் செய்தது.
அவற்றைப் பெறுவதில் கூட சில கட்டுப்பாடுகளை அந்தணர்கள் வைத்திருந்தார்கள்.
தானங்களை வரம்பில்லாமல் வாங்கிக் கொள்ளக்கூடாது என்பது அந்தணனுக்கான கட்டுப்பாடாக இருந்தது
வருமானம் அதிகரித்தால் அது உடல் சுகம் நோக்கி தம்மை இழுத்துவிடும்.
ஆத்மவளர்ச்சியைக் கெடுக்கும் அதுமட்;டுமில்லாமல்,
மற்றவர்களிடம் கைநீட்டிவிட்டால் தருகிறவனுக்காக வளைந்து கொடுக்கவேண்டி வரும்.
நடுநிலைமை தவறவேண்டிவரும்.
இவற்றையெல்லாம் நினைத்தே தர்மசாஸ்திரங்கள்,
பிராமணர்கள் உயிர்வாழ்வதற்கு அதிகபச்சமாக எது தேவையோ,
அதற்கு மேல் ஒரு எள்ளளவு பொருளையும் வைத்திருக்கக்கூடாது என்று விதித்தன.

♦  ♦

பிற்காலத்தில் அந்தணர்களுக்குத் தானம் வழங்கும்முறை நின்று போனதால்த்தான்,
தாங்களும் மற்றவர்கள் போல உத்தியோகம் என்று இறங்கும்படியாயிற்று என,
தம் பிழைக்கு சில பிராமணர்கள் சமாதானம் கூறி வருகிறார்கள்.
அது சரியல்ல!
இடையிடையே வேற்று ஆட்சிகள் அமைந்தபோதெல்லாம் கூட தானங்கள் இல்லாமல்தானே போனது.
ஆனாலும் அப்போதைய பிராமணர்கள் வைதீக தர்மத்தை விடாமல்தானே இருந்தார்கள்.
இடையில் வந்த மாற்றுச் சமயத்தவர்கள் கூட,
தர்மமும் பிராமணரும் அழிந்து போகக் கூடாது என்று எண்ணி,
அவர்களுக்குத் தானங்கள் கொடுத்துக் காத்து வந்திருக்கிறார்கள்.
வெள்ளைக்கார ஆட்சி வந்தபிறகும்,
அவன் காட்டிய சுகபோகத்தில் மயங்காமல்,
சாத்திரம் விதித்த அளவிற்கு அத்தியாவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றி,
பிராமணன் வாழத் தலைப்பட்டிருந்தால்,
மற்றவர்கள் அவனுக்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள்.
அவர்கள் பிராமணனைக் கைவிடவில்லை.
பிராமணனாகத்தான் வேதத்தையும், அக்கிரகாரத்தையும் விட்டு ஓடிப்போய்விட்டான்.
எனவே சூழ்நிலைக்காகத்தான் மாறினோம் என்று,
சில அந்தணர்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது.

♦  ♦

பிராமணன் பட்டணத்திற்கு வந்து,
தன் அடிப்படைத் தேவைகளைப் பெற்று வாழ்ந்திருந்தால் கூட பரவாயில்லை.
ஆசை கூடக்கூட ஊர் மாறி இடம் மாறி,
இன்று கண்டம் மாறி வாழவும் ஆரம்பித்துவிட்டான்.
அங்கு சென்றதும் கொஞ்சநஞ்சமாய் மிச்சமிருந்த ஆசாரங்களையும் உதறித்தள்ளிவிட்டு,
இராணுவத்தில் அதிகம் சம்பளம் வருகிறதா? அங்கும் வருகிறேன் என்று,
மது, மாமிசம் என அனைத்தையும் பழகி தன்னை மாற்றிக் கொண்டான்.
இன்று பிராமணன் பணத்திற்காக எதையும் செய்கிறான் என்பதைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

♦  ♦

என்தேசம், என்பாசை என்று சொல்கிற பலபேர்,
இன்று அவற்றைக்காக்கத் தம் உயிரையும் அச்சமின்றி விடுகிறார்கள்.
அவற்றிற்குப் பிரச்சினை வருகின்ற பொழுது தமக்குத்தாமே தீமூட்டிக் கொள்கிறார்கள்.
தனது தர்மம் என்றிருந்த பிராமணனும் தன் அறவாழ்விற்கு இடைஞ்சல் வந்தபோது,
தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாமல்லவா?
தர்மத்தை விட்டு வாழ்வதைவிட,
தர்மத்தைக்காக்க சாவதே மேலல்லவா?
பிராமணனது உடல்,
வேதத்தை இரட்சிப்பதற்கான நியம அனுஷ்டானங்களை செய்வதற்காய் ஏற்பட்டது.
அவ் உடலில் அதிகப்படியான எந்த போக விஷயங்களிலும் சேர்க்கக்கூடாது என்பதுதான்,
அடிப்படை தர்மம்.
இன்றைய பாதகமான சூழ்நிலையில்,
முன்னைவிட கடுமையாய் தர்மத்தை இரட்சிப்பதுதான் அவர்களுக்குப் பெருமை.
அவர்கள் அப்படிச் செய்யாமல் விட்டது பெரிய பிழை!
சுகம்;தேடிப் போன வாழ்விலும் இன்று அவனுக்கு போட்டியும், பிரச்சினைகளும் அதிகம் வந்துவிட்டன.
இனி அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
பழையபடி தமது தர்மத்தைக் கடைப்பிடிக்க அவர்களால் திரும்பமுடியுமா?
எனவே மேற்சொன்ன விடயங்களை வைத்துத்தான் சொல்கிறேன்.
இன்றைய பிராமணர்களுடைய ஒழுக்கயீனத்தால்தான்,
வர்ணாச்சிரம தர்மம் சிதைந்தது.

♦  ♦

என்ன?
போனவாரத்தில் என்னைத் திட்டித்தீர்த்த புரட்சியாளர்கள் எல்லோரும்,
இந்த வாரக்கட்டுரையைப் படித்துவிட்டு,
வாழ்த்துக் கோஷத்துடன் என் பின்னே வந்து நிற்கிறீர்கள் போல!
அதே போல,
போனவாரக் கட்டுரையைப் படித்துவிட்டு,
ஆனந்தப்பட்ட அந்தணர்களெல்லாம்,
இந்த வாரக்கட்டுரையைப் படித்துவிட்டு,
இவனை என்ன செய்கிறோம் பார் என்று சபிக்கத் தொடங்கிவிட்டீர்கள் போல.
போனவாரம் அந்தணர் கட்சியிலும் இந்த வாரம் புரட்சியாளர்கள் கட்சியிலும்,
மாறிமாறி இருக்க நான் அரசியல்வாதியா என்ன?
உங்கள் இருவருக்கும் ஒரு அதிர்ச்சிதரும் செய்தி இருக்கிறது.
அதை அடுத்தவாரம் சொல்கிறேன்.
சென்றமுறை புரட்சியாளர்களின் கோபம் தணிய ஒருவாரம் அவகாசம் தந்தேனல்லவா?
ஒருவருக்கொருவர் பாரபட்சம் காட்டக் கூடாதென்று நீங்கள் தானே சொல்கிறீர்கள்.
அதனால்இம்முறை அந்தணர்களின் கோபம் தணிவதற்காகவும,
ஒரு வார அவகாசம் தருகிறேன்.
அடுத்த வாரத்தில் சந்திக்கலாம்.
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்
 
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
 
 
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comments
SivaBoo Thi
 
SivaBoo Thi சிவ சிவ.. 🐚 
 
சிறப்பு பெருமானே 👣
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.