நீதித்தராசில் கூட்டமைப்பு - பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

 

 (சென்றவாரம்)
அவர் பெற்ற அரசியல் பலம், கூட்டமைப்பினரை வீழ்த்த நினைத்திருந்த எதிரணியினருக்கும், கூட்டமைப்போடு உடனிருந்து இழுக்குப்பட்ட மாற்றணியினருக்கும் வரமாய்த் தோன்ற, முதலமைச்சரைப் பயன்படுத்தி தத்தம் அணிகளை வளர்க்க அக்கட்சிகள் திட்டமிடத்தொடங்கின. அத்திட்டத்தின் வெளிப்பாடாய் திடீரென ஒருநாள் வெடித்த 'தமிழ்மக்கள்பேரவை'க் குண்டு, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரையும் தமிழரசுக்கட்சியையும் மட்டுமன்றி, தமிழ்ச்சமூகம் முழுவதையும்கூட அதிரவைத்தது உண்மை.  அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.உலகம் வியக்கும்படியாய் அந்த விடயம் ரகசியமாய் அரங்கேறியது.
குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் வேறு சில வைத்தியகலாநிதிகள்,
இன்னும் சில அரசியல் அணிசார்ந்தவர்கள், மதத்தலைவர்கள் என,
பலரையும் ஒன்றிணைத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி,
எவருக்கும் தெரியாமல் தமிழ்மக்கள்பேரவையின் முதற் கூட்டம்,
யாழ் நூலகத்தில் பூட்டிய அறை ஒன்றினுள் திடீரென நடத்தப்பட்டது.
ஆரம்பத்தில் ஊடகக்காரர்களுக்குக் கூட,
இந்த விடயம் தெரிந்திருக்கவில்லை.
அந்த அளவுக்கு ரகசியம் பேணப்பட்டது.
கூட்டமைப்புக்கு எதிராய் சிறுசிறு புள்ளிகளாய் விலகிக் கிடந்த பலரையும்,
ஒன்றிணைத்து போட்டப்பட்ட கோலமாகவே பேரவை அமைந்துபோயிற்று.

 


சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரோடு,
தமிழரசுக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான,
பேராசியர் சிற்றம்பலம், மற்றும் அருந்தவபாலன் போன்ற,
தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர் ஒருசிலரும் கூட இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இக்கூட்டத்தில் முக்கியப்படுத்தப்பட்டார்.
மிக ரகசியமாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில்,
இப்பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது ஓர் அரசியல் சார்ந்த அமைப்பன்று என்றும்,
மக்கள் இயக்கமே என்றும் சொல்லப்பட்டபோதிலும்,
அதில் பெரிய அளவில் உண்மை இருக்கவில்லை.
பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்,
அங்கு  முதலமைச்சர் ஆற்றிய உரையில்,
மறைமுகமாக அவர் கூட்டமைப்பைத் தாக்கினார்.
கடைசிவரை இக்கூட்டத்தைக் கூட்டிய அமைப்பாளர்கள் யார் என்ற ரகசியம்,
வெளிப்படவேயில்லை.
இவ் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும்,
அதன் நேர்மைத்தன்மை பற்றியும் பின்னர் தனியே ஆராய்வோம்.பேரவையின் ஆரம்பத்தோடு ஈழத்தமிழர் அரசியல் உலகில்,
முதலமைச்சர் முக்கியப்படுத்தப்பட்டார்.
எதிர்க்க எவருமின்றி தனித்த தகுதி பெற்றிருந்த கூட்டமைப்பினருக்கு எதிரான,
ஓரளவு மக்கள் பலம் பெற்ற ஓர் அமைப்பாக தமிழ்மக்கள்பேரவை உருவாகிற்று.
இவ் அமைப்பு கூட்டமைப்பினருக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு,
பல கட்சி உறுப்பினர்களையும் தமது அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு அழைத்த பேரவையினர்,
வேண்டுமென்றே தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களை அழைக்காமல்,
அலட்சியப்படுத்தியதே சான்றாயிற்று.
இத்தனைபேருடைய ரகசிய ஒன்றிணைவும்,
திடீரென அவர்கள் நடத்திய கூட்டம் பற்றிய செய்தியும்,
சம்பந்தன், சுமந்திரன் குழுவினருக்குத் தெரியாமல் இருந்தது பெரிய ஆச்சரியமே!
அவர்களது கட்சியைச் சார்ந்த சிலரும் கூட இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க,
இந்த விடயங்கள் ஏதும் தெரியாமல் இருந்த இவர்களது குருட்டு நிலமை,
நிச்சயம் அரசியலுக்கு உகந்ததாய் இருக்கவில்லை.
இச் சம்பவம், இவர்களது சமூகத்தொடர்பின் பலயீனத்தை,
அல்லது அதுபற்றிய இவர்களது அலட்சியத்தை தெளிவாய் வெளிப்படுத்தியது.ஆயிரம் முரண்பாடுகள் இருந்தபோதும்,
தமிழினம் அதுவரை ஒன்றுபட்டு நின்றது என்பதற்கு,
கூட்டமைப்பினரது தேர்தல் வெற்றிகளும்,
அவற்றை வைத்து கூட்டமைப்பினர் செய்து வந்த ஏகத்தலைமை என்ற பிரச்சாரமும்,
பேரவையின் தொடக்கத்தோடு பலயீனப்பட்டது உண்மையேயாம்.
நடந்து முடிந்த தேர்தலில் புனர்வாழ்வு பெற்ற போராளிகளால் ஆரம்பிக்கப்பட்ட,
ஜனநாயகப் போராளிகள் கட்சியைக்கூட நிராகரித்த கூட்டமைப்பினரால்,
முற்றுமுழுதாய் பேரவையை நிராகரிக்க முடியாமற் போனது உண்மையே.
ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் இராணுவத்தின் வழிப்படுத்தலில் நடப்பவர்கள் எனும்,
வதந்தி யாராலோ எவ்வகையிலோ பரப்பப்பட கூட்டமைப்பின் நிராகரிப்பு,
மக்களால் ஓரளவு அங்கீகரிக்கப்பட்டது.
இங்ஙனமாய், அதுவரை தமக்குச் சமமான ஓர் மாற்றணியின்றி இயங்கிய கூட்டமைப்பினருக்கு,
பேரவை 'முண்டு' கொடுக்கத்தக்க 'சறுக்குக் கட்டை'யாயிற்று.
அதுமட்டுமன்றி தமிழினத்தின் பிளவும் அங்கேதான் தொடங்கிற்று.தமிழரசுக்கட்சியின் மேல் தமது ஆத்திரத்தைக் காட்டமுடியாத பலரும்,
இக் கூட்டத்தில் இணைந்து கொண்டது வெளிப்படை.
அதுவரை தமக்கு நிகழ்ந்த அவமரியாதைகளை,
வேறு போக்கிடம் இல்லாது சகித்துக் கொண்டிருந்தவர்கள்,
பேரவை என்கின்ற அணிதிரட்டலின் மூலம் தெம்பு பெற்று,
தங்கள் பலத்தையும் காட்ட முற்படத் தொடங்கினர்.முதலமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்க,
சம்பந்தருக்குக் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் இது.
ஆனால், துணிந்து முடிவெடுக்காமல் அவர் மீண்டும் மீண்டும்,
'வழுவழுப்பு' அறிக்கைகள் விட்டுக்கொண்டே தனது காலத்தைக் கழித்தார்.
பேரவையின் தொடக்கத்திற்குப் பின் முதலமைச்சரின் துணிவு அதிகமாயிற்று.
அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் தீர்ப்பு வந்தபிறகு,
கூட்டமைப்பைபின் தலைமையைப் புறக்கணித்து,
தன் இஷ்டப்படி நடக்கத் தொடங்கினார் முதலமைச்சர்.
கூட்டமைப்புக்கு எதிரானவர்களை அமைச்சர்களாய் நியமித்தார்.
அவர் செய்த குளறுபடிகள் பற்பல.
அப்போதும் சம்பந்தரின் துணிவின்மை நீடித்தது.நேர்மையாக முதலமைச்சர்மேல் நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத நிலையில்,
அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை,
தமிழரசுக்கட்சியின் சார்பில் அவை முதல்வர்,
கவர்னரிடம் கையளிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறி,
அம் முயற்சி படுதோல்வியில் முடிவுற்றது.
அவர்கள் எதிர்பாராதபடி கஜேந்;திரகுமார் அணியினர்,
இளைஞர்களை ஒன்றுதிரட்டி முதலமைச்சருக்கு ஆதரவளிக்க,
முதலமைச்சருக்கான செல்வாக்கு மேலும் பெருகிற்று.
அந் நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குளறுபடியாய்ப் போக,
அப்போதும் சம்பந்தர் 'இது தனக்குத் தெரியாமல் நடந்த முயற்சி' என,
ஓர் அநியாயப்பழியை தன் உறுப்பினர்கள் மேல் சுமத்தி,
தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
அவரின் பின்வாங்கலில் அவைத் தலைவர் பலிக்கடாவானார்.தலைவரான தனக்குத் தெரியாமல் உறுப்பினர்கள்,
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்ததாய் சம்பந்தன் சொல்ல,
அங்ஙனம் தலைவருக்;குத் தெரியாமல் செயற்பட்ட உறுப்பினர்கள்மேல்,
விசாரணையோ  நடவடிக்கையோ ஏன் எடுக்கப்படவில்லை? எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.
அதனால் தலைவரின் பொய்மை அல்லது இயலாமை,
உலகிற்குத் தெளிவாய்த் தெரிந்து போயிற்று.ரணிலின் மேடையில் இலங்கையின் தேசியக்கொடியைக் காட்டி,
பரவலாய் அதற்கு எதிர்ப்புக் கிளம்ப,
பின் அது காளியின் சிங்கக்கொடி என்று சமாளித்தது,
புலிகள் கூட்டமைப்பைக் கூட்டவில்லை என்று அறிக்கைவிட்டது,
முதலமைச்சர் கட்சிக்கு எதிராகச் செயற்பட,
அவரின்மேல் நடவடிக்கை எடுக்கத் துணிவின்றி,
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது,
அவுஸ்திரேலியாவில் வைத்து,
'முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' என,
சுமந்திரன் சொல்லி, அதற்கும் எதிர்ப்புக் கிளம்ப,
'அது அவரது சொந்தக்கருத்து' என்று சொல்லிவிட்டு,
கட்சியின் அனுமதியின்றி அறிக்கைவிட்ட அவர்மேல்,
நடவடிக்கை எடுக்காமல் பேசாமல் இருந்தது,
புதுச்சட்டை கேட்ட தன் பிள்ளைக்கு,
ஏழைத்தந்தை அடுத்த தீபாவளிக்கு வாங்கித் தருவேன் என,
அடுத்தடுத்து பொய் சொல்லிச் சொல்லி ஏமாற்றுவது போல,
இனப்பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு வரும் என,
அடுத்தடுத்து பொய் அறிக்கைகளை விடுத்தது என,
பல விடயங்களால் சம்பந்தர் தனக்கான தலைமை மரியாதையை இழந்ததோடு,
கூட்டமைப்பின்மீதான மக்கள் அபிப்பிராயத்தையும் சேர்த்து வீழச்செய்தார்.இதுபோலவே, கட்சிக்கூட்டங்களில் சுமந்திரன் காட்டிய,
அடாவடித்தனமான அதிகாரப் பாங்கும்,
கட்சியின் மற்ற உறுப்பினர்களின் அபிப்பிராயம் பெறாமல்,
அவர் எடுத்த சில அரசியல் முடிவுகளும்,
குறித்த ஒரு சமயம் சார்ந்து இயங்குகிறார் என,
அவர்மேல் விழுந்த பழிச்சொற்களும்,
கூட்டமைப்பை ஓரளவு பாதிப்புக்குள்ளாக்கியமை நிஜமே.நடந்து முடிந்த தேர்தலில் தேசியப் பட்டியலில்,
யாரை உள் அனுப்புவது? என வினா எழுந்தபோது,
அதிக வாக்குகளைப் பெற்றிருந்தும் மர்மமாய் இடையில் நடந்த ஏதோ தவறுதலால்,
தோல்வியைத் தழுவிய அருந்தவபாலனை உள்ளனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தபோது,
அப்பதவியை சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு வழங்க சுமந்திரன் எடுத்த தனி முடிவு,
பலரையும் வெறுப்புக்குள்ளாக்கியது.
பொதுமக்களின் முன்பாக அப்பதவிக்காலம் இரண்டாகப் பிரித்தளிக்கப்படும் என,
அருந்தவபாலனின் ஆதரவாளருக்கு அவர் கொடுத்த வாக்கும் பின் அலட்சியம் செய்யப்பட்டது.
அதுபோலவே சாவகச்சேரியில் நடந்த ஒரு கூட்டத்தில்,
அருந்தவபாலனை அவர் அலட்சியப்படுத்திய விதம்,
ஊடகங்களில் காட்சிப் பதிவுகளாக வெளியாகிப் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.
யாழ் மாநகரசபை மேயர் தெரிவில்,
தன் சமயம் சார்ந்த ஒருவரை நிறுத்த சுமந்திரன் காட்டிய பிடிவாதமும்,
பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
மேற்படி செயற்பாடுகளால் கூட்டமைப்பினுள் சுமந்திரனின் வானளாவி விரிந்த அதிகாரம்,
சமூகத்திற்குத் தெரிய வந்தது.கிட்டத்தட்ட கூட்டமைப்பினதும் தமிழரசுக்கட்சியினதும்,
தலைவர் போலவே சுமந்திரன் நடந்துகொண்டார்.
பெரும் பிழைகள் நிகழ்ந்தபோதுமட்டும் அதைச் சமாளித்து அறிக்கை விடுவதோடு,
சம்பந்தனின் தலைமை வேலை முடிந்துபோயிற்று.
நடப்பது சம்பந்தனின் தலைமையா?
அல்லது சுமந்திரனின் தலைமையா? எனப் பலரும் ஐயுறத் தொடங்கினர்.
இவை ஒருபக்கப் பார்வைகள்.மறுபக்கப்பார்வையும் உண்டு.
சம்பந்தனைப் பொறுத்தவரை,
அவரின் அரசியல் அனுபவம்,
பாராளுமன்றில் அவரது ஆளுமைமிக்க உரைகள்,
பேரினத்தாராலும் மதிக்கப்படும் தன்மை,
வெளிநாட்டுத் தலைவர்களின் மரியாதையைப் பெறும் தகுதி,
அவருக்கு ஒப்பான ஒரு தலைவர் கட்சிக்குள் இல்லாமை என்பவை பற்றியும்

சுமந்திரனைப் பொறுத்தவரை,
கட்சியில் அவருக்கு நிகரான தகுதிகொண்டோர்தம் இருப்பின்மை.
இனப்பிரச்சினையை நிதானமாய் எதிர்கொள்ளும் அவரது ஆற்றல்.
உலகத்தலைவர்களின் அவருக்கான அங்கீகாரம்.
இலங்கை மத்தியஅரசின் செயற்பாடுகளில் அவர் காட்டும் ஆளுமை.
இலங்கை அரசியல் சார்பானதும் தமிழ்மக்கள் சார்பானதுமான சட்டநடவடிக்கைகளில் அவரது திறமை.
என்பவை பற்றியும் ஆராய்தல் அவசியமாகிறது.
அவற்றை அடுத்தவாரம் ஆராய்வோம்.                                                                                              (நீதித்தராசு நிறுப்பதைத் தொடரும்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்