Boomarang-2
#கேள்வி :
சென்றமுறை நோபல் பரிசு பெற்ற நவநீதம்பிள்ளை பற்றி எழுதும்போது, அவர்தான் தமிழர்களில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் என்று எழுதியிருக்கிறீர்கள். அச்செய்தி தவறல்லவா?
#பதில் :
தவறுதான்! 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக சேர்.சி.வி.ராமன் அவர்களும், 1983 ஆம் ஆண்டு அதே துறைக்காக சுப்ரமணியன் சந்திரசேகர் என்பவரும், 2009 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்பவரும் நோபல் பரிசினைப் பெற்றுள்ளனர் என்பதுதான் உண்மை.
அந்த வரிசையில்த்தான் தற்போது திருமதி நவநீதம்பிள்ளை அவர்களும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற முதற் தமிழ்ப்பெண்மணி என்ற முறையில்த்தான் இவ் அம்மையார் தனிப்பெருமை கொள்கிறார்.
இவர்கள் அனைவரும் தமிழர் வம்சாவளி அல்லது தமிழ்ப் பின்னணியுடன் தொடர்புடையவர்களே அன்றி, தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அல்லர். குறிப்பாக, சந்திரசேகர் லாகூரில் பிறந்தார். நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் பிறந்தார்.
தவறான செய்தியைப் பதிவிட்டமைக்காக மன்னிப்புக் கோருகிறேன்.
#கேள்வி:
புதிது புதிதாய் ஏதாவது செய்யப்போய் சர்ச்சைக்கு ஆளாவதே உங்கள் வேலையாகப் போய்விட்டது. அண்மையில் நடந்த உங்களது ஆலயத் திருவிழாவின்போது நடந்த திருக்கல்யாண நிகழ்வில் இரண்டு சிறுபிள்ளைகளைத் தம்பதிகள் போல் ஊஞ்சலில் உட்கார வைத்ததைத் தவறென்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். உங்களுக்கு ஏன் இந்த வேலை?
#பதில் :
அந்த விமர்சனங்கள் பற்றி நானும் அறிந்தேன். அந்த விமர்சனங்களால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான் ஏற்பட்டது. எனது மகிழ்ச்சிக்குக் காரணம், நாம் செய்யும் எல்லாவற்றையும் ஒருசிலர் கண்களில் எண்ணெய்யை விட்டுக் கொண்டு கவனமாகப் பார்த்து வருகிறார்கள் என்பதுதான்.
அத்தகையவர்களுக்கு நாங்கள் செய்யும் செயல்கள் பற்றியோ, நம் சமயம் பற்றியோ அல்லது சமூகம் பற்றியோ எந்தவித கவலையுமில்லை. அவர்களது நோக்கம் எங்கள்மேல் குறை காண்பது மட்டுமே. நாங்கள் எப்படியேனும் வீழ்ந்து விடமாட்டோமா என அவர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இறையருள் இதுவரை அவர்கள் ஆசையை நிறைவேறவிடவில்லை.
இனி அவர்கள் விமர்சனம் பற்றிய பதிலை, அந்த வீணர்களுக்காக அன்றி எங்கள் மேல் அக்கறையுள்ள உங்களுக்காகச் சொல்கிறேன். அன்று நாங்கள் ஆணாகவும், பெண்ணாகவும் உட்கார வைத்த பிள்ளைகள் இருவரும் ஆண் பிள்ளைகள்தான். ஆண் பிள்ளையையும், பெண் பிள்ளையையும் தம்பதிகளாய் உட்கார வைக்க நாங்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல. அப்படி நாங்கள் வைக்க நினைத்தாலும் அப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அதற்குச் சம்மதிப்பார்களா என்ன? இது தெரியாமல்த்தான் ஒருசிலர் குற்றம் சாட்ட முனைந்தார்கள்.
சரி! ஆண்களாக இருந்தாலும் அப் பிள்ளைகளை அப்படி இருத்தியதன் நோக்கம் என்ன? என்று கேட்பீர்கள். தெய்வ விக்கிரகங்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது, திருமண சம்பிரதாயங்களை அவ் விக்கிரகங்களைக் கொண்டு செய்விக்க முடியாது. அதனால் ஒரு குறியீடாக அப் பிள்ளைகளை வைத்து ஊஞ்சல் முதலிய சம்பிரதாயங்களை நிகழ்த்திக் காட்டினோம்.
நவராத்திரி காலங்களில் நவ கன்னியர்களுக்கான பூசையைச் சிறு பெண்பிள்ளைகளை வைத்துத்தான் எல்லா ஆலயங்களிலும் செய்து வருகிறார்கள். திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இரண்டு தம்பதிகளை வைத்துத்தான் தெய்வங்களுக்குத் தத்தம் பண்ணிக்கொடுக்கும் சம்பிரதாயத்தையம் செய்து வருகிறார்கள். இவையெல்லாம் எல்லா ஆலயங்களிலும் வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதான்.
இப்படி எங்கும் நடக்கும் சம்பிரதாயங்கள் பற்றி எதுவும் பேசாத இவர்கள், நாம் ஒன்றைச் செய்ததும் ஏதோ நடக்காத ஒன்றை நாம் செய்துவிட்டாற்போலப் பதறிக் காட்டுகிறார்கள். “தைவம் மானுஷ ரூபேண” என்று ஒரு சுலோகம் சொல்கிறது. மனித உருவில் இறைவனைக் காணலாம் என்பதுவே அச் சுலோகத்தின் அர்த்தம். இவர்களுக்கு நம் சமயம் பற்றித் தெரிந்தால்த்தானே இவையெல்லாம் தெரிவதற்கு?
#கேள்வி :
பிரிட்டிஷ் பிரதமர் தன் நாட்டு மக்களுக்கு விட்டிருக்கும் அறிக்கையில், பிரிட்டிஷ் மக்கள் எல்லோரும் மூன்று நாட்களுக்குத் தேவையான நீர், உணவு, தற்காலிக மின்சார உபகரணங்கள் முதலியவற்றை உடனடியாகச் சேகரித்து வைக்குமாறு கூறியிருக்கிறாராமே. ஏதோ ஆபத்து வரப்போகிறதோ!
#பதில் :
அவர் அவ் அறிவுறுத்தலை எதனால் கூறினார் என்று இதுவரை யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் அவ் அறிக்கையை விட்டிருப்பது மட்டும் உண்மை. 2026 அக்டோபர் 22 அன்று, பிரிட்டிஷ் பிரதமரால் அவ் அறிக்கை விடப்பட்டிருக்கிறது.
இது பிரதமரால் தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று கூறுவதைவிட, பிரிட்டிஷ் அரசின் அதிகாரபூர்வ அவசரகாலத் தயார்நிலைப் பிரசாரம் என்று கூறுவதே பொருத்தமானது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
அவர் அச்செய்தியை எதற்குச் சொன்னார் என்று தெரியாவிட்டாலும், ஒன்றைமட்டும் நம்மால் ஊகிக்க முடிகிறது. உலகம் ஏதோ பெரிய ஆபத்தை நோக்கி நகர்வது மட்டும் சத்தியமான உண்மை. அந்த ஆபத்து உலகப்போராகவும் இருக்கலாம். அல்லது உலகத்தையே அதிரவைக்கக் கூடிய மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாகவும் இருக்கலாம். இவற்றைத் தவிர விஞ்ஞானச் சேட்டையால் மனித குலத்திற்கு விளையப்போகும் ஓர் மிகப்பெரிய ஆபத்தாகவும் இருக்கலாம்.
இவைதவிர வேறோர் ஆபத்தும் உலகத்தை நெருங்கி வருவதாய்த் தோன்றுகிறது. அண்மையில் மறைந்த விஞ்ஞான மேதை “ஸ்டீபன்ஹக்” அவர்கள், மிகவிரைவில் உலகுக்கு வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்துக்களில் ஒன்றாய், வெளிக்கிரகவாசிகளான “ஏலியன்களால்” விளையப்போகும் தாக்கமும் இருக்கப்போகிறது எனக்கூறிச் சென்றிருக்கிறார்.
கடந்த செப்ரெம்பர் மாதத்தில், ஈரான் நாட்டு வான்வெளியில் தெரிந்த ஓர் பறக்கும்தட்டு பற்றி, அண்மையில் பரவலாகச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்காட்சிகளும் வெளியாகின. வானில் தெரிந்த அப்பொருள் பற்றி ஆராயவென, அதன் அருகில் சென்ற விமானப்படை விமானங்களின் கருவிகள் அனைத்தும் திடீரெனச் செயலற்றுப்போனது பற்றி ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒருசில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டிலும் அத்தகைய ஒரு பொருளை, வானில் கண்ட காவல்த்துறை உயர் அதிகாரி ஒருவர் அதனை வீடியோ எடுத்து அதுபற்றிய செய்தியை வெளியிட்டிருந்தார். இவற்றையெல்லாம் பார்க்கிறபொழுது அங்கிருந்தும் ஆபத்தேதும் வரக்கூடுமோ? என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
பிரிட்டிஷ் பிரதமரின் இந்த அவசரச் செய்தி உலகைப் பரபரப்பாக்கி இருப்பது மட்டும் உண்மை.
#கேள்வி :
அகில இலங்கை இந்துமாமன்றம், இந்துமத விடயங்களைப்பற்றித் தீர்மானிக்கும் தலைமைக்குழுவில், துறவிகள் சிலரோடு உங்களையும் ஒரு உறுப்பினராகச் சேர்த்திருக்கிறதாமே! நீங்களும் துறவியாகிவிட்டீர்களா? புதுப் புதுப் பதவிகளால் பெருமை கொள்கிறீர்கள் போல.
#பதில் :
“இந்து சமய விடயங்கள் பற்றிய முடிவெடுக்க நீங்களும் பயன்படுவீர்கள். அதனால் உங்களையும் நாம் அமைக்கும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்போகிறோம்” எனக் கேட்டார்கள். சம்மதித்தேன். அவ்வளவே!
உங்களின் கேள்விக்குப் பதிலாக இரண்டு விடயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் துறவியல்ல என்பது அதில் ஒன்று. துறவு என்பது மிகப்பெரிய விடயம். உலகியல் பற்றுக்களிலிருந்து முற்றாக ஒதுங்குவது அல்லது ஒதுங்க நினைப்பதுவே துறவு. நான் இன்றுவரை உலகியல் பற்றுகள் பலவற்றில் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறேன். விடுபட நினைத்தாலும் அது சாத்தியமாகாமல்த்தான் இருக்கிறது.
சிலநாட்களுக்கு முன்பு, வாரத்தில் ஒருநாள் பிச்சை எடுத்து உண்பது என முடிவு செய்து அதைச் செயற்படுத்த ஆரம்பித்தேன். நான் மண்சட்டியுடன் பிச்சை எடுக்கப்போக, பிச்சைக்கு நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், தரும் உணவை பிச்சையாய்த் தராமல் விருந்தாய்த் தரத் தலைப்பட்டார்கள். அதனால் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.
இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த பிறவிகளிலேனும், துறவு நிலை எனக்குக் கைகூடவேண்டுமென இறைவனைப் பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.
வங்கியில் நிற்கும் “கியூ”வில், பணம் போடவந்த பணக்காரர்களோடு நிற்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாய்த்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வறுமையால் கடன்பெற வந்தவர்களும் அவ்வரிசையில் நிற்பார்கள் தானே. அவர்களைப் போலத்தான் நானும் இத் துறவோர் வரிசையில் இணைந்து நிற்கிறேன். அவ்வளவே!
“புதுப் புதுப் பதவிகளால் பெருமை கொள்கிறீர்களா?” என்று கேட்டிருக்கிறீர்கள். பதவிகளாலும், பட்டங்களாலும் பெருமைப்பட்டுக்கொள்வது என் வழக்கமன்று. பதவிகளையும், பட்டங்களையும் பெருமைப்படுத்த முயல்வதுதான் என் வழக்கம். இதுதான் நான் சொல்ல நினைத்த இரண்டாவது விடயம்.
#கேள்வி :
நம் ஜனாதிபதியை வீழ்த்தவென கஸ்ஸப்ப தேரர் சூனியம் செய்தாராமே. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
#பதில் :
கசப்பு என்ற வார்த்தையின் தொனி வரத்தக்கதாய்ப் பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ கஸ்ஸப்ப தேரரரும் “கசப்பு”த் தேரராய்த்தான் இருக்கிறார். சூனியம் என்ற வார்த்தைக்கு ஒன்றும் இல்லாதது என்பதுதான் பொருள். ஒன்றும் இல்லாததைச் செய்ய ஒன்றும் இல்லாதவர்கள்தான் முயற்சிப்பார்கள்.
உண்மை அறிவைத்தேடிய புத்தரின் வழியில் செல்லத் தலைப்பட்ட இவர்களின் இத்தகைய செயல்கள் புத்தருக்குத் தலைகுனிவை ஏற்படுத்துவதாய்த்தான் அமைகின்றன.
கோடிக்கணக்கான பெறுமதியுள்ள காரில் சென்று, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அமைதியைத் தேடும் இத்தகையவர்களுக்கும், அரசமரத்தின் கீழ் இருந்து ஆனந்தம் தேடிய புத்தருக்கும் எப்படித் தொடர்பிருக்கும்? பௌத்த பெருமக்கள் இத்தகையவர்களை இனங்கண்டு ஒதுக்கினால்த்தான் பௌத்தத்திற்கும், புத்தர் பெருமானுக்கும் மதிப்பு உண்டாகும் என்பது மட்டும் நிச்சயம்.