Nerkanal 17

Nerkanal 17
மற்றவை 30 Oct 2026

சென்ற வாரம் …..

பின்னர், இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தினுள் நுழைந்தபோது, யாழ்ப்பாணத்தைவிட்டு மக்கள் அனைவரும் வெளியேறிய காலத்திலும்கூட, அம்மையார் தான் வளர்த்த குழந்தைகளைக் கைவிடாமல், உசன் முருகன் கோயிலடியில் அக் குழந்தைகளைக் கொண்டு சென்று பாதுகாத்த விதத்தை  யாழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். நமது இந்து மதத்தின் காவலராய் விளங்கிய அந்த அன்னை இன்று நம்மோடு இல்லை.

 

இந்த வாரம் …

#நிருபர்:

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து ஊர்வலம் நடத்தியபோது, புலிகளுடன் சிறிய முரண்பாடு ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். அத்தகைய சம்பவங்கள் வேறும் நடந்தனவா?

#பதில்

அப்படி இரண்டு, மூன்று சம்பவங்கள் நடக்கத்தான் செய்தன. அவற்றைத் தவிர்த்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது நீங்களே கேட்கிறபடியால், அவை பற்றியும் சொல்லத் தோன்றுகிறது.

புலிகளுக்கும் எங்களுக்குமான உறவு ஆரம்பத்தில் மிக நெருக்கமாகத்தான் இருந்தது. இலக்கியக்காரர்களுக்குள் எங்கள்மீது அவர்கள் அதிகம் மதிப்பு வைத்திருந்தார்கள். அவர்களுக்குப் பலவிதங்களில் நாங்களும் துணை செய்திருக்கிறோம்.

அக்காலத்தில்த்தான் புலிகளின் பாடல்கள் ஒலிநாடாவாக வெளிவரத் தொடங்கின. அவர்களது முதல் ஒலிநாடா வெளியீட்டுவிழா, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது புலிகளின் மேடைகளில் ஏற அறிஞர்களும், இலக்கியவாதிகளும் தயங்கி வந்தார்கள்.

அந்த வெளியீட்டு விழா மேடையில் புலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஆதரவாளர்களாக இருந்த ஒருசிலர் மட்டும், அந்நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த விரிவுரையாளர் சுப்ரமணிய ஐயர் அவர்களில் ஒருவராய் இருந்தார்.

நிகழ்வு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென மேடையிலிருந்த “யோகி”, “தமிழ்ச்செல்வன்” ஆகியோர், தமக்குள் கூடி ஏதோ பேசினார்கள். பிறகு யோகி இறங்கி வந்து “நீங்களும் பேச வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள்” என்று கூறி என்னைக் கட்டாயப்படுத்தி மேடைக்கு அழைத்தார். வேறு வழியின்றி நானும் சம்மதித்து மேடைக்குச் சென்றேன்.

மேடையில் புலிகளின் தளபதிகள் அனைவரும் இருந்தபடியால், அங்கு பேசிய எல்லோரும் இறுக்கமாக உரையாற்றிவிட்டு இருக்க, நான் எனது வழக்கமான பாணியில் அங்கும் நகைச்சுவையாகப் பேசத் தொடங்கினேன். ஒரு கதையோடு எனது பேச்சை நான் ஆரம்பித்தேன்.

“இளமைக்காலத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கீரிமலைக்குக் குளிக்கச் செல்வோம். வந்தவர்களில் துணிவுள்ள இளைஞர்கள் உற்சாகத்தோடு முதலில் கேணிக்குள் குதித்து விடுவார்கள். என்னைப் போன்ற பயந்த ஒருசிலர், அவர்களைப் போலக் குதிக்கப் பயந்து கேணிப்படியில் உட்கார்ந்து விடுவோம்.

முதலில் குதித்தவர்கள் எங்களையும் கேணிக்குள் வரும்படி அழைப்பார்கள். நாங்கள் மறுத்து விடுவோம். எங்களைக் கேணிக்குள் இறக்குவதற்காக, அவர்கள் தண்ணீரை அள்ளி எங்கள்மேல் எற்றுவார்கள். நனைந்து போனபிறகு நாங்களும் வேறுவழியில்லாமல் கேணிக்குள் இறங்கி விடுவோம்.

அதுபோலத்தான் துணிவுள்ள உங்களில் பலர் போராட்டத்திற்குள் ஏற்கெனவே குதித்து விட்டீர்கள். இப்போது எங்களையும் உள்ளிழுப்பதற்காக, கேணிக்குள் இருந்தவர்கள் தண்ணீர் எற்றியது போல, இத்தகைய மேடைகளில் ஏற்றி, எங்கள்மேலும் போராட்ட அடையாளத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். அந்தவகையில் இன்றைக்கு நானும் சுப்பிரமணிய ஐயரும் உங்களது எற்றுதலுக்கு அகப்பட்டு நனைந்திருக்கிறோம்” என்று சொல்ல இறுக்கம் களைந்து சபை வாய்விட்டுச் சிரித்தது. மேடையில் இயல்பு நிலை உண்டாயிற்று.

அந்த நிகழ்வுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில், “ஜெயராஜ் சொன்னது மாதிரி இன்னாருக்கும் இப்ப தண்ணி எற்றத் தொடங்கிட்டாங்கள்” என்று பேசுவது ஒரு வழக்கமாகிவிட்டது. இந்நிகழ்வுதான் அவர்களோடு நாம் இணைந்த முதல் நிகழ்வு.

 

#நிருபர் :

இதன் பிறகு தொடர்ந்து அவர்களுடன் பயணித்தீர்களா?

#பதில் :

அப்படிச் சொல்ல முடியாது. போராட்டத்தில் அவர்களோடு நாம் இணைந்து கொள்ளவில்லை. வன்முறையில் எனக்கு எக்காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. என்னோடு பயணித்தவர்களும் அதே மனநிலையில்த்தான் இருந்தார்கள். அதனால் அவர்களுடைய இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு நாம் நிறுத்திக் கொண்டோம்.

 

#நிருபர் :

கவிஞர் புதுவை இரத்தினதுரையைத் தவிர, புலிகள் இயக்கத்தைச் சார்ந்த மற்றவர்களும் உங்கள்மீது அன்பு பாராட்டினார்களா?

#பதில் :

அங்ஙனம் அன்பு பாராட்டியவர்கள் பலர். காவல்த்துறைப் பொறுப்பாளராக இருந்து நடேசன், கல்வித்துறை பொறுப்பாளராக இருந்த பேபி சுப்ரமணியம், தேவர், ஆஞ்சநேயர் போன்ற பலர் அப் பட்டியலில் அடங்குவர்.

புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் அவர்கள், என்னுடைய பரம ரசிகராய் இருந்தார். “அண்ணையின் பேச்சு எங்கேயும் கேட்டால், வாகனத்தை நிறுத்திவிட்டு நாம் எல்லோரும் இறங்கி நின்று அந்தப் பேச்சை முழுமையாய்க் கேட்டுவிட்டுத்தான் எங்கள் பயணத்தைத் தொடருவோம்” என்று, பலரும் இருக்கும் சபைகளிலேயே அவர் கூறி மகிழ்ந்திருக்கிறார்.

 

#நிருபர் :

குறிப்பிடும் படியாக அவர்களின் வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டமை பற்றியும் சொல்லுங்களேன்.

#பதில் :

முதல் சொன்ன நிகழ்விற்குப் பிறகு, புலிகள் எடுத்த “முத்தமிழ் விழாவின்” போது, இயல் நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பை அவர்கள் எங்களிடம் தந்தார்கள். திடீர்  திடீரென அவர்கள் சொல்ல, அன்றன்று தலைப்பிட்டு, வேறு வேறு ஊர்களில் பட்டிமண்டபங்கள் பலவற்றை நாம் நடத்தினோம்.

அவ் விழாவின் இறுதி நாளில் முற்றவெளியில் கூடிய இலட்சக்கணக்கான மக்கள் முன்பாக, நான் நடுவராக இருக்க எங்கள் கழக உறுப்பினர்கள் நடத்திய வழக்காடு மன்றம் மக்கள் மத்தியில் எங்களுக்குப் பெரிய பிரபல்யத்தைத் தேடித் தந்தது. 

அதுமட்டுமல்லாமல் மற்றொரு முறை, இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் நுழையப் போகிறது என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, புதுவை போன்றோர் எங்களிடம் வந்து, போராட்ட உணர்வை மக்கள் மத்தியில் வலுப்படுத்த நீங்கள் உதவவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று, பல ஊர்களில் “நாமிருக்கும் நாடு நமதென்று அறிந்தோமா?” என்ற தலைப்பில் பட்டிமண்டபங்களை நாம் நடத்திக் கொடுத்தோம்.

அப் பட்டிமண்டபங்களில், நம் இனத்தின் பெருமையையும், அதற்கு ஏற்பட்டிருக்கும் இடர்களையும் தெளிவாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒன்றுபட்டு நம் இனத்தின் பெருமையைக் காக்க முன்வரவேண்டும் என வலியுறுத்திக் கூறினோம். எங்களது அந்த பட்டிமன்ற உரைகளை மக்கள் உணர்வு பொங்கக் கேட்டதை என்னால் மறக்கமுடியாது.

இதற்குப் பிறகு ஒருமுறை அவர்களில் முக்கியமான ஒருவர் என்னை வந்து சந்தித்தார். அவரது பெயர் இப்போது மறந்து போய்விட்டது. வந்த அவர் “புலிப்போராளிகளுக்கு தாம் நடத்தும் வகுப்புக்களில் நீங்கள் ஒருநாள் வந்து கலந்து கொண்டு உரையாற்றவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்று, புலிப்போராளிகளுக்கு நடத்தப்பட்ட அந்த வகுப்பில் உரையாற்ற ஒருநாள் சென்றேன். அன்றைய அந்த வகுப்பில், பொதுமக்களோடு போராளிகள் எப்படிப் பழகவேண்டும்?, மக்களைக் கவர அவர்கள் என்னென்ன உத்திகளைக் கையாளவேண்டும்? என்பது பற்றி, சில செய்திகளைச் சுயமாக எடுத்துரைத்தேன். சொந்தமாய் நான் சிந்தித்துச் சொன்ன அச் செய்திகளை அங்கிருந்த போராளிகள் மிக ஆச்சரியத்தோடும், ஆர்வத்தோடும் கேட்டார்கள்.

#நிருபர் :

தொடர்ந்தும் அந்த வகுப்புக்களை நீங்கள் நடத்தினீர்களா?

#பதில் :

இல்லை! அதற்குப்பிறகு என்னை அவர்கள் அங்கு அழைக்கவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. அன்று நான் ஆற்றிய உரையைக் கேட்டு, போராளிகளை நான் திசை திருப்பி விடுவேன் என்று நினைத்தார்களோ என்னவோ?

 

#நிருபர் :

துர்க்கை அம்மன் ஆலயத்திற்காக நடத்திய ஊர்வலத்திற்குப் பிறகும், புலி இயக்கத்தினருடனான முரண்பாடு தொடர்ந்ததா?

#பதில் :

தொடர்ந்தது. சிறிய சிறிய முரண்பாடுகள் தற்செயலாய் நடந்தன. அவை பற்றியும் சொல்கிறேன். இந் நிகழ்ச்சிகளைக் காலவோட்டத்தின்படி சொல்கிறேனோ, என்னவோ எனக்குத் தெரியவில்லை. நினைவுக்கு வரும் ஒழுங்கில் சம்பவங்களைச் சொல்கிறேன்.

இந்திய இராணுவம் வருவதற்கு முன்பாக என்று ஞாபகம். அப்போது இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த “கொப்பேகடுவ” என்பவர் ஒரு ஆளுமையாளராகப் பேசப்பட்டார். அவர் மண்டைதீவிலிருந்து இராணுவத்துடன் புறப்பட்டு யாழ்ப்பாணத்திற்குள் நுழையப் போவதாக ஒரு செய்தி பரவியது.

அதனால் யாழ்ப்பாணத்தில்  பெரிய பதற்றம் நிலவியது. அந்த நேரத்தில்த்தான் கிட்டு இந்தியாவிலிருந்து கடல்வழியாக இங்கு வந்தபோது, வழியில் அவரது படகு தாக்கி அழிக்கப்பட்ட செய்தி வெளி வந்தது. அச்சம்பவத்தில் கிட்டுவும் இறந்து போனார். 

இடைக்காலத்தில் கிட்டு தான் யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பை வீரியமாக வளர்த்தெடுத்தார். அவர் தளபதியாக இருந்தபோது, புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்த பல வீரர்கள், யாழ் மக்களால் அறியப்பட்டவர்களாக இருந்தார்கள். கிட்டு ஒரு “ஹீரோ” போல மக்கள் மனதில் பதிவாகியிருந்தார். அழகான வீரியமான புலி இளைஞர்கள் பலர் அவரோடு சுற்றித் திரிந்தார்கள். 

பிற்காலத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. கிட்டு இயக்கத்தினரால் ஓரளவு ஓரங்கட்டப்பட்டார். அவருக்கு “மெடிக்கல் கொலிஜில்” படித்த ஒரு காதலி இருப்பதாகப் பேசப்பட்டது. ஒருநாள் இரவு அவர் அந்தக் காதலியைச் சந்தித்துவிட்டு திரும்புகையில், அவர்மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் அவர் வைத்தியத்திற்காக இந்தியாவுக்கு புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் மாத்தையா முழுவீச்சாய் யாழில் செயற்படத் தொடங்கினார்.

கிட்டுவின் மீதான தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது பற்றிப் பலவிதமான வதந்திகள் அக்காலத்தில் உலாவந்தன. மாற்று இயங்கங்கள் சிலவற்றின் பெயர்கள் மட்டுமன்றி, புலிகள் இயக்கத்தின் பெயரும் அவ் வதந்திகளில் இணைக்கப்பட்டிருந்தது ஆச்சரியம்.

அப்படி வைத்தியத்திற்காகச் சென்று, ஒரு காலை இழந்த நிலையில் சுகப்பட்டு திரும்பி யாழ்ப்பாணத்திற்கு வந்த போதுதான், அவர் கடலில் வைத்து கொல்லப்பட்டார். அப்போதும் அத் தாக்குதல் பற்றிப் பல வதந்திகள் மீண்டும் உலா வந்தன.  

அது ஒருபுறம் கிடக்க, கிட்டுவின் மரணம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எங்களது கவிஞர் புதுவை அப்போது இயக்கத்தில் இணைந்திருந்தார். கிட்டுவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கலை இலக்கியவாதிகள் சார்பாக, யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், அவர் ஓர் அஞ்சலிக் கூட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்தார்.

அந்த நிகழ்விலும் அவர்களுடனான ஒரு முரண்பாடு நிகழ்ந்தது.

தொடரும்…

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.