'அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி!' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

'அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி!' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-
 

யர் தமிழின் குறியீடாய் யாழ்ப்பாணத்தில்
ஓங்கு புகழ் தன்னோடு உயர்ந்து நிற்கும்
அயர்வறியாப் பெருங் கல்விமானே உந்தன்
அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி!
வியனுலகில் மென்மேலும் அகவை பொங்கி
வித்தையிலும் உயர்வு வர விளங்கி நின்று
தயவுடனே எம்தமிழாம் அன்னை தன்னை
தாங்கிடுவாய் தரணியெல்லாம் புகழ உன்னை

 

கம்பனது கழகமதில் கனிவாய்ச் சேர்ந்து
கைகொடுத்து உறவெனவே வாழ்ந்த காலம்
தெம்புதரும் நினைக்கையிலே, தினமும் எங்கள்
தெவிட்டாத சங்கமத்தில் இணைந்து நின்றாய்
உம் புதிய கவிதைகளால் உள்ளம் ஈர்த்து
உயர் தமிழாம் சுவைக்கடலில் மூழ்க வைத்தாய்
அம்புவியில் அக்காலம் இனியும் வந்து
அணையாதோ? என உள்ளம் ஏங்குதம்மா!


சோ.பத்மநாதன் என்னும் பெயரை நாங்கள்
சுருக்கித்தான் சோ.ப. என்றழைத்த காலம்
நீ நித்தம் எமைத்தேடி தினமும் வந்து
நெஞ்சில்உள சுமைகளெலாம் இறைத்த காலம்
ஆபத்தில் உறவெனவே அருகே நின்று
அண்ணனொடு தம்பியென வாழ்ந்த காலம்
தீபத்தை நாடுகிற விட்டில் போல
தினமும் நாம் உன் கவியில் மகிழ்ந்த காலம்


வேலனொடு அறுமுகனார் விரும்பும் எங்கள்
வீறான சிவராம லிங்கத்தாரும்
ஆழமதாம் உனதறிவைப் போற்றி நின்றார்
அணையுங்கள் அவன்தனையே என்று சொல்லி
சீலத்தின் வழி உறவைச் சேர்த்துத் தந்தார்
சிலகாலம் எம்மவனாய் நெருங்கி நின்றாய்
காலத்தின் கோலமதோ கடவுள் தீர்ப்போ
கற்றவனே எமைவிட்டுத் தூரப் போனாய்.


அரங்கத்தில் நீ ஏறி கவிதை சொல்ல
அற்புதமாய் சொல்லோடு எழுத்துத்தானும்
சிரம் தன்னில் பதிந்திடுமாம் செவிகள் நல்ல
சீரோடு அசைகள்தனை உருகி வாங்கும்
உரம் மிக்க சொற்பொருளும் உயிரில் ஏறி
உருக்கிடுமாம் நெஞ்சமதை உயர்ந்த நல்ல
திறம் மிக்க கவிதைகளை அள்ளித் தந்து
தேற்றினையே அவ் அன்பு மறந்து போமோ?


சந்தங்கள் உன் நாவில் சதிர்கள் ஆடும்
சாற்றுகிற வெண்பாக்கள் எளிமை காட்டும்
முந்துகிற புதுச் சொற்கள் மின்னி மின்னி
முழுமனதும் நிறைவிக்கும் மூப்பேயில்லா
சிந்ததனை எளிமையுற ஆக்கி நீயும்
சேர்த்தனையே தமிழ்தனக்குப் புகழும் ஓங்க
விந்தை மிகு கவிவரத்தை வேண்டிப் பெற்ற
வீங்கு புகழ் சோ.ப. நீ நூறு வாழ்க!


இருமொழியும் கைவந்த எளிமையாலே
ஏற்றுதலும் இறக்குதலும் செய்து எங்கள்
ஒருமொழியாம் தமிழினிற்கு உயர்வு தந்தாய்
ஒப்பற்ற உந்தனது ஆக்கமெல்லாம்
பெருமொழியாம் எம் தமிழின் பெருமை தன்னைப்
பேசியதால் யாழ் மண்ணின் உயர்வுதானும்
சிறகடித்து விண்ணளவும் சேர்ந்த தன்மை
சிறக்காது வேறெவர்க்கும் நிஜமே அம்மா!


நேயத்தால் எமதுள்ளம் நிறைந்து நின்றாய்
நீசர் சிலர் எமக்கிடையில் பகையை வார்த்து
தாயத்தார் என வாழ்ந்த உறவுக்குள்ளே
தனலதனைப் புகுத்திட்டார் தளர்ந்து போனோம்
ஆயத்தில் எம்மோடு இருந்தகாலம்
அகத்தினிலே எப்போதும் பதிந்து நிற்கும்
மாயத்தால் அழியாது உண்மை அன்பு
மனத்தடியில் இப்போதும் நீயே நிற்பாய்.


ஆழமிலா அறிவுலக ஆட்கள் உன்னை
அணைத்துத்தான் தாம் வளர எண்ணிச் சூதால்
வேழமென வீண் புகழ்ச்சி செய்ய நீயும்
விழுந்தவரின் வலைப்பட்டு வீணே தாழ்ந்தாய்
காலமெலாம் உன் பெருமை கண்ட நாங்கள்
கல்லாதார் போல் புகழ்ச்சி செய்யமாட்டோம்.
ஆழமிகு உன் அறிவைப் புகழ்தல் போல
ஆங்காங்கு கண்டனமும் செய்து நிற்போம்.


தடம் மாறி நீ எங்கள் நெஞ்சம் நோக
சார்பதனால் நடக்கையிலே கோபம் கொண்டு
திடமாக உன் தன்னை பலவும் சொல்லி
திட்டித்தான் வசை மொழிந்தேன் திகழும் நெஞ்சில்
விடமாக ஏதொன்றும் இல்லைக் கண்டாய்
விளம்பியது அனைத்திலுமே அன்பைக் காண்பாய்
இடமாக எப்போதும் எங்கள் நெஞ்சில்
இருந்திடுவாய் இஃதுண்மை இனிது வாழி!


நேற்றுப்போல் இருக்கிறது உன்னைக் கண்டு
நிஜமாக அன்பிணைந்த நாட்களெல்லாம்
 காற்றுப்போல் பறந்திடவே காலம் போக
கடிதாக அமுதவிழா காணுகின்றாய்
ஏற்றுகிற எண்பதிலே இருக்கும் உன்னை
இனிதாக அறுபதினைக் கடந்து நின்று
சாற்றுகிறேன் வாழ்க! என பெரியோய் வாழி!
சந்ததிகள் செழிக்கட்டும் நூறைக் காண்பாய்
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.