ஆகமம் அறிவோம் | பகுதி 6 | கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்ட வேண்டுமா?

ஆகமம் அறிவோம் | பகுதி 6 | கிரகணங்களின் போது  ஆலயங்களைப் பூட்ட வேண்டுமா?
 
ங்களுடன் எப்பவோ பகிர்ந்து கொள்வதாய்ச் சொன்ன விடயத்தை,
இப்பொழுதுதான் பகிரமுடிகிறது.
அதற்காக என்னை மன்னியுங்கள்.
நமது சமயத்தின் இன்றைய சர்ச்சைக்குரிய விடயங்களில்,
கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டுமா?
எனும் கேள்வியும் ஒன்றாகியிருக்கிறது.
நம்நாட்டில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் கூட,
பல ஆலயங்களை கிரகணங்களின் போது பூட்டிவிடுகிறார்கள்.
இது ஆகம விதியா? அல்லவா? என்பதுதான் கேள்வி.
அதுபற்றி இம்முறை ஆராய்வோம்.


 

வேதம், ஆகமம் எனும் இரண்டுமே நம் சமயத்தின் மூலநூல்களாம்.
குறிப்பாக சைவர்களுக்கு வேதம் பொதுநூல் என்றும்,
ஆகமம் சிறப்புநூல் என்றும் கூறப்படுகிறது.
வேதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு,
சைவதத்துவங்களையும், ஆலயக்கிரியைகளையும்,
ஆகமங்களே வகுத்துச் சொல்லின.


ஆலயக்கிரியைகளை ஆகமங்களே வரையறை செய்வதால்,
ஆகமங்களை நம்பி வழிநடப்பதாய்ச் சொல்வோர்,
ஆலயக்கிரியைகளை வகுக்கும் போது,
ஆகம அடிப்படையிலேயே அவற்றை நெறிசெய்தல் வேண்டுமாம்.


கிரகணங்கள் பற்றி பொதுவான ஒரு விடயத்தை,
முதலில் சொல்கிறேன்.
குறித்த சில காலங்களை நமது சமயநெறி,
புண்ணியகாலங்களாய் வகுக்கின்றது.
விஷூ புண்ணியகாலம்,
உத்தராயண புண்ணியகாலம்,
தட்சிணாயன புண்ணியகாலம்,
விஷ்ணுபதி புண்ணியகாலம்,
ஷடசீதி புண்ணியகாலம் என்பவையே அவையாம்.
இக் காலங்கள் வழிபாட்டிற்கு உகந்தவை என்பதை,
அவற்றின் பெயரோடு இணைந்து வரும்,
புண்ணியகாலம் எனும் தொடரே நிரூபித்து நிற்கின்றது.
சொல்லாமலே விளங்கவேண்டிய விடயம் இது.
இப் புண்ணியகால வரிசையில்,
கிரகண காலங்களையும் நம் பெரியோர்கள் இணைத்து,
கிரகண புண்ணியகாலம் என்றே அதனை அழைக்கின்றனர்.


எனவே இப்புண்ணியகாலத்தில்,
ஆலயங்களைத் திறந்து வழிபாடியற்றாமல்,
அப்புண்ணிய நேரத்தில் ஆலயங்களைப் பூட்டி வைத்தல் சரியாகுமா?
ஆராயவேண்டியது அவசியமாகிறது.


முதலில் நம் சமயத்தை நன்கு அறிந்த பெரியார்கள்,
இவ்விடயம் பற்றி என்ன சொல்கிறார்கள்,
என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
நம்நாட்டைப் பொறுத்தவரை,
ஆகம அறிவுபெற்ற அறிஞர்களாய்,
அந்தணர்களில் இருவர் முக்கியமானவர்களாய்க் கருதப்படுகின்றனர்.
ஒருவர் அச்சுவேலி குமாரசாமிக்குருக்கள் அவர்கள்,
மற்றவர் பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் அவர்கள்.
இவ்விருவரும் இன்றைய சில அந்தணர்கள் போல,
ஆகமங்களைப் பார்க்காமலே,
ஆகமங்கள் பற்றி சொல்லி வருகிறவர்கள் அல்லர்.
அவர்கள் ஆகமத்தில் தோய்ந்த அறிவுள்ளவர்கள்.
கிரகண விடயத்தில் அவர்கள் கருத்தை,
நாம் அறியவேண்டியது அவசியமாம்.


அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் அவர்கள்,
தனது ‘மகோற்சவ விளக்கம்’ எனும் நூலில்,
‘நித்தியாதி கருமங்கள்’ பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.
நித்தியாதி கருமங்கள்
சிவராத்திரி, அர்த்தோதயம், மஹோதயம்,
அபரபக்க அஷ்டமி, பூர்வபக்க அஷ்டமி,
பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி,
சூரியசந்திர கிரகணம், மகாசங்கிராந்தி முதலிய,
புண்ணியகாலங்களில் விசேஷ பூசை செய்வதும் பிறவுமாம்.
இஃது குருக்களது உறுதிபட்ட கருத்தாய் பதிவாகியுள்ளது.


அதே நூலில் ‘சங்கிராந்தி உற்சவம்’ எனும் தலைப்பில் எழுதும் போது,
➧➧ ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி  எனும் இந்நான்கு மாத சங்கிராந்தியும் ஷடசீதிமுகம் எனப்படும். இவைகளில் மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணியகாலம்.
➧➧ கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாத சங்கிராந்தியும் விஷ்ணுபதி எனப்படும். இவைகளிலே மாதம் பிறக்கும் முன் பதினாறு நாழிகை புண்ணியகாலம்.
➧➧ சித்திரை, ஐப்பசி என்னும் இரண்டுமாத சங்கிராந்தியும் விஷூ எனப்படும். இவைகளிலே மாதம் பிறக்கும் முன் எட்டு நாழிகையும், பின் எட்டு நாழிகையும் புண்ணியகாலம்.
➧➧ தட்சிணாயனமாகிய ஆடிமாத சங்கிராந்தியிலே மாதம் பிறக்கும் முன் பதினாறு நாழிகை புண்ணியகாலம்.
➧➧ உத்தராயணமாகிய சங்கிராந்தியிலே மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணியகாலம்.
➧➧ சூரியகிரகணத்திலே பரிசகாலம் (பற்றுவது) புண்ணியகாலம்
➧➧ சந்திரகிரகணத்திலே விமோசன (விடுவது) புண்ணியகாலம்
சங்கிராந்தி புண்ணியகாலத்திலும், கிரகண புண்ணியகாலத்திலும், விசேஷ பூசை செய்து உற்சவம் செய்க.
என்றும் அவர் எழுதியுள்ளார்.


பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள்,
தனது ‘சைவத்திருக்கோயில் கிரியை நெறி’ எனும் நூலில்,
‘கிரியைகள்’ பற்றி எழுதும் பொழுது,
நித்தியக்கிரியைகள், நைமித்தியக்கிரியைகள், காமியக்கிரியைகள் என,
கிரியைகள் மூன்று வகைப்படும் எனப்பிரித்து,
அவற்றுள் நைமித்தியக் கிரியைகள் பற்றி எழுதும் போது,
பின்வருமாறு எழுதுகிறார்.
➧➧ இருவாரங்களுக்கு ஓருமுறை வருவது பிரதோஷம் முதலான விசேஷ நாட்களாகும்.
➧➧ கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி, மாதப்பிறப்பு முதலிய விசேஷ தினங்கள் மாதம் ஒருமுறை வருவன.
➧➧ சங்கிராந்தி முதலிய தினங்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வன.
➧➧ மாதப்பிறப்பிலும் கிரகணம் நிகழும் தினங்களிலும் விசேஷ தீர்த்தோற்சவம் முதலியன நிகழும்.


அதுமட்டுமல்லாமல்,
நைமித்திய பூசை பற்றி எழுதும் போது,
கிரகணபூசை எனும் தலைப்பிட்டு,

 
கிரகணங்கள் நிகழும் வேளைகளிலும் அயனம், விஷூ புண்ணியகாலம், சங்கிராந்தி, அமாவாசை, ஷடசீதி முதலிய புண்ணியகாலங்களிலும் சிவபெருமானை விசேஷமாகப் பூசித்தல் வேண்டும். இவ்வாறு நிகழும் விசேஷ கிரியையில் புண்ணியாகவாசனம், பஞ்சகவ்ய பூசை, ஸ்நபனம், சாந்தி, ஹோமம் முதலியன இடம்பெறும். சிவனை விசேஷ திரவியங்களால் அபிஷேகித்து பாயசம், சர்க்கரைஅன்னம், அபூபம் முதலியவற்றை நிவேதித்து விசேஷ தீபாராதனை ஆகியன நிகழ்த்தல் வேண்டும்.

என்று தெளிவுபட எழுதுகிறார்.


இவற்றைப் படித்ததும்,
கிரகணங்களில் கோயிலைப் பூட்டவேண்டும் என்று சொல்லிவரும் குருக்கள்மாருக்கு,
இப்பெரியார்கள் மேல் கோபம் வருகிறதோ இல்லையோ,
என்மேல் நிச்சயம் கோபம் வரப்போகிறது.
புண்ணியகாலத்தில் கோயிலைப் பூட்டி வைத்து,
தாமும் பாவம் தேடி மற்றவரையும் பாவம் தேடச்செய்யும் இப்பெரியார்கள்,
ஆணவத்தை விடுத்து அறிவுவயப்படவேண்டும் என்பது,
எனது வேணவா.
அது வீண் அவாவாக ஆகுமோ அறியேன்.


இனி, கிரகணங்கள் பற்றி நம் ஆகமம் என்ன சொல்கிறது,
என்பதனை ஆராயவேண்டும்.
தற்போது ஓரிரண்டு ஆகமங்களே நம் கைக்குக் கிடைக்கின்றன.
அவற்றில் ஒன்றான,
உத்தரகாமிக ஆகமத்தின் முப்பதாவது படலமான,
பிராயச்சித்த விதிப்படலத்தில்,
ஆலயங்களில் நடக்கும் தவறுகளுக்கான,
பிராயச்சித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
அப்படலத்தில் வரும் ஐந்நூற்றி முப்பத்து மூன்றாவது சுலோகத்தில்,
 
அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, உத்தராயணம், தட்சிணாயணம், விஷூ புண்ணியகாலம், கிரகணம் ஆகிய இவைகளில், நித்தியஹோமம் இல்லாமல் இருந்தால், நான்கு மடங்கு அதிகப்படியாக ஹோமம் செய்யவும்.

என்று கூறப்பட்டுள்ளது.
கிரகணத்தில் பூசை செய்யாமைக்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருப்பதால்,
கிரகண காலத்தில் பூசை செய்யாதிருப்பது,
குற்றம் என்பது ஆகம அடிப்படையில் தெளிவாகிறது.
எனவே நமது ஆலயக் கிரியைகளுக்கான பிரமாண நூலாகிய ஆகமமும்,
கிரகணங்களின் போது,
ஆலயத்தைத் திறந்து வைத்துப் பூசை செய்யவேண்டும் என்று சொல்வதை,
நாம் தெற்றெனத் தெரிந்து கொள்ளமுடிகிறது.


அங்ஙனமாயின்,
கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டும் வழக்கம்,
எங்ஙனம் உருவாகியிருக்கும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
எனது ஊகக் கருத்தை இங்கு உரைக்கிறேன்.
அந்தணர்கள் உட்பட நம் சமயவாதிகள் பலருக்கும்,
வேதஆகமங்கள் உண்மையானவை எனும் கருத்தைவிட,
விஞ்ஞானமே உண்மையானது எனும் கருத்தே இன்று அதிகமாய் உள்ளது.
அது நமது துரதிஷ்டம்.
ஒருகாலத்தில் விஞ்ஞானிகள் கிரகணங்களின் போது,
தீய கதிர்வீச்சுக்கள் நிகழ்வதாய்க் கூறி,
அந்நேரங்களில் உணவு உண்ணுதல் முதலியவற்றைத் தவிர்க்கவேண்டும்,
என்று சொல்லி வந்தார்கள்.
என்னுடைய அபிப்பிராயப்படி,
நம்முடைய அரைகுறை அறிஞர்கள் சிலர்,
வேதக்கருத்துக்களையும், விஞ்ஞானக் கருத்துக்களையும் ஒன்றாய்ப் பிசைந்து,
கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டும் எனும்,
கொள்கையைக் கொண்டு வந்திருக்கவேண்டும்.


ஆனால் ஒருவேடிக்கை.
தற்போது விஞ்ஞானிகள் அக்கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டனர்.
சென்ற ஆண்டுக்கு முதல் ஆண்டு,
ஒரு சந்திரகிரகணத்தின்போது,
கிரகணநேரத்தில் உணவு நஞ்சாகும் எனும் கொள்கையை மறுத்துக்காட்ட,
விஞ்ஞானிகள் பலர் மெரீனாக் கடற்கரையில் ஒன்று சேர்ந்து,
உணவு உண்டு களித்த காட்சியை,
இந்தியத் தொலைக்காட்சிகள் பல ஒளிபரப்பின.
கருவிகள் நுண்மைப்பட நுண்மைப்பட,
விஞ்ஞானக் கருத்துக்கள் மாறிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் உயர்ந்தோரால் சொல்லப்பட்ட,
நம் ஆகமப்பிரமாணங்களுக்கு மாற்றமில்லையாம்.
எனவே விஞ்ஞானத்தை நம்பி,
நம் சமய மூலநூற் பிரமாணங்களில் கைவைத்தல்,
நிச்சயம் பொருந்தாதாம்.


நம்நாட்டில் சிலபேர் ஆலயப்பூசை விடயங்களில்,
என்ன பிரச்சினை வந்தாலும்,
உடனே இந்தியாவைக் கேட்கவேண்டும் என்றும்,
இந்தியக் கோயில்களைப் பார்க்கவேண்டும் என்றும்,
மூடத்தனமாய்ச் சொல்லிவருகிறார்கள்.
இங்கு மட்டுமல்ல,
ஆகமம் அறிந்த அந்தணர் தொகை,
அங்கும் அருகித்தான் வருகிறது.
கந்தசஷ்டி விரதத்தின் போது ஒருமுறை பிரச்சினை வந்தபோது,
திருச்செந்தூரில் இருந்து அந்தணர்கள் சிலர் கூட்டிவரப்பட்டார்கள்.
அவர்கள் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கையில்,
கந்தசஷ்டி விரதத்தை,
நாம் அமாவாசையிலோ பிரதமையிலோ சதுர்த்தசியிலோ,
எப்போதும் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி வேடிக்கை செய்தனர்.
அதையும் இந்தியக்குருக்கள்மார் சொன்னதால் சரி என்று ஒத்துக்கொள்ள,
இங்கு ஒருசிலர் இருக்கவே செய்தார்கள்.
எனவே இந்திய அந்தணர்கள் சொன்னார்கள் என்பதை விட்டுவிட்டு,
இனியேனும் சுயத்துடன் நம் பிரமாணநூல்கள் சொல்லும் கருத்துக்களை அறிந்தே,
நாம் முடிவெடுக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.


நடந்து முடிந்த சூரியகிரகணத்தன்று,
என்னால் மதிக்கப்படுகிற ஒரு குருக்கள்,
யாழ்ப்பாணத்திலிருந்து என்னோடு தொலைபேசியில் பேசினார்.
ஜெயராஜ் நீங்கள் கிரகணத்தின் போது,
கோயில்களைத் திறக்கச் சொல்கிறீர்களாம்?
இண்டைக்கு ‘சன்ரீ.வி நியூசை’ ஒருக்காப்பாருங்கோ,
திருப்பதி வெங்கடாசலபதி கோயில்,
கிரகணத்துக்காக பூட்டிறத காட்டிறாங்கள்’என்றார்.
நான் அவரிடம் ‘ஐயா வெங்கடாசலபதி கோயில் வழிபாடு,
வைஷ்ணவ ஆகமப்படி நடப்பது,
வைஷ்ணவ ஆகமம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.
ஒருவேளை அவர்களின் ஆகமம் பூட்டச்சொல்கிறதோ என்னவோ?
அப்படியில்லாமல்,
இங்கு நாங்கள் சைவ ஆகமத்தில் இல்லாத விடயத்தை,
ஆகமவிதியாய்ச் சொல்லிக் கோயிலைப் பூட்டுவது போல,
அங்கும் யாரும் செய்கிறார்களோ தெரியவில்லை’ என்று சொல்லி விட்டு,
இக்கட்டுரையில் எழுதிய விடயங்களையெல்லாம் அவருக்குச் சொன்னேன்.
பதில் சொல்லமுடியாமற்போக,
அவர், ‘அதெல்லாம் சரிதான் என்னவெண்டாலும்,
தேசவழமைச்சட்டம் என்ற ஒன்றும் இருக்குதுதானே’ என்றார்.
நான் வாயடைத்துப் போனேன்.
சட்டப்புத்தகத்தில் வரும் தேசவழமைச்சட்டம்,
ஆகமப்புத்தகத்தில் எப்படி நுழைந்தது என்று,
இன்றுவரை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
பதிலோ தெரிந்தபாடில்லை.


நிறைவாக ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன்.
நம் இந்துசமய நூல் வரிசை மிக விரிந்தது.
அவை நமது வழிபாட்டு முறைகள் அனைத்தையும்,
தெளிவுற வரையறை செய்துள்ளன.
ஆகம நெறியை நாம் கடைப்பிடிப்பது என்று நாம் முடிவெடுத்துவிட்டால்,
நாம் குழம்ப வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
வழிபாட்டு முறையில் குழப்பம் வந்தால்,
நம் பிரமாணநூல்கள் என்ன சொல்கின்றனவோ,
அதனை அடிப்படையாக வைத்தே,
அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.
எனக்குத் தெரிந்த அளவில்,
நம் பிரமாணநூல்களை ஆதாரங்காட்டி,
கிரகணங்களின் போது ஆலயங்களைத் திறந்து வழிபாடியற்றவேண்டும் என,
நிரூபணம் செய்துள்ளேன்.
இதுவே முடிந்தமுடிவாய் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
எனது கருத்துத் தவறெனின்,
ஏற்றுக் கொள்ளப்பட்ட நம் சைவப்பிரமாணநூல்களில்,
இன்ன நூல் கிரகணங்களின் போது,
ஆலயங்களைப் பூட்டவேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று,
யாரும் எடுத்துக்காட்டுவார்களேயானால்,
அக்கருத்தைப் பரிசீலிக்க நான் தயாராயிருக்கிறேன்.
இதில் நான் சொன்னதுதான் சரி என்கின்ற,
தன்மானப் பிரச்சினை ஏதும் எனக்குக் கிடையாது.
ஆகமம் அறிவோம் தொடரும்.
'ஆகமம் அறிவோம்' தொடரின் முன்னைய பகுதிகளைப் படிக்க 
சொடுக்குக.
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.