ஆண்டவனின் அம்மை: பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஆண்டவனின் அம்மை: பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

லகில் எவர்க்கும் கிட்டாத பெருமை வாய்த்தவள்,
நம் காரைக்கால் அம்மை.
அவள் தாயுமானவர்க்குத் தாயும் ஆனவள்
பேய் வடிவொடு பேரன்பு செய்த பெரியள்.
வணிக குலத்தின் புனிதம்.
கணவனே தொழுது நின்ற காரிகை,
அன்பும் அறனும் உடைத்தாய இல்லறத்தின்
பண்பின்; பயனாய் பரமனையே வருவித்தவள்.
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து,
எண்ணில் நல்ல கதி எய்திய ஏய்ந்திழை.

பக்தியோடு தமிழைக்கலக்கும் பாதை அமைத்தவள்.
தாயின் மூத்த திருப்பதிகமே பதிகங்களின் தாயுமாம்.
பெண்மைக்கு முத்தியில்லை என்னும் பேதைமைக்கருத்தைப் பெயர்ப்பித்தவள்.
ஐயன் அடிதொட்ட மண்ணில் கால் வைக்கலாகாது எனும் கருத்தால்,
கயிலையில் தன் தலையால் நடந்த தாயவள்.
அடியாருள், ஐயன் முன்நிலையில் அமர்ந்திருக்கும் பாக்கியம் பெற்றவள்.
அறுபத்து மூவர் சிலாரூபங்களுள் அன்னையின் ரூபமே அமர்ந்த வடிவில் இருக்குமாம்.
அம்மையே! என அழைத்து 'யாதும் கேள்' என ஐயன் உரைக்க,
இறவாத இன்ப அன்பும்,
பிறவாமையும்,
பிறந்தால்; ஐயனை மறவாமையும் கேட்டு ஆச்சரியப்படுத்தியவள்.
ஐயன் ஆடும் போது மகிழ்ந்து பாடி  அடிக்கீழ் இருக்கும் வரம் பெற்றவள்.

தெய்வச்சேக்கிழார்,
அவ் அன்னையின் வரலாற்றை அகம் உருகிப்பாடுகிறார்.
தமிழும், பக்தியும் ததும்பத்ததும்ப அவர் பாடிய காரைக்காலம்மை புராணம்,
கற்பார் தம் நெஞ்சைக் கனிவிப்பது.
நற்பாதை காட்டி நெகிழ்விப்பது,
இறவாத இன்ப அன்பு ஈவது,
பிறவாத பெரும்பேறு தருவது,
அன்னையின் அவ் அருள் வரலாற்றை முதலில் காண்பாம்!
 
காரைக்கால்,
அன்னை அவதரிக்கத் தவம் செய்த ஊர்.
கடல் சூழ்ந்த நெய்தல் நிலம் அது.
வேகக் கடல் அலைகள் வீச,
வளைந்த சங்குகள் வயல் வெளியைச் சேர்ந்து உலவும்,
வளம் கொண்ட நகர் அது.
கூனல் வளை திரை சுமந்து கொண்டேறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்
சேக்கிழார்தம் தெய்வத் தமிழ் விளையாடுகிறது.
சங்குகளால் சிறப்புறுவது கடலே,
அச் சங்கினை கடல் அலைகள் தள்ள,
அவற்றைப்பெற்று வயல் வளம் கொள்கிறது என்கிறார் அவர்.

அருட் கடலுள் அமிழ்ந்திருந்த அன்னையை விதி என்ற அலை எற்ற,
அவரைத் தன்னுள் தாங்கிப் பெருமை கொண்ட காரைக்காலின் சிறப்பினை,
நிலவளம் உரைக்குமாற் போல்,
இவ் உவமையால் நினைய வைக்கிறார் தெய்வச் சேக்கிழார்.
கூனல் வளை என்று, சங்கின் வளைவுகள் சுட்டப்படுதல்,
அன்னையின் அங்க இலட்சணங்களையும் நினைவுறுத்தவோ? எனக் கருதத்தோன்றுகிறது.
தெய்வ மகளைப் பெறப் போவதால்,
மேற்பாடலில் காரைக்காலினை,
திரு என்னும் அடையிட்டு கௌரவிக்கிறார் அவர்.

அவ்வூரில்,
மானமிகு தர்மத்தின் வழிநின்று,
வாய்மை தவறாது வந்த பெரும் செல்வத்தால் சிறந்த,
ஊனம்இல் சீர்பெரு வணிகக் குடிகள் நெருங்கி வாழ்ந்தன.
வளம்மிக்க அவ் வணிகர் குடித் தலைவனாய் இருந்தான் தனதத்தன்.
தனதத்தனின் தவத்தால் திருமகளே அவதரித்தாளோ? என எண்ணும் படி,
பொங்கிய அழகு பொழிய புனிதவதியார் பிறந்தார்.

வங்கம் மலி கடற் காரை காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால் 
அங்கவர் பால் திருமடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்.

அன்னையின் பிறப்பை அவதாரமாய் உரைக்க விரும்புகிறது,
சேக்கிழாரின் அருள் நெஞ்சம்.
காதைக்குப் புறம்பாகும் எனக் கருதி,
திருமடந்தை அவதரித்தாள் என வந்து என்பதாய் பாடல் அடியிட்டு,
உவமையில்  அவ் வார்த்;தையினை உரைத்து மகிழ்கிறார் அவர்.
பின்னாளில் கணவனைப் பிரிகிறார் காரைக்காலம்மை.
அன்னையின் அழகின்மையே அதற்காம் காரணம் என்று,
எவரும் உரைத்து விடலாகாது எனக் கருதி,
'திருமடந்தை' , 'பொங்கிய பேரழகு' என்றெல்லாம் உரைத்து,
தாயின் தெய்வத்தனிஅழகை நிரூபணம் செய்கிறார் சேக்கிழார்.

புனிதவதியார் என்பது அன்னையின் இயற்பெயர்.
பிறந்த பின் குழந்தைக்குப் பெயரிடுவதே மரபு.
இங்கோ புனிதவதியார் பிறந்தார் என உரைத்து,
பிறக்கும் போதே அன்னை புனிதள் என்பதையும்,
அப்பெயர் இடுகுறிப்பெயர் அன்று காரணப்பெயர் என்பதையும்,
தெய்வச் சேக்கிழார் மறைமுகமாய்ச் சுட்டுகிறார்.

அடி தளர்வுற அசைந்து நடை பயிலுகையிலேயே,
ஐயன் கழற்கு அடிமை பயின்றாள் அன்னை,
பின்னர், மனக்காதல் ததும்ப மொழி பயின்றாள்.
வளர்ந்த பின் தொண்டர் எவரும்வரின் தொழுது உபசரிப்பது,
அன்னையின் அருள் வழக்காயிற்று.
எழுந்த மார்புப் பாரத்தால் இடை வருந்த,
அன்னை பருவ வயதெய்தினாள்.
வணிகர்பெருங் குலம்விளங்க வந்து பிறந்தருளிய பின்
அணிகிளர்மெல் அடிதளர்வுற் றசையுநடைப் பருவத்தே
பணிஅணிவார் கழற்கடிமை பழகிவரும் பாங்குபெறத்
தணிவில்பெரு மனக்காதல் ததும்பவரும் மொழிபயின்றார்.

மேற்பாடலில் வரும் மனக்காதல் எனும் தொடரின் மூலம் மன வழிபாட்டினையும்,
மொழிபயின்றார் எனும் தொடரின் மூலம் வாக்கின் வழிபாட்டினையும்,
அடிமை பழகிவரும் எனும் தொடரின் மூலம் மெய் வழிபாட்டினையும் சுட்டி,
அன்னை இளமைப் பருவத்திலேயே,
திரிகரணங்களையும் இறைவன் பால் செலுத்திய அருமையை,
குறிப்பால் சுட்டுகிறார் நம் தெய்வச்சேக்கிழார்.

உறுப்பழகு கூறும் உயர் நூல்கள் உரைத்தபடி,
நலம் நிரம்பி நின்றாள் நம் அன்னை.
அன்னையின் அழகு கண்டு அதிசயித்தும்,
அவள் பிறந்த பெருங்குடியின் பெருமை உணர்ந்தும்,
பலரும் அன்னையைப் பெண் கேட்டுப் பரிவுடன் வந்தனர்.
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
மல்குபெரு வனப்பு மீக்கூரவரு மாட்சியினால்
இல் இகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கேற்கும்
தொல் குலத்து வணிகர் மகட் பேசுதற்குத் தொடங்குவார்.

நாகைப்பட்டினம் என்று ஒரு நகர்.
அந் நகரும் நெய்தலின் நிமிர்வு கூறுவதாம்.
புகழ் வணிகர் குலத்தால் பொழிந்தது அவ் ஊர்.
நீடிய அக் குலத்தில் நிதிபதி என்பான் நிறைந்து வாழ்ந்தான்.
பெற்ற மகனுக்கு உற்ற மனை தேடினான் அவன்.
அன்னையின் அழகின் புகழும்,
குடியின் குன்றாப் புகழும் அவன் செவியில் விழ,
பெண் கேட்டு அறிஞர்தமை பேசி வரவிட்;டான்.
நீடியசீர் கடல் நாகை நிதிபதி என்றுலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குலமைந்தனுக்குத்
தேட வரும்; திருமரபில் சேயிழையை மகட்பேச
மாட மலி காரைக்கால் வளநகரில் வரவிட்டார்.

கற்றோர் பெண் கேட்கவர, கனிந்தான் தனதத்தன்.
பரமதத்தனை தன் மகட்குப் பதியாக்கி,
புனிதவதியைப் போற்ற நினைந்தான்.
திருமணம் நிச்சயமாயிற்று!

மண ஓலை செலவிட்டு மண முரசு முழக்கி,
இனம் கூடி வாழ்த்த,
மெல்லடியும், மென்னகையும் கொண்ட மயில் போன்ற புனிதவதிக்கு,
மலர் மாலை சூட்டிய காளையாம் பரமதத்தனை மணம் செய்வித்து,
நிதிபதியும், தனதத்தனும் நிமிர்ந்து மகிழ்வுற்றனர்.
அத் திருமணச் செய்தியைக் கதைக்குறிப்பேற்றி,
கனிய உரைக்கின்றார் சேக்கிழார்.
அவ் அருமை காண்பாம்.

                                                                                           (அடுத்த வாரத்திலும் அம்மை வருவாள்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.