உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 06 | எம்.ஜி.ஆர். வந்தார் !
நூல்கள் 20 Jun 2016
குமரன் எனக்கு ஆசிரியராகிப் பின் நண்பரானவர்.
கம்பன்கழகம் ஆரம்பித்த காலங்களில்,
இவரால்த்தான் எங்கள் விழாக்களுக்குக் கூட்டம் சேர்ந்தது.
புகழ்பெற்ற ‘ரியூட்டரி’ ஆசிரியர்.
நல்ல பேச்சாளர், நல்ல கவிஞர், நல்ல மனிதர்.
அரசியல் ஈடுபாடு உடையவர்.
எல்லாரோடும் அன்பு பாராட்டுபவர்.
அதனால் பெரிய நட்பு வட்டாரத்தைப் பெற்றிருந்தார்.
அதுதான் அவர் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாயிற்று.
யாழ்ப்பாணம் முழுவதிலும், மற்றைய வெளி ஊர்களிலும்,
நானும் இவரும் செய்த வழக்காடு மன்றங்கள்,
அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தன.
எங்கள் வழக்காடு மன்றங்களுக்கு பெரும்பாலும்,
வரதராஜப்பெருமாள் அல்லது திருநந்தகுமார் ஆகிய,
இருவரில் ஒருவரே நடுவராய் இருப்பர்.
குமரனையும், வரதராஜப்பெருமாளையுந்தான்,
எங்கள் கம்பன் கழகத்தின் தலைவர், செயலாளர்களாக்க வேண்டுமென,
அக்காலத்தில் நினைத்திருந்தேன்.
ஒரு முறை கிண்ணியாவில் நடைபெற்ற வழக்காடு மன்றம் முடிந்து,
ரயிலில் திரும்புகையில்,
எமக்குள் கம்பன் பற்றி ஏற்பட்ட வாக்குவாதத்தில்,
இவர்களது திராவிடக்கழக ஈடுபாடும்,
நாத்திகக் கொள்கையும் வெளிப்பட,
அவ் எண்ணத்தை மாற்றினேன்.
குமரனுக்கிருந்த ஆற்றலுக்கு அவர் எங்கோ உயர்ந்திருக்க வேண்டியவர்.
ஒருமைப்படாத எண்ணவோட்டத்தால் அவ்வுயர்வுகளை இழந்து,
நாடு கடந்தார்.
இன்று பிரான்ஸில் அவர் வாழ்க்கை தொடர்கிறது.
ஆற்றல் அங்கும் அவரை மதிப்புள்ளவராகவே வைத்திருக்கிறது.
✎✿✎
வரதராஜப்பெருமாள்
பின்னாளில் முழுநேர அரசியலில் ஈடுபட்ட வரதராஜப்பெருமாள்,
குமரனது நெருங்கிய நண்பர்.
அதனால் எனக்கும் அவர் நெருங்கிய நண்பரானார்.
அவர் நடுவராய் இருக்க நானும் குமரனும் வழக்காடுவோம்.
வரதராஜப்பெருமாள் பட்டிமண்டபத்தில் அறிமுகமாகி
பின் எனக்கு ‘ரியூட்டரி’யில் ‘லொஜிக்’ கற்பித்தார்.
உயர்தர வகுப்பில் விஞ்ஞானப் பாடங்களில் தோல்வியடைந்து,
ஒரு தரம் கலைப்பிரிவில் பரீட்சை எடுக்க முடிவு செய்தபோது,
இவரது மாணவனானேன்.
கம்பீரமும் தெளிவும் இவரது தகுதிகள்.
மிகக் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து தலைநிமிர்த்தியவர்.
இவரது தாயார் வடை சுட்டு விற்றுப் பிள்ளைகளை வளர்த்தார்.
குமரனிடம் இருந்த வெகுளித்தனம் இவரிடம் இருக்கவில்லை.
இவருக்குத் திருமணமாகி முதல் விருந்து எங்கள் வீட்டில்தான் நடந்தது.
பரீட்சை நெருங்கிவிட திருமணமாகிய அடுத்த நாள் இரவே,
என்னை வீட்டிற்குப் படிக்க வரச்சொன்னார்.
புதுமணத் தம்பதிகளாயிற்றே என நான் தயங்க,
விளையாட்டாய் “என்ர வேலை எனக்குத் தெரியும் நீ வந்து படி” என,
கட்டாயப்படுத்தி வரவைத்துக் கற்பித்தார்.
அப் பாடத்தில் அவ்வாண்டு “C” எடுத்தேன்.
இவரது தாய், தம்பியர், மனைவி என,
அனைவரும் என்மேல் அன்பு பாராட்டினார்கள்.
பின்னாளில் அரசியலில் புகுந்து இந்திய இராணுவக்காலத்தில்,
வடகிழக்கின் முதலமைச்சரானார்.
பின் அரசியல் காற்றில் எங்கெங்கோ கொண்டு செல்லப்பட்டார்.
நீண்ட நாட்களின்பின் போர் முடிந்ததும்,
கொழும்பில் இவரை மீண்டும் சந்தித்தேன்.
உரையாடலின்போது தீர்க்க தரிசனமான அவரது தெளிவு
ஆச்சரியப்படுத்தியது.
இவரும் கழகத்தின் ஆரம்பப் பட்டிமண்டபங்களில் கலந்துகொண்டவர்.
✎✿✎
மூன்றாவது கம்பன் விழா
(16.11.1980)
இவ்விழா 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது.
இதுவும் ஒருநாள் விழாவாகவே நடந்தது.
இவ்விழாவினை நடாத்துவதற்கும்,
சுருவில் வர்த்தகரான ஏகாம்பரம் என்பவரே பொருளுதவி செய்தார்.
இவ்விழாவில் எங்கள் ஆசிரியரான,
வித்துவான் சி. ஆறுமுகம் அவர்களுக்குப் பட்டமளித்துப் பாராட்டினோம்.
வித்துவானின் விருப்பால், அவரின் குருநாதரும்,
எங்கள் ஆசிரியர் சிவராமலிங்கத்தின் சிறியதந்தையுமான,
சி.இ.சதாசிவம்பிள்ளை அவர்கள் இவ்விழாவுக்கு தலைமை தாங்கினார்.
மிக வயதான அவரைத் தூக்கி வந்து மேடையேற்றினார்கள்.
தத்துவப் பேராசிரியர் வே.இராமகிருஷ்ணன்,வித்துவான் பொன் கனகசபை,
புலவர் நா. சிவபாதசுந்தரம்,
வில்லிசைப் புலவர் திருப்பூங்குடி ஆறுமுகம்,
பொன் சுந்தரலிங்கம் போன்றோர் அறிஞர்கள்,
இவ் விழாவில் முதன்முதலாகக் கலந்து கொண்டனர்.
வித்துவான் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது.
அவ் விழாவில் வித்துவானுக்கு ஒரு பட்டத்தினை அளிக்க விரும்பினோம்.
வித்துவான் தனக்கு “வரகவி” எனும் பட்டத்தைத் தரவேண்டும் என விரும்ப,
அதை நாம் மறுத்து அவருக்கு,
“கவிச்செல்வர்” என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தோம்.
வித்துவானின் செல்வாக்காலும், அவரது மருமகனான,
பாடகர் பொன். சுந்தரலிங்கத்தின் செல்வாக்காலும்,
சபையைப் புங்குடுதீவுக் கூட்டம் ஓரளவு நிறைத்தது.
விழா அமைப்பில் வித்துவான் மூக்கை நுழைத்ததால்,
அவ்விழாவில் கம்பனை ஓர் ஓரமாய்த்தான் நிறுத்த முடிந்தது.
✎✿✎
ஐந்தாவது தமிழாராய்ச்சி மாநாட்டுப் பயணம்
05.01.1981
கம்பன் கழக வரலாற்றில் இந்த மாநாடு ஒரு திருப்புமுனை.
தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரால்,
இம்மாநாடு மதுரையில் 1981 இல் நடாத்தப்பட்டது.
எங்களை அறிவுத்துறையில் எப்போதும் ஊக்குவித்துக் கொண்டிருந்த,
எங்கள் ஆசிரியர் வித்துவான் வேலன் அவர்கள்,
“எப்படியும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்” என்று,
எங்களைத் தூண்டினார்.
இலங்கையிலிருந்து கூட்டணி எம்.பிக்கள்,
பல்கலைக்கழக அறிஞர்கள்,
எழுத்தாளர்கள்,
பெரிய வர்த்தகர்கள் என ஒரு பெருங்கூட்டம்,
தமிழக அரசின் அழைப்பின் பெயரில் அவ்விழாவிற் கலந்துகொண்டது.
மாநாட்டுக்கென்று இலங்கையில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டு,
மேற்சொன்னவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
எங்களை அப்போது எவருக்கும் தெரியாது.
விழாவுக்கு நாங்களாகச் செல்லவும் எங்களுக்கு வசதி இருக்கவில்லை.
ஆசையோ விட்டபாடில்லை.
எங்களை மாநாட்டுக்கு அழைக்கும்படி,
துணிந்து தமிழக முதலமைச்சருக்கு,
நானும், குமாரதாசனும் ஒரு வெள்ளைத்தாளில் கடிதம் எழுதிப்போட்டோம்.
அப்போது கழகத்திற்கென ஒரு ‘லெற்றர்பாட்’ கூட இருக்கவில்லை.
“இளைஞர்களான நாங்கள் தமிழ்ப்பணி செய்ய விரும்புகிறோம்.
தங்களின் மதுரை மாநாட்டைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால்,
ஊக்கம் பெறுவோம்.”
இவ்வளவே நாம் எழுதிய கடிதத்தின் செய்தி.
முதலமைச்சர், தமிழ்நாடு, இந்தியா என்று மட்டும்,
முகவரி இட்டு அக் கடிதத்தை அனுப்பினோம்.
விளையாட்டுத்தனமான முயற்சி!
பதில் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை.
ஆச்சரியமாக,
ஒரு வாரத்தில் முதல்வரது முதன்மைச் செயலாளர் திரவியம் என்பவரிடமிருந்து,
எங்கள் கழகத்தினர் பத்துப்பேருக்கு அழைப்பு வந்தது.
அதிசயித்துப்போனோம்.
அப்போது கழகத்தில் பத்துப்பேர் கூட இருக்கவில்லை.
செலவுக்குப்பணம், பாஸ்போர்ட், விசா, வீட்டில் அனுமதி,
இவை அனைத்தையும் ஒரு வாரத்தில் ஒருவாறு சமாளித்து,
நான், குமாரதாசன், மாணிக்கம், கிரி ஆகியோரோடு,
மாணிக்கத்தின் அக்கா, அத்தான், அத்தை ஆகிய,
ஏழு பேரும் மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.
படாத பாடுபட்டு,
விழாத்தொடங்கிய அடுத்த நாள் அங்கு போய்ச்சேர்ந்தோம்.
கடுமையான பணத்தட்டுப்பாடு.
பலரதும் அபிப்பிராயங்களை உள்வாங்கி,
பொருளாதார நோக்கத்திற்காக,
‘ரவுசர்’ துணிகள், சவர்க்காரங்கள், தேயிலை, தேங்காய் எண்ணெய்,
சலூனில் பாவிக்கும் சவரக்கத்தி என,
பலவற்றையும் வியாபாரிகள்போல் வாங்கிச் சென்றதையும்,
விலைப்படாமல் போன சவரக்கத்திகளை,
சலூன் சலூனாய் ஏறி விற்க முயன்றதையும்,
இப்போது நினைக்க வெட்கத்தில் உயிர் போகிறது.
அப்போது ‘இராமானுஜம்’ கப்பல்,
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஓடிக்கொண்டிருந்தது.
பிரமுகர்கள் சென்றபடியால்,
முதல் நாள் கப்பலில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
இரண்டாம் நாள் கப்பலில் பிந்திச்சென்றபோதும்,
அவ்விழாவில் எவருக்கும் கிடைக்காத புகழ் எங்களுக்குக் கிடைத்தது.
✎✿✎
விழா ‘பட்ஜ்ஜுக்கு’ அலைந்தோம்
பிந்திப் போனதால் பேராளர்களுக்கு வழங்கப்பட்ட,
அடையாள அட்டை, ‘பட்ஜ்’ முதலியவை எமக்குக் கிடைக்கவில்லை.
‘அம்மாமி’ அப்பளக்கட்டு சைசில்,
கலர் கலராக அந்த ‘பட்ஜ்கள்’ தயாரிக்கப்பட்டிருந்தன.
எமக்கு முன்சென்றவர்கள் எல்லாம் அவற்றைக் குத்திக்கொண்டு திரிந்தனர்.
அந்த நேரத்தில் ஒரு விழா ‘பட்ஜ்’ என்பது,
எங்களுக்குப் பெரிய விசயமாய் இருந்தது.
திரும்பி வந்து இலங்கையில் காட்டிப் பெருமைப்பட,
ஒரு ‘பட்ஜ்’ கிடைக்காதா என அலைந்தோம்.
ஆய்வரங்கு நடைபெறும் மண்டபத்திற்குப் போனால்,
‘பட்ஜ்’ கிடைக்கலாம் என்று ஒருவர் சொல்ல, அங்கு ஓடினோம்.
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில்,
“தொல்காப்பியர் அரங்கு” என்னும் பெயரில்,
ஆய்வரங்க மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது.
அறிஞர்களுக்கான ஆய்வுகள் நடைபெறும் மண்டபம் அது.
பல நாட்டு அறிஞர்களும் அங்கு கூடியிருந்தனர்.
அங்குதான் நம் நாட்டிலிருந்து சென்ற அறிஞர் பலரும் இருந்தனர்.
அங்கிருந்த மாநாட்டுக்குழு உறுப்பினர் ஒருவரிடம் உதவி கோரினோம்.
தாடைக்குக் கீழ்வரை மீசை நீண்டிருந்த அந்தக் கரைவேட்டி மனிதர்,
பணிவுடன் “என்ன வேண்டும்” என்றார்?
குழந்தைத்தனமாய் விழா ‘பட்ஜ்’ ஒன்று வேண்டும் என்றோம்.
அது முடிந்துவிட்டதாய்ச் சொல்லி,
“வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள்?” என்றார்.
நப்பாசையில் ஒன்றும் யோசிக்காமல்,
அடுத்த நாள் ஆய்வரங்கில் பேச,
எங்களுக்குச் சந்தர்ப்பம் தாருங்கள்? எனக் கேட்டோம்.
“காலை சந்தர்ப்பம் தரப்படும் வாருங்கள்!” என்றார்.
திகைத்துப்போனோம்.
✎✿✎
கிண்டலடித்த பெரிய மனிதர்
அப்போது, யாழ்ப்பாணத்தில் வசதிமிக்க பல பிரமுகர்கள் இருந்தனர்.
அவர்களுள் சண்முகலிங்கம் என்பவரும் ஒருவர்.
‘நொதேர்ன் இன்டஸ்ரீஸ்’ என்னும் பெயரில்,
ஒரு நிறுவனத்தை அவர் நடாத்தி வந்தார்.
அப்போது, யாழ். சைவ பரிபாலனசபை அவர் கையில்தான் இருந்தது.
தன்னை ஒரு சமய அறிஞராய்க் காட்டிக்கொள்வார்.
அவரது வசதிநோக்கி தமிழறிஞர்கள் சிலரும்,
அங்ஙனமாய் அவரை அங்கீகரிப்பர்.
இவரது ஊரும் சுருவிலே.
மாணிக்கத்தின் அழைப்பில்,
சுருவில் கோயிலுக்குச் சொற்பொழிவுக்குப் போகும்போதெல்லாம்,
அந்தக் கோயிலின் பொருளாளராக இருந்த இவர்,
என்னை இளக்காரமாகப் பேசி மகிழ்வார்.
இவரும் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு அழைப்பின்பேரில் வந்திருந்தார்.
விழா ‘பட்ஜுக்காக’ நாங்கள் அலைந்து திரிந்தபோது,
மாநாட்டில் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பையோடு,
அறிஞர் தோரணையில் நின்ற அவர்,
எங்களைக் கண்டு, கிண்டலாக,
“இது அறிஞர்களுக்கான நிகழ்ச்சி நடக்கிற மண்டபம்,
நீங்கள் எங்கே இங்க நிக்கிறீங்கள்?
உங்கட பட்டிமண்டப நிகழ்ச்சியெல்லாம் அங்க எல்லோ நடக்குது” என்றார்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை “தொல்காப்பியர் அரங்கு”,
“மூவேந்தர் அரங்கு” என இரண்டு அரங்குகளில் நடாத்தினார்கள்.
முதல் அரங்கு ஆய்வறிஞர்களுக்கானது.
இரண்டாவது அரங்கு பொதுமக்களுக்கானது.
மூவேந்தர் அரங்கிலேதான் பட்டிமண்டபம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போதெல்லாம், யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,
பட்டிமண்டபங்களைக் கிண்டல் செய்வார்கள்.
சண்முகலிங்கமும் அந்த அடிப்படையில்தான்,
எங்களையும் “பட்டிமண்டபக்காரர்” என்னும் தொனிபடக் கிண்டலடித்தார்.
வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு,
எங்கள் காரியத்தைப் பார்க்கச் சென்றோம்.
அடுத்தநாள் நிலைமை மாறப்போவதை,
அவரும் அறிந்திருக்கவில்லை, நாங்களும் அறிந்திருக்கவில்லை.
✎✿✎
எம்.ஜி.ஆர். வந்தார்
அரங்கில் சந்தித்தவர் அடுத்தநாள் பேசச் சந்தர்ப்பம் தருவதாய்ச் சொன்னதில்,
இரவு முழுக்கத் தூக்கம் இல்லை.
அடுத்தநாள் ஒன்பது மணிக்குத் தொடங்க வேண்டிய விழாவுக்கு,
ஏழு மணிக்கே போய்விட்டோம்.
முதல்நாள் எங்களை வரச்சொன்னவரை எங்கு தேடியும் காணவில்லை.
எங்களைச் சமாளித்து விலத்துவதற்காக,
அவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பது கூட,
அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.
ஐயாயிரம் பேர் இருக்கக் கூடிய மண்டபம் அது.
வெறும் ஐந்நூறு அறுநூறு பேர்தான் அன்று உட்கார்ந்திருந்தனர்.
பேச வாய்ப்பளிப்பதாய் வாக்குத்தந்தவரை, தேடிக் களைத்த நிலையில்,
திடீரெனப் பேரிரைச்சல் ஒன்று கேட்டது.
கறுப்புக் கண்ணாடியுடன் ஒரு கார் வர,
அதன் பின்னே ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் ஓடி வந்தது.
நிகழ்ச்சி நிரலில் இல்லாமல்,
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். திடீரென அங்கு விஜயம் செய்தார்.
அன்றைய மேடையில் ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம்,
நீதிபதி எஸ். மகாராஜன் போன்ற பேரறிஞர்கள் அமர்ந்திருந்தனர்.
ம.பொ.சி. அப்போது தமிழக அரசின் மேலவைத் தலைவராய் இருந்தார்.
அவரைக் கௌரவிக்கவே எம்.ஜி.ஆர.; வந்திருப்பதாய் அறிந்தோம்.
எம்.ஜி.ஆர். இரசிகர்களால், நிமிடத்தில் மண்டபம் நிறைந்து வழிந்தது.
குமாரதாசனைத் தவிர, என்னோடு வந்த அனைவரும் கூட,
எம்.ஜி.ஆரைப் பார்க்கவென,
எங்களை அநாதரவாய் விட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டனர்.
எம்.ஜி.ஆர்.மண்டபத்திற்கு வந்ததும்,
மாநாட்டில் பேசவேண்டுமென்னும் எண்ணம் எனக்கு மேலும் அதிகரித்தது.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
· அரங்கேறத் தவமிருந்த அறிஞர்கள்
· இன்னும் ஒரு சில நிமிடமே!
· ஏமாந்த பொலிஸ்காரர்
· என்ன பேசுவது?
· மாநாட்டில் பேசினேன்
· எம்.ஜி.ஆருடன் பேசினேன்
· ஆசீர்வதித்த எம்.ஜி.ஆர்.
· நான் கதாநாயகனானேன் !