உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 07 | நான் கதாநாயகனானேன் !

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 07 | நான் கதாநாயகனானேன் !
நூல்கள் 01 Jul 2016
 


 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
 
அரங்கேறத் தவமிருந்த அறிஞர்கள்

வழக்கமாக அந்த அரங்கில் காலை பத்து மணியளவில்,
ஆய்வரங்கு ஆரம்பமாகும்.
அதற்கு முன்பாக
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பேராளர்களில்,
மதிப்புமிக்க விருந்தினர் ஒருசிலரைப்
பொதுவாக அங்கு பேச அனுமதிப்பார்கள்.
அந்த அரங்கில் ஏற, அறிஞர் மத்தியில் பெரிய போட்டி நடந்தது.
இலங்கையிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கவெனச் சென்ற,
அறிஞர்கள் பலரும்,
அந்த மேடையில் ஏறும் சந்தர்ப்பத்திற்காய்த் தவமிருந்தனர்.
அவர்களையெல்லாம் மாநாட்டு அமைப்பாளர்கள்,
பல்கலைக்கழகத்தில் இருந்த தனித்தனி வகுப்பறைகளில்,
ஒரு சிலருக்குமுன் நின்று ஆய்வுக்கட்டுரைகளை
வாசிக்க விட்டுவிட்டார்கள்.
இம்மேடையில் ஏற ஆசைப்பட்ட அவர்களுக்கு
அதனால் பெரும் வருத்தம்.
 

எங்கள் ஆசிரியர்களின் நண்பரான
தொல்புரம் வித்துவான் சிவபாதசுந்தரனார்,
அம்மேடை ஏற முடியாத கவலையில் பின்னர் நோய்வாய்ப்பட்டும் போனார்.
இலங்கையிலிருந்து சென்றவர்களில்,
அப்போது அமைச்சராயிருந்த செல்லையா இராசதுரையும்,
பாராளுமன்ற உறுப்பினர் க.பொ. இரத்தினமும்,
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. வித்தியானந்தனும் மட்டுமே,
அம்மேடையில் பேச அனுமதிக்கப்பட்டதாய்ப் பின் அறிந்தோம்.
அப்படி அறிஞர்கள் ஏறத் தவமிருந்த அம்மேடையில்,
அதிஷ்டக் காற்று என்னைக் கொண்டுபோய் நிறுத்தியது.



இன்னும் ஒரு சில நிமிடமே!

அன்றைய விருந்தினர்கள் உரையில்,
சுவிஸ் நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி,
முதலில் தமிழில் உரையாற்றினார்.
அதன்பின்பு, மலேசியாவிலிருந்து வந்திருந்த சுவாமி இராமதாஸ் என்பவர்,
உரையாற்றத் தொடங்கியிருந்தார்.
மாநாட்டுக்காரர்கள் அவரைச் சரியாக உபசரிக்கவில்லை போலும்.
அந்தக் கோபத்தில் தனது பேச்சில்
அனைவரையும் அவர் திட்டித் தீர்த்தார்.
தொடர்ந்து இந்து, கிறிஸ்தவப் பகையைப் பரப்புமாற்போல்,
கிறிஸ்தவர்களைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார்.
அவர் பேச்சு எனக்கு எரிச்சலைத் தந்தது.
அவரது பேச்சோடு ஆய்வரங்கு தொடங்கவிருந்தது.
சபையில் எம்.ஜி.ஆர்.,
மேடையில் பேரறிஞர்கள்,
மண்டபம் நிறைந்த கூட்டம்.
இங்கு எப்படியும் பேசிவிட வேண்டுமென மனம் துடிக்க,
இருந்த ஓரிரு நிமிடங்களுக்குள்,
என்ன செய்யலாம்? என நானும், குமாரதாசனும் கடுமையாய் யோசித்தோம்.



ஏமாந்த பொலிஸ்காரர்

எம்.ஜி.ஆர். வந்ததும்,
பொலிஸ் காவலால் மண்டபத்திற்கு அருகில்கூட போகமுடியவில்லை.
அன்றைய நிகழ்ச்சிக்கு நீதிபதி கோகுலகிருஷ்ணன் என்பவர்,
தலைமை தாங்கிக்கொண்டிருந்தார்.
திடீரென ஒரு யோசனை தோன்ற,
குமாரதாசனின் கையிலிருந்த டயரியிலிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து,
“அகில இலங்கைக் கம்பன் கழகத்திலிருந்து வந்திருக்கிறோம்.
இன்று எங்களை இங்கு பேச வரச்சொன்னார்கள்,
சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறோம்” என எழுதி,
அருகிலிருந்த ஒரு பொலிஸ்காரரிடம்,
“மேடையில் இருக்கும் தலைவர்,
எங்களை இன்று வரச்சொன்னார். 
இக்கடிதத்தை அவரிடம் சேர்ப்பியுங்கள் எனப் பொய் சொல்லிக் கொடுத்தோம்.
எங்களின் நல்ல காலம்.
நாங்கள் சொன்னதை உண்மையென்று நம்பி,
அந்த அப்பாவிப் பொலிஸ்காரர்,
அதனை மற்றொரு பொலிஸ்காரரிடம் கொடுக்க,
இப்படியே மாறிமாறி பொலிஸ்காரர்களின் கைகளூடு சென்ற கடிதம்,
இறுதியாய் மேடையில் இருந்த தலைவரைப் போய்ச் சேர்ந்தது.
அது தேவதைகள் எங்களை ஆசீர்வதித்த நேரம் போலும்.
ஆச்சரியம்!
தலைமை தாங்கிய நீதிபதியும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
அக்கடிதத்தை நம்பிய அவரும்,
அடுத்து என்னைப் பேச அழைப்பதாய்ச் சொல்லி அனுப்பிய செய்தி,
அதே பொலிஸ்காரர்களூடு எங்களை வந்து சேர்ந்தது.
ஆச்சரியத்தில் அதிர்ந்து போனோம்.



என்ன பேசுவது?

திடீரென, சந்தர்ப்பம் கிடைத்ததும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.
ஓரிரு நிமிடத்திற்குள் முடிவு செய்தாக வேண்டிய சூழ்நிலை.
அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த மலேசியக்காரர்,
மதத்தாலும் ஊராலும் தமிழர்களைப் பிரிக்குமாற்போல் பேசியது,
மனத்துள் எரிச்சலைக் கிளப்பியிருந்தது.
அந்த நிமிடத்தில் புத்தியில் மின்னலடிக்க,
தமிழினத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசவேண்டுமென முடிவு செய்தேன்.



ஆச்சரியம்! ஆனால் உண்மை !
மாநாட்டில் பேசினேன்

நிகழ்ச்சித் தலைவரான நீதிபதிக்குக் கொடுத்தனுப்பிய கடிதத்தில்,
அக் கடிதத்தை எழுதிய குமாரதாசனே கையொப்பமிட்டிருந்தார்.
அதனால் தலைவராக இருந்த நீதிபதி,
எங்கள் கழகத்தின் பெயரையும், குமாரதாசனின் பெயரையும் சொல்லி,
அடுத்துப் பேச அழைக்க,
அதுபற்றிக் கவலைப்படாமல் நானே மேடைக்குச் சென்று பேசினேன்.
பதற்றத்தில் பெயர் மாற்றத்தைக் குறிப்பிடவும் மறந்து போனேன்.
தமிழின ஒற்றுமை பற்றி அன்றைய என் பேச்சு அமைந்தது.
மாநாட்டு மண்டபம் முழுவதும்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற,
சங்கப்பாடல் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அதை வைத்தே என் பேச்சைத் தொடங்கினேன்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழர்களின் இலட்சியமா?
அல்லது தமிழர்களுக்குள் இருந்த பேதங்களைப் பார்த்து,
சங்கச் சான்றோர் அவர்களுக்குச் சொன்ன புத்திமதியா?” என நான் கேட்டதும்,
முன்னைய பேச்சாளரின் பேச்சால் சலித்திருந்த சபை,
அந்த எனது கூற்றை இரசித்துக் கைதட்டியது.
எனக்குள் உற்சாகம்.
எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இருந்த பகை காரணமாக,
இம்மாநாட்டிற்குக் கலைஞர் வரவில்லை.
அது, அப்போது எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதை வைத்து என் பேச்சைத் தொடர்ந்தேன்.
“உலகத் தமிழர்க்குத் தாயகம் தமிழ்நாடுதான்,
ஈழத்தவர்களாகிய நாங்கள் மாமியார் வீட்டில் வசிக்கும் தமிழர்கள்.
தாய் வீடு ஒற்றுமையாய் இருந்தால்தான்,
மாமியார் வீட்டில் மகள் மரியாதையாய் வாழலாம்” என்றேன்.
என் பேச்சின் குறிப்பறிந்து சபை மீண்டும் கைதட்டியது.
பிறகு, “கலைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் பின்னின்றாலும்கூட,
தமிழரின் உயர்வு என்று வரும்போது,
அவரும் அதற்கு உறுதுணையாய் நிற்பார்” என நம்புவதாய்ச் சொல்லி,
ஒரு இராமாயணப் பாடலை உதாரணமாய் எடுத்துக் காட்டினேன்.
இராம இராவண யுத்தத்தில்,
இராமன் தன் வில்லில் அம்பேற்றியபோது,
அவனது வலக்கை பின் சென்றதாம்.
அதைக்கண்ட இடக்கை,
“இதுவரை சீதா கல்யாணம் போன்ற,
நல்ல விஷயங்களுக்கெல்லாம் முன்னால் ஓடி வந்த நீ,
போர் என்றதும் பின்னே செல்கிறாயா?” என்று நகைத்ததாம்.
அதற்கு வலக்கை,
“சண்டைக்குப் பயந்து நான் பின் செல்லவில்லை.
போர்க்களச் சத்தத்தில் பேசும் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்காது,
அதனால் காகுத்தன் காதடியில் சென்று,
அம்பினை, இராவணனைக் கொல்லும்படி விடுவதா?
தலைகள் பத்தும் கொய்யும்படி விடுவதா?
என்று கேட்கவே சென்றேன்” என்றதாம்.
யாரோ சொல்லிக் கேள்விப்பட்ட இவ்விலக்கியச் செய்தியை,
அங்கு சொல்லி அதற்கான பாடலையும் சொன்னேன்.
அதற்கும் பெரிய கைதட்டு கிடைத்தது.
தொடர்ந்து, “இதுபோல் மாநாட்டிற்கு வராமல் பின்னிற்பவர்களும்,
தமிழரின் நன்மை என்று வரும்போது,
துணை புரிவர்” என நம்புவதாய் நான் சொல்ல,
சபையில் இருந்த கலைஞரின் ஆதரவாளர்கள்,
பெரிதாய்க் கைதட்டி அதை வரவேற்றனர்.
அப்படி நான் பேசியது எம்.ஜி.ஆருக்குப் பிடித்திருக்காது என்பதுகூட,
அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
சபை தந்த ஊக்கத்தில் ஏதோ, பெரிய மனுசன்போல் அடித்துத் தள்ளினேன்.
மொத்தத்தில் சபையில் அன்றைய எனது பேச்சுக்கு,
பெரும் வரவேற்புக் கிடைத்தது.
எனக்குப் பேச அனுமதிக்கப்பட்ட நேரம் மூன்று நிமிடந்தான்.
என் நேரம் முடிந்ததும் நான் தலைவரைத் திரும்பிப் பார்க்க,
சபையின் ஆரவாரம் கண்ட உற்சாகத்தில்,
அவரும், “பேசுப்பா, பேசுப்பா” என ஊக்குவித்து,
என்னை ஒன்பது நிமிடம் வரை பேசவிட்டார்.



மேடையில் நின்றபடி எம்.ஜி.ஆருடன் பேசினேன்

பேச்சு முடிகிற நேரம்.
மேடையில் நின்றபடியே எம்.ஜி.ஆரைப் பார்த்து,
‘மைக்’கில் பேசத் தொடங்கினேன்.
சபையில் பெரும் பரபரப்பு.
“உங்களின் நேரடி அழைப்பில் வந்திருக்கிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால்,
இனி உங்களோடு பேச எனக்கு வாய்ப்புக் கிடைக்காது.
பெரும் கொடையாளியான உங்களிடம்
ஒன்றைக் கேட்கப்போகிறேன்” என்று சொல்லி நான் நிறுத்த,
சபை, பரபரப்பின் உச்ச நிலையை அடைந்தது.
‘கமரா’க்களெல்லாம் எனை நோக்கித் திரும்பின.
அப்போது ‘வீடியோ கமரா’க்கள் அதிகம் வந்திருக்கவில்லை.
பெரிய பெரிய சினிமாக் ‘கமரா’க்கள்தான்.
அங்கிருந்த ‘கமரா’க்கள் எல்லாம்
என்னையும் எம்.ஜி.ஆரையும் மாறி மாறி ‘போக்கஸ்’ பண்ணத் தொடங்கின.
சபையிலிருந்தவர்கள் எல்லோரும் எழும்பி நின்று பார்க்கத் தொடங்கினர்.
எம்.ஜி.ஆர். என்னை நிமிர்ந்து பார்த்து,
கண்களால் “என்ன வேண்டும்?” எனக் கேட்டார்.
நான் என்ன கேட்கப் போகிறேனோ என சபையில் பெரும் எதிர்பார்ப்பு.
இளமை தந்த ஊக்கத்தில், நான் வெகு‘கூலாக’ எம்.ஜி.ஆரிடம்
“உங்களை நான் சந்தித்ததை ஊரில் சென்று நிரூபிக்க,
எனது ‘ஓட்டோகிராபில்’ கையெழுத்திட்டுத் தாருங்கள்” என,
குழந்தைத்தனமாய்க் கேட்டேன்.
சபையில் கொல்லென்று பெரிய சிரிப்பு.
அப்போது எனக்கு இருபத்திநான்கு வயதுதான் ஆகியிருந்தது.



ஆசீர்வதித்த எம்.ஜி.ஆர்.- அழைத்துச்சென்ற அறிஞர்

எம்.ஜி.ஆர். கைகாட்டி என்னை அருகில் அழைத்தார்.
எவரைப்பற்றிய கவலையும் இல்லாமல்,
மேடையின் முன்னே இடப்பட்டிருந்த படி வழியாக,
அவர் அருகில் சென்றேன்.
அவரது காலில் தொட்டு நான் வணங்க,
அவர் என்னை உச்சிமுகந்து ஆசீர்வதித்தார்.
பின்னர் ‘ஓட்டோகிராபில்’ கையொப்பமிட்டுத் தந்தார்.
அடுத்த நிமிடமே, நான் அன்றைய சபையின் கதாநாயகனானேன்.
இன்னும் சில நிமிடங்கள் எம்.ஜி.ஆர். அருகில் நிற்க மனம் விரும்பியது.
அப்போது ‘சஃபாரி சூட்டுடன்’ வந்த ஓர் உயரமான மனிதர்,
என் கையைப்பிடித்து,
கரகரவென மண்டபத்திற்கு வெளியில் இழுத்துச்சென்றார்.
அவர் யாரென்றே எனக்குத் தெரியவில்லை.
வெளியில் இருந்த ஒரு புத்தகக் கடைக்குள்,
என்னை அழைத்துச்சென்ற அவர்,
“துளசியும், கம்பனும்” எனும் ஒரு நூலை விலை கொடுத்து வாங்கித்தந்து,
“பொருத்தமா இராமாயணம் சொன்னே,
நல்லா வருவே!” என வாழ்த்திச்சென்றார்.
சென்னைப் பல்கலைக்கழக சமஸ்கிருதப் பேராசிரியர்,
சங்கரராஜு நாயுடுதான் அவர் என்பதை,
பின்னர் தெரிந்து கொண்டேன்.



நான் கதாநாயகனானேன் !

அவர் சென்றதும்,
கடையில் இருந்து வெளியில் வந்தால்,
என்னிடம் கையொப்பம் வாங்க பெரிய ‘கியூ’ நின்றது.
அப்போதைய கூட்டணி எம். பிக்கள் அனைவரும்,
என்னைச் சூழ்ந்து கொண்டனர்.
சாவகச்சேரி எம்.பி. நவரட்ணம் சோடா வாங்கித் தந்தார்.
சபையில் இருந்த பல்கலைக்கழக அறிஞர் பலர்
தேடிவந்து எனக்கு வாழ்த்துச் சொல்லினர்.
பேராசிரியர் இந்திரபாலா அந்த நிகழ்ச்சியைப் படம்பிடித்து,
பின்னர் யாழில் கொண்டுவந்து தந்தார்.
முதல்நாள்,
“இது அறிஞர் சபை,
இங்கு உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்ட,
சண்முகலிங்கம் அவர்களும்,
தூரத்தில் முகங்கறுத்து நின்றதைக் கண்டேன்.
மொத்தத்தில் அன்றைய அதிர்ஷ்ட சம்பவத்தால்,
மற்றவர் மத்தியில் நான் கதாநாயகனானேன்.
மகிழ்ச்சி தாங்கவில்லை.
குமாரதாசனுக்கு என்னைவிட மகிழ்ச்சி.
என்னோடு உடன் வந்தவர்கள்,
சந்தோஷத்தில் நிலத்தில் கால்படாமல் திரிந்தார்கள்.
திகட்டத் திகட்ட, பல நாட்டு அறிஞர்களும்,
என்னைச் சூழ்ந்து வாழ்த்தினர்.
என்னோடு புகைப்படம் பிடித்துக்கொண்டனர்.
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஸ்ரீதரன் என்ற ஈழ ஆதரவாளர்,
என் பேச்சைப் பாராட்டிக் கண்கலங்கினார்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
பாகம் 008ல்...

· முதல் இந்திய நண்பன் · மூவேந்தர் அரங்கு சென்றோம் · கண்ணதாசன் கவியரங்கு · “கண்டறியாதன கண்டேன்!” · சாப்பாட்டுக்குத் திண்டாட்டம்! · காற்றினிலே வந்த கீதம் · மதுரை சோமு தரிசனம் · கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.