எறிகணை 33

எறிகணை 33
எறிகணை 23 May 2026

கேள்வி :

‘பலரது உதவியையும் பெற்றுச் செயற்பட்டுக் கொண்டு, ஏதோ தானே இவற்றையெல்லாம் செய்வது போலக் காட்டி ஜெயராஜ் தனக்குப் புகழ் சேர்க்கிறார். இவரை நாம் ஏன் மதிக்க வேண்டும்? என்று, சிலர் கேட்கிறார்கள் உங்கள் பதிலென்ன?

பதில்:

அவர்கள் சொல்வது உண்மைதான்! எத்தனையோபேர் தாங்கள் பாடுபட்டு உழைத்த பணத்தை எங்கள் முயற்சிகளுக்கு அள்ளித் தருவதாற்றான், எங்களால் இப்படிச் செயற்படமுடிகிறது. உண்மையில் அத்தகையவர்கள்தான் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் வேறுபட்ட கருத்துக்கு இடமில்லை.

 “நாங்கள் வெறுமனே கம்பன் கழகத்தின் முகமாகத்தான் இருக்கிறோம். நமக்கு உதவி செய்வோர் தான் கம்பன் கழகத்தின் ஆன்மாக்கள்” என்று, நான் எங்கள் கழக உறுப்பினர்களுக்கு அடிக்கடி சொல்வதுண்டு.

ஒருவரின் முகம் தான் எல்லோருக்கும் தெரியவருகிறது. ஆன்மா மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படித்தான் இதுவும்.

ஆனால் ஒன்று!  ஆன்மா இருக்கும் வரையில்த்தான் முகத்திற்குப் பொலிவு. அது பிரிந்து போய் விட்டால், பின்பு முகம் மதிப்பற்றுப் போய்விடும்.

தாங்கள் மறைந்து நின்று கொண்டு, எங்களைப் புகழ்பெற வைக்கும் நன்கொடையாளர்கள் தான், எமது கழகத்தின் ஆணி வேர்கள்.

அவர்களின் நலன் நோக்கி அன்றாடம் பிரார்த்திப்பது ஒன்றேதான் அவர்களுக்கு எங்களால் செய்யக்கூடிய பிரதியுபகாரமாகும்.

அது சரி! மற்றவர்களின் உதவியாற்றான் நான் பெருமை அடைவதாய்க் கூறுவோர், தாங்களும் மற்றவரின் உதவி பெற்று இத்தகைய நல்ல காரியங்களைச் செய்யலாமே. அதை யார் தடுத்தார்களாம்?

சமூகத்தின்மீதான அக்கறையினால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. மற்றவரின் புகழ் கண்டு அழுக்காறடையும் அவர்களது மனம்தான் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது. விட்டுத் தள்ளுங்கள்!

கேள்வி :

என்ன? விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சனாதனதர்மத்தை ஒழிக்கப் போகிறதாமே?

பதில் :

அன்று தொட்டு இன்றுவரை சனாதனதர்மத்தை ஒழிக்க, பலபேரும் முனைந்து பார்க்கிறார்கள். ஆனால் ஒழிக்க நினைந்தவர்கள் ஒழிந்தார்களே தவிர சனாதனதர்மம் ஒழியவில்லை.

கேள்வி :

தமிழ்த் தலைவர்களை ஒன்றுபடுமாறு குரல் கொடுத்து வருகிறீர்கள். இவ்வளவு பகை வளர்த்த பிறகு அவர்கள் ஒன்றுபட வாய்ப்பிருக்கிறதா என்ன?

பதில்:

பகை வளர்க்கப் பதினாறு காரணங்களைத் தேடிக் கண்டுபிடிப்பவர்களால் ஒற்றுமை வளர்க்க ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? 

கேள்வி :

அர்ச்சுனாவின் தமிழ்நாட்டு “விசிட்” பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

ஊரைக் குழப்பி, நாட்டைக் குழப்பி இப்போது உலகத்தைக் குழப்பப் புறப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு சென்று அவர் செய்திருக்கும் செயல் நம் இனத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கப் போகிறது.

இவர் அண்மையில், சீமான், வை.கோ போன்றோரை முறையற்று விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு மட்டும்தான், இன்று இனத்தொடர்பால் நமக்குத் துணைபுரியும் உரிமை பெற்று இருக்கிறது. அதன் தொடர்பை நாம் மிகக் கவனமாய்க் கையாளுதல் அவசியம்.

விமர்சனங்கள் தவறாகாது. ஆனால் அந்த விமர்சனங்கள் நன்மை நோக்கியதாகவும், கண்ணியமானதாகவும் செய்வது மிகமிக அவசியம்.

அந்த கண்ணியமான பாஷை அர்ச்சுனாவுக்குத் தெரியவேயில்லை. மற்றவர்களை இழிவு செய்யும் கேவலமான வார்த்தைகள், அவருக்கு “அல்வா” சாப்பிடுவது போலச் சுவைக்கிறது. அதனால் அவர் நாளாந்தம் தனக்குக் கிடைத்த வரத்தைச் சாபமாக்கிக் கொண்டிருக்கிறார். 

வரவர, அர்ச்சுனாவின் கூத்துக்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த சமநிலையற்ற மனிதனால், நம் இனம் நண்பர்களை இழந்துவிடப் போகிறது.

அவரது இந்தக் கருத்துக்கள், நம் ஈழத்தமிழினத்தின் கருத்துக்கள் அல்ல என்பதை ஊடகங்களினூடாக நம் தலைவர்களும், நம்மவர்களும் உலகிற்கு உடன் தெரிவிக்கவேண்டும்.

கேள்வி :

ஒரு கட்சியின் உறுப்பினர் ஒன்றைக் கூறி, அதனை அக் கட்சியோ, அதன் தலைவரோ மறுக்காவிட்டால் அவர் கருத்துத்தான் கட்சியின் கொள்கை என்று ஆகிவிடாதா?

பதில் :

த.வெ.க. எம்.எல்.ஏ முஸ்தபா அவர்கள், “நாங்களும் சனாதனதர்மத்தை ஒழிக்கத்தான் வந்திருக்கிறோம்” என்று கூறியதைப்பற்றித்தானே கேட்கிறீர்கள்? அதற்கேன் இத்தனை சுற்றிவளைப்பு? அதை நேராகவே கேட்கவேண்டியதுதானே!

 நீங்கள் சொல்வது உண்மை தான். உலகம் அப்படித்தான் கருதும் என்பது நிச்சயம். தமிழ்நாட்டை ஆள நினைப்பவர்களெல்லாம் தர்மத்தை அழிப்பதில் ஏன்தான் இத்தனை முனைப்புக் காட்டுகிறார்களோ தெரியவில்லை!

ஆதவ் அர்ஜூனா அவர்கள், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சனாதனதர்மம் என்றால் ஜாதிப்பாகுபாடு என்ற அர்த்தம் பதிந்திருப்பதாற்றான் முஸ்தபா அங்ஙனம் கூறினார்” என்று சமாதானம் சொல்லியிருக்கிறார். அவரது கருத்து. சரியானதாய்த் தோன்றவில்லை.

சனாதனதர்மம் என்ற தொடருக்கு அவர் சொல்லும் அர்த்தம் இல்லை என்பது உறுதி. தமிழ்நாட்டில் அப்படி ஒரு பிழையான அர்த்தம் பதிவாகி இருக்குமானால் முதலில் அதனையல்லவா இவர்கள் மாற்ற முயற்சிக்க வேண்டும்! அதைவிடுத்து பிழையான அக் கருத்தைத் தொடர்ந்து வளர்க்க நினைப்பது எப்படி நியாயம் ஆகும்?

முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் சனாதனதர்மத்தை ஒழிக்கத்தான் பாடுபட்டார்கள். இவர்களும் அதனைத்தான் செய்ய வந்திருக்கிறார்கள் என்றால் இவர்களின் வழியும் முன்னையவர்களின் வழிதான் என்று ஆகிவிடாதா?

இன்றைக்கும் சனாதனதர்மம்தான் சமூகத்தைப் பிரித்துக் கொண்டிருக்கிறது என்று மனதில் கைவைத்து இவர்களால் சொல்லமுடியுமா? இன்று பகிரங்கமாய் ஜாதிகளின் பெயர்கள் சொல்லிச் சமுதாயத்தையும், அரசியலையும் கூறுபோட்டுக் கொண்டிருப்பவர்களை இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

மேற்சொன்ன காரணத்திற்காகத்தான் சனாதனதர்மத்தை ஒழிக்கவேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள் என்றால், அதற்கு முன்பாக இன்று இருக்கின்ற சாதிப்பிரிவாளர்களை அல்லவா இவர்கள் ஒழித்துக் கட்டவேண்டும்.

சமூகப்பிரிவுகளை ஒழிக்க வேண்டும் என, உண்மையில் இவர்கள் நினைந்தால், தமிழ்நாட்டில் இனி, ஜாதிப்பெயர்களைப் பயன்படுத்துவதற்கும், விண்ணப்பப் படிவங்களில் ஜாதிப்பெயர் கேட்கப்படுவதற்கும், ஜாதிப் பிரச்சினைகளைக் கிளப்புவதற்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டியதுதானே. அங்ஙனம் தடைவிதித்தால் ஜாதிப்பாகுபாடு தானாக ஒழிந்துவிடப்போகிறது.

“இங்கு இப்போது ஜாதிகள் இருக்கிறதே தவிர பிரிவுகள் இல்லை” என்று சிலர் சொல்ல முனைவார்கள். வேடிக்கையான கருத்து இது! ஜாதியே பிரிவு தானே? அப்படியிருக்க ஜாதி இருக்கிறது, பிரிவில்லை என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் கதையாகாதா?

இன்று நமக்குமுன் படமெடுத்து நிற்கும் பாம்புகளை விட்டுவிட்டு, எங்கோ சம்பந்தமில்லாத ஒரு செத்தபாம்பைக் கற்பனையில் அடித்துக் கொண்டிருப்பது ஏமாற்றுவேலை அல்லவா? 

மேல் விடயத்தைச் சொல்லியிருக்கும் உறுப்பினர் ஒரு  இஸ்லாமியர். கட்சியின் தலைவரோ ஒரு கிறிஸ்தவர். இவ்விரண்டு சமயத்தவரும் சேர்ந்து இந்துமதத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று, பெரும்பான்மையான இந்துமக்கள் நினைக்கத் தலைப்பட்டால் அதன் விளைவு என்னாகும்?

பல சமயத்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு சமுதாயத்தில், ஒரு சமயத்தவர், மற்றைய சமயத்தவர்மேல் கல்லெறியத் தலைப்பட்டால், அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒற்றுமையையும் சிதைத்துவிடாதா?

இப்படியாய் ஆயிரம் கேள்விகள் மனதில் எழுகின்றன. என்னைப் பொறுத்த வரை இச்சம்பவம் த.வெ.க. வின் முதற் “சறுக்கலாகத்” தான் தோன்றுகிறது.

கேள்வி :

நமது தமிழ்த்தலைவர்களின் செயற்றிறன் வரவரக் குறைவதுபோல் தோன்றவில்லையா?

பதில்:

யார் அப்படிச் சொன்னது? அது முழுப்பிழையான கருத்து. அவர்களின் செயற்திறனுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் நன்றாகத்தான் செயற்படுகிறார்கள். தினம்தினம் ஆளையாள் அடிபடுவதையும், திட்டிக் கொள்வதையும் பார்த்தால் உங்களுக்கு அவர்களது செயற்திறன்  நன்றாகத் தெரிய வேண்டுமே!

    

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.