எறிகணை 34

எறிகணை 34
எறிகணை 30 May 2026

கேள்வி :

நடந்துகொண்டிருக்கும் விஜய்யின் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

தொடக்கம் பாராட்டும்படியாகத்தான் இருக்கிறது. “டாஸ்மார்க்” கடைகள் பலவற்றை மூடியது, முதலமைச்சர் குறித்த நேரத்தில் வந்து பணிகளைத் தொடங்குவது, காவல்நிலையங்களில் சி.சி.ரி.வி. கமரா பொருத்த உத்தரவிட்டுள்ளது, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரும் அரசாங்க வைத்தியசாலைகளையே பயன்படுத்தவேண்டுமென அறிவித்திருப்பது, அண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளையின் தாயாரிடம் நேரடியாகத் தொலைபேசியில் பேசி ஆறுதல் செய்தது எனப் பல விடயங்கள் உள்ளத்தைக் கவரவே செய்கின்றன.

விஜய் ஒரு இலட்சிய நிர்வாகம் நடத்த ஆசைப்படுகிறார் என்பது தெளிவாய்த் தெரிகிறது. இது நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான். இதுவரை காலமும் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பல நல்ல விடயங்களை அவர் கொணர நினைப்பதைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

ஆனால் மற்றொன்றையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு வியாபாரி தன் கடையில் பலகாலமாய், பிழையான பொருட்களை விற்றுக் கொண்டிருந்தானாம். அவனுக்குப் பிறகு நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற அவனது மகன், தந்தை செய்த பிழையை அறிந்து, அது தவறென்று உணர்ந்து, நல்ல பொருட்களை விற்கத் தொடங்கினானாம்.

தன் செயலை மக்கள் பாராட்டுவார்கள் என நினைந்திருந்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்ததாம். மறுநாள் கடைக்கு வந்த சிலர் இவனிடம் கோபமாக “உங்க அப்பா இதுநாள் வரையும் கடையை நல்லாய்த்தானே நடத்தினார். உனக்கு ஏன் இந்தப் பேராசை? நீ பொறுப்பேற்றதும் பிழையான பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறாயே” என அவனைக் கண்டித்தார்களாம்.

பலகாலமாய்ப் பிழையையே அனுபவித்துப் பழகியவர்களுக்கு, சரி, பிழையாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது. அதனால் சரியானவற்றைச் செய்தால் மட்டும் போதாது. அவைதான் உண்மையில் சரியானவை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவும் வேண்டும்.

விஜய்யின் கட்சியைச் சார்ந்த புதிய அமைச்சர்களிடம் பதற்றமும், தடுமாற்றமும் தெரிகிறது. அது அவர்களது அனுபவமின்மையின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அந்தப் பதற்றத்திலும், தடுமாற்றத்திலும் அவர்களது உண்மைத் தன்மையையும் உணர முடிகிறது. விஜய்யும்கூட இதற்கு விதிவிலக்கல்லர்.

விஜய் ஊடகக்காரர்களைச் சந்திக்க அஞ்சி ஒழிவதை உடன் நிறுத்தவேண்டும். சரியோ பிழையோ தன் மனக்கருத்தை வெளிப்படுத்த அவர் தயங்கக்கூடாது. அது அவரது ஆளுமைக் குறைபாடாகவே தோன்றுகிறது. அனுபவமின்மையால், பிழையானவற்றைத் தான் சொல்லிவிடலாம் என அவர் அஞ்சுகிறார் போல. தப்பித்தவறி பிழையானதைச் சொன்னாலும் பிழை என்று தெரிந்ததும் அதை உடன் திருத்திவிட்டால் பிரச்சினை இல்லை.

கட்சிக்காரர்கள், தலைமையின் கருத்தை மக்களிடம் கொண்டுபோக மட்டும்தான் முயல்வார்கள். ஊடகக்காரர்கள்தான், மக்களின் கருத்தைத் தலைமையிடம் கொண்டுவந்து சேர்ப்பார்கள். ஆகவே அடிக்கடி விஜய் ஊடகங்களைச் சந்திக்க முன்வரவேண்டும்.

அண்மைக்காலமாய் ஆங்காங்கு வரும் சில செய்திகள், விஜய்யின் கட்சிக்காரர்களில் ஒருசிலர், பழைய பாதையில் நடக்க முயல்கிறார்களோ? என்று எண்ணவைக்கிறது. புதிய அரசின் நிர்வாகத் தவறுகளைப் பலர் மெல்ல மெல்ல விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஓர் எச்சரிக்கை மணி என்பதை விஜய் உணரவேண்டும்.

பாதிப்புற்ற பெண் குழந்தைக்கு எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சிலவற்றை, நீதிமன்றம் கண்டித்திருப்பது, “டாஸ்மார்க்” விலைக்குறைப்பு விடயத்தில் எதிர்ப்புத் தோன்றியிருப்பது, கட்சி நிர்வாகியொருவரின் தான்தோன்றித்தனத்தை எதிர்த்து ஊர்மக்கள் கிளர்ச்சி செய்திருப்பது, மதுக்கடைகளை மூட முடியாததற்கு ஓர் அமைச்சர் சொல்லியிருக்கும் ஏற்கமுடியாத காரணம் எனப் பல விடயங்கள், விஜய்யின் நிர்வாகத்திலும் தடுமாற்றம் தோன்றியிருப்பதை உணர்த்துகின்றன.

நிர்வாகம் என்பது இலேசான காரியம் அன்று. எடுத்தாற்போல் மக்களைக் கவர நினைந்து பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றைத் தொடர்ந்து நிலைபெறச் செய்யவேண்டும்.

ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினால் அது ஏற்றம். பத்திலிருந்து ஒன்று வரை எண்ணினால் அது இறக்கம். கவர்ச்சிக்காகத் தொடக்கத்திலேயே மக்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு, பின்னர் குறைந்து செல்வதை விட மெல்ல மெல்ல நல்லவற்றை நடைமுறைப்படுத்துவதுதான் உகந்தது.

தவழ்ந்த காலால் நடந்தால் பாராட்டுவார்கள். நடந்த காலால் தவழ்ந்தால் இகழ்வார்கள். இதனை விஜய் உணர்வது நல்லது.

கேள்வி :

கம்பன்கழகத்தால் சிவாஜிலிங்கம் அவர்களது சத்திரசிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறீர்கள் போல. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிவாஜிலிங்கத்தைப் பற்றி விமர்சித்திருப்பதைப் பார்த்தீர்களா? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள், சுயநலமில்லாது நம் இனத்திற்காகத் துணிவோடு பாடுபட்டு வரும் உண்மைத்தன்மையுள்ள ஒரு தலைவர். இன்று வரை அவருக்கென்று ஒரு சொந்தவீடுகூட இல்லாதிருப்பதே அவரின் உண்மைத் தன்மைக்காம் சான்று. அதனால் அவரின்மேல் எங்களுக்குப் பெரிய மதிப்புண்டு.

சமூகத்தைப் பாதுகாக்க முனைபவர்களை சமூகம் பாதுகாக்க முன்வரவேண்டும். அப்போதுதான் சமூக வாழ்க்கைக்கு உண்மையானவர்கள் முன்வருவார்கள்.

நம் இனத்தில் அத்தன்மை குறைந்து வருவது கவலைக்குரிய விடயம். சமூகத்தைப் பாதுகாக்கத் தாமும் முன்வரமாட்டார்கள். முன்வருபவர்களைப் போற்றவும் மாட்டார்கள். சிவாஜிலிங்கம் அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ததை முகநூலில் பார்த்துவிட்டு நாம் புகழ்தேட முயல்வதாய், சிலர் “கொமென்ஸ்” எழுதியிருந்தார்கள்.

உண்மையில் நாம் அச்செய்தியினை வெளியிட்டதன் காரணம், எம்மைப் பார்த்து மற்றவர்களும் அவருக்கு உதவ முன்வரவேண்டும் என்பதேயாம். நல்லவற்றைச் செய்தால் புகழ் வரத்தான் செய்யும். அதைப் பார்த்து வயிறெரிந்தால் நாம் என்ன செய்யமுடியும்?

இன்னொருவர், “இன்னும் அதிகம் கொடுத்திருக்கலாமே!” என்கிறார். தாம் ஒன்றுமே செய்யாமல் செய்கிறவர்களுக்கு ஆலோசனை சொல்லப் புறப்படும் கோமாளிகளை நாம் என்ன செய்ய? 

அர்ச்சுனா கேவலங்களின் சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். முதலில் சிவாஜிலிங்கத்திற்காகத் தன்னிடம் பணம் அனுப்பி வைக்கும்படி அறிக்கைவிட்டார். அதைக் கவனியாது தமிழ்மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு நேராக உதவி செய்யத் தொடங்க, தனக்கு வரிவிருந்த வருமானம் போய்விட்டதால், கோபப்பட்டு, சிவாஜிலிங்கத்தை இழிவு செய்து இரண்டாம் அறிக்கை விட்டிருக்கிறார்.

பாரம்பரியம் மிக்க மரியாதைக்குரிய நம் நாட்டுப் பாராளுமன்றத்தை, அவர் சந்தைக்கடையாக்கிக் கொண்டிருக்கிறார். அதனை எல்லோரும் ஏன்தான் சகித்துக் கொண்டிருக்கிறார்களோ? தெரியவில்லை. சுருங்கச் சொல்வதானால், இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஏற்பட்ட ஒரு கறுப்புப் புள்ளியாகவே அர்ச்சுனாவை நாம் கருதவேண்டியிருக்கிறது. நம் இனத்தையும் மானுடத்தையும் நாளாந்தம் இழிவு செய்துகொண்டிருக்கும் அர்ச்சுனாவுக்கு விரைவில் தர்மம் பதிலுரைக்கும் என்று நினைக்கிறேன்.

கேள்வி :

மீண்டும் அமெரிக்க, ஈரான் யுத்தம் தொடங்கிவிடும் போல் இருக்கிறதே.

பதில் :

தொடங்கினாலும் தொடங்கலாம். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சண்டைகள் நிறுத்தப்பட வேண்டுமானால், போரினை ஓயவிட்டுப் பிரயோசனமில்லை. பகையை ஓயவிடவேண்டும். அமெரிக்காவும், ஈரானும் இடையிடையே போர் நிறுத்தம் செய்கிறார்களே தவிர, பகை நிறுத்தம் செய்கிறார்கள் இல்லை. காரணம் இருந்தால் காரியம் விளையத்தான் செய்யும். பகையாகிய காரணம் நீங்காத பட்சத்தில், போராகிய காரியம் நீங்கப் போவதில்லை.

கேள்வி :

உங்களது கம்பன்விழாவில் “ஹிஸாம் இன்சைட்ஸ் மோட்டிவேஷன்” யூரியூப் உரிமையாளரான ஊடகவியலாளர் நிசாம்தீன் ஹிஷாம் முஹம்மத் அவர்களுக்கு விருது வழங்கக் காரணம் என்ன?

பதில் :

நிசாம்தீன் ஹிஷாம் முஹம்மத் அவர்கள் அசாத்தியமான ஆற்றலாளராய் இருக்கிறார். அவரது யூரியூப் விமர்சனங்கள் என்னை வியப்பின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன.

எவருக்கும் அஞ்சாத அசாத்தியத் துணிச்சல், வீரியமான ஆளுமை, தான் நினைத்தவற்றை, மற்றவர்களையும் நினைக்கச்செய்யும் சொல்வன்மை, தடுமாற்றம் இல்லாத பேச்சுத்திறன், கருத்துக்கேற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரைக்கும் ஆற்றல், தடங்கல் இல்லாத மொழிநடை, பாவத்துடன் கூடிய கருத்து வெளிப்பாடு, ரசிக்கத்தக்க கற்பனைகள் கலந்து கருத்துரைக்கும் வகை, எதிராளிகளை அதிரச்செய்யும் குத்தலான நகைச்சுவை, கமராவைத் தாண்டி ரசிகர்களைத் தொடும் மலர்ந்த முகபாவம் என அவரது ஆற்றல்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம் போல் தெரிகிறது.

அண்மையில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய ஒரு செய்தித் தொகுப்பில் அவர் பயன்படுத்திய சில தொடர்களை மிக ரசித்தேன். டொலரின் விலையேற்றம் பற்றிச் சொல்கையில் அது விறுவிறுவென ஒட்டகத்தின் கழுத்தளவாய் உயர்ந்து போயிற்று என்றார்.

கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டும் எனும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி விமர்சிக்கையில், யார் யாருக்கு என்னென்ன பதவி கொடுக்கவேண்டும் என்று கிண்டலாகச் சொல்லத் தொடங்கியவர், அர்ச்சுனாவுக்கும் கட்டாயம் ஒரு பதவி கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் இலங்கையைத் தூக்கி “விஜய்”யிடம் கொடுத்துவிடுவார் என்று சொன்னபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை.

இப்போதெல்லாம் நாடகத் தொடர்களைத் தவறவிட்டாலும் இவரது விமர்சனங்களை நான் தவறவிடுவதில்லை. தனித்துவமான ஆற்றல் உள்ள இளைஞன். இன்னும் வளரப்போகிறார். அதற்குத்தான் இந்த விருது.

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.