'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அருட்கலசம் 06 Sep 2019
உலகின் நிலையாமையை உணர்த்தி,
வெந்தணலில் வெந்துகொண்டிருந்தது,
சற்றுமுன்வரை மூர்க்கமாய் ஓடித்திரிந்த அந்தக் காட்டுப்பன்றி.
தில்லைக்கூத்தன் திருவடிகண்ட அடியார் நெஞ்சம் போல்,
உருகி ஓடும் பன்றிக்கொழுப்பால்,
கூடும் அன்பெனக் கொழுந்துவிட்டெரிந்தது நெருப்பு.
படபடத்து எரிகின்ற காட்டுச் சுள்ளிகளுக்கிடையே,
அந்நெருப்பையே பார்த்தபடி,
நினைவுகள் பின்னோட நின்றிருந்தான் நாணன்.
காலை நிகழ்ச்சிகள் கனவுபோற் தோன்றின.
காட்டின் நடுவில் கனன்றெரியும் நெருப்பிடையில்,
பன்றி அவிய, பக்கத்திருந்தபடி,
அன்று நடந்த அனைத்தினையும் அவன் உள்ளம்,
மென்று அசைபோட மெல்லத்தன் கண்மூடி,
பழைய நினைவுகளில் பயணித்தான் அவன்.
🔔 🔔 🔔
ஆனைத்தந்தங்களால் அமைக்கப்பட்ட வேலியைக் கடந்து,
வேடர்குழு ஒன்று வேகமாய்ப் புகுகிறது.
நிலம் குழியக் கால்பதித்து ஓடிவரும் அக்குழுவின்,
அதிரும் காலடி ஓசைக்கு அஞ்சி,
விண்ணுயர வளர்ந்திருந்த விளாமரங்களில்,
ஆங்காங்கு கட்டப்பட்டிருந்த பார்வை மிருகங்கள்,
சிவனருள் பெற்ற சிந்தையோர் தமது பாசக்கட்டறுத்தாற்போல்,
பிணைத்திருந்த கொடிக்கயிறுகளை அறுத்து ஓடத்தொடங்கின.
இயற்கையிலேயே மூர்க்கம் அமைந்து,
மறளிபோல் கறுத்திருந்த அம்மறவர் கூட்டத்தின் முகங்களில்,
கோபமும் குடிபுக,
ஆடல்வல்லான்தன் கரத்தின் அனலென,
அத்தனைபேர் கண்களும் சிவந்து கிடக்கின்றன.
இயற்கையின் எழிலெலாம் கொண்டு,
அழகுற அமைந்த அக்குடிலின் வாயிலில்,
அத்தனைபேரும் சூழ நிற்கின்றனர்.
ஆத்திரத்திலும் அறிவிழக்காது,
மரபைப் பேணி,
தம் தலைவன் பெயர் சொல்லி,
வாழ்த்துரைக்கிறது அக்கூட்டம்.
🔔 🔔 🔔
ஆளரவம் கேட்டு அக்குடிற் கதவு,
அரண்நாமம் கேட்ட அன்பர் உள்ளமாய்,
மெல்லத்திறக்கின்றது.
அக்கதவோசைகேட்டு,
ஓசையற்று ஒடுங்குகிறது அவ்வேடர் கூட்டம்.
குறுகிய அக்குடிற் கதவைக் குனிந்துதாண்டி,
நெடிது நிமிர்கிறது ஓர் உருவம்.
நரைத்ததலை,
குழித்தகண்,
தளர்ந்த நடை,
ஆனாலும் அரசமரமாய் அண்ணார்ந்து பார்க்கவைக்கும் தோற்றம்.
முதிர்ச்சியிலும் முறுகி நின்ற தசைகள்,
அவ் உருவத்தின் இளமை வேகத்தை எடுத்தியம்புகின்றன.
அச்சமும், அருளும் அறியா அவனது கண்கள்,
மறத்தையே குணமாய்க் கொண்டான் அவன் எனும் மாண்பைக் கூறின.
முதிர்ந்த தசைகள் முறுக முன்வந்து,
புலித்தோல் போர்த்துப் பொலிந்திருந்த,
திண்ணையிற் கிடந்த தேக்குக்கட்டில்மேல்,
அமர்கிறது அச்சிங்கம்.
🔔 🔔 🔔
அவன்தான் அவ்வேடர்களின் தலைவன் நாகன்.
உடுப்பூரின் உயர்தலைவன்.
அவனது முகச்சுருக்கங்கங்களில் முதுமை வெளிப்படுகிறது.
வேகமாய் வந்த வேடர் குழாத்தினை,
தீர்க்கமாய் அவன் நோக்க,
பஞ்சாக்கிரத்தால் ஒடுங்கும் உணர்வுகள்போல,
கோபம் மறந்து ஒடுங்கிய அக்கூட்டம்,
நாணுற்ற பெண்ணாய் நிலம் நோக்கி நிற்கிறது.
சிறிது மௌனம்.
முதுமைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல்,
இடியென எழுகிறது நாகனின் குரல்.
'வந்தது எதற்கு?
வாடிய நும்முகம் சொல்வது எதனை?
உள்ளக்கருத்தை உரைமின்!'
கட்டளையிடுகிறது நாகன் குரல்.
குனிந்த கண்களால் ஒருவரை ஒருவர் நோக்க,
துணிந்த ஒருவன் முன்வருகிறான்.
🔔 🔔 🔔
தலைவன் தாழ்பணிந்து,
கைகட்டி வாய்பொத்தி,
பயத்தால் தளரும் புலியாடையை இறுகக் கட்டி,
தலைவனின் முகம் நோக்கி,
வணங்கிய வாயனாய்ப் பேசத்தொடங்குகிறான் அவன்.
'நாட்டுத் தலைவா! நமது குடியிருப்புள்,
காட்டு மிருகங்கள் கட்டவிழ்த்து வந்து தினம்,
கூட்டமாய்ப் புகுந்து குடியழித்து நின்றனவாம்.
திங்கள்தொறும் சென்று சினம்பொங்க வேட்டையிடும்,
உங்கள் வழக்கம் ஓரிரண்டு திங்களதாய்,
நின்றதனால் வந்த நெடு அழிவு' என்றுரைத்து,
வேட்டைக்கு எழுதல் வேண்டுமெனப்பணிகின்றான்.
🔔 🔔 🔔
துணிந்த அவ்வேடுவனின் துடுப்பான வார்த்தைகளை,
உள்வாங்கி, ஒன்றும் பேசாதிருக்கிறான் நாகன்.
விரிந்த அவன் கண்கள், சுருங்கி,
உள்ளத்தின் குழப்பத்தை உரைக்கின்றன.
நெற்றிசுருங்க நிலம் நோக்கி நினைந்த அவன்,
மீண்டும் கண்கள்விரிய தலைநிமிர்கிறான்.
'மூப்பினால் முன்னை முனைப்பொழிந்தேன்.
தாக்கும் முதுமை தளர்வுறச் செய்கிறது.
எண்ணம் சோராதீர்! திண்ணன் இருக்கின்றான்.
மைந்தனைத் தந்தேன்! மருள்நீப்பான்! அஞ்சாதீர்!'
என்றுரைத்து நாகனும் 'எங்கே? திண்ணனென',
கூவியழைத்துக் குரல்கொடுத்தான்.
🔔 🔔 🔔
கதவிடுக்கால்,
முற்றத்தில் நடப்பவற்றை முனைப்போடு கண்டிருந்த,
தத்தை மனதில் சிறுசலனம்.
நாகனெனும் வேடவிருட்சத்தை,
தன்னுள் அடக்கிய தலைவி இவள்.
மறவர் குடிகளுள் உயர்குடியிற் தோன்றியவள்.
வேடர் வேண்டுதலுக்காய் வேட்டைக்குச் செல்ல,
நாகன் திண்ணனை அழைக்க நலிகிறாள் அவள்.
வீரமரபில் விளைந்தவளேனும்,
பிள்ளைமேற்கொண்ட பெரும்பாசம்,
உள்ளத்தைத் தாக்க,
ஒருநிமிடம் அவள்முகம் வாடி வளைகிறது.
அத் தலையசைவால் உச்சிக் குடுமியில் பொருத்தியிருந்த,
மயில்பீலியும் இலைத்தளிர்களும் மோத,
கொண்டையைச் சுற்றிய மலர்மாலையிலிருந்த,
வண்டுகள் ஆர்த்தன.
புலிப்பல்லாலான தாலி நெஞ்சைத்தொட,
அவள் உள்ளம் திண்ணன் பிறந்த வண்ணம் நினைக்கிறது.
🔔 🔔 🔔
தத்தை, நாணி நாகன் கைபிடித்து நாட்பல சென்றிருந்தன.
தம்பெயர் சொல்லப்போகும் பிள்ளைக்காய் ஏங்கி,
தத்தையும், நாகனும் தவமிருக்கத் தொடங்கினர்.
இவர்க்கு இனிப் மக்கட்பேறு அரிதென எல்லோரும் கூற,
வாடி வதங்கிற்று அவர் உள்ளம்.
குன்றிலாடும் குலதெய்வம் குமரன் கோயிலில்,
வழிபாடு இயற்றி வணங்கத் தொடங்கினர் அவர்கள்.
கடம்ப மாலைகளால் கந்தனை அலங்கரித்தும்,
வண்ண மயிலும் வடிவுறு சேவலும்,
எண்ணம் நிறைவேற நேர்ந்து விடுத்தும்,
குரவைக் கூத்தாடிக் கொண்டாடியும்,
முருகவேள் நெஞ்சம் உருக வேண்டினர்.
கந்தவேள் நெஞ்சம் கனிந்தது.
தத்தை கருவுற்றாள்.
பத்துமாதங்கள் பறந்தோடிப்போய்விட புத்திரன் பிறந்தான்.
ஆர்வத்தோடு பிள்ளையை அள்ளியெடுத்த,
நாகன் கைகள் நடுங்கிடும் வண்ணம்,
திண்ணெனக் கனத்துச் சிரித்தது பிள்ளை.
கனிந்து உளமுருக காரணப்பெயராய்,
திண்ணன் என்று திருநாமம் சூட்டி,
எண்ணம் நிறைந்தான் நாகன்.
🔔 🔔 🔔
பார்வை மிருகங்களின் திறந்த வாயினை,
குகை யெனநினைந்து அதனுள் தன்குறுங்கை ஓட்டும் திண்ணனை,
நாகன் பசுந்தழை ஓங்கிப் பயங்காட்டிடுவான்.
சூரிய சந்திரர்களாய்ச் சுடர்பொருந்தி நிற்கும்,
திண்ணன் கண்களில் திரளும் கண்ணீர்கண்டு,
தத்தை உருகுவாள்.
புத்திரனை உச்சிமோந்து உவப்பாள்.
இங்ஙனமாய்,
பழையன எல்லாம் பசுமையாய்,
நெஞ்சில் ஓட நெகிழ்ந்து பின் நிதானித்து,
தத்தை திண்ணனைத் தந்தை முன் சேர்க்க,
வேடர்குழாம் விண்ணதிர ஆர்ப்பரித்தது.
🔔 🔔 🔔
'கன்னிவேட்டைக்குச் செல்லும் காளையைக் காப்பதற்காய்,
தெய்வங்கள் மகிழத் திருப்பலி கொடுப்பதற்கு,
தலைமரபின் வழிவந்த தேவராட்டியினை அழைமின்!'
நாகனிடமிருந்து கட்டளை பிறக்க,
மூத்தவளான அம்மூதாட்டி முனைப்புடன் ஓடிவருகிறாள்.
கலைமான் கொம்பிலான காதணி அசைய,
மரவுரியும் மயிலிறகும் ஆடையாக,
கஸ்தூரிப்பொட்டால் கவின்தரும் நெற்றியுடனும்,
நீண்ட முதுமையால் நிலம்நோக்கித் தொங்கும் மார்புடனும்,
நாகனைப் போற்றி நின்றாள் அந்நங்கை.
🔔 🔔 🔔
'அழைத்தது எதற்கு?' அன்னை கேட்க,
'வேட்டை வினைக்கு விரைகிறான் மைந்தன்.
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ண,
காடுபலி ஊட்டு' என்றான் நாகன்.
குறமுதியாள் முகம் மலர்ந்தது.
'நல்லன குறிகள் கண்டேன்.
திண்ணன் உயர்வது திண்ணம்' என்ற பின்,
வாழ்த்தி விடைகொண்டாள் தேவராட்டி.
காடதிர வேடர்குழு விருப்பொடு வேட்டைக்குப் புகுந்தது.
🔔 🔔 🔔
சிங்கமெனச் சீறிப் புறப்படுகிறான் திண்ணன்.
நெஞ்சில் விருப்போடும் காலிற் செருப்போடும்,
அஞ்சா நெஞ்சரான ஆடவர் கூட்டமொன்று,
ஆலயம் செல்லும் அடியார் நெஞ்சம் போல்,
திண்ணனை முந்திச் செல்கிறது.
ஆணவத்தால் கட்டுண்ட ஆன்மாக்கள் போல்,
அவர்கள் கைகளில்,
பிணைக்கப்பட்ட நாய்கள்.
வேடர்தம் வில்லிற் பொருந்திய வெற்றித் திருமகளின் திருவடிகள்,
முன் செல்லுமாற்போல்,
அந்நாய்களின் தொங்கும் சிவந்த நாக்குகள் தோற்றந் தருகின்றன.
ஊதும் கொம்பு, ஒலிக்கும் பறை,
கொட்டும் பம்பை, கூடி வேடர் கை தட்டும் ஓசை எனச் சத்தம் எழுப்பி,
கருமை வேடர் காட்டுள் நுழைந்த காட்சி,
காளிந்தி நதி, கடலுட் கலக்கும் காட்சியாயிற்று.
🔔 🔔 🔔
தொடரும்