'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு’-பகுதி 2: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அருட்கலசம் 13 Sep 2019
(சென்றவாரம்)
ஊதும் கொம்பு, ஒலிக்கும் பறை,
கொட்டும் பம்பை, கூடி வேடர் கை தட்டும் ஓசை எனச் சத்தம் எழுப்பி,
கருமை வேடர் காட்டுள் நுழைந்த காட்சி,
காளிந்தி நதி, கடலுட் கலக்கும் காட்சியாயிற்று.
⧫ ⧫ ⧫
உக்கிரமாய்ப் பாய்ந்தார்கள் வேடுவர்கள்.
காட்டெருமை கரடியொடு கலைமான் கூட்டம்,
நீண்டபெரும் யானை, புலி, காட்டுப்பன்றி,
காட்டுமரை என,
விலங்கனைத்தும் வீழ, வேட்டை தொடர்ந்தது.
நல்வினை, தீவினைகளுள் அகப்பட்டு பெற்ற அனுபவத்தால்,
உயிர்களில் உதிக்கும் மெய்யறிவை,
மீண்டும் பற்றிப்பிடித்து அழிக்கும் ஐம்பொறிகளாய்,
வலையறுத்து ஓடமுயலும் விலங்குகளை,
வேடர்தம் நாய்கள் துரத்தி வீழ்த்தின.
கருவுற்ற விலங்குகளை விலக்கி,
வேடர் செய்த வேட்டையிலும் அறமிருந்தது.
அப்போது....
⧫ ⧫ ⧫
புதர் ஒன்றிலிருந்து பொங்கியெழுந்தது ஓர் காட்டுப்பன்றி.
நெடிய யானைகளும் அஞ்சும் வடிவம்.
இடியொத்த ஓசை.
கட்டியவலை அறுத்துக் கடிதிற் பாய்ந்தது அப்பன்றி.
கிட்ட அணுகப் பயந்து தூர நின்றன வேட்டை நாய்கள்.
ஓடும் அப்பன்றியினை ஒழிப்பதற்காய்,
வேடர்குலச் சிங்கம் விரைந்தது.
தவத்தோரை மாயங்காட்டி மயக்கும் மனக்குரங்காய்,
அக்காட்டுப் பன்றி நீண்ட நெடுந்தூரம் ஈர்த்துச் செல்ல,
உடன் வந்த வேடரெலாம் ஓடமுடியாது ஓய்ந்தனர்.
நாணன், காடன் எனும் நண்பர் இருவரும் மட்டும் நாடிவர,
திண்ணன் நடுக்காட்டுக்குள் ஓடுகிறான்.
⧫ ⧫ ⧫
இறைவன் திருவடியை ஏங்கித் தொடருகிற,
மெய்யடியார் உள்ளம்போல,
பன்றியினைத் தொடர்ந்து பாய்ந்தோடிப் போகின்றான் அவன்.
பஞ்சாக்கரத்தினால் பாயும் மனம் நிக்குமாப்போல,
திண்ணனின் வேகத்தால் திகைத்து,
தாவிய பன்றி தயங்கி நின்றது.
நின்ற பன்றியைக் கொல்ல சென்றுபற்றும் வில் எதற்கு?
வில்லொழித்தான் வேடர்குலச் செம்மல்,
இடையில் தொங்கிய வாளதனால் அவன் எறிய,
அன்பால் இறைதொட்ட அடியார்தம் மனத்திருந்து,
காமம், கோபம் எனும் கடுங்குற்றம் வீழுதல்போல்,
வலிய அப்பன்றியும் இரு துண்டாய் வீழ்ந்து இறந்தது.
நாணன் மகிழ்ந்தான்!
⧫ ⧫ ⧫
காடன் தன் கடும்பசியை உரைக்க,
பன்றியைச் சுட்டுப் பதப்படுத்தச் சொல்லிவிட்டு,
காளத்தி மலையருகில் கடிதாக ஓடுகிற,
பொன்முகலி ஆற்றின் புதுப்புனலை மாந்துதற்காய்,
நாணனுடன் திண்ணன் நடக்கத் தொடங்குகிறான்.
⧫ ⧫ ⧫
விறகொன்று வெடித்தெரிய,
காடன்தன் எண்ணங்கள் கலைகின்றன.
நாணனுடன் திண்ணன் சென்று நாழி பல கழிந்ததனால்,
காலக்குறியுணர்ந்து காடன் கவழ்கின்றான்.
நீர் கொள்ளச் சென்றவர்கள் நேரம் மிகவாகியும்,
வாராத எண்ணம் வருத்த,
நாற்றிசையும் அவன் கண்கள்,
ஓடி உழன்று ஓய்கின்றன.
⧫ ⧫ ⧫
அங்கோ!
பொன்முகலி ஆற்றருகில் போகின்றார் திண்ணனார்.
சிவமாகப் போகின்ற சீவன்தனைக் கண்டு,
துந்துபிகள் முழங்கித் துதிக்கின்றார் தேவர்கள்.
திண்ணனார் திருச்செவியில் அத்தெய்வஒலி விழுகிறது.
'ஏதிந்த ஓசை?' நாணனை நோக்கி,
வில்லாகப் புருவம் வளைய வினவுகிறார் திண்ணனார்.
'தேன் நிறைந்த மலர்களிலே தேங்கும் வண்டெல்லாம்,
மேலெழுந்த ஓசை இது' என,
நாணன் உரைக்க நம்பிப்பின் செல்கின்றார் நம்பி.
⧫ ⧫ ⧫
என்புருக என்புருக ஏறுகிறார் மலைமேலே.
நாணனும் உள்ளன்பும் நாடி அவர் முன்செல்ல,
தத்துவமாம் பெரும்படிகள் தாண்டித்தான் செல்கின்றார்.
உச்சியை அடைந்தார்.
அங்கிருந்த ஓங்கிய இலிங்கத்தினைக் கண்டார்.
திண்ணனார் மேலே சிவனின் திருவிழி நோக்கம் பாய,
பொங்கிய அருளினாலே, பொருவில் அன்புருவமானார்.
ஓடினார், உளம் உருகினார், சிந்தையாலே,
நாடியே இறைவர் தம்மை நமர் எனத்தழுவி மோந்தார்.
திண்ணனார் தம்மின் அன்பு,
தேங்கிய அணையுடைத்த வெள்ளம்போல் பாய்கிறது.
அடியனுக்கு இவர்தாம் இங்கு அகப்பட்டார் அச்சோ! என்று,
நெடிதுயிர்த்து உருகுகின்றார்.
⧫ ⧫ ⧫
'கரியொடு கரடி, வேங்கை, சிங்கமும் திரியுமிந்த,
காட்டிடைத் தனித்திருந்து கதியிலார்போல ஈசன்,
துணையென ஒருவரின்றித் துயில்வதோ? அந்தோ! கெட்டேன்.'
என்றெலாம் கூறித் திண்ணன் ஏங்கினான். அழுதான். சோர்ந்தான்.
⧫ ⧫ ⧫
சிவனின் மேல் சீவன் தனைப் பதித்த திண்ணனார்,
இலிங்கத்தின் மேலே யாரோ இலையொடு பூவும் சாத்தி,
வழிபட்ட தன்மை கண்டார்.
நாணனை நோக்கி,
'ஐய! ஈசனுக்கு இதனைச் செய்தார் யார்?' எனக் கேட்டு நின்றார்.
நாணன்,
'உந்தை தன்னோடு ஒருமுறை நான் இங்கு வந்தனன்.
மறைபயில் அந்தணாளன் மாண்புறு சிவகோச்சரியார்,
முறையொடு பூசை செய்ய முன்பு நான் கண்டதுண்டு,
பூவொடு நீரும் சாத்தி பொழிவுற சாதம் செய்து,
ஈசனை உண்க! என்று இனிய நல் வேதம் சொல்லி,
அன்று அவ் அந்தணன் அரியதாம் பூசை செய்தான்.
அவன் செய்த பூசையின் அடையாளமே ஈது' என்றான்.
⧫ ⧫ ⧫
அன்புருவாய் நின்ற திண்ணனார்க்கு அவ் வார்த்தைகள் என்புருக்கின.
'அச்சோ! என் ஐயனுக்கு இவையெலாம் ஆகும் போல,' என்றுரைத்து,
தானும் அப்பூஜை செய்ய தயாரானார்.
பூவொடு நீர் சுமந்தேத்தி புசிக்க ஊண் தந்து,
நாதனைத் தொழ நினைந்தார் திண்ணனார்.
நாதனே! அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே,
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்!
என்றுரைத்துப் புறப்பட்ட திண்ணனார்,
இரண்டடிகள் முன் வைத்தார்.
கண்களில் நீர் சொரியக் கன்றினைப் பிரிந்த பசு போல் மீண்டார்,
'உன்னை விட்டு அகலேன்! என் உயிரே!' எனக் கதறி நின்றார்.
⧫ ⧫ ⧫
போவார், மீண்டு வருவார், சிவனைப் புல்லுவார், பின் மீளப் போவார்,
காதலால் நோக்கி நிற்பார், 'கடவுளே உனக்கு இங்கு யாவரோ துணை?' என,
கதறி அழுது தன் நெஞ்சம் சோர்வார்.
'உன்னை விட்டகலவும் என் உளம் துணியாது.
அண்ணலே! உன் பசியும் தாங்கேன் என் செய்வேன்?' எனக் கதறி ஏங்கி,
பின் உறுதியாய் செலத் துணிந்தார்.
வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போனார்.
வேட்டைக்குச் செல்லும் போது வில்லெடுத்த அவர் வலிய கைகளை,
இறைவர்க்கு உணவெடுக்கச் செல்லும்போதில், மலர்க்கை என்றுரைத்து,
திண்ணனாரின் அகத்தில் நிகழ்ந்த அன்பு மாற்றத்தை,
புறத்தில் பதிவு செய்து அழகுறக் காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார்.
⧫ ⧫ ⧫
நாணன் பின் வர நடந்தார் திண்ணனார்.
தலைவனைக் காணாது தவித்து நின்ற காடன்,
ஐயனைக் கண்டு அகமகிழ்ந்தான்.
காலம் தாழ்த்திய காரணம் கேட்டான்.
திண்ணனார் காதில் அவன் கேள்விகள் விழவே இல்லை.
நாணன் தான் பதிலுரைத்தான்.
'நம் குலத்தலைவன் காளத்தி மலைமேல் நின்ற,
குடுமித் தேவரைக் கண்டு கொண்டாடி மகிழ்ந்தான்.
கண்டதும் காதல் கொண்டான்.
ஒப்பற்ற அவ் ஐயனை உடும்பெனப் பற்றிக் கொண்டான்.
நம் குலத்தலைமை விட்டான், நலப்பட்டான், தேவர்க்கென்றான்.'
⧫ ⧫ ⧫
காடனின் கேள்விகள் காதில் விழாதவர் போல,
திண்ணனார் செயல்பட்டார்.
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி, மிக்க
இன்புறு தசைகள் வௌ;வேறு அம்பினால் ஈர்த்துக்கொண்டார்.
வாயினில் இட்டு அதக்கி, வளம்தரு சுவை அறிந்தபின்,
தவமுடையார் மேனி போல,
காய்ந்து கிடந்த சருகுகளை ஒன்றாய்க் கோர்த்து 'தொன்னை'யாக்கி,
அக்கோதறு இறைச்சித் துண்டங்களை அதனுள் இட்டார்.
⧫ ⧫ ⧫
காடனும், நாணனும் கவன்று போயினர்.
'தெய்வ மயக்கம் இத் திண்ணனுக்கு வந்தது.
தேவராட்டி வந்து தெளிவித்தாலன்றி,
திண்ணனின் மயக்கம் தீராது' என்றுரைத்து,
எஞ்சி நின்றாரை இனிதே உடனழைத்து,
அஞ்சி அவர்கள் அகன்றார், தம் ஊர் நோக்கி.
⧫ ⧫ ⧫
அவர்கள் போனதை 'ஐயர்' அறிந்திலர்.
ஒரு கையில் வில், ஒரு கையில் ஊன் எடுத்தபின்,
இறைவரை நீராட்ட வேண்டுமே! என நினைந்தார்.
வாயே கலசமாக நீர் நிறைத்தார்.
அர்ச்சனைக்குப் பூவை குடுமியில் சொருகிக் கொண்டார்.
இனிய எம் பிரானார் சாலப் பசிப்பர் என்றிரங்கி ஏங்கி,
நனி விரைந்து இறைவர் வெப்பை நண்ணினார் - திண்ணனார்.
⧫ ⧫ ⧫
என் தலைவன் பசியால் இளைத்தானே என்று துடித்தார்.
எச்சில் நீரால் இனிய அபிஷேகம் செய்தார்.
அரனின் முடியில் கிடந்த பூக்களை அடிச்செருப்பால் நீக்கி,
தன் முடியில் கிடந்த பூக்களை இறைமேல் இட்டார்.
'தொன்னை'யில் இருந்த ஊனை அன்னை போல் ஊட்டினார்.
இன்னமும் இறைவர்க்கு இறைச்சி வேண்டும் என நினைந்தார்.
திண்ணனாரின் பெருங் காதல் கண்டு விண்ணிலே நின்ற சூரியன்,
நீண்ட தன் கதிர்க் கரங்கள் குவித்து வணங்கினான்.
இரவு வந்தது.
⧫ ⧫ ⧫
(தொடரும்)