கந்தன் கவிஅமுதம் 1
மஞ்சத்தில் நல்லூரான் ஏறி வந்து
மனமெல்லாம் உருகுகிற அடியார் தம்மின்
நெஞ்சத்தில் ஏறிடுவான் நினைவைச் சூழ்ந்து
நேர்நின்று அவர்தம்மை ஆண்டு நிற்பான்
வஞ்சத்து மனத்தவரை வாடச்செய்து
வருத்திய பின் அவர்தமக்கும் அருளைச் செய்வான்
பஞ்சத்தில் வாடுகிற வறியோர் தம்மை
பாசத்தால் அணைத்தேதான் பதங்கள் ஈவான்.
இளையவர்கள் வடம் பிடித்து இழுத்து நிற்பர்
இயலாத முதியவர்கள் நெஞ்சம் தன்னால்
கலைமிகுந்த மஞ்சத்தின் கயிறைத் தொட்டு
கண்கலங்கி நிற்கின்ற காட்சி என்னே!
வளைய வரும் நங்கையர்கள் மஞ்சம் ஏறும்
வடிவழகன் கந்தனையே பார்த்துப்பின்னர்
மலையெனத்தோள் வளர்ந்தவராம் மனத்துள் வந்த
மாண்பான காதலரை மயங்கிப் பார்ப்பர்.