கம்பஅறம்
உலகம் மாயையின் வெளிப்பாடென்பது,
சைவசித்தாந்தம் உரைக்கும் ஓர் உண்மையாம்.
உயிர்கள் தாம் செய்த வினைப் பயனை,
அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி.
வினை அனுபவங்களைப் பெற்று உய்வதற்காய்,
இறைவன் உயிர்களுக்கு மாயையிலிருந்து,
உடல், கருவிகள், வாழ்விடம், அனுபவம் ஆகியவற்றை,
ஆக்கித் தந்து அருள் செய்கிறான்.
இவையே தனு, கரண, புவன, போகங்கள் எனப்படுகின்றன.
மலங்களுள் ஒன்றான மாயையை,
ஓர் உள்பொருளென்றே சித்தாந்தம் உரைக்கின்றது.
இம் மாயையும் ஒரு மலமாக இருந்தபோதும்,
அது, உயிர்களின் மற்றைய மலங்களை நீக்கத் துணைபுரிந்தும் நிற்கிறது.
ஆன்மாவின் ஞானம் முதிருமளவும் அதன் சிற்றறிவை விளங்க வைத்து,
அதற்கு வழிகாட்டுவது இம் மாயையேயாம்.
அதனாற்றான் இம் மாயையை,
“விடிவாம் அளவும் விளக்கனைய மாயை” என,
சந்தான குரவர்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் உரைத்தனர்.
இம் மாயையே உலகப்பொருள்களாய்த் தோன்றி நம்மை மயக்குகிறது.
அம் மயக்கமே, பற்றை விளைவிக்கின்றது.
அப் பற்றே, நம்மை உலகியலுள் ஆழ்த்துகின்றது.
அப் பற்றிலிருந்து விடுபட்டால்த்தான் உயிர்கள் ஈடேற முடியுமாம்.
“நிலையாமையை” உணர்தலே பற்றிலிருந்து நீங்குவதற்கான முதற்படியாம்.
உலகப் பொருள்கள் நிலையற்றவை எனும் உண்மையை,
உயிர்கள் என்று உணர்கின்றனவோ,
அன்றே, அவற்றை விட்டு மாயை அகலுமாம்.
மாயையின் பொய்மையை உணர்தலே,
நிலையாமையை உணர்தலாம்.
நிலைத்தவையாய்த் தம்மைக் காட்டி,
உலகத்தாரை மயக்கிச் சிறைப்பிடிப்பதில்,
முதன்மை பெறுபவை இரண்டு விடயங்கள்.
ஒன்று உடலின் மீதான பற்று, மற்றது பொருளின் மீதான பற்று.
உலகப்பற்றுக்கள் பலவாயினும்,
அவற்றுள் மேற்சொன்ன இரண்டுமே முக்கியமானவையாம்.
இவ் உண்மையை நமக்கு உணர்த்தவே,
நம் வள்ளுவக் கடவுளார், தனது “துறவறவியலில்”,
“நிலையாமை” எனும் ஓர் அதிகாரத்தைப் பதிவு செய்கிறார்.
அவ் அதிகாரத்தில் மேற் சொன்ன யாக்கை, பொருள் ஆகிய,
இரண்டினதும் நிலையாத் தன்மையை,
வள்ளுவர் விளக்கும் முறை அபாரமானது.
ஒரு முட்டையுள் இருக்கும் குஞ்சொன்று,
எப்படித் தனக்கான பக்குவக் காலம் வந்ததும்,
அம் முட்டையை விட்டு நீங்கிப் பறந்து போகுமோ?
அதுபோலவே நம் உயிரும்,
அதன் “பிரார்த்த” வினைக் காலம் முடிந்ததும்,
நின்ற உடம்பை விட்டுப் பறந்து போய்விடும் என்றுரைத்து,
உடம்பின் நிலையாமையை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
“குடம்பை தனித்து ஒழியப் புட் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு”
விதி, ஊழ், தெய்வம் என்பவை ஒத்த கருத்துள்ள சொற்கள்.
நமது முன்னை வினைப்பயனே, “ஊழ்வினை” எனப்படுகிறது.
ஆன்றோர் ஊழினை, “ஆகூழ்”, “போகூழ்” என இருவகையாய்ப் பிரிப்பர்.
“ஆகூழ்” என்பது நல் ஊழ், “போகூழ்” என்பது தீ ஊழ்.
பொருளின் நிலையாமை பற்றிச் சொல்ல வந்த வள்ளுவர்,
ஆகூழே, பொருள் கை வந்து சேர்தற்காம் காரணம் என்றும்,
போகூழே, அது கைவிட்டுப் போவதற்காம் காரணம் என்றும்,
உரைக்கின்றார்.
“ஆகூழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி”
ஆகூழ் நிகழும் காலத்தில் வரும் பொருள்,
போகூழ் நிகழும் காலத்தில் சென்றுவிடுவதை நமக்கு உணர்த்த,
வள்ளுவர் கூறும் உவமை மிகச் சிறப்பானது.
நாடகம் காணக் கொட்டகைக்கு வரும் கூட்டத்தை,
ஆகூழின் விளைவுக்காம் உவமையாகவும்,
அது முடிந்ததும் அக் கூட்டம் கலைந்து போவதை,
போகூழின் விளைவுக்காம் உவமையாகவும்,
உரைக்கின்றார் வள்ளுவர்.
“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது இளிந்தற்று”
கூத்தைக் காணவெனக் கொட்டகைக்கு வருவோர்,
பகுதி, பகுதியாக வந்து கொட்டகையை நிரப்புவர்.
நாடகம் முடிந்ததும் அவர்கள்,
வந்த முறையாலன்றி, ஒருமித்துச் சென்று விடுவர்.
அது போல ஆகூழ் வர,
சிறிது சிறிதாய் நம்மிடம் வந்து சேரும் பொருள்கள்,
போகூழ் வர நம்மைவிட்டு ஒருமித்துப் போய்விடும் என்பதை,
நமக்கு உணர்த்தவே வள்ளுவர் இவ் உவமையை உரைத்ததாய்,
உரையாசிரியர் பரிமேலழகர் இக் குறளுக்கு நயப்புரை செய்கிறார்.
இங்ஙனமாய் நிலையாமை பற்றி, வள்ளுவனார் உரைத்தவற்றை,
விளக்க நினைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
அயோத்தியா காண்டத்தின் ஆரம்பத்தில் அக் கருத்தைப் பதிவு செய்கிறார்.
அயோத்தியா காண்டம்.
அயோத்தியை அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்ட தசரதன்,
ஒரு மாலைப் பொழுதில் தன் முகத்தைக் கண்ணாடியில் காண்கிறான்.
அப்போது தன் காதோரத்தில் தோன்றிய ஒரு வெண்முடியைக் கண்டு,
அவன் மனதில் சலனம் தோன்றுகிறது.
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதாய் அரும்பிற்றாம் என
பாங்கொடு வருநரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்
அந்த வெண்முடியைக் கண்ட தசரதன்,
அம்முடி, தன்னை நோக்கிப் பேசுவதாய் உணர்கிறான்.
“மன்னவனே! நீ இதுவரை அரசாட்சி செய்தது போதும்,
இனி அந்த ஆட்சியை உனது மகனுக்குக் கொடுத்துவிட்டு,
துறவு நோக்கித் தவம் செய்யச் செல்வாயாக!” என்று,
அம்முடி உரைப்பதாய்த் தோன்ற,
உடன் பதவி துறக்க முடிவு செய்கிறான் அவன்.
“மன்னனே! அவனியை மகனுக்கீந்து நீ
பன்னரும் தவம் புரி பருவம் ஈதென
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர்”
தன் எண்ணத்தை உடன் நிறைவேற்ற நினைந்த தசரதன்,
அவ் இராப் பொழுதிலேயே மந்திரிசபையைக் கூட்டி,
இராமனுக்கு முடிசூட்டும் தனது எண்ணத்தை,
அவ் அவையில் எடுத்துரைக்கிறான்.
“அன்னவர் அருளமைந்து இருந்த ஆண்டையில்
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான்
உன்னியது அரும்பெறல் உறுதி ஒன்று உளது
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால்!
தொடர்ந்து பேசும் தசரதன்,
“எனக்கு முதுமை வந்துவிட்டதால்,
இப் பேரரசைக் காக்கும் திறனை நான் இழந்தேன்.
இதுநாள்வரை இம் மானிலத்தைத் தர்மம் தழைக்கும்படியாய்க் காத்து,
மன்னுயிர்க்கு உறுதி செய்து வாழ்ந்திருந்த நான்,
இனி என்னுயிர்க்கு உறுதி செய்யக் கருதுகிறேன்” என்கிறான்.
“கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மாநிலம்
தன்னை இத் தகைதரத் தருமம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்.”
தொடர்ந்து பேசும் அவன்,
“எங்களது சூரிய குல முன்னோர்கள் முதுமையுற்றதும்,
தம் புதல்வர்களிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு,
ஐம்புலன்களின் மீதான விருப்புக் கெடும்படி,
துறவு நோக்கி முயற்சித்து மோட்சம் அடைந்தனர்.
அங்ஙனம் முத்தியடைந்த என் மூதாதையரை,
இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன்” என்றான்.
“நங்குலக் குரவர்கள் நவையின் நீங்கினார்
தங்குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்
வெங்குலப் புலன் கெட வீடு நண்ணினார்
எங்குலப் புறுவர் என்றெண்ணி நோக்குகேன்.”
மேலும் அவன்,
“இப்பூவுலகத்திலும், நாக, பாதாள லோகங்களிலும் இருந்த,
எனது அரிய பகைவர்களையெல்லாம் ஒழித்து,
இதுநாள் வரை வெற்றி கொண்டு வாழ்ந்தேன்.
அத்தகைய நான்,
கள்வர் போல என்னுள் மறைந்து கிடக்கின்ற,
காமம் முதலிய உட் பகைவர்களை அஞ்சி,
இனி வாழ்வேனோ?” என அவர்களை நோக்கி வினவினான்.
“வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில்
தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்ற யான்
கள்ளரிற் கரந்து உறை காமம் ஆதியாம்
உள்ளுறை பகைவர்க்கு ஒதுங்கி வாழ்வெனோ?”
தொடர்ந்து பேசிய தசரதன்,
“செம்பஞ்சு ஊட்டிய தளிரை ஒத்த பாதங்களையுடைய,
கைகேயியானவள் சாட்டை கொண்டு தேரினை ஓட்ட,
அசுரர்களின் பத்துத் தேர்களையும் வென்றவனாகிய நான்,
மனம் என்கின்ற பேயானது ஏறிச் செலுத்துகின்ற,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து தேர்களையும்,
வெல்லமாட்டேனோ?” என வினவுகிறான்.
மேலும் அத்தசரதன் அவையோரை நோக்கி,
“போர்க்களத்திடை மடிந்தாயினும்,
உண்மை ஞானம் பிறந்து தெளிந்தாயினும்
நிலையாமை நோக்கிச் செல்வங்களைத் துறந்தாயினும் அன்றி,
வேறு வகையால் மன்னர்கள் முத்தி பெறல் ஆகாதாம்.
இவற்றுள் முன்னை இரண்டு வழிகள் மூலம்,
முத்தி பெறும் வாய்ப்பினை நான் இழந்து நின்றேன்.
ஆதலால்த்தான் முத்தி பெற உரைக்கப்பட்ட மூன்றாவது வழியான,
அரச செல்வத்தைத் துறந்து வீடெய்த நான் விரும்பி நின்றேன் என்கிறான்.
“ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை
பட்டவர் அல்லரேல் பரமஞானம் போய்
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டென
விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார்?”
மேலும் அச் சபையினரை நோக்கி அவன்,
“தோன்றிய அனைவரும் மறைந்தே ஆதல் வேண்டும் எனும்,
உண்மையை மறப்பதை விடவும் ஒருவர்க்கு வேறு கேடுண்டோ?
“துறப்பு” என்கின்ற படகு நமக்குத் துணை செய்யாவிட்டால்,
பிறவி என்கின்ற கடலிலிருந்து நாம் பிழைக்கவும் முடியுமோ?”
என வினவுகிறான்.
“இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பெனும் அதனின்மேற் கேடு மற்று உண்டோ?
துறப்பெனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்கலாகுமோ?”
இப்பாடலில், நம் கம்பர் பெருமானார்,
தெய்வப்புலவர் திருவள்ளுவனாரின்,
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்” என்னும் குறளினை,
இங்கு அழகுறப் பதிவு செய்கிறார்.
அவையோரை நோக்கி மேலும் பேசிய தசரதன்,
“அரிய சிறப்பினை உடைய துறவும்,
அத் துறவினைத் தெரிந்து கொள்வதால் உண்டாகின்ற,
அத் துறவுக்கு உறவான தெளிந்த உணர்வுமாகிய,
இரண்டு பெரிய சிறகுகள் ஒருவர்க்கு அமையுமானால்,
அவற்றைக் கொண்டு “பிறப்பு” என்கின்ற பெரிய காவற்சிறையை,
கடப்பதை விட இனிமை தருவது ஏதும் உளதோ?” என வினவினான்.
“அருஞ் சிறப்பு அமைவரும் துறவும் அவ்வழி
தெரிஞ்சு உறவென மிகும் தெளிவுமாய் வரும்
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இவ்
இருஞ் சிறை கடத்தலின் இனிது யாவதோ?”
தொடர்ந்து,
“சுகதுக்கங்களை விட்டு மோட்சம் அடைய விரும்பும் என் மனம்,
இனி இவ்வுலக வாழ்வை விரும்பாதென்றும்,
முறை திறம்பாது அறத்தைப் பேண எனக்குத் துணைபுரிந்த நீங்களே,
மறுமையில் நான் நற்கதி அடையவும் துணை செய்ய வேண்டும்” எனவும்,
“தவத்தினால் அனைத்தையும் அடையக்கூடியதாய் இருக்க,
வேறு கருமங்களில் முயன்று வாழுதல்,
அமுதத்தை விட்டு விஷத்தை உண்பது போல் ஆகுமல்லவா?” என்றும்,
“இவ் அரச செல்வம் நிலையில்லாதது என்றும்,”
அடுத்தடுத்து தசரதன் உரைக்க,
அவ் ஆன்றோர் அவை நெகிழ்ந்து போயிற்று.
தசரதன் நிறைவாக, அந்த அவையோரை நோக்கி,
“வெகுநாளாய் அனுபவித்த இவ் அரச செல்வம்,
நிலையில்லாதது என அறிந்த பின்னும்,
தொடர்ந்து அதனை நான் அனுபவிப்பேனாகில்,
அஃது உண்ட எச்சிலை மீண்டும் மீண்டும் உண்பதற்கு ஒப்பாதாகாதோ?” என,
வினவுகிறான்.
“கச்சை அங்கடகரி கழுத்தின் கண்ணுற
பிச்சமும் கவிகையும் பெய்யும் இந்நிழல்
நிச்சயம் அன்றெனின் நெடிதுநாள் உண்ட
எச்சிலை நுகர்வது இன்பம் ஆவதோ?”
அறம் இரு பகுதிகளை உடையது.
இல்லறம், துறவறம் என்பவையே அவையாம்.
அவற்றுள் துறவறத்தின் ஒரு கூறாய் அமைவது நிலையாமை.
கம்பர் தசரதனூடு உரைக்கும் இச் செய்திகள்,
நிலையாமை பற்றி நமக்குத் தெளிவுற விளக்கம் செய்கின்றன.
மாயையின் பொய்மையை உணர்ந்தார்,
நிலையாமையின் உண்மையை உணர்வர்.
அவ் உண்மை உணர்ந்தார்க்கே ஞானம் உண்டாம்.
அந்த ஞானமே வீட்டினை நல்குமாம்.
தத்துவம் உரைக்கும் இவ் உண்மையை,
ஒரு பாத்திரத்தின் உரையாடலில் ஏற்றிக் காட்டும்,
கம்பரின் திறம் கண்டு வியக்கிறோம் நாம்.