கம்பன் விழா 2016 | விமர்சனங்கள் | திரு.ச.லலீசன்

கம்பன் விழா 2016 | விமர்சனங்கள் | திரு.ச.லலீசன்
 
எனது பார்வையில் கொழும்புக் கம்பன் விழா - திரு.ச.லலீசன் 
.
கொழும்புக் கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழா மார்ச் 24 ஆம் திகதி மாலை முதல் 27 ஆம் திகதி வரை வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. எவ்வளவுதான்  நிகழ்ச்சிகளை முன்னிறுத்தினாலும் கம்ப இரசிகர்களின் ஆவல் தணியாத தாகமாக இருப்பதே வழமை. 
 
முதல்நாள் விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞர் நாட்டியார்ப்பணம் இடம்பெற்றது. இரண்டாம் நாள் காலை எட்டாக் கம்பனில் என்ற பொருளில் கருத்தரங்கும் மாலை பட்டிமண்டபமும் இடம்பெற்றன.
 

நடன நிகழ்வை நேரில்காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எட்டாக் கம்பன் என்ற கருத்தரங்குக்கு இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் தலைமை தாங்கினார். கருத்தரங்கப் பேச்சாளர்கள் பொருளை எட்டிய அளவு குறைவாகவே இருந்தது. (நான் உட்பட...) 
 
மாலை அறம் சார்ந்த கோபத்தை மையப்படுத்திய பட்டிமண்டபம் இடம்பெற்றது. பட்டிமண்டப நடுவராகச் செயற்பட்ட தமிழகப் பேச்சாளர் என்ற பெருமையுடன் வருகை தந்த புலவர் கோ. சாரங்கபாணி கம்ப இரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறினார் என்றே சொல்வேன்.  எங்கள் பேச்சாளர்கள் ஓரிருவரைத் தவிர ஏனையோருடைய வாதங்கள் இரசிக்கும் படியாகவே அமைந்தன. தமிழருவி சிவகுமார் வாலி கொண்ட அறக் கோபமே கற்றோரைப் பெரிதும் கவர்வது எனக் காட்டிய தர்க்கம் எனக்குப் பிரமிப்பைத் தந்தது. 
 
மூன்றாம் நாள் காலை சிந்தனை அரங்கம் இடம்பெற்றது. வருவார் என எதிர்பார்த்திருந்த தமிழகப் பேச்சாளர் பர்வின் சுல்தானா இறுதி நேரத்தில் விழாவிற்கு வருகை தராதமையால் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த திருநந்தகுமார் அவரின் இடத்தில் கருத்துரைத்தார். அவர் அன்று ஆற்றிய உரை மிகச் சிறந்த உரையாக அமைந்தது. இலக்கியச் சுடர் இராமலிங்கம் தனக்கேயுரிய பாணியில் கம்பன் பாடல்களின் சந்தம் குறித்துக் கருத்துரைத்தார். எப்படித்தான் இத்தனை சந்தப் பாடல்களை நினைவில் கொண்டுள்ளாரோ? மொத்தத்தில் என் பார்வையில் எல்லா நிகழ்ச்சிகளிலும் சிறப்புற அமைந்தது இந்த நிகழ்ச்சிதான் என்பேன். 
 
மாலை இன்று சந்திக்கும் இவர்கள் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் 90 களில் நடந்த கம்பன் விழாவில் அரங்கேற்றிய நிகழ்ச்சியை மீள அரங்கேற்றினர். யாழ். நிகழ்ச்சியில் கம்பனாக கம்பவாரிதி இருந்ததாக ஞாபகம். அன்றைய நிகழ்ச்சியில் புலவர் சாரங்கபாணி கம்பனாக அமர்ந்தார். நிகழ்வில் வேடப்புனைவுகள் வெற்றியளித்த அளவிற்கு விடய வெளிப்பாடுகள் அரங்கேறவில்லை. ஒலிவாங்கியில் பேசுவதில் பாத்திரங்கள் இடர்ப்பட்டமையும் கம்பராக வந்த புலவர் வெளிப்படுத்திய சொதப்பல்களும் ஆர்வமுடன் அரங்கேறிய இளைய செல்வங்களின் தாகத்தைத் தீர்க்கவில்லை என்றே கருதுகின்றேன். 
 
தொடர்ந்து  முதல்நாள் பட்டிமண்டபம் தொடர்பான மேன்முறையீடு இடம்பெற்றது. நடுவர்களாக மூவர் முகஸ்துதிக்காக அமர்ந்தாலும் நிறைவில் கம்பவாரிதி ஆற்றிய தீர்ப்புரையே உச்சமானது. வாலி கொண்ட அறக்கோபத்தையே கற்றவர்கள் பெரிதும் விரும்புவர் எனத் தன்க்கேயுரிய பாணியில் தர்க்க ரீதியாகத் தீர்ப்புக்கு வந்தார். 
 
நிறைவு நாள் காலை கவியரங்கம் இடம்பெற்றது. சிதம்பரப்பிள்ளை சிவகுமார் தலைமை தாங்கினார். பூனையை எப்படித் தூக்கிப் போட்டாலும் அது நான்கு கால்களிலேயே விழும் என்பதைப் போல என்ன தலைப்பைத் தந்தாலும் அரசியலையே பாடுவோம் என்று முன்னீடு வழங்கினார் சிவகுமார். சிலர் தாம் கவிஞர்தான் என்பதை நிருபித்தனர். சிலர் இக்கவியரங்கில் பங்கேற்றமையால் கவிஞர் என்பதற்கான அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர். 
 
இரவு வழக்காடு மன்றம் இடம்பெற்றது. கம்பனில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை நீக்க வேண்டும் என்பதாக இவ்வழக்காடு மன்றம் அமைந்தது. நான் யாழ்ப்பாணப் பயணத்தை ஆரம்பித்துவிட்டதால் வழக்காடு மன்றத்தை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. சுமாரான ஒரு நிகழ்வு என நண்பர்கள் சிலர் சிலாகித்தனர். 
 
நிகழ்வுகளில் அரசியலாளர்களின் பங்கேற்பு இம்முறை அதிகமாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க, பிரதமர் ரணில் எனப் பலர் மேடையேறினர். இவர்களைவிடச் சபையோராகப் பலர் வந்து சென்றனர். மேடையேறிய அரசியலாளர்களின் உரைகளும் நாட்டில் சிலாகித்துப் பேசப்படுமளவிற்குப் புகழ் பெற்றதாக விளங்கியது. மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தமிழர்களின் பெரும் நிகழ்வொன்றில் பங்கேற்றமை  நல்ல அறிகுறி. பன்மைத்துவச் சிந்தனையுள்ள அரசியலாளர்களை கம்பன் மேடையில் ஏற்றியமை கூடக் கம்பன் நல்கிய ஆசீர்வாதமென்றே நினைக்கின்றேன். 
.
மொத்தத்தில் கம்பன் விழா கம்ப சுவைஞன் என்ற நிலையில் உள்ள எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது என்று சொல்லமாட்டேன். 
 
(விழாவில் கம்பவாரிதி எழுதிய உன்னைச் சரணடைந்தேன் என்ற எண்ணூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட யாழில் கம்பன் பணி அனுபவங்களைத் திரட்டிச் சொல்லும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மிகவும் துணிச்சலாக தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வாரிதியார் பதிவிட்டிருக்கின்றார். என்னையா இப்படிப்பண்ணிட்டிங்களே ஐயா எனச் சிலர் முகம் சுழித்ததையும் கண்டேன். இன்று வரை 450 பக்கங்கள் வாசித்துவிட்டேன். இந்நூல் பற்றிப் பின்னர் பதிவிடுகின்றேன்.)
 
 
 
 
 
 
 
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.