கழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும் கண்ணியனும் விண்சேர்ந்தான்! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

கழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும் கண்ணியனும் விண்சேர்ந்தான்! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-
 

லகமெலாம் நம் இசையின் புகழை நாட்டி
ஓயாது உழைத்த மகன் விண்ணைச் சேர்ந்தான்
கழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும்
கண்ணியனும் விண்சேரக் கலங்கிப் போனோம்.
கலகலெனச் சிரித்தேதான் வார்த்தை பேசும்
கலைஞன் அவன் இல்லாத உலகுதானும்
நிலவதிலா வான் போல ஆயிற்றம்மா!
நெஞ்சமெலாம் இருள் சூழ்ந்து போயிற்றம்மா!

ஆங்கிலத்தார் வாத்தியத்தை அடக்கித்தானும்
அதில் எங்கள் அருமை மிகு இசையை ஏற்றி
ஓங்குபுகழ் வளர்த்தவனை உலகமெல்லாம்
ஒப்பற்ற கலைஞனெனப் போற்றிற்றம்மா!
ஆங்கரிய புகழ் வளர்த்தும் அகத்தில் அந்த
ஐயனவன் துளிகூடப் பெருமையின்றி
பாங்குடனே அனைவரையும் அன்பால் ஈர்த்தான்
பரமபதம் தனைச் சேர பதறிப் போனோம்.

ஈழத்தில் எம்தமையே உறவாய் ஆக்கி
இதயத்தில் இடம் கொண்டான் இனிய நல்ல
வேழத்தை நிகர்த்து அவன் மேடையேற
விண்முட்டும் கரவோசை வியக்கும் வித்தை
ஆழத்தைக் கண்டவர்கள் அதிர்ந்து நிற்பார்
ஆ என்ற வாய் மூட மறந்து நிற்பார்
கோலத்தின் அழகதுவும் அருவிபோலக்
கொட்டுகிற இசை அழகும் எவர்தான் மீட்பார்.

கம்பனுடைப் புகழ் விருதுதைக் கடந்த ஆண்டு
கண்ணியனே நீ வந்து ஏற்றுச் சென்றாய்
நம்முடைய பேறென்று மகிழ்ந்து போனோம்
நலத்தோடு மேடையிலே வேந்தன் போல
எம்முடைய உளம் ஈர்த்தாய் இனிப்பாய்ப் பேசி
ஏற்றமிகு உரை செய்தாய்  இதயம் ஈர்த்து
உம் பெரிய புகழ் நிறுத்திப் போன ஐயா!
உலகமதைக் கடந்ததுவும் ஏனோ சொல்வீர்?

வித்தையதை விரல்களிலே வைத்து என்றும்
வியன் உலகை ஈர்த்தவனே விரும்பித்தானும்
பத்மஸ்ரீ விருதுன்னைத் தேடிவந்து
பலம் பெற்றுத் தனை உயர்த்திக் கொண்டதேயாம்.
எத்தனையோ தேசம் உனை அழைத்துத் தங்கள்
இதயமதில் இருத்தித்தான் புகழே சேர்த்து
பத்தியுடன் வணங்கியதைக் கண்ணால் கண்டோம்
பார் கடக்க எங்ஙனமாய் முடிந்ததையா?

உன்னுடனே யாழ் அதனால் போட்டி கொண்டு
உடன் பிறப்பாய் இசை பொழிந்த நங்கைதானும்
அண்ணனவன் தனைப் பிரிந்து அதிர்ந்து நிற்பாள்
ஆங்கவளை எங்ஙனமாய் ஆற்றுவிப்போம்
விண்ணதிர இசைபொழிந்து வீறாய்ப் பண்பின்
விளை நிலமாய் எம்மனதை உயர்த்துவித்தீர்
கண்ணெதிரே விண்போகக் கலங்கி நின்றோம்
கதிரியரே உளம் உருகிக் கதறி நின்றோம்.

விரல் நிறைய மோதிரமும் விளங்கும் நல்ல
வீறான நெற்றியிலே திலகம் தானும்
நிரல் நிரலாய் மாலைகளும் நெஞ்சம் ஈர்க்கும்
நினைவதிலே மறையாத சிரிப்புத்தானும்
குரலதிலே வாராத இசையைக் கூட
கொட்டுகிற விரல் அசைவும் குன்றாதெம்மை
அரவணைத்து நின்றதுவாம் அன்பு தானும்
அகம் மறந்து போயிடுமோ! அழுது தீர்த்தோம்.

காலத்தை இசையதனால் வென்று நின்றாய்
கற்பகமாய் இசை அளித்துக் கனிந்து நின்றாய்
ஞாலத்தை உன் இசையால் ஈர்த்து நின்றாய்
நல்ல பல விருதுகளை ஏற்று நின்றாய்
தாளத்தை, சுருதியதை தன்னுள் ஏற்று
தாளாத இசைக்கடலை விரித்து நின்றாய்
ஈழத்தை மனமதனில் ஏற்று நின்றாய்
எப்போதும் எம்மனத்தில் இருப்பாய் நீயே!
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.