சரித்திரத்தின் குறியீடாய் நிமிர்ந்து நிற்பாய்! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்

சரித்திரத்தின் குறியீடாய் நிமிர்ந்து நிற்பாய்! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்
 
ளம் மகிழ எங்களுடைத்  தலைவனுக்கு
        உயர்வான மணிவிழவாம் என்னும் செய்தி
நலமுடனே செவிசேர மகிழ்ந்து போனோம்
        நண்பட்குப் பெருமை எனின் எமக்குமன்றோ!
தலமதனில் ஆளுமையால் தனித்து நின்ற
        தன்னிகரில் புகழோனுக் அகவை நீண்டு
வளமுறவே அறுபதினைச் சாரும் செய்தி
        வற்றாத தமிழ்த்தாய்க்குப் பெருமை நல்கும்.

தன் மழலை மரித்திடவும் தயக்கமின்றி
        தாய்மண் விட்டோடாது தமிழுக்காக
நண்புடனே எம்மோடு கரங்கள் கோர்த்து
        நலங்கள் பல இனத்திற்காய்ச் செய்து நின்ற
அன்பனிவன் தனிப்பெருமை அறிந்தால் இந்த
        அவனியெலாம் சிரம் கூப்பி அழுதே நிற்கும்
கண்வழிய இவன் உறவை எண்ணி நாங்கள்
        கருத்ததனில் பெருமையுற கனிந்து நின்றோம்.
 


நேற்றுவரை எங்களுடன் இங்கு வாழ்ந்து
        நிமிர்வோடு கம்பனுடைக் கழகந்தன்னை
போற்றி இவன் செய்திருந்த அரிய நல்ல
        பொன்னான தொண்டதனை என்ன என்பேன்?
வேற்று மொழி கற்பித்தும் விருப்பத்தாலே
        வேர் தொட்டுத் தமிழதனின் பெருமையெல்லாம்
சாற்றி உயர் புகழடைந்த ‘நந்தன்’ நாளை
        சரித்திரத்தின் குறியீடாய்; நிமிர்ந்து நிற்பான்.

கடல் கடந்து கங்காரு தேசம் தன்னில்
        கால்மாறி நம் இனத்து மழலையெல்லாம்
விடலரிய தாய் மொழியை விட்டுத் தூரே
        விலகுவதைக் கண்டு மனம் பொறுத்திடாமல்
உடல் பொருளோடாவியதை உவந்து நல்கி
        உயர் தமிழை நம் புதிய இளையோரெல்லாம்
தடல்புடலாய்க்  கற்பதற்கு வழிகள் செய்து
        தலை நிமிர்த்தும் பெரியோன்பல் லாண்டு வாழ்க!

கம்பனுக்கு விழவெடுக்கும் போதிலெல்லாம்
        கைகொடுத்து தனை மறந்து தொண்டே ஆற்றி
தெம்பு தர  தலைமகனாய் அரங்கில் ஏறி
        திகழ்ந்திடவே ஆங்கிலம் போல் தமிழைப் பேசி
அம்புவியில் புகழ் நிறுத்தி அணிகள் செய்த
        அருமைமிகு திருநந்தன் நூறைத்தொட்டு
செம்மையுறத் தமிழ் வளர்த்து உலகில் வாழ
        செகம் காக்கும் இறைவனடி போற்றி நின்றோம்.

என் அருமைச் சோதரியாம் இனிய நல்ல
        எழிலரசி தயானந்தி கரங்கள் பற்ற
அன்பு நிறை மழலைகளாய் உலவும் நல்ல
        அபிராமி, ஆதித்தன் அணைந்து நிற்க
பண்புடைய இல்லமதும் பாரே போற்றும்
        பல்கலையாய்த் திகழ்கிறது பண்ப! மேலும்
எண்ணரிய உறவுகளால் சூழ்ந்து நீவீர்!
        ஏற்றமுற இறவனடி வாழ்த்தி நின்றோம்.
                                      ❋❉❋
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.