பட்டது போதும் இவராலே ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

பட்டது போதும் இவராலே ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 
யிரை விட்டுவிடும்போல்த் தெரிகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
அதுவும் நல்லதுக்குத்தான்!
இதுவரை பெயரில் மட்டும் தானே ‘கூட்டமைப்பு’ இருந்தது.
‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை.
அன்பில்லாத நட்பை விட பகையே சிறந்தது என்பது இவ் அடிக்கான பொருள்.
என்று புலிகள் வீழ்ந்தார்களோ அன்றே கூட்டமைப்பின் அத்திவாரம் ஆடத்தொடங்கிவிட்டது.
புலிகளின் மீதான பயமே,
கூட்டமைப்புக் கட்சிகளின் முன்னைய ஒற்றுமைக்காம் காரணமாய் இருந்திருக்கிறது.
‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்றான் வள்ளுவன்.
பயம் தான் கீழ்மக்களது ஆசாரத்தின் அடிப்படை என்பது இக் குறளடிக்காம் பொருள்.
கூட்டமைப்புக் கட்சிகளின் அன்றைய ஆசாரத்தினதும்,
இன்றைய அலங்கோலத்தினதும் அடிப்படை தெரிகிறது.
நம் இனத்தின் விதி இன்னமும் மாறாதது நம் துரதிஷ்டமே!
 



வரப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்,
நம்மவரின் உண்மை முகத்தை இனங்காட்டி இருக்கிறது.
கட்சியின் உடைவுக்குக் காரணம் யார்?
ஆராயவேண்டிய கேள்வி.
ஆராய்ந்தால் மட்டும் என்னதான் நடக்கப்போகிறதாம்.
ஆனாலும் நம் இனம் கண்ட அவலங்களை அருகிலிருந்து பார்த்த அறிவு,
புத்தியைக் குடைந்து கொண்டே இருப்பதால்,
இனி எழுதவேண்டாம் என நினைத்திருந்த நினைப்பைத் தொலைப்பித்து,
பேனா மீண்டும் கை புகுகிறது.



ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ், ஜனநாயகத் தமிழரசுக்கட்சி,
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகியவற்றோடு,
பொது அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து,
தமக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளன.



கடந்த 12 ஆம் திகதி நடந்த தமிழ்மக்கள் பேரவையின் சந்திப்பில்,
கூட்டமைப்புக்கு எதிராகப் பொதுவான எதிரணி ஒன்றை,
தேர்தலில் களம் இறக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாம்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும் இணைந்து,
தேர்தலைச் சந்திப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதாம்.
இப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து,
புது அணி அமைத்துள்ளார்.
இது இலங்கை அரசு மற்றும் சில வெளிநாடுகள் உள்ளடங்களான,
தமிழ்த்தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்ற நிகழ்ந்த செயல் என,
கஜேந்திரகுமார் கொதித்திருக்கிறார்.



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகளையும்,
தம்முடன் இணைந்து செயற்பட வருமாறு சுரேஷின் புதிய கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்நிலையில் ரெலோவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாய்,
பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.
பிறகென்ன நெடுநாளாய் எதிர்பார்த்த ஒற்றுமைச் சிதைவு,
ஒருமாதிரியாய் நிறைவேறியிருக்கிறது.
தலைமைப்போட்டி இருமுனையாகும் என எதிர் பார்த்தால்,
அது மும்முனையாகி மிரட்டுகிறது.
பழையபடி சேர சோழ பாண்டியர்கள் கதைதான்.
முன்பைப் போலவே பொது எதிரிகள் கைகொட்டிச் சிரிக்க,
சேர சோழ பாண்டியர்கள் இனி தம்முள் தாம் மோதி,
தம்மையும் அழித்து இனத்தையும் அழிக்கப்போகிறார்கள்.



இம்மும்முனைச்சிதைவுக்கு அனைவராலும் சொல்லப்படும் காரணம் இன எழுச்சியாம்!
ஆஹா! என்னே இவர்களின் இனப்பற்று.
பூனை இல்லா வீட்டில் எலிகள் ஓடி விளையாடும் என்ற கதைதான்.
புலிகளின் மறைவுக்காய் மீண்டும் ஒருதரம் கவலைப்படவேண்டியிருக்கிறது.
எவ்வளவு துணிவிருந்தால் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி,
இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
அது அவர்களின் குற்றமல்ல நம் இனத்தின் குற்றம்.
மக்கள் பொய்யர்களாய் இருந்தால் தலைவர்களும் பொய்யர்களாய்த்தான் இருப்பார்கள்.
மக்களின் பொய்மை நிலைப்பாடே தலைவர்களைக் கூச்சமின்றி பொய் சொல்ல வைக்கிறது.
என்று மாறப்போகிறது நம் இனம்?



நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? என்று உங்களில் சிலர்,
என்மீது எறிகணை வீசத்தயாராவது தெரிகிறது.
என்று நாங்கள் உண்மையாய் இருந்தோம்?
‘பேரினம் நம்மைத் துன்புறுத்துகிறது, புலிகளை நம்பியே வாழ்கிறோம்’ என்று,
புலம்பெயர்ந்தோரும் இங்கிருந்தோரும் ஒருமித்து ஒரு காலத்தில் சொன்னோம்.
அதே காலத்தில் நம் நடவடிக்கை சொன்னதற்கு மாறாய் இருந்தது.
இலங்கைக்கு வந்த புலம்பெயர்ந்தோர்,
தம் உறவுகளைக் கொழும்புக்கு அழைத்து ஹோட்டல்களில் தங்கி கொண்டாடிவிட்டு,
தாய்மண் மிதிக்காமல் தம் மண்ணுக்குச் சென்றார்கள்.
இவர்களுக்குத்தான் புலிகளில் நம்பிக்கையாம்.
சொல் ஒன்று! செயல் ஒன்று!
அன்று தொட்டு நாம் இப்படித்தான் இருக்கிறோம்.



புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் கூட்டமைப்பே நம் ஏகத் தலைமை என்று,
திரும்பத் திரும்ப நம் வாக்குகளால் உரைத்தோம்.
போராடிய முன்னாள் புலிகள் இணைந்து கட்சி அமைத்தபோது,
இவர்கள் அரச கையாட்கள் என்று கூட்டமைப்பு கிளப்பிவிட்ட கதையை நம்பி,
முன் பாராட்டிய அதே புலிகளை ஒரு நிமிடத்தில்  துரோகிகளாய் முத்திரை குத்தி நிராகரித்தோம்.
கூட்டமைப்புக்கு எதிராய் நின்ற ஆனந்த சங்கரியையும் அரச கையாள் என அசிங்கப்படுத்தினோம்.
புதிதாய் முளைத்த முதலமைச்சரின் சிபாரிசுக்கு மயங்காமல்,
முடிந்த தேர்தல் ஒன்றில் ஒரு இடத்தைக்கூட கொடுக்காமல்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியைத் தனிமைப்படுத்தினோம்.
கூட்டமைப்போடு முரண்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை,
தேர்தலில் தோற்கடித்து அவர்மீதான வெறுப்பைப் பதிவு செய்தோம்.
இன்று மீண்டும் கூட்டமைப்புக்கு எதிராக,
அதே குழுக்கள் வேறு வேறாய் அணி சேர்ந்திருக்கின்றன.
நேற்று கூட்டமைப்பை நம்பி யார் யாரை வெறுத்தோமோ,
இன்று அவர்களையெல்லாம் நம்பி கூட்டமைப்பை வெறுத்து நிற்கிறோம்.



மாற்றணியியனரின் மீதான நேற்றைய எமது நம்பிக்கையின்மைக்கும்,
இன்றைய நம்பிக்கைக்கும்,
கூட்டமைப்பின் மீதான நேற்றைய எமது நம்பிக்கைக்கும்,
இன்றைய எமது நம்பிக்கையின்மைக்கும் இடையில்,
ஏதேனும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தனவா? என்றால் இல்லை என்பதே பதிலாம்.
பின் எதனால் இம்மாற்றங்கள் என்று கேட்கிறீர்களா?
அதுதான்  மக்களாகிய எங்களின் பொய்மை.
யாரையும் ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ,
எங்களுக்கு அறிவுபூர்வமான காரணங்கள் தேவையில்லை.
உணர்ச்சிபூர்வமான வாதங்களே போதுமானவை.
அந்த உணர்ச்சியிலும் கூட உண்மை இருக்கவேண்டிய அவசியமில்லை.
சொல்கிறவர்களும் பொய்யாய்ச் சொல்வார்கள்.
கேட்கிறவர்களும் பொய்யாய்க் கேட்போம்.
இதில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் வேறு!
இப்படியே போனால் வரலாறு மீண்டும் நம்மைத் தண்டிக்கப்போவது நிச்சயம்.



இனஉரிமை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் பேசத் தொடங்கி,
தனிநாடு கேட்கும் அளவுக்கு வளர்ந்து,
பின் இளைஞர்களின் எழுச்சியாலும் பிராந்திய அரசியல் சூழ்நிலையாலும்,
ஆயுதப்போர் வரை சென்று,
அந்த ஆயுதப்போர் விரிவாக விரிவாக தலைமைப் போட்டியில்,
ஒன்றுபட்டிருந்த இயக்கங்கள் உடைந்து சிதைந்ததும்,
எஞ்சியிருந்த புலித்தலைமையும் தமக்குள் ஏற்பட்ட உட்பகையால் பலமிழந்ததும்,
2009 இல் உலகமே அதிரும் வண்ணம் நம் இனம் சிதைக்கப்பட்டதும்,
முடிந்து போன வரலாறு.
இத்தனைக்கும் காரணம் நம் ஒற்றுமையின்மை என்பது வெளிப்படை.
அந்த வரலாற்றிலிருந்து அனுபவம் பெறாமல் மீண்டும் முதலாம் அத்தியாயத்தை,
எழுதத் தொடங்கியிருக்கின்றார்கள்  நம் தலைவர்கள்.



வா என்று அழைக்காமலே தன் வலைக்குள் வந்து விழும்,
விட்டில்களை விருந்தாக்க விளையும் சிலந்திகள் போல்,
தாமாய் ஒற்றுமை உடைத்து பலமிழக்கத்தயாராகும்,
தமிழ்த்தலைவர்களின் செயல்கண்டு மகிழ்ந்து நிற்கிறது பேரினம்.



தனிக்காட்டு ராசாவாக தன்னை நினைத்த தமிழரசுக்கட்சி,
இன்று தனித்துப்போகும் நிலையில்.
மாற்றுக் கட்சிகளை மண் கவ்வ வைக்க நினைந்து,
‘மாட்டேன் மாட்டேன்’ என்று உரைத்த மாண்புமிகு முன்னாள் நீதியரசரை,
வெற்றிலை வைத்து அழைத்து வந்து வினைதேடிக்கொண்டது அக்கட்சி.
தன் தலையில் தானே கொள்ளி செருகிய கதையாய் இன்று அவர்களது அவல நிலை.
மற்றவர்களுக்குச் ‘செக்’ வைத்து அவர்கள் நகர்த்திய சதுரங்கக்காய்,
இன்று அவர்களுக்கே ‘செக்’காகிப் போனது வினையின் விளைவேயாம்!
போர்க்காலத்தில் இனத்தின் அவலங்களில் எதுவித பங்கும் ஏற்காமல்,
நீதியரசராய் கொழும்பில் சுகித்திருந்ததோடு,
முதலமைச்சரான பின்னும் இன உயர்வுக்காய் குறிப்பிடும்படி எதுவும் செய்யாது,
நிர்வாகத் தோல்வி கண்ட ஒரு மனிதர் தன் தலைமையை உறுதி செய்து கொள்வதற்காய்
மக்கள் உணர்ச்சியை மறுபடியும் வெறுமனே கிளறி,
இருந்த தலைமைகளைச் சிதறச் செய்திருக்கிறார்.
மேற்சொன்ன உடைவுகளுக்கு வித்திட்ட அத்தனை பெருமையும் அவரையே சாரும்.
தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களுக்கே,
ஓராண்டு முடிவதற்குள் நன்றி மறந்து துரோகம் இழைத்த இப்பெருமகனார்,
நம் இனத்திற்கு நன்றியுடையவராய் இருப்பாரென எண்ணி,
ஏழைத்தமிழினம் மற்றுமொருமுறை ஏமாறத்தயாராகிறது.
மண்ணுக்காய் உயிர் துறந்த மாவீரர்களுக்குச் சமமாய் இன்று அவரை உரைத்து மகிழ்கின்றனர் சிலர்.
கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை அவர் வரலாற்றில் தியாகப் பதிவுகளைக் காணமுடியவில்லை.
கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டவரா? அல்லது அனுப்பிவைக்கப்பட்டவரா?என,
பலர் மனதில் வினாக்கள் இன்று விரிந்தபடி இருக்கின்றன.
மொத்தத்தில் தமிழ்த்தலைமைகளும் தமிழ் மக்களும்,
இன்று அவர் வியூகத்திற்குள் அகப்பட்ட நிலையில்.
தேர்தலின் முடிவே தமிழினம் வீழுமா? வெல்லுமா? என்பதை உறுதி செய்யப்போகிறது.



எல்லாத் தலைமைகளும் தத்தம் பதவி நோக்கியே பயணிக்கின்றன.
இது வெள்ளிடைமலை.
தமிழரசுக்கட்சிக்கு தானே தனித்த தலைமையாகவேண்டும் என்று விருப்பம்.
விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுக்க நினையாது,
இன்று சூழ்நிலை கழுத்தை இறுக்க விழி பிதுங்கி நிற்கின்றார்கள் அவர்கள்.
வெள்ளம் வந்ததும் அணைகட்டும் முயற்சியாய்,
உடைவுகளுக்காய் மன்னிப்புக் கேட்டு நிற்கிறார் சுமந்திரன்.
எல்லோரும் மூக்கில் குத்தக்குத்த,
புத்தர்‘போஸ்’காட்டி, பொறுமை பேசுகிறார் தலைவர் சம்பந்தர்.
முதுமையைத் தவிர தலைமைக்கான தகுதி எதனையும் அவரிடம் காண முடியவில்லை.
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு தமிழர்கள் வேதனைப் படமாட்டார் என்று,
எம்.ஜி.ஆர் பாணியில் சவுக்கெடுத்து சேர்ந்திருந்த மற்றைய அணிகளை,
விளாசித்தள்ளிய சுமந்திரனைச் சுற்றி,
இன்று அவரால் பலவீனர்களாய் நினைக்கப்பட்ட தலைவர்கள்,
ஒன்று சேர்ந்து பலம் பெற்று உறுமி நிற்கின்றனர்.
ஆற்றல் இருந்தும் எங்கே எதை, எப்படிப்பேசுவது என்பது தெரியாததால்,
மக்கள் மன்றில் எதிரணியினரால் அவர் உருவம் இனத்துரோகியாய் விரிவாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
பாவம் மாவை அதிகாரங்களை யார் யாரிடமோ கொடுத்துவிட்டு,
அழகுத்தலைவராய் அமர்ந்திருக்கிறார்.
தமிழரசுக்கட்சியின் மீதான பழைய மக்கள் ஆதரவு,
பதவிகளைத் தானாய் தம்மடியில் வீழ்த்தும் எனும் பகற்கனவோடு அவர்கள்.
அவர்கள் கனவும் பதவி பற்றியதேயாம்.



மற்றைய கட்சிகள் ஒற்றுமையை உடைத்து,
தமிழினத்தின் எழுச்சிக்காய் வெளியே வருகின்றனவாம்.
நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு ரொம்பத்தான் அதிகரித்துவிட்டது!
தமிழரசுக்கட்சி கழுத்தைப்பிடித்துத் தள்ளத்தள்ள,
மானம் விட்டு பதவிக்காய் இதுவரை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள்,
நீதியரசர்பால் மக்கள் திரும்பி இருப்பதாய் நினைந்து,
அவர் ஆதரவு பெற்ற மாற்றணியோடு இணைந்தால்,
தம் பதவிகளைப் பாதுகாக்கலாம் எனும் நினைப்பில்,
இனத்தின் எழுச்சியைக் காரணம் சொல்லி,
செத்த நாயில் உண்ணி கழருவது போல,
ஒவ்வொருவராய் கழறத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்றுதான் தம் உரிமை பற்றிப் பேசும் அளவுக்கு,
அவர்கள் முதுகெலும்பு வலிமை பெறத் தொடங்கியிருக்கிறது.
அந்த வலிமையும் தங்கள் மீதான நம்பிக்கையால் வந்ததல்ல என்பதுதான்,
கவலைக்குரிய விடயம்.



என்னைப் பொறுத்தவரை நல்லபடி திட்டமிட்டு,
எதிர்காலம் நோக்கி நிமிர்வோடு நம்மை நகர்த்தும் ஆற்றல்,
இன்றைய தமிழ்த்தலைமை எதற்கும் இருப்பதாய்த் தெரியவில்லை.
பதவி ஆசை, சுயநலம், நேர்மையின்மை, இனப்பற்றின்மை என்பவையே,
அத்தலைவர்களிடம் மேம்பட்டுக் காணப்படுகிறது.
பேரிழப்பைச் சந்தித்து சிதைந்து கிடக்கும் நம் இனம்,
இந்தப் புண்ணியவான்களால் நிச்சயம் உயரப்போவதில்லை.
ஆனால் ஒன்று.
உலகின் அழுத்தத்தால் தீர்வுத்திட்டம் ஒன்றை,
ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டிருக்கும் பேரின அரசுக்கு,
இந்நேரத்திலான நமது ஒற்றுமைச் சிதைவு,
நிச்சயம் நல்ல வாய்ப்பாகும் என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.
இவர்களாலேயே நாம் இனப்பிரச்சினைத் தீர்வில் நல்ல முடிவை எட்டமுடியவில்லை என்று,
உலகுக்கு உரைத்துத் தப்பிக்கொள்ள நம் தலைவர்களின் உடைவு நிச்சயம் வாய்ப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.
உருப்படியாய் ஒன்றும் செய்யாவிட்டாலும்,
அது நோக்கியேனும் நம் தலைவர்கள்,
சிலகாலம் ஒன்றுபட்டு நிற்பது நல்லதென்றே கருதுகின்றேன்.



தலைவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிஞ்சித்தும் இல்லை.
நாமாக திருந்த முயற்சித்தால் என்ன?
துருப்புச்சீட்டு  மீண்டும் தமிழ்மக்கள் கைக்கு வருகிறது.
அதை வைத்து என்ன செய்யப்போகிறோம் நாம்.
மகிமை பெற்ற மாற்றுத்தலைமை ஒன்று நிச்சயம் தேவைதான்.
உள்ள தலைமையைவிட உயர்வான தலைமை என்று இன்றிருப்போரில் எவரைத்தான் சொல்வது?
இப்பொழுது உண்டாகும் மாற்றுத்தலைமைகள் மகிமை பெற்றவையா?
பழைய தலைமையைக் குற்றம் சொல்லி நிற்கும் இவர்களுள்?
தன்னலமற்று இனநலம் நோக்கி இயங்குகிறவர்கள் எவரேனும் இருக்கின்றார்களா?
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
மக்கள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான்.
தம் வாக்குரிமையை இனியேனும் அறிவுபூர்வமாய்ப் பயன்படுத்தி,
குற்றமுள்ள பழைய தலைமைகள் அனைத்தையும் ஒன்றாய்த் தூக்கியெறியவேண்டும்.
அதுமட்டும் போதாது.
அதே வாக்குப்பலத்தை வைத்து குற்றமற்ற புதிய அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கவேண்டும்.
ஏலவே இருக்கும் அரசியல் தலைமைகளின் சாயல்கூடபடியாத தலைமையாய்,
அத்தலைமை இருந்தால் உருப்படுவோம்.



நிறைவாக எத்தகுதியை வைத்து அப்புதிய தலைமையை நாம் இனங்காணப்போகிறோம்.
மனதில் வரும் சில தகுதிகளை வரிசைப்படுத்துகிறேன்.
இன உயர்வுக்காய்ப் பதவியைத் தூக்கி எறியும் துணிவு.
உலகத்தோடு தொடர்பு கொண்டு நம் இன நன்மையை நகர்த்தும் ஆற்றல்.
பேரினத்தின் பேதமைகளை நம் நன்மைநோக்கிக் கையாளும் இராஜதந்திரம்.
தமிழினத்தின் தேவைகள் அறிந்து பதவிகள் கொண்டு அவற்றைப் பரிகரிக்கும் நுட்பம்.
இனத்தை ஒற்றுமைப்படுத்தி எழுச்சி கொள்ள வைக்கும் தன்னலமின்மை.
இடம், காலம், வலி அறிந்து மக்களை சரியான முறையில் நெறிப்படுத்தும் மதிநுட்பம்.
பேரினத்தை சமப்படுத்த உலக நாடுகளை நம் உறவாக்கும் ஆற்றல்.
உலக அழுத்தத்தால் பேரின அரசு கொண்டுவர நினைக்கும் புதிய தீர்வுத்திட்டத்தை தீர்க்கதரிசனத்தோடு நெறி செய்யும் உண்மைத்தன்மை.
எவர்க்கும் விலைபோகா வீரியம்.
அறிவும் ஆளுமையும் இனப்பற்றும் நிறைந்த உண்மை மகத்துவம்.

இத்தகுதிகளோடு புதிய தலைமை ஒன்று வருமானால்,
செங்கம்பளம் விரித்து அத்தலைமையைத் தமிழினம் வரவேற்கலாம்.
புதிய தலைமை, புதிய தலைமை என்று இன்று பேசப்படும் தலைமைக்கும்,
இருக்கும் பழைய தலைமைக்கும் இத்தகுதிகள் இருப்பதாய்த் தெரியவில்லை.
இவர்களின் எழுச்சி புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கதைதான்.
எது எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம்.
உட்பகை கொண்டு தமிழினம் உடையும் நேரமல்ல இது.
தலைவர்களின் சுயநல செயற்பாடுகளால் உடையப்போவது,
கூட்டமைப்புக் கட்சிமட்டுமல்ல தமிழினத்தின் எதிர்கால வாழ்வும்தான்!
இனத்தை எழுச்சி கொள்ள வைக்கும் ஆற்றலை,
மக்களுக்கேனும் அவ் இறைவன் கொடுப்பானாக!
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.