'தேரும் திங்களும்' -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-
கவிதை முற்றம் 23 Jun 2019
மஹாகவி து. உருத்திரமூர்த்தி
✠ ✠ ✠
நமது ஈழத்தில் வீரியமிக்க கவிஞர் பலர் வாழ்ந்துள்ளனர்.
ஈழத்தின் இலக்கிய ஆக்கங்களுக்கு,
உலகமேடைகளில் அதிகம் இடம் கிடைப்பதில்லை.
அதனால் நம் இலக்கிய வலிமைகள் பெரும்பாலும் வெளிவரவில்லை.
அதனால்த்தான் அண்மையில் தமிழ்நாட்டு எழுத்தாளர் ஜெயமோகன்,
ஈழத்துக் கவிஞர்களை இழிவாக விமர்சித்திருந்தார்.
ஆகவே நமது கவிஞர்களின் வீரியமிக்க கவிதைகளை,
கவிதை முற்றத்தில் இடையிடையே அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
இம்முறை ஈழத்தின் மிகப் பிரபல்யமான கவிஞர்,
அமரர் மஹாகவி உருத்திரமூர்த்தியின் 'தேரும் திங்களும்' எனும் கவிதையை வெளியிடுகிறோம்.
கோயில் தேர் திருவிழாவில் ஜாதிப் பிரச்சினையால் எழுந்த கலவரம் பற்றி இக்கவிதை பேசுகிறது.
✠ ✠ ✠
✠ ✠ ✠
ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை'
என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய்
வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்.
பெருந் தோளும்
கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான். அவன் ஒரு இளைஞன்,
வந்தான். அவன் ஒரு இளைஞன்,
மனிதன் தான்.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!
'ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும்' எனும் ஒர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.
'நில்!' என்றான் ஓராள்
'நிறுத்து!' என்றான் மற்றோராள்.
'புல்' என்றான் ஓராள்
'புலை' என்றான் இன்னோராள்
'சொல்' என்றான் ஓராள்
'கொளுத்து' என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!
✠ ✠ ✠ ✠ ✠ ✠