பத்மபூஷண் பி. சுசீலா ‘கம்பன்புகழ் விருது’ பெறுகிறார்.
செய்திப்பெட்டகம் 19 Mar 2016
உ
கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா எதிர்வரும் மார்ச் 24, 25, 26, 27ஆம் திகதிகளில் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல்நாளான மார்ச் 24 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண தோட்டம், இல.11 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் சீதா இராம விக்கிரகங்களும் இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையுடனும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையுடனும், மங்கையர்களின் நிறைகுட பவனியுடனும், ஊர்வலமாக விழாமண்டபம் நோக்கி எடுத்து வரப்படவுள்ளன. இவ் ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகைதரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைதரவுள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி அறங்காவலர் சபையைச் சார்ந்த வி. கயிலாசபிள்ளை தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ. விஸ்வநாதன் தலைமையில் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழா வரவேற்புரையைக் கழகத் தலைவர் தெ. ஈஸ்வரன் நிகழ்த்தவுள்ளார்.
விழாவில் கலந்துகொள்ளும் மலேசிய அமைச்சர்
இவ்விழாவில் மலேசியக் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலரும் மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சருமான மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்களின் தலைமையில் மலேசிய இலக்கியப் பிரமுகர் குழுவினர் கலந்து சிறப்பிக்கின்றனர். இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல்நாள் மாலை நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றும் மலேசிய அமைச்சர் 26 ஆம் திகதி மாலை மேன்முறையீட்டு பட்டிமண்டபத்தின் நடுவர்களுள்; ஒருவராகவும் கடமையாற்றுகிறார்.
நூல் வெளியீடும், இறுவட்டு வெளியீடும்
இவ்வாண்டு விழாவில், இராமாயணத்துள் நரசிம்ம அவதாரத்தைக் கம்பன் சித்திரித்துள்ள திறத்தை வியக்கும் கட்டுரைகளின் தொகுப்பான “காவியத்துள் காவியம்” என்ற நூலும், கம்பவாரிதி இ. ஜெயராஜ் எழுதிய அகில இலங்கைக் கம்பன் கழக யாழ் வரலாற்றுத் தொகுப்பான ‘உன்னைச் சரணடைந்தேன்’ என்ற நூலும், கடந்த 2015ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணக் கம்பன் விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும் வெளியிடப்படவுள்ளன. இவற்றின் முதற் பிரதிகளை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் , ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், அறங்காவலர் எஸ்.சுப்பிரமணியம் செட்டியார், அறங்காவலர் பி.சுந்தரலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
சமூக நிதியுதவி
அமரர் எல். அலமேலு ஆச்சி ஞாபகமாகத் தமிழ் நாடு ஏ.எல். சிதம்பரம் அவர்கள் நிறுவிய சமூக உதவி அறக்கட்டளை நிதியை இவ்வாண்டு மட்டக்களப்பு யோகர் சுவாமி மகளிர் இல்ல அமைப்பினரும், அமரர் சி.கே. இலங்கைராஜா ஞாபகார்த்த சமூக உதவி அறக்கட்டளை நிதியை முள்ளியவளை திருமதி சாந்தி காந்தன் குடும்பத்தினரும் பெற்றுக்கொள்கின்றனர்.
‘கம்பன்புகழ் விருது’ பெறும் பத்மபூஷண் பி. சுசீலா
கொழும்புக்கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு “கம்பன் புகழ் விருதினை” ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில்; டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான், இசை அறிஞர் ரி.என். சேஷகோபாலன், நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பேராசிரியர் ஒளவை நடராஜன், பேராசிரியர் சிலம்பொலி சு. செல்லப்பன், பாடகி கலைமாமணி பம்பாய் ஜெயஸ்ரீ; ஆகியோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். 'வி.ரி.வி. பவுண்டேஷன்' நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் ‘கம்பன்புகழ் விருது’இ இவ்வாண்டு, உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி பத்மபூஷண் பி. சுசீலா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. விருதுக் கேடயம், பொன்னாடை, ரூபா ஒரு இலட்சம் பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய இவ்விருதினை, கம்பன்விழாவின் நிறைவு நாளன்று மாலை கழகப்பெருந் தலைவர் நீதியரசர் கௌரவ ஜெ.விஸ்வநாதன் அவர்கள் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
சேவைக்காக உயர் கௌரவம் பெறும் நம்நாட்டுப் பெருமக்கள் அறுவர்
தம் செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் கொழும்புக் கம்பன்கழகம் கௌரவித்து வருகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு கௌரவத்துக்குரியவர்களாக, திறந்த பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் உமா குமாரசுவாமி, சிறந்த சிங்கள நாட்டியக் கலைஞர் தேசபந்து வஜிரா சித்ரசேன, கட்புல அரங்காற்றுகைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், ஐ.நா. சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் தேசமான்ய ராதிகா குமாரசாமி, மத்திய மாகாண முன்னாள் கல்வியமைச்சர் திருமதி அனுஷா சிவராஜா, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர்; ஆகியோர்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தத்தம் துறைசார்ந்து இப்பெரியோர்கள் நம் தேசத்திற்கும் இனத்திற்கும் தன்னலமற்று செய்த பெருந்தொண்டுக்காகவும் அவர்தம் துறைசார்ந்த ஆற்றலுக்காகவும் வழங்கப்படும் இவ்விருதுகள் ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. இவ்விருதுக்குரியவர்களுக்கான கௌரவங்கள் விழாவின் நிறைவு நாளில் சகல மரியாதைகளுடனும் வழங்கப்படவுள்ளன.
ஆறுமுக நாவலர் விருது பெறும் கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு
கம்பன் விழாவில் வருடாந்தம் வழங்கவென அறக்கட்டளை விருதுகளைச் சிலர் ஏற்படுத்தியுள்ளனர். நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணைஆனந்தன் சிறந்த அறிஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘நாவலர் விருது’ இவ்வாண்டு யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அறிஞர் கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவரின் தொடர்ச்சியான தமிழ்மொழிப் பணியைப் பாராட்டும் முகமாக இவ்விருதும் பொற்கிழியும் அவருக்கு வழங்கப்படவுள்ளன.
விபுலாநந்தர் விருது பெறும் நாதஸ்வரவித்துவான் எம்.பி. பாலகிருஷ்ணன் அவர்கள்
தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர், சிறந்த இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருது’ இவ்வாண்டு புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் அளவெட்டி எம்.பி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஈழத்தின் மிக மூத்த இவ் இசைக்கலைஞரின் இசையாற்றலைப் பாராட்டி விபுலாநந்தர் விருதும், பொற்கிழியும் வழங்கப்படவுள்ளன.
மகரந்தச்சிறகுவிருது பெறும் கவிஞர் மு. சடாட்சரன் அவர்கள்
கழகத்தின் கம்பன் புகழ்விருது பெற்ற கவிஞர் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் அவர்கள், ஈழத்துக் கவிஞர்களை கௌரவிப்பதற்காக நிறுவிய ‘மகரந்தச்சிறகு’ விருது இவ்வாண்டு இலங்கையின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான கவிஞர் மு. சடாட்சரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த கவிதை நூல்களைத் தந்து தொடர்ச்சியாகக் கவியுலகில் இயங்கி வரும் கவிஞருக்கு மகரந்தச்சிறகு விருதும், பொற்கிழியும் வழங்கப்படவுள்ளன.
நுழைபுலம் ஆய்வுவிருது பெறும் கலாநிதி சா.தில்லைநாதன் அவர்கள்
புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் நினைவாக அவரின் குடும்பத்தினர் நிறுவியுள்ள அறக்கட்டளை மூலம், சிறந்த ஆய்வு நூல் ஒன்றுக்கு ‘நுழைபுலம் ஆய்வு’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டுக்குரிய சிறந்த ஆய்வு நூலாக கலாநிதி சா.தில்லைநாதன் எழுதிய "மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்" எனும் நூல் தெரிவு செய்யப்பட்டு, நுழைபுலம் விருதும், பொற்கிழியும் வழங்கப்படவுள்ளன.
ஏற்றமிகு இளைஞர்விருது பெறும் அறிவிப்பாளர் முஷர்ரப் அவர்கள்
தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவியுள்ள ‘ஏற்றமிகு இளைஞர்’ விருதினை, சிறந்த இளம் அறிப்பாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் (வசந்தம் ரி.வி.) பெற்றுக் கொள்ளவுள்ளார். இளம் வயதிலேயே ஆளுமைத்திறனோடு பயன்மிக்க நிகழ்ச்சிகளைத் தயாரித்தளிக்கும் இவ்விருதாளருக்கு ஏற்றமிகு இளைஞர் விருதும் பொற்கிழியும் வழங்கப்படுகின்றன.
அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப்போட்டி, அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டி, இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர் நினைவுத் திருக்குறள் மனனப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பரிசில்களும் விழாவின் முதல் நாளன்று வழங்கப்படவுள்ளன.
கம்பன் விழா நிகழ்ச்சிகள்
இவ்வாண்டுக் கம்பன்விழாவில்; இலக்கியப்பேருரை, கருத்தரங்கு, பட்டிமண்டபம், சிந்தனை அரங்கு, மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம், கவியரங்கம், படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள், வழக்காடு மன்றம், நாட்டியர்ப்பணம், அஞ்சலியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்வாண்டு நூற்றாண்டு விழாக்காணும் தமிழறிஞர்கள் அமரர்கள் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன், இலக்கண வித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஆகியோர் நினைவாக நூற்றாண்டு நிறைவு அரங்கு 27ம் திகதி காலை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு ஸ்ரீமதி மீனாட்சி ஸ்ரீநிவாசனின் சிறப்பு நாட்டிய அரங்கம்
இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல் நாள் மாலை அரங்கில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி மீனாட்சி ஸ்ரீநிவாசன் அவர்களின் ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் பொருளிலான நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
விழாவில் கலந்துகொள்ளும் பிறநாட்டு, நம்நாட்டு அறிஞர்கள்
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான புலவர் கோ. சாரங்கபாணி, வழக்கறிஞர் த. இராமலிங்கம், டாக்டர் ரி. ரெங்கராஜா, பேராசிரியர் பர்வீன் சுல்தானா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து அகில இலங்கைக் கம்பன் கழக முன்னாள் தலைவர் தி. திருநந்தகுமார் ஆகியோர் வருகை தருகிறார்கள்.
இவர்களோடு சென்னைக் கம்பன்கழகம், புதுவைக் கம்பன்கழகம், வேலூர்க் கம்பன் கழகம், இராமேஸ்வரம் கம்பன் கழகம், திருச்சிக் கம்பன் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவர்களோடு நம்நாட்டைச் சார்ந்த பிரபல பேராசிரியர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் முதலிய பெரியோர்கள் பலரும் இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் கலந்துகொள்ளும் அரசியல் பிரமுகர்கள்
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளில் நம்நாட்டு அரசியல் பிரமுகர்கள் பலரும், கலந்து கொள்கின்றனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம மந்திரி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க நிறைவு நாள் மாலை விழாவின் பிரதம விருந்தினராக வருகை தருகிறார். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் (கிளிநொச்சி), மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அனுர குமார திசாநாயக்க ஆகியோர் 25ஆம் திகதி மாலை விழாவில் கலந்து கொள்கின்றனர். கல்வி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு வே. ராதாகிருஷ்ணனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வரும் 26ஆம் திகதி மாலை விழாவில் உரையாற்றுகின்றனர். 27ஆம் திகதி நிறைவுநாள் மாலை விழாவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள் குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மேல்மாகாண சபை ஆளுநர் கே. சி. லோகேஸ்வரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
புத்தகக் கண்காட்சி
விழா நடைபெறும் நான்கு நாட்களிலும் மண்டபவாயிலில் பூபாலசிங்கம் புத்தகசாலை, புத்தகக் கண்காட்சி ஒன்றினை நடாத்தவுள்ளது. இக் கண்காட்சியில் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
இரசிகர்களுக்கு வேண்டுகோள்
கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப் படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச்சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்தோருக்;கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்றைய தமிழ் இரசிகர்களுக்கு ஊடகங்கள் மூலம் விழாவிற்கான அழைப்பினைக் கம்பன்கழகம் மனமகிழ்வுடன் விடுக்கிறது.